WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Tuesday, May 12, 2009

சிவாஜிலிங்கம், மயிலாப்பூரில் பா.ஜ.க. சார்பாகப் பேசியது குற்றமா......?

சிவாஜிலிங்கம், மயிலாப்பூரில் பா.ஜ.க. சார்பாகப் பேசியது குற்றமா?

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

(தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் குழுவின் மேனாள் உறுப்பினர்)

அராலி, வட்டுக்கோட்டை, வண்ணார்பண்ணை, பிரப்பங்குளம் ஆகிய ஊர்கள் ஈழத்தின் யாழ்ப்பாணக் குடா நாட்டில் உள்ளவை. பல குடும்பங்களைப் போலவே சின்னட்டியார் குடும்பத்தினர் இந்த ஊர்களில் பரந்து கிளை பரப்பி வாழ்ந்து வந்தனர்.

வண்ணார்பண்ணையில் கனகரத்தினம், பிரப்பங்குளத்தில் கதிரைவேற் பிள்ளை. இருவரும் அண்ணன் தம்பி பிள்ளைகள்.

கனகரத்தினம் தொடக்கப் பள்ளியோடு கல்வியை நிறுத்திக்கொண்டார். கதிரைவேற் பிள்ளையோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். சின்னட்டியார் குடும்பத்தில் முதன்முதலில் பீ. ஏ. பட்டம் பெற்றவராதலால் அவர் வாழ்ந்த சந்துக்கு, பி. ஏ. தம்பி ஒழுங்கை என்று பெயர் வைத்தனர். கனகரத்தினம் என் தாயின் தந்தையார். கதிரவேற்பிள்ளை எனக்குப் பெரிய பாட்டனார்.

பி. ஏ. தம்பியின் மனைவிக்கு மூன்று அண்ணன்மார். மூவரும் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். மூத்தவர் செல்லப்பா பிள்ளை, அடுத்தவர் பொன்னம்பலம் பிள்ளை மூன்றாமவர் சின்னப்பா பிள்ளை.

யாழ்ப்பாணத்திலிருந்து வழக்கறிஞர் தொழிலுக்காகச் செல்லப்பா பிள்ளை திருவிதாங்கூர் சென்றார். திருவிதாங்கூர் அரசரின் நன்மதிப்பைப் பெற்றார். நீதிபதியானார். சில காலம் சென்ற பின் தலைமை நீதிபதியுமானார். மலையாளம் இராசா என நாங்கள் வண்ணார்பண்ணையில் அவரை அழைத்தோம்.
செல்லப்பா பிள்ளை, தனது தம்பியார் பொன்னம்பலம் பிள்ளையைத் திருவிதாங்கூருக்கு அழைத்தார். காவல் துறையில் பதவியில் சேர்ந்த பொன்னம்பலம் பிள்ளை, படிப்படியாகப் பதவி உயர்வுகள் பெற்றுத் திருவிதாங்கூர் காவல் துறை ஆணையர் ஆனார்.

அக்காலத்தில் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர். பொன்னம்பலம் பிள்ளைக்கும் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளைக்கும் நெருங்கிய நட்பிருந்தது. தமிழ் நாகரிகம் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட பொன்னம்பலம் பிள்ளை, தமிழ்க் கலைகள் என்ற சஞ்சிகையில், ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார்.

செல்லப்பா பிள்ளையின் மூன்றாவது தம்பி சின்னப்பா பிள்ளை, திருவிதாங்கூரில் பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த கதிரைவேற் பிள்ளைக்குக் குழந்தைகள் பிறந்தன. கடைசிக் குழந்தை பெண் குழந்தை. பெயர் மங்களம்மாள்.

மங்களம்மாள் வளர்ந்து பருவமெய்தியதும் திருவிதாங்கூர் காவல் துறை ஆணையர் பொன்னம்பலம் பிள்ளையின் மகன் மாசிலாமணியைத் திருமணம் செய்துகொண்டார். இருவரும் யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்தனர், திருவனந்தபுரத்திலும் வாழ்ந்தனர்.

மாசிலாமணியும் என் பெரியம்மா மங்களம்மாளும் இந்திய விடுதலைப் போரில் இயல்பாக ஆர்வம் கொண்டனர். காந்தியடிகள் மீது அளவற்ற மதிப்பை இருவரும் கொண்டனர். காங்கிரஸ் பேரியக்கத்தில் உறுப்புரிமை பெற்றனர். கதர் ஆடை அணிந்தனர். தேசிய விடுதலை உணர்வுடன் விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மங்களம்மாள், நன்றாகத் தமிழில் உரையாற்றுவார். ஆங்கிலத்திலும் புலமையுடன் உரையாற்றுவார்.

கோவில்பட்டியில் 1924ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டில் மாணவர் அரங்கம், பெண்கள் அரங்கம் எனப் பல அரங்குகள் நிறைந்தன. பெண்கள் அரங்கிற்கு மங்களம்மாள் தலைமை தாங்கினார், பேருரை ஆற்றினார், தலைவர்களிடையே மதிப்பைப் பெற்றார்.

சென்னையில் 1927இல் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் மாநாட்டுக்கு மகாத்மா காந்தியடிகள் வந்திருந்தார். வரவேற்புக் குழுவிலிருந்தவர் மங்களம்மாள். மகளிர் அரங்கில் வரவேற்புரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தினார்.

பின்னர், காங்கிரஸ் பேரியக்கத்தின் பிரசாரக் கூட்டங்களுக்கு இவரை அழைத்தனர். அந்நாளைய சென்னை மாகாணத்தின் சிற்றூர்கள் பலவற்றிற்கும் சென்றார்; ஆங்கிலத்திலும் உரையாற்றினார்; தமிழிலும் உரையாற்றினார்; தலைவர்களின் ஆங்கில உரைகளைத் தமிழுக்கு மொழிபெயர்த்தார்.
அரச பதவிகளுக்குப் பெண்கள் வருவதற்கு இருந்த தடையை, 1926ஆம் ஆண்டுஆங்கிலேய அரசு நீக்கியது. சென்னை, பம்பாய் ஆகிய இரு மாகாணங்களில், இந்தத் தடை நீக்கம் நடைமுறைக்கு வந்தது.

1927இல் சென்னை மாநகர சபைக்குத் தேர்தல். எழும்பூர் வட்டாரத்திற்குக் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட ஒருவரைத் தேடினர். மங்களம்மாளைப் பலர் விதந்துரைத்தனர். மங்களம்மாள் காங்கிரஸ் வேட்பாளரானார். அவருடன் போட்டியிட்டவர், நீதிக் கட்சித் தலைவர் நாயுடு. சிறுதொகையான வாக்கு வித்தியாசத்தில் நாயுடு அத்தேர்தலில் வெற்றி பெற்றார்.

சில காலத்தின் பின் மங்களம்மாள் யாழ்ப்பாணம் திரும்பினார். 1971ஆம் ஆண்டில் இறக்கும் வரை கதர் ஆடை உடுத்தி, ஈழத் தமிழருக்குத் தேசிய உணர்வுகளை ஊட்டி யாழ்ப்பாணத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கும் தமிழர் வளர்ச்சிக்கும் உழைத்துக்கொண்டிருந்தார்.
மங்களம்மாள் மாசிலாமணி பற்றிய செய்திகளைக் கனடாவில் வாழும் ஆய்வாளர் திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் மிக விரிவாகத் தனது நூலில் எழுதியுள்ளார்.

எழும்பூருக்கும் வண்ணார்பண்ணைக்கும் இதுமட்டும் தொடர்பல்ல. எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தைக் கட்டிய காலத்தில், மங்களம்மாளின் சித்தப்பா ஒருவர் அக்கட்டடத்தின் ஒரு பகுதியைக் கட்டி முடித்த ஒப்பந்தக்காரராக இருந்திருக்கிறார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள், இந்திய விடுதலைக்கு உழைத்தார்கள். மகாத்மா காந்திக்குத் தோள் கொடுத்தார்கள். மகாத்மா காந்தியின் வார்தா கல்வித் திட்டத்தை செயற்படுத்தியவர் யாழ்ப்பாணத்து அரியநாயகம்.

திருகோணமலையிலிருந்து வந்த தொண்டர் சிவலிங்கம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி நெடுங்காலம் சிறையிலிருந்தவர். பின்னர் திருகோணமலை திரும்பியதும் காந்திய நூல்களை மக்களிடம் விற்பனை செய்தவர்.

ஈழத் தமிழர் இந்திய விடுதலைக்குப் பயன்பட்டிருக்கிறார்கள். தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பயன்பட்டிருக்கிறார்கள். திராவிட இன உணர்வை வளர்த்திருக்கிறார்கள். திருவனந்தபுரத்தில் மனோன்மணியம் சுந்தரனாரை உற்சாகப்படுத்தி ஊக்குவித்தவர்களில் எனக்குப் பாட்டனார் முறையான பொன்னம்பலம் பிள்ளையும் ஒருவர்.

சென்னையில் பதிப்புத் தொழிலில், எனக்கு முன்னேடி யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரும், யாழ்ப்பாணத்துச் சிறுப்பிட்டியைச் சேர்ந்த சி. வை. தாமோதரம் பிள்ளையுமே.

மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு பண்டிதர் வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தைக் கொடுத்தவர்கள் யாழ்ப்பாணத்து ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தினர். மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட அகராதிகள் யாழ்ப்பாணத்தில் தயாரானவை.

கும்பகோணத்தில் சீனிவாச சாஸ்திரியாருக்கு ஆங்கிலத்தையும் மேடைப் பேச்சையும் கற்பித்ததோடு தேசியத்தையும் ஊட்டியவர் யாழ்ப்பாணத்து ஹென்ஸ்மன். இதே ஹென்ஸ்மன்தான் 1909இல் இலங்கையில் விடுதலைக் குரலை முதலில் எழுப்பியவர். சீனிவாச சாஸ்திரியாரரை வெள்ளி நாக்கர் என்றனர். அவர் இலண்டன் சென்றார், இந்தியாவின் விடுதலைக்காக வாதாடினார், காந்தியடிகளோடு மாநாட்டில் கலந்து கொண்டார்.

கன்னடர், தெலுங்கர், மலையாளிகள், தமிழகத்தவர், துளுவர் எனப் பல்இனத் தொகுப்பான அன்றைய சென்னை மாகாணத்தில், சென்னைப் பல்கலைக்கழகம் அமைந்த பொழுது, இந்த இனத்தவர் எவரும் சாதிக்க முடியாததை, யாழ்ப்பாணத்துக் கரோல் விஸ்வநாத பிள்ளையும் சி. வை. தாமோதரம் பிள்ளையும் சாதித்துச் சென்னைப் பல்கலைக்கழக முதல் பட்டதாரிகளாயினர்.

சேது சமுத்திரத் திட்டத்துக்கு ஆதரவாகக் கருத்துருவாக்கம் செய்கிறேன். ஆட்சியாளருக்கு உகந்ததால் என்னைப் பேசவிடுகிறார்கள். பா. ஜ. க.வினருக்கு என் பரப்புரை உவப்பாக இருக்காது. அதற்காக அவர்கள் என் பேச்சுரிமையில் தலையிடுவதில்லை. இல. கணேசன் அவர்கள் என்னைப் பொது விவாதத்துக்கு அழைத்தார். இந்த மக்களுக்கு, இந்த மண்ணுக்கு என் கருத்துரை தேவை என்பதை இல. கணேசன் உறுதி செய்தார்.

இவ்வாறாக, இந்தியாவுக்கும் தமிழ் நாட்டிற்கும் ஈழத் தமிழர்கள் ஆற்றிய பணிகள் ஏராளம், சொல்லியடங்கா.

இந்தச் சூழ்நிலையில், இந்தப் பின்னணியில் பின்வரும் நிகழ்வை நோக்குங்கள்.

மயிலாப்பூரின் தெரு ஒன்றில் தென் சென்னை வேட்பாளர், பாரதீய ஜனதா கட்சியின் இல. கணேசன் தேர்தல் பரப்புரை வண்டி ஒன்றில் செல்கிறார்; மக்களிடையே ஆதரவு கேட்கிறார்; அந்த வழியே ஈழத்துச் சிவாஜிலிங்கம் வருகிறார். இல. கணேசனும் சிவாஜிலிங்கமும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவிக்கின்றனர். வண்டி மெதுவாகச் செல்கிறது. சிவாஜிலிங்கம் வண்டியில் ஏறுகிறார், இல. கணேசனிடம் இருந்த ஒலிவாங்கியை எடுத்துத் திரண்டிருந்த கூட்டத்தை நோக்கிப் பேசுகிறார்.

தில்லியில் அத்வானியைச் சந்தித்ததைக் கூறுகிறார், இராகுல் காந்தியைச் சந்தித்ததைக் கூறுகின்றார், ஈழத் தமிழரின் அவலங்களைப் போக்குவதற்கு அத்வானி உடன்பட்டதைத் தெரிவிக்கிறார். இல. கணேசனுக்கும் அத்வானிக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகளையும், விடுதலைக்காகப் போராடும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவு கேட்டும், அத்வானி பிரதமரானால் ஈழத் தமிழர் விடுதலைக்கு உதவுவார் எனவும் உரையாற்றுகிறார்.

தஞ்சாவூரில் பிறந்து இந்தியக் குடியுரிமையைக் கைவிடாமலே, யாழ்ப்பாணம் காங்கேயன்துறைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுப் பின் கொழும்பில் அமைச்சரானவர் நடேசபிள்ளை. சிவாஜிலிங்கமோ வல்வெட்டித்துறையில் பிறந்தவர். யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவான கொழும்புக்கான நாடாளுமன்ற உறுப்பினர்.

என் பெரியம்மா மங்களம்மாள் காங்கிரஸ் பேரியக்கத்துக்காகப் பரப்புரை செய்யலாம், எழும்பூரில் தேர்தலிலேயே போட்டியிடலாம், யாழ்ப்பாணத்து ஹென்ஸ்மன், வெள்ளி நாக்கர் சீனிவாச சாஸ்திரியாரைத் தேசிய வேட்கையுள்ள விடுதலை வீரராக உருவாக்கித் தரலாம், விடுதலை வேட்கையுடன் இல. கணேசன் வண்டியில் சிவாஜிலிங்கம் ஏறக்கூடாதா? பேசக்கூடாதா?

தமிழ் மொழிக்கு, தமிழ் மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் இந்திய மண்ணுக்கும் மக்களுக்கும் ஈழத்தவர் வழங்கிய கொடைகளுக்கெல்லாம் நன்றியுடையவர்கள், சிவாஜிலிங்கத்தை அழைத்துப் பேசவிடுவார்கள். சிவாஜிலிங்கத்தின் பேச்சைக் கவனித்துக் கேட்பார்கள், அவரின் பேச்சுகளால் இந்தியாவும் தமிழகமும் நன்மை அடையுமேயன்றி வேறாகா.

எந்தக் காங்கிஸ் பேரியக்கத்தின் விடுதலைத் தீயில் அன்று தொண்டர் சிவலிங்கமும், அரியநாயகமும் மங்களம்மாளும் இன்னும் பலரும் தம்மை இணைத்தார்களோ, அந்தக் காங்கிரஸ் பேரியக்கமும் சார்ந்த கூட்டணியினரும் இன்று சிவாஜிலிங்கத்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயல்கின்றனர். அதைச் செய்யாதீர்கள்.

ஆறுமுக நாவலரைப் போல், தாமோதரம் பிள்ளையைப் போல், ஹென்ஸ்மன்னைப் போல், என் பெரியம்மா மங்களம்மாளைப் போல், என் உடன் பிறவாத் தம்பி சிவாஜிலிங்கமும் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் நன்மையே விழைபவர். அவரைப் பேசவிடுங்கள்.

May 11, 2009

No comments: