WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Friday, June 19, 2009

சிங்கள வலைப்பூவில எழுதிய பதிவிது...!!!

சிங்களர் ஒருவர் தனது வலைப்பூவில எழுதிய பதிவிது.

அத்திறந்த வெளியில் நின்று கொண்டிருக்கும் மக்கள் சிலர் சிரித்துக் கொண்டும் ஆரவாரமிட்டுக் கொண்டும் இருக்கின்றன. முக்கியமாக வெற்றிக் களிப்பில் உள்ளனர். அவர்கள் முன் புல்வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இறந்த உடல்கள் மீது காமிரா நகர்கிறது. இராணுவ அடையாள அட்டை ஒன்றை தங்களுக்குள் கைமாற்றியபடி
புகைப்படக்காரரை அதையும் படமெடுக்கும்படி கேட்கின்றனர். வெற்றிப் பூரிப்பு அந்த இடமெங்கும் தெறிக்கிறது.

இத்தகைய காட்சிகளை நான் முன்பு கண்டிருக்கிறேன். துப்பாக்கிகள் ஏந்தியபடி, வெற்றிக்களிப்பு முகத்தில் கூத்தாடக் காலனியாதிக்கவாதிகள் ஆசியாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் வெற்றி கொண்டாடிய காட்சிகள் தாம் அவை. பெரும்பாலும் அந்த நிலத்தின் உண்மையான குடிமகன்கள் இருவர் அடிமைகளாக இருபுறமும் வெறித்த பார்வையுடன் நின்றிருப்பார்கள். வரலாற்றில் மிகப்பெரிய தருணத்தின் ஆவணமாகக் கொண்டாடப்படும் அப்புகைப்படங்கள். மிகப்பெரியதொரு வேட்டையாடலின் வெற்றிப் பரிசுகள் அவை. சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள், யானைகள், காண்டாமிருகங்களின் வேட்டை அவை.

மே 19, 2009 தொலைக்காட்சியில் காட்டப்பட்டதும் அப்படியொரு பெரும் வேட்டையைப் பற்றியது. மனித்ப் புலிகள் வேட்டை. உலகின் மிக பயங்கரத் தீவிரவாத அமைப்புகளில் ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை, வீழ்த்தப்பட்டுக் கிடந்தது. இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் இப்படங்கள் காட்டப்பட்டன. சில நேரங்களில் மிகக் குரூரமாக, தேவையில்லாமல் மீண்டும் மீண்டும்...

வார இறுதியில், விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டார்கள் என்று முற்றும்
அறிந்தபின் கொழும்பு மக்களும், தீவின் இன்னபிற மக்களும் கொண்டாட்டங்களைத் துவக்கி விட்டனர். வாணங்கள் வெடித்து, பெரிய பெரிய லாரிகளிலும் ட்ரக்குகளிலும் சிங்களக் கொடியைப் பறக்க விட்டபடி, வீதிகளில் வலம் வந்தனர். ஆண்களும் பெண்களும் தெருக்களில் ஆடிப்பாடினர், இனிப்புகளும் பால்பாயசமும் விநியோகித்தனர். எங்கு பார்த்தாலும் இலங்கை தேசியக் கொடி பறந்தது. வீடுகளின் கூரையில், கடைகளில், வணிகக் கட்டடங்களில், தெருவோரங்களில்.. வாகனங்கள் கூட அணிந்து சென்றன. போர், கலகம், பயங்கரவாதம், தற்கொலைப் படை வெடிகுண்டுகள், கன்னிவெடிகள், சிறுவர் சிப்பாய்கள் இவற்றால் பெருஞ்சோர்வடைந்திருந்த சலிப்படைந்த சிங்களர்கள் தீவிரவாதம் வீழ்த்தப்பட்டதில் மிகப் பெருமிதம் கொண்டனர் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கியது.

ஒவ்வொரு நாளும் வெற்றிக் கூச்சல்களைக் கேட்கிறேன். ஒவ்வொரு நாளும்
வீழ்த்தப்பட்ட அந்த மக்களின் கனத்த மௌனத்தையும் கேட்கிறேன். கூரையைக் கிழித்துக் கொண்டு கேட்கும் இக்கூச்சல்களில் சொல்லப்படாத செய்தி அது தான். நாம் வெற்றி பெற்று விட்டோம். அதனால் என்ன? யாரோ தோற்று விட்டார்கள். யார் அது? என்னைக் கேட்டால் நாம் அனைவருமே என்று தான் சொல்வேன். இந்தக் கொண்டாட்டங்களை எல்லாம் பார்க்கும் போது தமிழ் மக்களை நினைத்துப்பார்க்கிறேன் நான்.
அவர்களுக்கு எப்படி இருக்கும், என்ன எண்ணிக் கொண்டிருப்பார்கள்
அவர்கள் இப்போது? பீதியிலும் கவலையிலும் ஆழ்ந்திருப்பார்களா? அல்லது அவர்களுக்கும் இந்தப் போர் முடிவு சந்தோஷத்தைத் தருகிறதா?
அவர்களால் சிங்களக் கொடியைப் பறக்க விட்டு மகிழ முடியுமா? இந்தப் போர் முடிவை நாம் இவ்வாறு ”கொண்டாடக்” கூடாது என்றே எனக்குப் படுகிறது. யாரோ சொன்னார்கள். இதற்குப் பதில் கோயில்களுக்குப் போய் வேண்டிக் கொள்ளலாம். ஆம், அது சாலச் சிறந்ததென்றே தோன்றுகிறது; எத்தனையோ மடங்கு.ஒவ்வொரு வெற்றிக் கூச்சலைக் கேட்டும் நான் கூனிக் குறுகுகிறேன்.
ஆடிப்பாடும் கூட்டங்களைக் கண்டு திரும்பிக் கொள்கிறேன். ஏன் எனக்கு
இப்படித் தோன்றுகிறது. எனக்கு என்ன போயிற்று? ஆனால் என் நண்பர்கள்
பலரும் இப்படித் தான் எண்ணமிடுவார்கள் என்றும் உணர்கிறேன். நாங்கள்
அனைவருமே சிந்திப்பது தவறாக முடியாது.

இப்போர் முடிவை இந்நாடு பார்க்கும் பார்வை எனக்கு மிகுந்த
வருத்தமளிக்கிறது என்றே நினைக்கிறேன். தத்தா காமினிகூட ஈழாராவின்
மரணத்தைக் கண்ணியத்துடன் கையாண்டான். எனக்கு அந்த அரசன் மீது பெரிய மதிப்பு இல்லாவிடினும் இன்றைய இலங்கைத்தலைமைக்கு இல்லாத
கண்ணியம் அவனிடம் இருந்தது. 2500 ஆண்டுகள் கூடுதல் நாகரிக வளர்ச்சி
அடைந்த மக்களுக்கு இது எப்பேர்ப்பட்ட வீழ்ச்சி, இப்படிக் காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொள்வது?

பிரபாகரன் ஒன்றும் திடீரென்று தீவிரவாதியாக முளைத்து விடவில்லை.
அப்படி ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுக்க அவருக்கு வலுவான காரணங்கள் இருந்தன. அந்தக் காரணங்கள் கண்டறியப்பட்டுத் தீர்வு காணப்பட வேண்டும். இல்லாவிடில் 26 ஆண்டுகால போருக்குப் பின் நாம் பாடம் ஒன்றுமே கற்றுக்கொள்ளவில்லை என்று தான் பொருள். பாடத்தை ஒழுங்காகப் பயிலாதவர்கள் மீண்டும் அந்தப் பாடத்தையே படிக்க வேண்டி வரும் என்பது அனுபவபூர்வமான உண்மை. நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் உணரவேண்டிய உண்மை.

இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இது தான். என் அறையில்
சிங்களக் கொடியொன்று மடித்து வைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை எழும்
போதும் இரவு தூங்கும் போதும் அதைப் பார்க்கிறேன். என்றைக்கு ”நான் ஒரு சிங்களன்” என்று சொல்லிக் கொள்ளப் பெருமைப் படுகிறேனோ அன்று அதைப் பறக்க விடுவேன். தற்போது அது மடித்துத் தான் வைக்கப் பட்டுள்ளது.


http://deepaneha.blogspot.com/2009/05/blog-post_2846.html

No comments: