WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Wednesday, April 1, 2009

செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தமிழர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்....!!!

செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தமிழர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்
31-03-2009 21:29
செய்திகள், தமிழகம்

இலங்கை அரசின் கொடூரமான தமிழின அழிப்புக்கு பயந்து லட்சக்கனக்கானோர் தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளாய் தஞ்சமடைந்து வருகின்றனர். இவர்களுக்காக மொத்தம் 117 திறந்தவெளி அகதிகள் முகாம் தமிழகம் முழுக்க உள்ளது. இதில் ஆயிரக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். தங்கியுள்ளோர் அனைவரும், முறையாக பதிவு செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த முகாம்களை மாவட்ட நீதிபதி தகுதியுள்ள ஒருவரின் மேற்பார்வையில் இருந்து வருகிறது. முகாம்களை கண்காணிக்க சிறப்பாய் கியூ பிரிவு காவல்துறையும் அமத்தப்பட்டுள்ளது.


இவைகளோடு இரண்டு சிறப்பு முகாம்கள் தமிழகத்தில் செங்கல்பட்டில் ஒன்றும், பூவிருந்தவல்லியிலும் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தை சார்;ந்தவராக சந்தேகம் கொள்ள நேர்ந்தாலே இம்முகாம்களில் அடைக்கப்படுவர். இதில் பலர் பொய்யாக வழக்கு போட்டும் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளது கேட்கும் போது நெஞ்சில் ஈடி பாய்கிறது.

இம்முகாம்கள் பெயரளவில் மட்டுமே முகாமாக உள்ளது. சிறைக்குரிய அத்தனை அடையாளங்களையும் இங்கு காணலாம். இங்குள்ளோர் வெளியே செல்ல அனுமதியில்லை. இவர்களை 24 மணி நேரமும் கண்காணிக்க நூற்றுக்கான ஆயுதமேந்திய காவல்துறையினர் அமத்தப்பட்டுள்ளனர். இங்குள்ளோரை அவர்களது உறவினர்கள் காண வேண்டுமெனில், முதலில் செங்கல்பட்டு காவல்துறையினரிடம் பதிவு செய்த பின்னர், காவல்துறையினர் அனுமதித்தால் மட்டுமே சிறப்பு முகாமில் உள்ளவர்களை காண முடியும். அகதிகளாய் உள்ள பெரும்பான்மையோருக்கு தமிழகத்தில் உறவுகள் இல்லாததால், இவர்கள் தனிப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களில் ஒருவருக்கு தினந்தோறும் அன்றாட செலவுக்காக ரூ. 45 தரப்படுகிறது.

செங்கல்பட்டில் 65 பேரும், பூவிருந்தவல்லியில் 25 பேர்களும் இருந்து வருகின்றனர். இந்த சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளோர் அனைவரும் ஆண்களே. இவர்களில் சுமார் 20 வயது முதல் 60 வயது பெரியவர் வரை இருந்து வருகின்றனர். இவர்களில் செங்கல்பட்டில் மட்டும் 47 பேர் மீது காவல்துறையால் வழக்கு தொடுக்கப்பட்டு, இன்னும் குற்றப்பத்திரிக்கை வழங்கப்படாமலேயே பல ஆண்டு காலம் உள்ளே இருந்து வரும் சோகம் நிகழ்ந்து வருகிறது.

7 பேர் மீது வழக்கு நடைபெறுவதால், இவர்கள் மட்டும் நீதிமன்றத்திற்கு நேர்நிறுத்த வெளியே அழைத்துச் செல்லும்போது வெளி உலகை அதிசயமாய் பார்க்கின்றனர். இம்முகாமில் உள்ள 11 பேர் மீது வழக்குகள் அனைத்து முடிந்து விட்ட நிலையிலும், அயல் நாட்டு கடவுச்சீட்டு வழக்கை பதிவு செய்து உள்ளேயே இருக்கும்படி பார்த்துக்கொள்கிறது கியு பிரிவு காவல்துறை.

மொத்தமுள்ள 65 பேரில், 8 பேர் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் சிலரது குடும்பங்கள் தமிழகத்திலோ அல்லது தமிழீழ மண்ணிலோ இருந்து வருகின்றனர். குறைந்தபட்சம் இவர்களையாவது, அவரவர் குடும்பங்களுக்கு அனுப்பினால் வீட்டில் இருந்து கொண்டே மருத்துவம் செய்து கொள்ள வாய்ப்பாய் அமையும்.

இங்கு அடைபட்டிருப்பவர் சிவகரன் என்கிற சிவா. இவர் 2007-ம் ஆண்டு தனது மனைவியையும், மூன்று குழந்தைகளையும் தமிழீழ மண்ணிலேயே விட்டுவிட்டு பிழைப்பு தேடி இந்தியாவிற்கு அகதியாக வந்தார். வந்த இடத்தில், இவர் தனது நிலையை எவ்வளவு தூரம் சொல்லியும், சந்தேகம் கொண்ட கியூ பிரிவு, சிறப்பு முகாமிற்கு அனுப்பி விட்டது. நாளுக்கு நாள் ஈழ மண்ணில் நடக்கும் இன அழிப்பை தினசரி வாயிலாய் தெரிந்து கொண்டு, பைத்தியம் பிடிக்கும் நிலையிலே குடும்பத்தை நினைத்து வருந்தி கொண்டிருந்தார், சிவா. இந்நிலையில், பேரிடியாய் நான்கு நாட்களுக்கு முன் இவரது குடும்பத்தின் மூன்று குழந்தைகளும், மனைவியும் சிங்கள இன வெறி அரசின் இராணுவத்தால் தாக்குதலில் ஏவப்பட்ட எறிகணையில் சிக்குண்டு அனைவரும் இறந்து விட்ட செய்தியை கேட்டது முதல் பைத்தியம் முற்றிய நிலைக்கு சென்று, தானே உளறிக் கொண்டு சிறப்பு முகாமுக்குள் அடைப்பட்டுள்ளார்.

இங்குள்ளவர்களுக்கு தமிழகத்தில் உள்ள ஒருவரும் மனித நேய அடிப்படையில் கூட உதவி செய்ய முன்வரவில்லை. இதனால், இவர்கள் அனைவரும் மனம் நொந்து உயிருடன் செத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் ஒருவர் சில நாட்களுக்கு முன் பெருவாரியான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளது, நம்மையெல்லாம் வேதனையில் ஆழ்த்துகிறது.

இவர்களின் சோகக்கதைகளை பலமுறை மனுக்கள் மூலம் தமிழக அரசுக்கு தெரிவித்திருந்த போதிலும், இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இவர்களில் நான்கு பேர், நேற்று 30.03.2009 அன்று முதல் சாகும்வரை உண்ணாநிலையை மேற்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு உறுதுணையாக, மேலும் சிலர் ஒவ்வொரு நாளும் உண்ணாநிலை இருந்து வருகின்றனர். இன்றுடன் இரண்டு நாட்களாயும், இவர்களின் உண்ணாநிலை வெளியே விடாமல், காவல்துறை மறைக்கப்பார்க்கிறது.

உண்ணாநிலை மேற்கொண்டவர்களின் பெயர் வருமாறு :

1. நாகேந்திரன் (வயது 44), த.பெ. மார்ட்டின் - குடும்பம் நாமக்கல் மேட்டுபட்டு அகதி முகாமில் இருந்து வருகின்றனர்.
2. பாரீஸ்ராஐ (வயது 24), த.பெ. தேவராசு
3. சுரேஸ் (வயது 29), த.பெ. செபமாலை - குடும்பம் மதுரை உச்சப்பட்டி அகதிகள் முகாமில் இருந்து வருகின்றனர்.
4. தயானந்தன் (வயது 52), த.பெ. வினாயக மூர்த்தி

இவர்கள் நான்கு பேரும் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாநிலை மேற்கொண்டு வருகின்றனர்.

1. இங்குள்ள அனைவரையும் தங்களது நாட்டிற்கேர் அல்லது தமிழகத்திலுள்ள குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ வழி செய்யப்பட வேண்டும். குறைந்தபட்ச 11 பேர் எவ்வித வழக்கும் இல்லாத நிலையில் இருக்கும் இவர்களையும், நோய்வாய்ப்பட்டுள்ள 8 பேரையும் உடனடியாய் தங்களது குடும்பங்ளுடன் சேர்ந்து வாழ அனுப்பி வைக்க வேண்டும்.
2. இவர்களுக்கு அரசு தினமும் ரூ.45 எல்லா செலவுகளுக்கும் கொடுத்து வருவது, இன்றுள்ள விலைவாசிக்கு எற்றதாய் இல்லை. தினப்படி உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

தமிழீழத்தில் கஞ்சிக்குக் கூட வழியில்லாமல் செய்து வரும் ராசபக்சே அரசைப் போல், தமிழகத்தில் சிறப்பு முகாமில் இருந்து வரும் நமது சொந்தங்களையாவது, அரசு கவனித்து கௌரவமாய் பாதுகாக்க வழி செய்யப்பட வேண்டும். இல்லையேல், மகேந்தா அரசுக்கும் நமது தமிழக அரசுக்கும் வேறுபாடு இல்லாமல் போகும்.
TNC

No comments: