WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Friday, October 10, 2008

துரோகம் பற்றி......!

துரோகம் பற்றி......!

[10 - October - 2008] [courtesy:thinakkural.com]

-டாக்டர் சி.ஜமுனானந்தா-
துரோகம் என்பது இரு வழிகளில் மனிதனால் மேற்கொள்ளப்படுகிறது. முதலாவது, மனிதன் தான் செய்வது தவறு எனத் தெரிந்தும் சில செயல்களைச் செய்கின்றான். இவ்வாறு தெரிந்து செய்யும் தவறுகள் துரோகமாக அமையும். தெரியாமல் மனிதனால் புரியப்படும் தவறுகள், பிழைவிடுதல் என அமையும். அடுத்ததாக ஒரு மனிதன் தான் புரியவேண்டிய சில செயல்களைச் செய்யாது விடுகின்றான். இது இரண்டாவது வகைத் துரோகமாக அமையும். சில மனிதர்கள் புரிய வேண்டிய செயல்களைச் மற்றவர்கள் எதிர்பார்த்து உள்ளபோது செய்யாது விடுதல் நம்பிக்கைத் துரோகமாக அமையும். இவ்வாறாகத் தவறுகள் பற்றிய விழிப்புணர்வுகள் மேம்படல் தனிமனித நலனுக்கும், சமூகநலனுக்கும் இன்றி அமையாதது ஆகின்றது.

விருப்பு, வெறுப்பு என்பவற்றின் அடிப்படையிலேயே வாழ்வு அமைகின்றபடியால் துரோகத்தினை ஒரு மனிதனில் இருந்து பிரிக்கமுடியாது. ஆனால், ஒருவன் புரியும் துரோகங்கள் மிகவும் குறுகியதாக அமைய வேண்டும். இதனால் மனிதனுக்கு அதிகம் விரோதங்களோ, குரோதங்களோ வராது, சமூகத்திற்கும் பாதிப்புவராது இருத்தல் அவசியம். நேர்மையான வழிக்குவர துரோகம் பற்றிய விழிப்புணர்வு தேவை. மனிதன் புரியும் துரோகங்களை அவனைச்சூழ உள்ள பன்னிரண்டு வட்டங்களில் ஆராயலாம். ஒருவர் இந்தப் பன்னிரண்டு வட்டங்களில் எவற்றிலும் தவறு இழைக்கலாம். முதலாவதாக மனச்சாட்சிக்குத் துரோகம் இழைத்தல் ஆகும். மனச்சாட்சி என்பது ஒவ்வொரு மனிதனதும் நனவிலி மனதில் எது நீதியானது எது செய்யப்பட வேண்டும். எது தவறு என்பதனை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவது. சில வேளைகளில் மனச்சாட்சி பிழை எனக்கூறும் செயல்களையும் நாம் இயல்பாகவே ஆசை மிகுதியால் அல்லது கோப மிகுதியால் செய்து விடுகிறோம். சில வேளைகளில் மனசாட்சி செய்யும்படி கூறும் காரியங்களை சில காரணத்திற்காக நாம் செய்வதில்லை. இவை மனச்சாட்சிக்குச் செய்யும் துரோகங்களாகும்.

அடுத்து உலக அனுபவக் கற்றலுக்கு துரோகம் இழைத்தல் என்பது நாம் பாடசாலைக்கல்வி முதல் வாழ்க்கைக் கல்வி வரை கற்கவேண்டிய அவசியம் உள்ளது. இதனைப் பலர் தவறாகப் பயன்படுத்திக் கல்வி கற்காது தங்களுக்குத் தாங்களே துரோகத்தினைச் செய்கின்றனர்.

மூன்றாவதாக பெற்றோருக்குத் துரோகம் இழைத்தல் என்பதனுள் பிள்ளைகள் பெற்றோரது எதிர்பார்ப்புகளிற்கு மாறாகச் செயற்படல். பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் புரியாமை, பொற்றோருடன் தொடர்பு இல்லாத தங்களது கருமங்களை ஆற்றல் என்பன அடங்கும்.

நான்காவதாக, தமது தொழிலுக்குத் துரோகம் இழைத்தல் என்பது ஒருவர் தாம் புரியும் தொழிலில் செவ்வனே கடமையாற்ற வேண்டும். எடுக்கும் வேதனத்திற்கு வேலை செய்ய வேண்டும். உலகில் என்ன கடமையை புரிய ஒருவர் உருவாக்கப்பட்டவரோ அக்கடமையை அவர் புரியாது தவறவிடுவாராயின் அது அவர் புரியும் தொழிலுக்குத் துரோகமாக அமையும். வாடிக்கையாளரது நம்பிக்கையை ஏமாற்றுவதும் தொழிலுக்குச் செய்யும் துரோகமாகும்.மற்றும் பொதுச் சொத்துகளை அபகரித்தலும் துரோகமாகும்.

ஐந்தாவதாக தமது திருமணத்தில் துரோகம் இழைத்தல் என்பது ஒருவரின் வாழ்க்கைக்கும், சந்ததிக்கும் திருமணம் இன்றியமையாதது. மோகத்திற்காகவோ, போகத்திற்காகவோ சந்தர்ப்பசூழ்நிலைக்காகவோ திருமணம் செய்தல் என்பது சில தவறுகளுக்குக் காரணமாகாலாம். இது மணமக்களுக்கிடையில் துரோகமாக அமையலாம்.

ஆறாவதாக, குடும்ப வாழ்விற்கு துரோகம் இழைத்தல் என்பது திருமணத்திற்கு பின் கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டாலும் வேறு உறவு கொள்ளலும் அவர்களது குடும்ப வாழ்விற்கு செய்யும் துரோகமாக அமையும்.

ஏழாவதாக, தனது பிள்ளைகளிற்குத் துரோகம் இழைத்தல் என்பது பெற்றோர் தம் பிள்ளைகளுக்குப் போதிய வசதிகள் அளிக்காது கல்வி கற்றலில் தடங்கல் ஏற்படுத்தல், குடும்பப் பாரத்தைப் பிள்ளைகளில் சுமத்தல், முறையான வழிகாட்டலை வழங்காது விடல் என்பன அமைகின்றன.

எட்டாவதாக, தனது நண்பர்களிற்குத் துரோகம் இழைத்தல் என்பது நண்பர்களைத் துன்பத்தில் கைவிடல், நண்பர்களுக்கு நல்ல ஆலோசனை வழங்காதுவிடல், நண்பர்களின் எதிர்பார்ப்புகளிற்கு மாறாக நடத்தல் என்பன அமைகின்றன.

ஒன்பதாவதாக, தான் வாழும் சமூகத்திற்கு துரோகம் இழைத்தல் என்பது ஒருவன் தனது சமூகத்துடன் சேர்ந்து இயங்க வேண்டும். சமூகத்திற்கு முரணாகச் செயற்படக்கூடாது. சமூக முன்னேற்றத்தில் பங்களிக்க வேண்டும். தான் வாழ்ந்த சமூகத்தினை விலத்திச் செல்லக் கூடாது. இவற்றினைச் செய்யத் தவறுவோர் சமூகத்திற்குத் துரோகம் செய்தவர்களாவார்.

பத்தாவது, தனது இனத்திற்கு துரோகம் இழைத்தல் என்பது ஒருவர் தனது இனத்தைக் காட்டிக் கொடுத்தல் அல்லது தனது இனத்திற்கு எதிராகச் செயற்படல் ஆகும். உலகத்தில் உள்ள உயிரினங்களில் மனித இனம் மட்டுமே தனது இனத்திற்கு எதிராகச் செயற்படுகின்றது. இதனைச் ஜனநாயகத்தின் தலைவாயிலான பாராளுமன்றிலோ அன்றில் யுத்தக்களத்திலோ காணலாம்.

பதினொராவதாக, உலகத்திற்கு துரோகம் இழைத்தல் என்பது உலகின் சமநிலையைக் குலைத்தல், உலக அமைதியினைக் குலைத்தல், சூழல் வெப்பமடையக் காரணமாதல், அணுக்கதிர் வீச்சுகள், இரசாயனங்கள் பிரயோகம், பொலித்தீன் பாவனை, இயற்கையை அழித்தல் என்பன அடங்கும்.

பன்னிரண்டாவதாக, கடவுளிற்குத் துரோகம் இழைத்தல் என்பது கடவுளின் பெயராலோ அன்றிச் சமயத்தின் பெயராலோ அரசியல் நடத்தல், சண்டையிடல், பொருட்களை அபகரித்தல், விளம்பரப்படுத்தல் என்பன அமைகின்றன. மேலும் மனிதன் மனிதனாக வாழாது மிருகமாக வாழ முற்படலும் கடவுளுக்குச் செய்யும் துரோகமாகும்.

No comments: