WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Saturday, June 6, 2009

நமது புதிய பாதையை வடிவமைத்துச் செப்பனிட்டுச் செல்வதற்கு நமது மக்களது கருத்துக்களும் ஆலோசனைகளும் மிகவும் அவசியமானதும் அடிப்படையானதுமாகும்.....!!!

பொதுக் கொள்கையின் கீழான வேலைத் திட்டத்துக்கு ஆலோசனை கோருகிறார் செ.பத்மநாதன்
[ வெள்ளிக்கிழமை, 05 யூன் 2009, 06:14.31 PM GMT +05:30 ]

தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று சந்தித்துள்ள புதிய சவாலை எதிர்கொள்வதற்கு ஒரு பொதுக்கொள்கையின் கீழ் வடிவமைக்கப்பட்ட பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே இன்றைய காலத்தின் கட்டயமாகும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்போதைய சூழ்நிலையில் நமது தாயகத்தினதும் அங்கு வாழும் மக்களினதும் இன்றைய யதார்த்த நிலையினை அடிப்படையாக வைத்து சிந்திப்பதுதான் சரியானதும் நேர்மையானது ஆகும்.

தாயகத்தின் தற்போதைய நிலையில் - சிறிலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களினதும் போராளிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், அவர்களின் நலன்களைப் பேணுதல், மக்கள் தமது வாழ்விடங்களில் விரைவாக மீளக்குடியேற வழி செய்தல், அவர்கள் தமது இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கு ஆவன செய்தல், போரில் தமது உடல் உறுப்புக்களை இழந்திருக்கும் மக்களுக்கும் போராளிகளுக்கும் புது வாழ்வளித்தல் என்பவையே எங்கள் முன்னால் இன்று உள்ள தலையாய கடமையாகும்.

அதன் தொடர்ச்சியாக - தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழரின் தேசிய தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழீழ மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கூடியதான நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வைக் காணுதல் என்பதும் எங்கள் முன்னால் உள்ள வரலாற்றுப் பணியாகும்.

இந்தப் பணிகளை நிறைவேற்றி - நாம் கடந்துசெல்ல வேண்டிய பாதை மிகவும் நீண்டதும் சவால்கள் நிறைந்ததும் ஆகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று சந்தித்துள்ள இந்தச் சவால்களை வெற்றிகொள்ள தமிழர்கள் அனைவரும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டியது அவசியமானது ஆகும்.

சிறிலங்கா அரசு தமிழ்த் தேசிய இனத்தின் தனித்துவத்தினை நிராகரித்து - ஒரே நாடு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் - தமிழீழ மக்களை சிங்களப் பேரினவாத ஆதிக்கத்துக்குள் நிரந்தரமாக சிறைப்பிடிக்கப் பார்க்கிறது.

தமிழ்த் தேசிய இனம் தனது தேசிய இனப் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து, தனது தேசிய தனித்துவத்தினைப் பேணிக் கொள்வதற்கே போராட வேண்டிய நிலை இப்போது உருவாகிவிட்டது.

சிறிலங்கா அரசின் இந்தக் கொள்கையானது தமிழ் பேசும் மக்கள் அனைவருக்குமே ஆபத்தானது.

முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோரும் தமது தனித்துவத்தினையும் அடையாளத்தினையும் பேணிக்கொள்வதற்கும் எதிரானது.

சிறிலங்கா அரசின் இந்த பௌத்த சிங்கள மேலாதிக்கத் திணிப்பை எதிர்த்துப் போராட இலங்கைத் தீவில் வாழும் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டிய அவசியம் இப்போது உருவாகிவிட்டது.

சவால்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தை எதிர்கொள்வதற்கு முன்னதாக நமது கடந்தகாலச் செயற்பாடுகளை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். அந்தப் பட்டறிவிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நடந்து முடிந்த இனப் படுகொலையை எம்மால் தடுத்துநிறுத்த முடியவில்லை. உலகம் எங்கும் தமிழ்நாட்டிலும் எழுச்சிமிகுந்த போராட்டங்களை தமிழர்கள் நடத்தினோம். எத்தனையோ இராஜதந்திர நகர்வுகளை நாம் மேற்கொண்டோம்.

இருந்தபோதும் உலக நாடுகளை தமிழர் தேசத்திற்கு ஆதரவாக அசையவைக்க எங்களால் முடியவில்லை.

நமது மக்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்த கண்டனங்கள் எழுந்தனவே தவிர அந்தப் படுகொலையை தடுத்து நிறுத்தவோ அல்லது நமது விடுதலை இயக்கத்தை பாதுகாக்கவோ யாருமே முன்வரவில்லை.

ஆனால் சிங்கள தேசமோ தற்போதைய உலக ஒழுங்கை நன்கு புரிந்துகொண்டு செயற்பட்டது. இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலை அது நன்கு பயன்படுத்தியது. அனைத்துலக முறைமை இயங்கும் நடைமுறையை கருத்திற்கொண்டு உலக நாடுகளை அது தனது பக்கம் அணி சேர்த்தது. இந்த இராஜதந்திர காய்நகர்த்தல்களின் பின்புலத்திலேயே தமிழர் தேசம் மீதான போரையும் சிறிலங்கா நடத்தியது.

தற்போதும் - இதே அணுகுமுறையினைப் பின்பற்றியே - மே மாதம் 27 ஆம் நாள் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்பு அமர்விலும் சிறிலங்கா அரசு வெற்றி ஈட்டியது.

தொடர்ந்தும் - அனைத்துலக சமூகத்தினை நுட்பமாக கையாண்டவாறு சிங்கள மேலாண்மையை தமிழ் மக்கள் மீது திணிக்கவே சிறிலங்கா அரசு முயல்கிறது.

நமது அடுத்த கட்டப் போராட்டத்தில் நாம் தனித்து நின்று செயற்பட்டு வெற்றி பெற முடியாது. நமது தேசத்திற்கு ஆதரவாக உலகை எவ்வாறு திருப்பப் போகிறோம்?

நமது தேசியத் தலைவர் அவர்கள் முன்னர் சுட்டிக்காட்டியவாறு இந்த உலக ஒழுங்கு தர்மச்சக்கரத்தில் சுழலாமல் தனது நலன்கள் என்ற அச்சில்தான் சுழன்று கொண்டிருக்கிறது.

இத்தகைய உலக ஒழுங்கில் நமக்கு ஆதரவாக உலக நாடுகளை வென்றெடுப்பது எவ்வாறு?

இதற்கு நமக்கு உள்ள வாய்ப்புக்கள் எவை?

நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் எத்தகையவை?

இவை பற்றி நாம் புதிதாய், புதிய சூழலில் சிந்திக்க வேண்டும். வேகமாய் இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக் கதவுகள் திறக்கப்படுவதற்கு ஏற்ற நிலைமைகளை உருவாக்கும்.

அந்த நம்பிக்கையுடன் - நமது விடுதலைத் தாகம் தணிந்துவிடாமல் - நமது விடுதலைச் சுடர் அணைந்துவிடாமல் - தமிழ்நாடு மற்றும் உலகத் தமிழ் மக்களின் துணையுடனும் நியாயத்தின் பக்கம் நிற்கும் உலக மக்களின் ஆதரவுடனும் நமது அடுத்த கட்டப் போராட்டத்தை நாம் முன்நோக்கி நகர்த்த வேண்டும்.

யதார்த்த நிலையினை புரிந்துகொண்டு நாம் கூட்டாகச் சேர்ந்து சிந்திப்பதே இன்றைய காலத்தின் தேவை. அதுவே நம் முன்னுள்ள நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டு நாம் முன்னேறுவதற்கான வழியாகும்.

நமது புதிய பாதையை வடிவமைத்துச் செப்பனிட்டுச் செல்வதற்கு நமது மக்களது கருத்துக்களும் ஆலோசனைகளும் மிகவும் அவசியமானதும் அடிப்படையானதுமாகும்.

இந்தத் தொடர்புக்கு வழிசமைக்கும் முகமாக மக்கள் தொடர்புக்கான மின்னஞ்சல் முகவரியொன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த முகவரிக்கு உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ அனுப்பிவைக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

மின்னஞ்சல் முகவரி: prdinternational@gmail.com

courtesy..TamilWin.com

No comments: