WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Saturday, August 15, 2009

தமிழ்நாடு இன்றும் அடிமையாகவே இருக்கிறது....!!! முதல்வரும் கூறி விட்டார்..... ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்ய முடியா அடிமைகளாக தாம் இருப்பதாக...!!!

இந்தியத் துணைக்கண்ட மக்கள் சுதந்திரம் பெறட்டும்! – வி.சபேசன்
எழுதியவர்.....கதிர் on August 15, 2009
thamizmanam.com

அப்பொழுது இரண்டாம் உலகப் போர் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. உலகின் பேரரசாக விளங்கிய பிரித்தானியா கடும் சேதங்களை சந்தித்துக் கொண்டிருந்தது. உலகின் பல முனைகளிலும் நடந்து கொண்டிருந்த போரை எதிர்கொள்வதற்கு பெரும் ஆட்பலம் பிரித்தானியாவிற்கு தேவைப்பட்டது. தன்னுடைய காலனித்துவ நாடுகளில் இருந்து படைக்கு தேவையான ஆட்களை பிரித்தானியா பெற வேண்டி வந்தது.
அதே நேரம் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள மக்களிடம் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற வேண்டும் என்கின்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. உலகப் போரில் தமக்கு ஆதரவு அளித்தால் இந்தியாவுக்கு “டொமினியன்” அந்தஸ்து அளிப்பதாக ஆங்கிலேய அரசு கூறியது. பெரும் மத, இன, சாதிக் கலவரங்கள் நிறைந்த இந்தியாவை இனியும் கட்டி மேய்க்க முடியாது என்பது ஆங்கிலேய அரசுக்கு புரிந்திருந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருந்தது.

(டொமினியன் அந்தஸ்து என்பது குறிப்பிட்ட நாடு சுயாட்சியை பெற்றாலும் அந்த நாட்டின் பெயரளவிலான மன்னராக இங்கிலாந்து மன்னரே இருப்பார் என்பதாகும்)

இந்தியர்களைக் கொண்ட ஒரு பெரும் இராணுவத்தை பிரித்தானியா உருவாக்கியது. ஏறக்குறைய இரண்டரை மில்லியன் பேர் அந்தப் படையில் இருந்தார்கள். உலகப் போரில் பல சாதனைகளை இந்திய இராணுவம் நிகழ்த்தியது. இந்திய இராணுவத்தின் வீரதீரச் செயல்களுக்காக பெரும் மதிப்பு மிக்க 30 விக்டோரியாப் பதக்கங்கள் கிடைத்தன.

இதே வேளை எதிரிகளால் கைது செய்யப்பட்ட இந்தியப் படையினரைக் கொண்டு “இந்திய தேசிய இராணுத்தை” உருவாக்கி இந்தியாவை விடுதலை பெற வைப்பதற்கு சுபாஸ் சந்திர போஸ் முயன்றார்.

பிரித்தானியாவை பெரும் சேதத்திற்கு உள்ளாகிய இரண்டாம் உலகப் போர், இதில் இங்கிலாந்திற்காக பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் உயிர்தியாகம் செய்து நடத்திய போர்கள், சுபாஸ் சந்திர போஸ் நடத்திய போர்கள், உள்நாட்டில் நடைபெற்ற ஆங்கிலேயர்களுக்கு எதிரான போர்கள், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் நடந்த போர்கள்.. இப்படியாக நடைபெற்ற பல போர்களும் உயிர்த் தியாகங்களும் இந்தியாவிற்கு 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15இல் டொமினியன் அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தன.

1947ஆம் ஆண்டு சுதந்திரச் சட்டத்தின்படி இந்தியர்களை ஆளும் உரிமை இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. ஆயினும் இங்கிலாந்து மன்னரின் பிரதிநிதியாக அதிகாரம் அற்ற ஒரு ஆளுனர் நியமிக்கப்பட்டிருந்தார். பெயரளவில் இந்தியாவின் மன்னராக பிரித்தானிய அரசரே தொடர்ந்தும் இருப்பது போன்று இது அமைந்தது. இந்தியாவிற்கு என்று தனியான ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர், 1950ஆம் ஆண்டு இந்தியா முற்று முழுதான குடியரசு நாடாக மாறியது.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாக சொல்லிக் கொண்டாலும் இந்திய மக்கள் அந்தச் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள். தாழ்த்தப்பட்ட மக்களும், பல தேசிய இன மக்களும் சுதந்திரம் அற்ற நிலையில் வாழ்கிறார்கள்.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அம்பேத்கர் தனித் தொகுதி கேட்டார். ஆங்கிலேய அரசு சம்மதித்தது. இஸ்லாமிய மக்களுக்கு தனித் தொகுதி வழங்குவதற்கு எதிர்ப்புக் காட்டாத மோகன்தாஸ் கரம்சந் காந்தி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதி வழங்குவதை கடுமையாக எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதி வழங்கப்படக் கூடாது என்று சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதி வழங்கினால், அது அவர்களை பிரித்து வைப்பது போலாகும் என்று காந்தி ஒரு வேடிக்கையான விளக்கத்தையும் சொன்னார். பிரித்து வைக்கப்பட்டதால் ஏற்பட்ட இழிவுகளில் இருந்து மீட்சி பெறவே தனித் தொகுதி கேட்கப்படுகிறது என்பது காந்திக்கு புரியவில்லை. அல்லது புரியாதது போல் நடித்தார்.

காந்தி உண்ணாவிரதத்தை தொடர்ந்ததால் அம்பேத்கர் மீது அழுத்தம் அதிகரித்தது. இந்தியா முழுவதும் உள்ள தலைவர்கள் காந்தியைக் காப்பற்றும்படி அம்பேத்கரை கேட்டனர். தந்தை பெரியார் ஒருவர்தான் தனித் தொகுதி கோரிக்கையை கைவிட வேண்டாம் என்று அம்பேத்கரிடம் சொன்னார். ஆயினும் பல இடங்களில் இருந்து அழுத்தங்கள் தொடர்ந்ததால் அம்பேத்கர் தனித் தொகுதிக் கோரிக்கையை கைவிட்டார்.

இன்று வரை தொடரும் இது போன்ற மேலாதிக்க சதிகளால் தாழ்த்தப்பட்ட மக்கள் சுதந்திரம் அற்ற மக்களாகவே தொடர்ந்தும் இருக்கிறார்கள்.

1942இல் ஆங்கிலேய அரசின் பிரதிநிதியாக இருந்த கிரிப்ஸ் என்பவரால் ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது. உலகப் போரில் இந்தியர்கள் இங்கிலாந்திற்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட நிலையில் கைமாறாக இந்தத் திட்டத்தை கிரிப்ஸ் கொண்டு வந்தார். போர் முடிந்ததும் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து கொடுக்கப்படும் என்பதே அத் திட்டம். ஆனால் காந்தி இதை நிராகரித்தார்.

கிரிப்ஸின் திட்டத்தில் இந்தியாவின் அரசியல் அமைப்பை ஏற்காத மாகாணங்கள் பிரிந்து தனியரசை அமைக்கலாம் என்று ஒரு அம்சம் இருந்ததே காந்தி இதை நிராகரித்ததற்கு காரணம். இதையடுத்து “வெள்ளையனே வெளியேறு” என்னும் இயக்கத்தை காந்தி ஆரம்பித்தார்.

கிரிப்ஸின் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள சில தேசிய இனங்களாவது சுதந்திரத்தை பெற்றிருக்கும். உதாரணமாக காஸ்மீர் மக்கள் இந்திய அடக்குமுறைக்குள் அல்லல்பட நேர்ந்திருக்காது. அஸாம், நகலாந்து மக்கள் சுதந்திரம் அடைந்திருப்பார்கள். உடனடியாக இல்லையென்றாலும் காலப் போக்கில் தமிழ்நாடும் சுதந்திரம் அடைந்திருக்கும்.

தமிழ்நாடு இந்தியாவிற்கு அடிமையாக இருக்கிறது என்று தந்தை பெரியார் கூறினார். ஆகஸ்ட் 15ஐ துக்க தினம் என்று சொன்னார். தமிழ்நாடு இன்றும் அடிமையாகவே இருக்கிறது என்பதை தமிழ்நாட்டின் முதல்வரும் கூறி விட்டார். ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்ய முடியாத அடிமைகளாக தாம் இருப்பதாக கலைஞர் வருத்தத்தோடு(?) கூறினார்.

ஆனால் இந்த அடிமை வாழ்வில் தமிழ்நாட்டின் தலைவர்கள் சுகம் கண்டு விட்டார்கள் போல் இருக்கிறது. 30கிலோமீட்டர் தொலைவில் தமிழன் கொல்லப்படுகின்ற பொழுது ஓடிப் போய் காப்பாற்ற முடியாமல் இருக்கின்ற நிலையை பார்த்த பின்பாவது, உரிமைகளைப் பெற வேண்டும் என்ற சிந்தனை தமிழ்நாட்டில் எந்தத் தலைவருக்கும் வந்ததாகத் தெரியவில்லை.

தாம் உரிமைகள் அற்ற கையறுநிலையில் இருப்பதாக ஈழத் தமிழர்களை நோக்கி சமாதானம் சொல்ல முனைகின்ற தமிழ்நாட்டின் தலைவர்கள், தமது உரிமைகளைப் பெறுவதற்கு எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளாது அடிமை வாழ்வை தொடர்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். தாம் அடிமைகளாக இருப்பதாக சொன்ன கலைஞர் கூட அந்த அடிமைத்தளையை நீக்குவதற்கு என்ன திட்டத்தை வைத்திருக்கின்றார் என்பதை சொல்லவில்லை

ஆகக் குறைந்தது இந்தியாவை ஒரு உண்மையான கூட்டாட்சி கொண்ட நாடாக மாற்றுவதற்கான போராட்டத்தையோ, மாநில சுயாட்சிக்கான போராட்டத்தையோ நடத்துவதற்கு துணிவு அற்றவர்களாகவே இவர்கள் இருக்கின்றார்கள்.

இனிமேல் தமிழ்நாட்டின் தலைவர்கள் ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராட வேண்டாம். தமது உரிமைகளுக்காக போராடட்டும். ஈழத் தமிழர்களின் உரிமைக்காக போராடுகின்ற உரிமையைப் பெறுவதற்காப் போராடட்டும். தம்மை அடிமைகள் என்று சொல்லி விட்டு, தொலைக்காட்சியில் சுதந்திர தினக் கொண்டாட்டம் நடத்தி பல்லிளிக்கின்ற வேலைகள் வேண்டாம்.

ஆதிக்க சக்திகள் செய்த அதிகார மாற்றத்திற்குப் பெயர் சுதந்திரம் அல்ல. மக்கள் பெறுவதே உண்மையான சுதந்திரம். இந்தியத் துணைக் கண்டத்தின் மக்கள் சுதந்திரம் பெறட்டும். அந்தச் சுதந்திரம் தமிழீழ மக்களுக்கும் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்கட்டும்.

- வி.சபேசன் (14.08.09)

மீனகம்.கொம்

No comments: