உண்மையை சொல்லுங்கள், எல்லாம் முடிந்து விட்டதா?
காருண்யத்தினையும், மனிதாபிமானத்தினையும் போதித்த புத்தபெருமானின் போதனைகளை ஏற்றிருக்கும் தேசம் வெசக் தினங்களை அனுட்டித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றது.
சோடனைகள், வெளிச்ச அலங்காரங்கள், உணவு தானங்கள் என்று வெசக் தினங்கள் களைக் கட்டியிருந்தன. அமைதியும், கருணையும் வழியும் மனிதாபிமானமும் கொண்ட தேசத்தில் வசித்துக் கொண்டிருப்பதனைப் போன்று மக்கள் வெசக் நாட்களை இனிதே அனுட்டித்து மகிழ்ந்தனர்.
கூட்டம் கூட்டமாக குடும்ப அங்கத்தவர்கள் சகிதம் வெசக் தொரண எனப்படும் வெளிச்ச அலங்காரங்களைப் பார்த்து சுதந்திரமாக நடந்து திரிந்து உண்டு மகிழ்ந்து கழிந்தன தலைநகர் மக்களின் பொழுதுகள். ஒலிவாங்கிகளில் குத்துப் பாடல்கள் ஒலிக்க நடுவீதிகளில் அர்த்தராத்திரியில் நடனங்கள் தொடர்ந்தன. இதே தேசத்தின் ஒரு பகுதியில் நிகழும் அவலக் கொடூரங்கள் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள், ஓடும் இரத்த ஆறு என்பன பற்றி எந்த கவலையும் இங்கு இவர்களுக்கில்லை. அது வேறு. இது வேறு. அப்படித்தான் இங்கு எல்லாம்.
இந்த வெசக் தினம் அனுட்டிக்கப்படும் நாட்களில் நாட்டிற்கும் சிங்களவர்களுக்கும் பெரும் தலையிடியாக இதுவரை இருந்த வந்த அவர்கள் கூறும் புலிப் பயங்கரவாதிகள் அவர்களைப் பொறுத்தவரை அழிந்து விட்டனர். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எங்களுடன் வசிக்கும் சி;ங்கள இனம் விடுதலைப் பெருமூச்சுடன் இம்முறை வெசக்கினை அனுட்டித்தது. சிங்களவர்கள் அனைவர் முகத்திலும் பெருமிதம். ஏதோ ஓர் மலர்ச்சி.
வெசக் அனுட்டிப்புக்கு பங்கம் ஏற்படுத்த பயங்கரவாதிகள் முயற்சிக்கின்றார்கள் என்ற முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் அடிப்படையில் மக்களின் இந்த களியாட்டங்களுக்கு பலமான பாதுகாப்பு வேறு. காவற்துறையினரின்; நடமாட்டம் அதிகரித்திருந்ததுடன், சோதனைக் கெடுபிடிகளும் வெசக் பார்க்க சென்ற மக்களை இம்சித்தன. எனினும் அவற்றை அனைவரும் சகித்து ஒத்துழைத்தனர்.
மனிதாபிமானம் மரணித்து விட்ட தேசத்தில் தமிழினம் சொல்லொணா துயரத்தினையும் பேரழிவையும் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் தலைநகரில் எல்லாம் சுமுகமே. இங்கு அது பற்றி எல்லாம் எவரும் கவலைப்படுவதில்லை. பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கைகளும் அரங்கேறின.
தமது தாயகப் பிரதேசத்தில் சிறப்புற உழைத்து தலைநிமிர்ந்த வாழ்ந்த மக்களை நிர்க்கதியாக்கி அகதிகளாக்கி உடுத்த மாற்றுடையின்றி பட்டினிப்போட்டு அலைக்கழித்து நடுவீதியில் நிறுத்தி வைத்து விட்ட பெருமையைக் கொண்டாடும் சிங்கள இனம் அவர்களுக்காக இரக்கப்பட்டு நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கைகளை வீதிக்கு வீதி வெசக் தினங்களில் முன்னெடுத்தது. ஏனெனில் அது தான் அவர்களுக்கு புண்ணியக் காரியமாம்.
பயங்கரவாதம் என்ற போர்வையில் தமிழினம் அழிகின்றது அதனை அனைவரும் வரவேற்கின்றனர். புத்தபகவானும் அப்படித்தான் போதித்து இருக்கின்றார் என்று இவர்கள் விரைவில் வியாக்கியாணம் சொல்லக் கூடும். எல்லாம்; சிங்களவர்களின் கைகளில். அந்தரப்பட்டு நிற்கும் எங்களினால் மறுத்துப் பேசத்தான் இயலுமா?
ஒரு எறும்பைக் கூட நாங்கள் மிதிக்க மாட்டோம். அது பெரும் பாவம் என்று பௌத்தர்கள் பொதுவாகக் குறிப்பிடுவதுண்டு. எறும்புகள் மீது கொண்ட அன்பு தமிழனிடம் இவர்களுக்கு இல்லாதது பெரும் துரதிருஷ்டமே.
வளம் கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்த நம் தமிழினம் இன்று அந்தரப்பட்டு பரிதவித்து கொண்டு அவலங்களையெலாம் ஒட்டு மொத்தமான அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் தமிழனாக இருப்பதனாலேயே, சிங்கள மனங்கள் அவலப்படும் தமிழினம் மீது ஈரம் காட்ட மறுக்கின்றன. தமிழன் என்றாலே பெரும் வெறுப்பு. யுத்தம் என்றால் இந்த அவலங்கள் ஏற்படுவதும் சகஜம் என்ற நியாயப்படுத்தும் அபிப்பிராயங்கள் வேறு.
ஒரு இனத்தினை அழித்துக் கொண்டு எப்படி இப்படி இவர்களினால் அமைதியடைய முடிகின்றது. சிங்களத்திற்கு மனச்சாட்சி என்ற ஒன்றே இல்லையா? அல்லது ஒட்டு மொத்தமாக ஏமாறக் கூடிய பெரும் முட்டாள்களாக இருக்கின்றனரா? சந்தேகம் வலுக்கின்றது.
சிங்களப் பத்திரிகைகள் எல்லாம் பிரபாகரனின் குடும்பத்தினர் புகைப்படங்களை கடந்த வாரம் முழுவதும் பிரசுரித்திருந்தன. மகிந்தவின் குடும்பப் புகைப்படங்களுக்கு கூட இப்படியொரு முக்கியத்துவத்தினை சிங்களப் பத்திரிகைகள் வழங்கியிருக்கவில்லை.
தமிழ் மக்கள் வன்னியில் உணவின்றி பட்டினிக் கிடக்க பிரபாகரனும் அவர் குடும்பமும் ஆடம்பர வாழ்வில் ஈடுபட்டதற்கான சான்றுகள் இவை என அப்பத்திரிகைகள் கருத்துக் கூறியிருந்தன.
அந்த அவலத்திலிருந்து தமிழ் மக்களை வன்னியிலிருந்து காப்பாற்றியிருக்கின்றது சிங்களப் படை என்றும் அதற்கு நியாயம் கூறப்பட்டிருந்தது.
இப்புகைப்படங்களை பிரசுரித்ததன் ஊடாக சிங்களத்திற்கு வழங்கப்பட்ட செய்தியும் அதுவே. ஒரு போராளியின் அரிய இந்த புகைப்படங்களை பார்வையிட வேண்டுமெனில் நாம் ஒன்று பிரபாகரனின் வீட்டிற்கு விருந்தினராகச் சென்றிருக்க வேண்டும். அல்லது அவரது நெருங்கிய உறவினராக இருந்திருக்க வேண்டும்.
ஆனால் இந்த இரு தகுதிகளும் இல்லாமல் சாதாரண மக்களுக்கு குறிப்பாக அவரை நேசிக்கும் தமிழ் மக்களுக்கு இந்த அரிய படங்களைப் பார்க்க மட்டுமல்லாது. அதனைப் பேணிப் பாதுகாக்கவும் (பிரசுரிக்கப்பட்ட பத்திரிகைகளோடு) வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவே விதிவிலக்காக ஒரு சிங்கள அன்பர் குறிப்பிட்டார்.
ஆனால் பொதுவான எம் சகோதர சிங்கள இனமோ சந்திக்கு சந்தி நின்று, பொது இடங்களில் கூட்டம் சேர்த்து இப்படங்களைப் பார்த்து பிரபாகரனை திட்டித் தீர்த்ததுடன் பல விமர்சனங்களையும் தகாதச் சொற்களையும் தாராளமாகக் கையாண்டது.
இப்பொழுது சிங்கள மக்களின் ஆசைகள் எந்தவிதமான தடங்கல்களும் இன்றி நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. புலிகள் பூண்டோடு அழிந்து விட்டனர். நாடு பிளவுப்படப் போவதேயில்லை. வன்னியில் இருந்த புலிகளை எல்லாம் முகாம்களில் பிடித்து வைத்தாயிற்று. அவர்களினால் இனி எந்தவிதமான தொந்தரவும் இல்லை. ஆனால் வெளிநாட்டினரைப் பகைத்துக் கொண்டோமே என்ற கலக்கம் ஒன்று மட்டுமே இவர்களிடம் உள்ளது.
இந்தியாவில் எந்த ஆட்சி வந்தால் என்ன இங்கு சிங்கள மக்களின் காவல் தெய்வம் எங்கள் மகிந்தவின் ஆட்சி தொடரும் அதனால் கவலையில்லை. மகிந்த முன் புலிகள் வாலாட்டவே முடியாது. இவை தான் எங்கள் அயலவர்களின் ஒட்டுமொத்தக் கருத்து நிலைகள்.
மனிதப் பேரவலம் என்று கூறிக் கொண்டு அதனை இரசித்துக் கொண்டிருக்கும் சர்வதேசத்தின் முன் எங்கள் நம்பிக்கைகள் தவிடு பொடியாகி விட்டன. தமிழனுக்கு எதுவும் நேர்;ந்தால் அவன் வருவான், இவன் வருவான் என்ற நம் உள்ளத்து நம்பிக்கைகள் தகர்ந்து பல நாட்களாகி விட்டன. தமிழர்களின் கண்ணீ;ருக்கும் உயிர்களுக்கும் பெறுமதியற்றுப் போனதன் வலி நெஞ்சில் இருந்து அகல மறுக்கின்றது. எங்களில் பலருக்கு அதுவே மன அழுத்தமாகவும் மாறி நித்திரையற்ற இரவுகளைப் பரிசளிக்கின்றன. தமிழினத்திற்கு நம்பிக்கை தரும் நிகழ்வுகள் ஏதேனும் நிகழ மாட்டாதா? எத்தனை நாட்களுக்கு இந்த பேரவலம்? மனச்சாட்சியும், மனிதாபிமானமும் இல்லாத சிங்களவர்கள் மத்தியில் என்றைக்கு நாம் தலைநிமிரப் போகின்றோம்?
அல்லது உண்மையை சொல்லுங்கள், எல்லாம் முடிந்து விட்டதா?
http://www.globaltamilnews.net/tamil_news....=9620&cat=5
இந்தக் கட்டுரை குளோபல் தமிழச் செய்திகளுக்காக ரட்ணா எழுதியது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment