17/06/2009, 12:38 [செய்தியாளர் தாயகன்]
தடுப்பு முகாமில் 25,000 தமிழர்கள் காணாமல் போயுள்ளனர் - அரசே உறுப்படுத்தியது
வன்னியில் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் தொடர்பான முழுமையான விபரங்களை சிறீலங்கா அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ளது.
262,632 பேர் மட்டுமே தடுப்பு முகாம்களில் இருப்பதாகவும், இவர்களில் 134,464 பேர் பெண்கள் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
வவுனியா முகாம்களில் 282,000 இற்கும் மேற்பட்ட மக்கள், அல்லது மூன்று இலட்சம் வரையிலான மக்கள் இருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே அறிவித்திருந்தது.
இது பற்றிக் கருத்து வெளியிட்ட சிறீலங்கா அரசாங்கம், கந்த மே மாதம் 11ஆம் நாள், 287,598 பேர் இந்த முகாம்களில் இருந்திருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளது.
அவ்வாறெனில் 24,966 பேருக்கு என்ன நடந்தது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவர்களில் 14,962 பேர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும், முகாம்களைவிட்டு வெளியேறி இருப்பதாகவும் அரசு கூறுகின்றது.
ஆனால் தடுப்பு முகாம்களில் இருந்து வெளியேறவோ, அல்லது மீளக் குடியேறவோ, சிறீலங்கா படையினர் யாருக்கும் அனுமதி வழங்கியிருக்கவில்லை.
இவற்றின் மூலம் இடம்பெயர்ந்து சிறீலங்கா படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, கணக்கிடப்பட்ட பின்னரும், தமிழர்கள் 25,000 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
சிறீலங்கா அரசின் கணக்கின் பிரகாரம்....
முல்லைத்தீவில் இருந்து 235,386 பேரும்,
கிளிநொச்சியில் இருந்து 20,079 பேரும்,
யாழ்ப்பாணத்தில் இருந்து 2,778 பேரும்,
வவுனியாவைச் சேர்ந்த 1,864 பேரும்,
திருகோணமலையில் இருந்து 1,054 பேரும்,
மன்னாரில் இருந்து 471 பேரும்
மட்டுமே வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இறுதிக்கப்பட்டப் போரின்போது பல்லாயிரக் கணக்கான மக்களையும், படுகாயம் அடைந்திருந்த போராளிகளையும், புல்டோசர்களால் நெரித்தும், பதுங்கு குழிகளுக்குள் உயிருடன் போட்டு மூடியும், சரமாரியாகச் சுட்டும் சிறீலங்கா படையினர் இன அழிப்புச் செய்திருந்தனர்.
தற்பொழுது முகாமில் இருந்த 25,000 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டிருப்பதும், சிறீலங்கா படையினர் வெளியிட்ட தகவல்கள் மூலமே கண்டறியப்பட்டுள்ளது.
10 ஆயிரம் வரையிலான போராளிகள் கைது செய்யப்பட்டதாக சிறீலங்கா அரசு முன்னர் அறிவித்திருந்த போதிலும், அவர்களும் இந்தத் தொகையில் உள்ளடக்கப்பட்டார்களா? என்பது பற்றி அரசு எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
இதேவேளை, வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த தமிழர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், சிறுவர்களும் என கண்டறியப்பட்டுள்ளது.
சிறீலங்கா அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்;கையில் பிரகாரம், தடுப்பு முகாம்களிலுள்ள 262,632 பேரில், 134,464 பேர் பெண்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மக்களில் தமது பெற்றோரை இழந்த 10 அகவைக்குக் குறைந்த 350 சிறுவர்கள், தமது எதிர்காலத்திற்கான ஏக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
முகாமிகளிலுள்ள 58 ஆயிரம் வரையிலான மாணவர்களில் 250 பேர் பட்டதாரிப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களாகும்.
அத்துடன், கல்விப் பொதுத் தராதர உயர்தர, மற்றும் சாதாரண தரப் பரீட்சை எழுதுவுள்ள மாணவர்களும் தமது கல்வியின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு, விரக்தியடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.
இடம்பெயர்ந்துள்ள மூன்று இலட்சம் வரையிலான மக்களில் 13 வீதமானவர்கள் சிறுவர்கள் எனவும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஊட்டச்சத்துக் குறைவினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் உப அமைப்புக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தன.
www.pathivu.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment