Date: 2010/3/13
Subject: {நாம் தமிழர் பேரியக்கம்} தமிழர்கள் சுயநலவாதிகளாகச் சுருங்கிவிட்டார்கள்: தமிழருவி மணியன்
To: நாம் தமிழர் பேரியக்கம்
தமிழர்கள் சுயநலவாதிகளாகச் சுருங்கிவிட்டார்கள்: தமிழருவி மணியன்
தமிழக அரசியலில் மரியாதைக்குரிய மனிதர் தமிழருவி மணியன். வன்னி மீதான
போரில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டைக் கண்டித்து
காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிவர்.ஆளும் வர்க்கங்களின் மீது கடுமையான
விமர்சனங்களைக் கொண்டிருக்கும் தமிழருவி ஒரு ஜனநாயாக காந்தீயப் போராளி.
தமிழகத்தில் காந்தீய அமைப்பு ஒன்றைத் துவங்கி இளைஞர்களைத் திரட்டி
வருகிறார். ஈழப் பிரச்சனையில் நேர்மையான நிலைப்பட்டைக் கொண்டிருக்கும்
அவரை ஆதவன் இதழுக்காகச் சந்தித்தோம். முத்துக்குமாரின் தீக்குளிப்பு
நிகழ்வில் இருந்து துவங்குகியது இந்த நேர்காணல்,
முத்துக்குமாரின் தீக்குளிப்பு மற்றும் அது ஏற்படுத்திய எழுச்சி, அதைத்
தொடர்ந்து அதை நீர்த்துப்போக செய்த சீரழிவு அரசியல் இவற்றை நீங்கள்
எப்படிப் பார்க்கிறீர்கள்?
‘பொதுவாகவே எந்த ஒரு பிரச்னைக்கும் தீக்குளிப்பு என்பது தீர்வாகாது
என்பது என் கருத்து. எனவே முத்துக்குமாரின் தீக்குளிப்பில் எனக்கு
மகிழ்ச்சி இல்லை. ஆனால் தீக்குளிப்பு என்பது எப்போதும் உணர்வு
சார்ந்தது. 1965&ல் மொழிப் போராட்டம் நடந்தபோது சிவலிங்கம், ரங்கநாதன்
என்ற இரண்டு இளைஞர்கள் முதன் முதலில் தீக்குளித்தார்கள். அவர்கள் அந்த
நேரத்தில் உணர்வு வயப்பட்ட நிலையில் எடுத்த முடிவு அது. ஆனால்
முத்துக்குமார் அறிவுப்பூர்வமாக சிந்தித்து, உலக அரசியலை
உள்வாங்கிக்கொண்டு ஒரு கையறு நிலையில் எடுத்த முடிவுதான் தீக்குளிப்பு
என்பது. ஈழத்தின் தமிழர்கள் அடைந்த சொல்லொணா இன்னல்களால் நம்
எல்லோரையும் போல முத்துக்குமாரும் கடும் மன உளைச்சல்
அடைந்திருக்கிறார். தொப்புள் கொடி உறவுகள் ஆறரை கோடி பேர் அருகாமையில்
இருந்தும் ஒருவர் கூட அவர்களின் துயர் துடைக்க தயாரில்லையே என்ற ஏக்கம்
அவர் மனதை சுட்டிருக்கிறது. மதிப்பிற்குரிய தமிழகத்தின் முதல்வர் கலைஞர்
கருணாநிதி இதில் ஒரு மௌனப் பார்வையாளராக இருந்ததும், ஈழத்தின் இன அழிவு
இந்திய அரசின் துணையோடு நடந்ததும் கண்கூடாக தெரிந்த நிலையில் அதிகார
வர்க்கங்களை எதிர்க்க வேறு எந்த ஆயுதமும் அற்ற ஒரு எளிய தமிழனின்
எதிர்ப்பாகத்தான் முத்துக்குமாரின் தீக்குளிப்பை பார்க்க
வேண்டியிருக்கிறது.முத்துக்குமாரின் தீக்குளிப்பு, அதைத் தொடர்ந்த 14
பேரின் உயிர் மாய்ப்பு எல்லாமும் சேர்ந்து தமிழகத்தை உசுப்பியிருக்க
வேண்டும். ஒரு பெரும் அரசியல் புரட்சி நடந்திருக்க வேண்டும். ஆனால்
தமிழகம் ஒரு எல்லைக்குள்ளாக தனது போராட்டங்களை சுருக்கிக்கொண்டது.
உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் பிஜீ தீவின் கரும்புத் தோட்டத்தில்
தமிழர்கள் அடிமைகளாய் அவதிப்பட்டதை காற்று வாக்கில் கேள்விப்பட்ட பாரதி,
அவர்களின் அவலங்களை கண்ணீரை கவிதையாகப் பாடி புலம்பினான். ஆனால் வெறும்
20 கி.மீ. தூரத்தில் நம்முடைய சொந்தங்கள் கொத்து கொத்தாய்
கொல்லப்பட்டபோது நாம் உணர்வற்றிருந்தோம். முத்துக்குமாரின் மரணம் கூட
சலனங்களையும், எழுச்சியையும் உண்டு பண்ணியதேத் தவிர மாற்றங்களைக்
கொண்டுவந்துவிட வில்லை. காரணம், தமிழகம் எப்போதுமே அரசியல் சார்ந்தது.
தமிழகத்தின் மக்கள் கட்சித் தமிழர்களாக, சாதித் தமிழர்களாக, மதத்
தமிழர்களாக இருந்துதான் பழக்கப்பட்டவர்களேத் தவிர உணர்வின் அடிப்படையில்
ஒன்றிணைந்தவர்கள் இல்லை. தமிழர்கள் ஒட்டுமொத்தமாகவே சுயநலத்தில்
சுருங்கிவிட்டோம். இதுதான் உண்மை. ஏற்க மறுத்தாலும் இதுவே உண்மை.
சமகாலத்தில் நாம் எத்தனையோ எதிர்ப்பியக்கங்களையும், மக்கள்
போராட்டங்களையும் பார்க்கிறோம். இந்தப் பின்னணியில் வைத்துப்
பார்த்தால் தமிழர்கள் போராடத் தயங்குகிற ஓர் இனமாகப் மாறிப்போயினரா?
தமிழர்களுக்கும், வீரத்துக்கும் நிரம்ப தொடர்பு இருப்பதாக புறநானூறு
போன்ற இலக்கியங்களில் வருகிறதேத் தவிர, தமிழர்கள் தியாகம்
நிறைந்தவர்களாக, வீரம் செறிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு
அங்குமிங்குமாகத்தான் சான்றுகளை காண முடியும். ஒரு திருப்பூர் குமரனை
‘கொடியைக் காக்க உயிரையேக் கொடுத்தான்’ என்று திரும்பத் திரும்ப
சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஒரு வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஒரு பாரதி என
ஒரு சிலரைதான் தமிழ் சமூகம் பார்த்திருக்கிறது. நான் காந்தியத்தின்
பின்னால் நாடு செல்ல வேண்டும் என்று சொல்வதன் பின்னால் நிரம்ப அர்த்தம்
இருக்கிறது. ஒரு போராட்டத்தில் உங்கள் உயிரைக் கொடுங்கள் என்று
சொன்னால் எல்லா மனிதர்களும் பின்னால் வரமாட்டார்கள். நேதாஜி, ‘என்னுடைய
இந்திய தேசிய ராணுவத்தில் அனைவரும் வந்து சேருங்கள். உங்களுக்கு சம்பளம்
உண்டு. அந்த சம்பளம், மரணம்’ என்று சொன்னார். மரணம் என்னும் சம்பளத்தை
பெறத் தயாராக நேதாஜியின் பின்னால் செல்லக்கூடிய வீரம்செறிந்த மக்கள்
ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கலாம். தூக்குக்கயிறை முத்தமிட்ட பகத்சிங்கை
பின்தொடர்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் செல்லலாம். ஆனால் காந்தி என்ற
மனிதர், ‘என் பின்னால் வந்து அகிம்சை வழியில், அறத்தின் வழியில்
போராடுங்கள். இங்கே அதிகப்பட்ச தண்டனை சிறைக்கூடம்தான்’ என்று
அழைத்தார். காந்திய வழிப் போராட்டங்களில் சிரச்சேதம் கிடையாது.
சிறைவாழ்வுதான் உண்டு. இப்படி குறைந்தப்பட்ச தியாகத்தை முன் வைத்து
அதிகப்பட்ச மக்களை போராட்ட களத்துக்கு இழுத்துவரும் வியூகத்தை வகுத்துக்
கொடுத்தவர் காந்தி. அதனால்தான் தமிழ்நாட்டில் இருந்தும் கூட நிறையபேர்
சிறைக்குப் போனார்கள். நிறையபேர் பகத்சிங்குகளாக உருவாகவில்லை. ஒரு
ஆஷ்துரையை சுட்டுக்கொல்ல ஒரு வாஞ்சிநாதன்தான் உருவாக முடியும்.
எல்லோரும் வாஞ்சிநாதன் ஆக முடியாது. ஒரு முத்துக்குமார்தான் உலகத்
தமிழர்களின் நலனை முன்னிட்டு தன் உயிரைப் போக்கிக்கொள்ள முடியும்.
அவனுக்குப் பின்னால் பத்து, பதினான்கு பேர் தொடர முடியுமேத் தவிர ஆறரை
கோடி தமிழர்களும் வரமாட்டார்கள். ஆகவே இந்த போராட்ட முறைமைகளை நாம்
கொஞ்சம் மாற்றி அமைக்க வேண்டும். பெரும்பான்மை தமிழர்கள் களத்துக்கு
வருகிறார்போல நாம் புதிய வகையிலான போராட்ட யுத்திகளை உருவாக்க
வேண்டும். அந்தப் போராட்டம் சாத்வீகமாகவும், சட்டத்துக்கு
உட்பட்டதாகவும் அமைய வேண்டும். அப்படி அமைந்தால் அந்தப் போராட்டம்
நிச்சயமாக வெற்றிபெறும்”
இன்றைய தமிழ் இளைஞர்களின் அரசியல் அறிவு எப்படி இருக்கிறது?
அரசியல் அமைப்பு குறித்த அறிவு என்பது ஒன்று. கட்சி அரசியலைப்
புரிந்துகொள்வது என்பது இன்னொன்று. பரவலான மக்களுக்கு கட்சி
அரசியல்தான் தெரியுமேத் தவிர அரசியல் தெரியாது. அரசியல் என்பது அரசு
சார்ந்தது, அரசு இயல். ஓர் அரசு எப்படி செயல்பட வேண்டும், முன்பு எப்படி
செயல்பட்டது, அதில் உள்ள நன்மை தீமைகள், ஏற்றுக்கொள்ள வேண்டிய,
புறந்தள்ள வேண்டிய தன்மைகள் என அனைத்தையும் சிந்தித்து இயங்குவதுதான்
அரசியல். அந்த அரசியல் இன்றைய இளைஞர்களுக்கு மட்டுமில்லை, ஒட்டுமொத்த
இந்திய மக்களுக்கேத் தெரியவில்லை. மக்கள் அறிந்ததெல்லாம் கட்சி அரசியல்
மட்டுமே. ஆனால் இன்றைய இளைஞர்களின் போக்கில் வருத்தமான ஓர்
அணுகுமுறையைப் பார்க்கிறேன். நான் எல்லாம் 1960&களில் மாநிலக்
கல்லூரியின் மாணவனாக இருந்தபோது மாணவர்கள் எல்லோருக்கும் ஏதோ ஓர்
அரசியல் நிலைபாடும், சமூகச் சார்பும் இருந்தது. ஒன்று அவர்கள் திராவிட
இயக்கத்தின் ஆதரவாளராகவோ, காங்கிரஸ் இயக்கத்தின் பற்றாளராகவோ, கம்யூனிஸ
சித்தாந்தத்தின் மீது பிடிப்புள்ளவர்களாகவோ இருப்பார்கள். ஆனால் இன்றைய
கல்லூரி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அப்படி எந்தவிதமான அரசியல்,
சமூக சார்புகளும் கிடையாது. வெறுமனே வாழ்வின் சுகங்களை சுகிப்பதில்
மனங்களை பறிகொடுத்திருக்கும் தலைமுறையாக மாறிப்போயிருக்கிறது. இதற்குக்
காரணம் அன்றைக்கு இவர்களுக்கு நம்பிக்கை தருகிறார்போல் ஒரு பெரியார்
இருந்தார், ஒரு ராஜாஜி இருந்தார், ஒரு காமராஜர் இருந்தார், ஒரு அண்ணா
இருந்தார். இன்றைக்கு அதுபோன்ற தகுதிமிக்கத் தலைவர்கள் இல்லை என்பது ஒரு
காரணம். ஆனால் அதை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கலாகாது. ஏன் நாமே ஒரு
பெரியாராகவும், காமராஜராகவும் ஆகக்கூடாது என்ற சமூகக் கோபத்தோடு
அவர்கள் எழும்பி வர வேண்டும். மாற்றங்களை தன்னிலிருந்து தொடங்கும்
துணிச்சலும், அதை செயல்படுத்தும் ஆற்றலும்தான் இப்போது அடிப்படையான
தேவையாயிருக்கிறது”
ஆந்திராவில் தனித் தெலுங்கானா போராட்டம் அரசால் ஒடுக்கப்பட்டாலும்
உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் எழுச்சியோடு தொடர்ந்து
போராடுகிறார்கள். ஆனால் முத்துக்குமார் மரணத்தின்போது கல்லூரி
விடுதிகளை மூடுவது என்ற ஒரே நடவடிக்கையின் மூலமாக மாணவர்களின் போராட்டம்
முடிவுக்கு வந்தது.
‘ஆமாம். அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. 1965 ல் நடந்த மொழிப்
போராட்டத்தை தூண்டிவிட்டு பின்னாலே பதுங்கி நின்றவர்கள் திராவிட
இயக்கத்தவர்கள். அதை முன்னின்று நடத்தியவர்கள் முழுக்க, முழுக்க
மாணவர்கள். அண்ணாவிடம் கேட்டபொழுது, ‘இந்தப் போராட்டத்துக்கும்,
எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது’ என்றுதான் சொன்னார். வேறு எந்த
பெரிய தகவல் தொடர்பு சாதனங்களும் இருந்திடாத அன்றைய காலகட்டத்தில்
கல்லூரி விடுதிகளை மூடும் நடவடிக்கையினால் போராட்டங்கள் நசிவை
சந்தித்ததில் ஒரு தர்க்க நியாயம் இருக்கிறது. ஆனால் சகலவித தகவல்
தொடர்பு வசதிகளும் இருக்கும் இந்நாளில் விடுதி மூடுதல் என்ற
நடவடிக்கையின் காரணமாக ஒரு பெரும் மாணவர் எழுச்சி முடிவுக்கு வருகிறது
என்றால், இளைஞர்கள் போராட்டத்தை கைவிடுவதற்கு ஏதோ ஒரு காரணத்தை
எதிர்பார்த்து காத்திருந்தனர் என்றுதான் பொருளாகிறது. அவை ஏற்கெனவே
வீழ்ச்சியுற்றிருந்த மனங்கள் என்றபடியால்தான் ஒரு தட்டு தட்டியவுடன்
மேலும் வீழ்ந்து போயின. அதேநேரம் மாணவர் போராட்டங்களின் மூலமாக
ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய திராவிட இயக்கத்தின் தலைச்சன்பிள்ளையான
தி.மு.க.வுக்கு அதை எப்படி ஒடுக்குவது என்ற சூத்திரமும் நன்றாகத்
தெரியும். முத்துக்குமார் மரணத்தைத் தொடர்ந்த மாணவர் போராட்டங்கள்
முடிவுக்கு வந்ததன் பின்னணியில் அரசதிகாரத்தின் ஒடுக்குமுறையும்,
சூழ்ச்சியும் முக்கிய பாத்திரம் வகித்தது”
இன்று உலகமே எல்லைகளற்று சுருங்கியும், ஒடுங்கியும் வருகிறது. இந்த
நிலையில் நாம் முன்னிருத்தி வரும் தமிழன் என்ற அடையாளம் ரொம்பவும்
குறுகிய ஒன்றாக மாறியிருக்கிறதா?
உலக மயமாக்கலினால் வந்து வாய்க்கக்கூடிய மிகப்பெரிய தீமை இது.
உலகமயமாதலின் அடிப்படை நோக்கம் என்ன? அமெரிக்கமயமாதல்தான் உலகமயமாதல்.
எல்லோருக்குமான தனித்தனியான முகங்களை அழித்து யாவருக்கும் தன் முகத்தையே
பொருத்தத் துடிக்கின்றன மேலைத்தேய நாடுகள். ‘தமிழன் என்பது சுருங்கிய
அடையாளம்’ என்பதைக் காட்டிலும் சுருக்கப்படும் அடையாளம் என்பதாக
புரிந்துகொள்வது சரியாக இருக்கும். இந்த நிலையில் நம்முடைய கலாசார,
பண்பாட்டு விழுமியங்களை தக்கவைத்துக்கொள்ள நாம் தொடர்ந்து போராட
வேண்டும்.
உங்களுக்கும் எனக்கும் ஒரு பெயர் இருக்கிறது. அதுதான் நம்முடைய ஆதாரமான
அடையாளம். அது சிறியது, பெரியது, புகழ்மிக்கது, புகழ்குறைந்தது,
செல்வாக்கானது, மேல்நிலையானது, கீழ்நிலையானது என்பது இல்லை… பெயர் என்பது
நம் அடையாளம். மற்றதுடன் ஒப்பிட்டு நம் அடையாளத்தை கைவிட்டால் நம்மை
எப்படி இனங்காணுவது? இன்று உலகில் 600 கோடிக்கும் அதிகமான மக்கள்
இருக்கிறார்கள். 6 ஆயிரத்துக்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. இந்த
பரந்த இனக்கூட்டத்திற்குள் நமக்கிருக்கிற ஒரே முகவரி நம்முடைய மொழிதான்.
இருக்கிற ஒரே முகம், நம் இனம்தான். எனவே நம்முடைய இன, மொழி அடையாளங்களை
குறுக்கிக்கொண்டேப் போனால் இறுதியாக நாம் முகமும், முகவரியும்
இழந்தவர்கள் ஆவோம். மொழி, இனம், பண்பாடு, கலாசாரம் என்பதெல்லாம்
ஒவ்வொரு இனக்குழுவுக்கும் தனித்தனியானவை. அவற்றை பேணுவதுதான் சமூக
வாழ்வுக்கு சரியானது.”
விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து ஆதரித்துவரும் பழ.நெடுமாறன் உள்ளிட்ட
தமிழ் தேசிய சக்திகளால் இறுதியில் வேடிக்கை மட்டுமேப் பார்க்க முடிந்தது.
இந்திய, தமிழக அரசுகளின் அடக்குமுறைகளை எதிர்த்து அவர்களால் போராட
இயலவில்லை. இந்த தமிழ்தேசிய அரசியலும், திராவிட இயக்க அரசியலும்
தோற்றுப்போய்விட்டது என்ற பார்வையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
நிச்சயமாக திராவிட இயக்க அரசியல் என்பது நீர்த்துப்போய்விட்டது என்பதில்
யாருக்கும், எந்த சந்தேகமும் வேண்டாம். பெரியாருக்குப் பிறகு
போர்க்குணம் நிறைந்த திராவிட இயக்கத் தலைவர்கள் எவருமில்லை. பெரியார்
வளர்த்து எடுத்த போர்க்குணத்தை அரசியல் லாபங்களுக்காக நீர்த்துப்போகச்
செய்த முதல் குற்றவாளி அண்ணா. அண்ணாவின் எளிமை, அறிவு, ஊழலற்ற அரசியல்
வாழ்வு இவை எல்லாம் மிகவும் போற்றுதலுக்கு உரியவை. ஆனால் பெரியாரின்
வீரியம் மிக்க கொள்கைகளை வளர்த்தெடுத்தால் மட்டும் அரசியலில் பெரிய
வெற்றிகளை அடைய முடியாது என்று நினைத்த அண்ணா, பெரியாரின் அத்தனை
லட்சியங்களையும் கைவிட்டார். சமூக நலனுக்காக அரசியலுக்கு வந்த அண்ணாவே
இப்படி கொள்கைகளை புறந்தள்ளினார் என்றால் சொந்த நலனுக்காக அரசியல்
நடத்துகிற அண்ணாவின் தம்பிகள் கொள்கை குன்றுகளாகவோ, போராளிகளாகவோ
இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஒரு போராளிக்குரிய எந்த ஒரு குணாம்சத்தையும்
நீங்கள் திராவிட இயக்கத்திடம் பொருத்திப் பார்க்க முடியாது.
தமிழ்தேசியம் பேசக்கூடியவர்களைப் பொருத்தவரை அவர்கள் தியாகத்துக்குத்
தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து
வரத்தான் ஆட்கள் இல்லை. நெடுமாறனைப் போன்றவர்கள் வேடிக்கைப்
பார்த்தார்கள் என்று குற்றம் சொல்வது பிழை. அவரை நான் நாற்பதாண்டு
காலமாக அறிவேன். அடிப்படையில் அவர் ஒரு போராளி. தான் நம்பும் தமிழ்
தேசியத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக எதையும் இழக்கத் தயாராக இருப்பவர்.
ஆனால் ஒன் மேன் ஆர்மியாக இருந்து அவரால் என்ன செய்துவிட முடியும்?”
கோவையில் செம்மொழி மாநாடு நடத்துகிறார் முதல்வர் கருணாநிதி. இந்த
மாநாட்டில் இலங்கையில் இருந்து 75 தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஈழ மக்கள் 50 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டபோது ‘அங்கு போரே
நடைபெறவில்லை’ என்று சொன்ன கருணாநிதியின் தமிழ் மொழிப்பற்றை எப்படிப்
பார்க்கிறீர்கள்?
கலைஞருக்கு தமிழ்ப்பற்றே இல்லை என்று நான் சொல்லமாட்டேன். இனப்பற்று,
தமிழ்பற்று எல்லாம் அவருக்கு உண்டு. ஆனால் இவற்றைவிட குடும்பப்பற்று,
பதவிப்பற்று, சுகங்களின் மீதான பற்று அதிகமாக இருக்கிறது. இனப்பற்றையும்,
மொழிப்பற்றையும் வெளிப்படுத்துவதன் மூலம் தனது பதவிப்பற்று
பறிபோய்விடுமே என்ற கவலையினால்தான் அவர் இவ்வாறு நடந்துகொள்கிறாரேத்
தவிர கலைஞர் ஒரு இனத் துரோகியாக ஒட்டுமொத்தமாக முத்திரையிட முடியாது.”
நடந்து முடிந்திருக்கும் இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷே வெற்றி
பெற்றிருக்கிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
ராஜபக்ஷேயின் வெற்றி என்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வெற்றி. இது
ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். பொன்சேகா வெற்றிபெறுவார் என்று பலர்
சொன்னபோதும் நான் ஏற்கவில்லை. காரணம் இலங்கையைப் பொருத்தவரையில்
முதலில் மக்கள் தொகையினை மனதில் நிறுத்த வேண்டும். அங்கு 70 விழுக்காடு
மக்கள் சிங்களர்கள். மீதமுள்ள 30 விழுக்காட்டிலும் வெறும் 18 சதவிகிதம்
பேர் மட்டுமே தமிழர்கள். மலையகத் தமிழர்களையும் சேர்த்து இதுதான் கணக்கு.
பெரும்பான்மையாக இருக்கும் சிங்கள மக்களிடம் இத்தனை வருட காலமாக
திட்டமிட்டு இனவெறியும், தமிழின வெறுப்பும்
வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. ‘இலங்கை என்பது முழுக்க, முழுக்க
சிங்களர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு. இது சிங்களர்கள் மட்டுமே ஆள
வேண்டிய தீவு. புத்தமதமே அரசமதம்’ என்று அவர்கள் நினைக்கின்றனர். அந்த
வெறியை வளர்த்து ஒரு இன அழிப்பையே நடத்தி முடித்திருக்கும்
ராஜபக்ஷேவைதான் அவர்கள் கதாநாயகனாகக் கருதுவார்கள். சிங்கள
பேரினவாதத்தின் இந்த வெற்றியானது தமிழர்கள் இனி எழ முடியாத அளவுக்கு அந்த
தீவுக்குள் சிக்குண்டிருக்கிறார்கள் என்பதற்கான முன் அடையாளம்”
முகாம்களில் வாழும் மக்களின் நிலைமை இனி என்னவாகும்?
வடக்கிலும், கிழக்கிலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் மக்கள்
ஏதிலிகளாக, அகதிகளாக இருப்பது ஒரு பக்கம். வதை முகாம்களில் சிக்கிய 3
லட்சத்துக்கும் மேற்பட்டத் தமிழர்களில் ஒன்றரை லட்சம் பேர்தான் இதுவரை
வெளியில் விடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். வெளியே
விடப்பட்டிருக்கும் ஒன்றரை லட்சம் பேர் கூட வெவ்வேறு முகாம்களில்தான்
அடைக்கப்பட்டிருக்கிறார்களேத் தவிர, அந்த மக்கள் ரீ&ஷெட்டில்மென்ட்
எனப்படும் வாழ்வாதார தேவைகளுடன் குடியமர்த்தப்படவில்லை. இவை எல்லாம்
நடக்க வேண்டும் என்றால் இந்த பிராந்தியத்தின் அதிகார சக்தியாக இருக்கும்
இந்தியா, தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்”
நளினி விடுதலைக் குறித்த கேள்வி ஒன்றுக்கு அண்மையில் பதில் சொன்ன
கருணாநிதி ‘முதலில் தமிழை விடுதலை செய்வோம். நளினி விடுதலைக் குறித்து
இப்போது சொல்வதற்கு ஒன்றுமில்லை’ என்று பதில் சொன்னார். நளினி
விடுதலையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
நளினி நிச்சயமாக விடுதலை செய்யப்பட வேண்டும். நீதிமன்றங்கள் அனைத்தும்
அரசமைப்பு சட்டத்தின்படிதான் இயங்குகின்றன. சட்டத்துக்கு எவ்வளவு சக்தி
உண்டோ அதற்கு இணையான சக்தி மரபுகளுக்கும் உண்டு. பொதுவாக இந்தியாவில்
ஆயுள் தண்டனை என்றால் அதிகப்பட்சம் 14 ஆண்டுகள்தான். அதை எல்லாம் கடந்து
19 ஆண்டுகளாக அந்தப் பெண் சிறையில் இருக்கிறார். அவர் மீது இருக்கிற
குற்றச்சாட்டும் மிகக் கடுமையானது அல்ல. அவர் மனித வெடிகுண்டாகப்
போகவில்லை. மனித குண்டை தூண்டுகிற வேலையில் அவர் ஈடுபட்டார் என்ற
தகவலும் இல்லை. தான் அறியாமலேயே அந்த வலையில் அவர் வீழ்ந்திருக்கிறார்.
அது அறியாமல் செய்த பிழை. ‘தவறு என்பது தவறி செய்வது. தப்பு என்பது
தெரிந்து செய்வது’ என்று நாம் பாடலே வைத்திருக்கிறோம். செய்த தவறுக்கு
அதிகமாகவே அந்தப் பெண் தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். இனியாவது
நளினியை விடுவித்து எஞ்சியிருக்கிற காலத்தை அவரது குடும்பத்துடன் வாழ
அனுமதிக்க வேண்டும். இழந்த மகிழ்ச்சியைப் பெறவும், தன் குழந்தை,
உறவுகளுடன் அன்பு பாராட்டி வாழவுமான ஒரு வாழ்வை அவருக்கு
உத்தரவாதப்படுத்தித் தருவதுதான் ஒரு நாகரீக சமூகத்தின் நல் அடையாளம்.
ஆனால் கலைஞர் ‘நளினியை விடுதலை செய்யும் முன்பு தமிழை விடுதலை செய்வோம்’
என்று சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. நளினி விடுதலையை எதிர்ப்பது அல்ல
அவரது எண்ணம். சோனியாகாந்தி மனம் புண்பட்டுவிடுமே என்பதுதான் அவரது
யோசனை எல்லாம். நாளையே சோனியாகாந்தி, ‘நளினி இதுவரைப் பட்டப்பாடுகள்
போதும். இவரை விடுவித்தவிடலாம்’ என்று வாய் திறந்து சொன்னால் அடுத்த
கணமே ‘என்னுடைய கருத்தும் அதுதான்’ என்பார் கலைஞர். ஒட்டுமொத்தமாக தனது
நாற்காலியைத் தாண்டி கலைஞரால் எதையும் சிந்திக்க முடியவில்லை என்பதுதான்
அவரது வாக்குமூலம் நமக்கு இனங்காட்டுகிறது.”
ஈழத் தமிழர்களை அழித்ததில் இந்தியாவின் பங்கையும், காங்கிரஸின் பங்கையும்
பலரும் பேசியிருக்கின்றனர். ஒருவேளை காங்கிரஸ் அல்லாமல் பா.ஜ.க.வோ,
கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மற்ற கட்சிகளோ இந்தியாவின் ஆட்சிப் பீடத்தில்
இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
”நிச்சயமாக இவ்வளவு பேரழிவுகளுக்கு இந்திய அரசு துணைப் போயிருக்காது.
பா.ஜ.க.வோ, கம்யூனிஸ்ட் கூட்டணியோ ஆட்சியில் இருந்திருந்தால் அதில்
அங்கம் வகிப்பவர்களுக்கு சொந்தப் பாதிப்பு என்று ஒன்று கிடையாது.
காங்கிரஸ் விசயம் அப்படி அல்ல. இன்று இந்தியாவை ஆள்வது ஒரு கூட்டணி அரசு
என்றாலும் அதற்கு தலைமை ஏற்றிருப்பது காங்கிரஸ். அதன் தலைமை அமைச்சராக
இருக்கிற பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தியால் அமர்த்தப்பட்டவர்.
சோனியாவுக்கு நன்றிக்கடன் பெற்றவராய் இருக்கிற மன்மோகன்சிங், அவரது
எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல்தான் இயங்க முடியும். இப்படி சோனியாவின்
எண்ணத்துக்கு ஏற்றாற்போன்ற ஓர் அரசு இந்தியாவுக்கு அமைந்துவிட்டதுதான்
இவ்வளவு பேரழிவுகளுக்குமான ஆதாரக் காரணம். இது மறுக்கவோ, மறைக்கவோ
முடியாது உண்மை. ஒருவேளை காங்கிரஸ் அல்லாத மாற்று அரசுகள்
இருந்திருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும், பிரபாகரனை
காப்பாற்றியிருப்பார்கள் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. ஆனால் இவ்வளவு
மோசமான இன அழிவுக்குத் துணைப் போயிருக்கமாட்டார்கள் என்பது மட்டும்
நிச்சயம்”
ஒரு பெரும் தோல்விக்குப் பிறகான தமிழர்களின் மனமானது, பழம்பெருமை
பேசுவதில் சுகம்காணும் மனமாக மாறிவிட்டதா?
”பொதுவாகவேத் தமிழர்கள் பழம்பெருமை பேசுவதில் சுகம் காண்பவர்கள்தான்.
நம் இலக்கிய உலகத்தையே எடுத்துக்கொண்டால் நன்றாகப் படித்த, கற்றறிந்த
அறிஞர்கள் பலபேர், வாழ்வது 21ம் நூற்றாண்டாக இருந்தாலும் அவர்களின்
மனங்கள் சிந்திப்பது 2ம் நூற்றாண்டில். இந்த நூற்றாண்டின் வாழ்க்கைச்
சுகங்களை அனுபவித்துக்கொண்டே அவர்கள் புறநானூறையும், கலிங்கத்துப்
பரணியையும் பேசிக் கொண்டிருக்கின்றனர். பழம்பெருமை பேசுவதை இந்த
இனத்துக்கு செய்யும் தொண்டாக நினைக்கிறார்கள். அந்தப் பேச்சைக்
கேட்பவர்களின் மனங்களும் கூட அதற்கு ஏற்பவே இயங்குகின்றன. இதற்கெல்லாம்
காரணம் இந்த நூற்றாண்டுத் தமிழனுக்கு சொல்லிக்கொள்கிறாற்போல எவ்வித
பெருமைகளும், மகுடங்களும் இல்லை. மனம்போனப் போக்கில் வாழ
ஆரம்பித்துவிட்ட இன்றைய தமிழினத்தின் பெருமைகளை சங்ககால பெருமைகளைக்
கொண்டு சமன் செய்யப் பார்க்கிறார்கள்.”
இப்படிப்பட்டச் சூழலில் தமிழ் சமூகம் இன்னமும் தக்க
வைத்துக்கொண்டிருக்கும் நற்பண்புகள் என எவை எவற்றைக் கருதுகிறீர்கள்?
ஈழத் தமிழர்களிடம் இருக்கக்கூடிய விருந்தோம்பல் இன்றைக்கும் சிறிதும்
குறையவில்லை. எவ்வளவோ இன்னல்களுக்கு இடையே வாழ்ந்து வரும் நிலையிலும்
ஒரு புலம்பெயர் ஈழத் தமிழரின் வீட்டுக்குப் போனால் அவரிடம் நீங்கள்
பெரும் விருந்தோம்பலை தமிழ்நாட்டில் வேறு எங்கும் காண முடியாது.
அடுத்தது மொழித் தூய்மை. ஈழத் தமிழர்களைப்போல தூய்மையாகத் தமிழ் பேச
இங்கு ஒரு தமிழனும் கிடையாது. மொழியின் பால் கொண்ட பெருமிதம்,
இனத்தின்மீது கொண்ட பற்று, காலம் காலமாக தொடர்ந்து வரும் தமிழ்
பண்பாட்டை தொடர வேண்டும் என்ற முனைப்பு இவை எல்லாம் ஈழத் தமிழனிடம்
நிரம்ப இருக்கிறது. தமிழ்நாட்டுத் தமிழன் முழுக்க, முழுக்க மேலைக் கலாசார
சூறைக்காற்றில் சிதறுண்டு போய்விட்டான். எந்த பெருமைக்கும் இங்குள்ள
தமிழன் சொந்தம் கொண்டாட முடியாது. காஸ்மோபாலிடன் கல்ச்சர் என்று
சொல்வார்களே… அதுபோல பலவிதமான பண்பாட்டு பழக்கங்கள் ஒன்றுசேர்ந்த ஒரு
கதம்ப நிலை இங்கு உருவாகியிருக்கிறது. இன்று தமிழ் பேசுபவன் தமிழன் இல்லை
என்றாகிவிட்டது. பொதுவாகவே இன்று தமிழன் தமிழ் பேசுவது இல்லை.
நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களில் கூட ஆங்கில கலப்பு சரளமாக
புழக்கத்தில் இருக்கிறது. ஆங்கிலச் சொற்களைச் சேர்த்துப் பேசினால்தான்
கூடுதல் மரியாதைக் கிடைக்கும் என்ற கற்பிதம் இவர்களின் மனதில்
விதைக்கப்பட்டிருக்கிறது. இங்கே மொழித்தூய்மை, பண்பாட்டுத் தூய்மை,
வாழ்க்கைத் தூய்மை எதுவும் இல்லை”
இலங்கையில் முகாம்களிலும், இதர தேசங்களில் தேசமற்ற அகதிகளாகவும் வாழ்ந்து
கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனுக்கான தீர்வு என்னவாக
இருக்க முடியும்?
இது முழுக்க, முழுக்க சர்வதேசங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை. அதற்காகத்தான்
ஐ.நா.சபை இருக்கிறது. அதில் பல்வேறு அமைப்புகள் செயற்படுகின்றன. இந்த
உலகில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருடைய மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்
என்பதும், மனிதன் சுரண்டலுக்கு ஆட்படாமல் இருக்க வேண்டும் என்பதும்தான்
அதன் ஆதார நோக்கம். எனவே உலக நாடுகளை ஒன்றிணைப்பதாக இருக்கும் ஐக்கிய
நாடுகள் சபைக்கு தமிழர்கள் அனைவரும் அவரவர்களால் முடிந்த வழிகளில் இந்தப்
பிரச்னையைத் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும். அதன் உள்ளரசியல்,
அதிகாரத்தில் உள்ளவர்களின் சுய நோக்கங்கள் எல்லாம் ஒரு பக்கம்
இருந்தாலும் நமக்கு இதுவே வழி.”
ஈழப்போரின் போது தமிழக, இந்திய ஊடகங்கள் நடந்துகொண்ட விதம்பற்றி?
தி இந்து பத்திரிக்கைக்கு என்று ஒரு பெரிய பாரம்பரியம் உண்டு. அது
விடுதலை வேள்வியில் விழைந்த பத்திரிக்கை. கருத்து சுதந்திரமும், மனித
உரிமைகளும் பறிக்கப்பட்டபோது அதற்கு எதிராக உருவானதுதான் தி இந்து
பத்திரிக்கை. ஆனால் அதன் நிறம் இப்போது தலைகீழாக மாறிப்போய்விட்டது.
முழுக்க, முழுக்க ராம் இந்து பத்திரிக்கையை ராஜபக்ஷேவின் ஊதுகுழலாக
மாற்றிவிட்டார். தமிழர்கள், சிங்களர்கள் இரு தரப்பிடம் இருந்தும் விலகி,
ராஜபக்ஷே பரிவாரத்தின் நலன் சார்ந்து உழைப்பதையே தன் ஒரே நோக்கமாகக்
கொண்டிருக்கிறார் ராம். ரவதைமுகாம்களை பார்வையிட்டு வந்து ‘முகாம்கள்
சர்வதேச தரத்தில் செயல்படுகின்றன. இந்த நிலையிலும் கூட அங்குள்ள
குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கப்படுகிறது’ என்று சொல்கிறார் என்றால்
இதில் ராமுடைய சுயநலன் மட்டும்தான் இருக்கிறது. இது எல்லா
ஊடகங்களுக்கும், எல்லாப் பிரச்னைகளுக்கும் பொருந்தும். இங்கிருக்கும்
ஊடகங்கள் தன்னலம் சார்ந்தவை. ஒரு செய்தியை ஊடகம் வாயிலாகக்
கொண்டுபோகிறபொழுதே, அதன் மூலம் மனித மனதில் உறங்கிக்கொண்டிருக்கும்
வக்கிரத்தை எந்த அளவுக்கு உசுப்பிவிட முடியும் என்றுதான்
பார்க்கிறார்கள். ஏனென்றால் வக்கிரத்தின் அளவும், லாபத்தின் அளவும்
நேர்விகிதத் தொடர்பு உடையது. எல்லாவற்றையும் இவர்கள் வெறும் செய்தியாக
மட்டுமேப் பார்க்கின்றனர். ஊடகங்களின் சமூக நோக்கம், அவர்களின் லாப
நோக்கத்துடன் ஒப்பிடும்போது எள்ளின் முனையளவாய் இருக்கிறது. இந்திய,
தமிழக ஊடகங்கள் ஈழப் பிரச்னையை பணம் சம்பாதிக்கும் பண்டமாகவேப்
பயன்படுத்தின. அக்கறையோடு செயல்பட்ட சில ஊடகங்களையும்,
ஊடகவியலாளர்களையும் நான் அறிவேன். ஆனால் அது சொற்பம்.
பெரும்பான்மையானோர் வெறுமனே அங்கு விழுந்த பிணங்களின் எண்ணிக்கையைச்
சொல்லி தங்களின் லாபத்தைப் பெருக்கிக்கொள்வதே நடந்தது.”
ஆதவன் மார்ச் மாத இதழுக்காக நேர்கண்டவர் ஆழியூரான்.
http://www.vannionline.com/2010/03/blog-post_310.html
Muthamizh
Chennai
No comments:
Post a Comment