இலங்கை சிறையில் அப்பாவிகள்-மனித உரிமைக் குழு-செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19, 2010
கொழும்பு: இலங்கை சிறையில் விசாரணையின்றி ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை ஆசிய மனித உரிமைக் குழுவினர் நேரில் ஆராய்ந்து, அரசை கண்டித்துள்ளனர்.
கொழும்பு வெலிக்கட சிறையில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் கண்டி நகரில் உள்ள போகம்பர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர்கள், சிறிய குற்றங்களுக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணை கைதிகள் என ஏராளமானோர் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், இங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சிறைச்சாலையை ஆசிய மனித உரிமை ஆணையக் குழுவினர் பார்வையிட்டுள்ளனர். சிறையில் இடப்பற்றாக்குறையை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசிடம் அக்குழுவினர் வலியுறுத்தி உள்ளனர்.
குற்றம் உறுதி செய்யப்படாதவர்களும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களும் கூட இட நெருக்கடியால் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என மனித உரிமைக் குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், '1986ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணிப்பின்படி இங்கு 384 தைதிகள் தண்டனை எதுவும் விதிக்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.
தற்போது தண்டனை விதிக்கப்படாமல் சிறையில் இருப்போரின் எண்ணிக்கை நான்கு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
போகம்பர சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அவ்வப்போது சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி இருக்கின்றனர். எவ்வித விசாரணையுமின்றி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தங்களை நீதிமன்றத்தின் மீது நிறுத்தவேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.
குற்றச்சாட்டுகள் எதையும் பதிவு செய்யாமல் குற்றம் நிருபிக்கப்படாதவர்களையும் ஏராளமான எண்ணிக்கையில் இங்கு அடைத்து வைத்திருப்பதால் தான் சிறை நிரம்பி வழிகிறது.
இந்த நிலைமைகள் குறித்து நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்புத் துறை அமைச்சர் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இங்கு மட்டுமின்றி மற்ற சிறைகளிலும் கைதிகள் சட்டப்படி நடத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும்.
விடுதலைப்புலிகள் உடனான போரை காரணமாகக் கூறி இதுபோன்று முறையின்றி சிறையில் அடைப்பதை ஏற்க முடியாது' என்றனர்.
Courtesy... thatsTamil.oneindia.in
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment