From: Sankar Kumar
Date: Tue, 21 Jul 2009 20:28:02 -0400
Local: Wed, Jul 22 2009 2:28 am
Subject: 'சேருமிடம் சேர்ப்பவன்!'
இளவேனிற்காலமது இரவுநேரப் பொழுதுமது
சில்லென்ற தென்றலென்னை வருடிவிட்டுச் சென்றது
ஆற்றருகே அமர்ந்திருந்து கால் நனைத்துக் களித்திருந்தேன்
சலனமற்ற வானிலங்கு நிலவொளியும் கூடியது
காற்றசைவில் கலைந்தலைந்த காட்டுமரம் பூச்சொரிய
காட்டுமணம் எனைத்தழுவ மெய்ம்மறந்து இருந்தேன்
ஏதோவொன்று குறுகுறுக்கக் கண்திறந்து பார்த்தேன்
என்மடியில் மலரொன்று இதழ்விரித்து எனைப் பார்த்து
தண்பருவமலர்மணத்தை என்னருகே வீசியது.
அழகான மலரதனைக் கையெடுத்து முகர்ந்தேன்
காட்டுமல்லி மணத்தினிலே என்னையே யான் மறந்தேன்
மலரென்னைப் பார்த்து மகிழ்வுடனே பேசலாச்சு!
'என் தாயின் மடியினிலே இதமாகக் கிடந்திருந்தேன்
மொட்டாகி மலராகி மடிதொட்டு ஆடிவந்தேன்
மாதாவின் அணைப்பினிலே எனையே நான் மறந்திருந்தேன்
இதுவொன்றே நிலையென்று இறுமாந்து களித்திருந்தேன்
'வரும் காலம் உனக்குண்டு வரவேற்க ஆளுண்டு
என்னோடு இருப்பதெல்லாம் இனி கொஞ்ச காலமே
கொஞ்சிவரும் பூமகளே! நினக்கான பணியுண்டு
அதன்வேளை வரும்நேரம் எனைவிட்டு நீ போவாய்
அதுவரையில் கலக்கமின்றி என்மடியில் நீயுறங்கு
நின் நேரம் வரும்பொழுது நிமிர்ந்திங்கு நடைபோடு'
எனச்சொன்ன தாய்குரலில் திடுக்கிட்டுத் தான்போனேன்
'நினைவிட்டுச் சென்றிடவோ! இயலாது இயலாது!
நீயில்லா வாழ்வெனக்கும் இனிக்காது இருக்காது!'
பலவாறு அரற்றிட்டேன் நீர்விட்டு அழுதிட்டேன்
எனைத் தேற்ற என் தாயும் எனையணைத்து மேலும் சொன்னாள்!
*'அவரவர்க்கு விதித்திட்ட வாழ்விதனைத் தொடர்ந்திடவே*
*அவரவர்க்கு ஓர்நிலையில் எளிதாகப் புரிந்துவிடும்.*
*புரியாத பலபேர்க்குப் போராட்டம் மிகவாகும்*
*நல்லதுணை நின்றனுக்கு நாயகனும் அனுப்பிடுவான்*
*வீணாகப் புலம்பாமல் வருங்காலம் எதிர்கொள்வாய்'*
அதையெண்ணி மனம் தெளிந்து வரும் நாளைப் பார்த்திட்டேன்
காற்றடித்த காரணத்தால் நின்மடியில் நானிங்கே
என்னசெய்யப் போகிறாய் நீயென்னை' எனக் கேட்ட
மலரணைத்து மகிழ்வாக இதமணைத்துச் சொல்லலானேன்
*'சேருமிடம் சேர்ந்துவிட்டாய் சீரான வாழ்வுனக்கு*
*நேராக அமைத்திடவே யானிங்கு பொறுப்பேற்பேன்'*
என்றவளைக் கையிலேந்தி வீடுநோக்கி வந்திட்டேன்
மனமுருக்கும் முருகனவன் பாதத்தில் அதை வைத்தேன்
*மகிழ்வோடு எனைப்பார்த்து முருகனங்கு சிரித்திருந்தான்*
*சேருமிடம் சேர்த்திடவும் சேர்த்தயிடம் சிறந்திடவும்*
*சீர்முருகன் தாளிணையில் சிரம்தாழ்த்தி நாம் பணிந்தால்*
*சேருமிடம் சேர்த்திடுவான் சீராக்கித் தந்திடுவான்*
*சிக்கலெல்லாம் தீர்த்திடுவான் சிக்கல் சிங்காரனவன்!*
*****************
No comments:
Post a Comment