முகாம்களால் உருவாகும் மூன்று பிரச்சினைகள்
கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்
கடந்த வாரம் இக்கட்டுரை ஆசிரியர் அரசியல் ஆர்வமுடைய தமிழ் சமூக சேவையாளர்கள் குழு ஒன்றுடன் "சமாதானத்தின் தேவை' என்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட வேண்டியிருந்தது. இச் சமூக சேவையாளர்கள் நாடு முழுவதிலும் இருந்து இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதும் பெரும்பான்மையினர் யுத்தத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து வந்திருந்தனர். கலந்துரையாடல் அரசியல் தீர்வு என்ற விடயத்தை மையமாகக் கொண்டமைந்திருக்க வேண்டியிருப்பினும் விவாதம் சுற்றிவந்த பிரச்சினை அரசியல் தீர்வு என்பது பற்றியதல்ல. அது தடுப்பு முகாம்கள் என்று தமிழ் மக்கள் கருதுகின்றது ஆயினும் பொதுவாக நலன்புரி நிலையங்கள் என அழைக்கப்படுகின்ற வன்னி முகாம்களை மையமாகக் கொண்டிருந்தது. மூன்று இலட்சம் மக்கள் இம்முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதும் அதில் இருந்து தோற்றம் பெற்றுள்ள சமூக, உளவியல், கலாசார நெருக்கடிகளும் தமிழ் மக்கள் மத்தியில் ஒருவிதமான அச்சத்தையும் பதற்றத்தையும் தோற்றுவித்துள்ளன. இதன் காரணமாக இவ்விடயம் தொடர்பான தமிழ் அபிப்பிராயம் உணர்ச்சி வயப்பட்டதாகவே அமைந்துள்ளது.
மேற்கூறிய கலந்துரையாடலில் அரசியல் தீர்வு என்ற விடயம் புறந்தள்ளப்பட்டு தடுப்பு முகாம்கள் பற்றிய விவாதம் முன் எழுந்துள்ளமை ஒரு வகையில் தேசிய ரீதியிலான தமிழ் அபிப்பிராயத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். அவ்வாறாயின் இப்பரிமாணத்தை தென்னிலங்கையின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டிய ஒரு அவசியம் காணப்படுகின்றது. அதாவது, தமிழ் பொதுசன அபிப்பிராயம் என்பது உடனடி நிலையில் அரசியல் தீர்வு என்பதிலும் பார்க்க தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மக்களின் அந்தஸ்தே அல்லது விடுவிப்பே முக்கியமானது எனக் கருதுமாயின் இப்பிரச்சினையை தீர்க்கு முன் அரசியல் தீர்வு பற்றிப் பேசுவது பயனற்றதாகவே இருக்கும். ஏனெனில், அரசியல் தீர்வு பற்றிய இணக்கம் அடையப்பட்டதன் பின்னரும் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு இருந்துகொண்டே இருக்கும். இது அரசியல் தீர்வு காண்பதற்கான அரசின் நோக்கத்தை தோல்வி அடையச் செதுவிடும்.
அதேசமயம், தமிழ் அரசியல் கட்சிகளிடையே பொதுசன அபிப்பிராயத்தைப் பிரதிபலிப்பதற்கான ஒரு விருப்பம் இருக்குமாயின் அவை அரசியல் தீர்வு என்ற விடயம் பற்றி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் முகாம்களை மூடுகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுதல் அவசியம். இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதிக்கக்கூடியது குறைவானதே. இதன் கருத்து அரசுடன் சேர்ந்து இயங்குகின்ற தமிழ்க் கட்சிகளுக்கு இது தொடர்பில் விசேடமான பொறுப்பு ஒன்று உண்டு என்பதாகும். இங்கு அரசுடன் சேர்ந்து இயங்குகின்ற தமிழ்க் கட்சிகள் கவனிக்க வேண்டிய ஒரு விடயமும் உண்டு. மென்மையான ஒரு மட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலைக்கு இக் கட்சிகளும் துணைபோயுள்ளன என்ற ஒரு அபிப்பிராயமும் காணப்படுகின்றது. இக்கட்சிகள் முகாம்களை மூடுவதற்கான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபடுதல் இவ் அபிப்பிராயத்தை பலவீனப்படுத்த உதவும். இது நீண்ட காலத்தில் அரசுடன் சேர்ந்தியங்கிவருகின்ற கட்சிகளுக்கு அரசியல் ரீதியான நலன்களைக் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை.
வன்னி முகாம்கள் தமிழ் மக்கள் மத்தியில் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பதன் பின்னணியில் பல காரணிகள் காணப்படுகின்றன. இக்காரணிகளை அரசு சரியாகப் புரிந்துகொள்வது தேசிய நலன், கொள்கை ஆக்கம் ஆகிய கோணங்களில் இருந்து நோக்குகையில் மிக முக்கியமானது. தமிழ் மக்களுடனான கடந்தகாலக் கலந்துரையாடல்களில் இருந்து புலப்படுவது யாதெனில் அவர்கள் இம் முகாம்கள் முழுமையாக இனவாத நோக்கில் அமைக்கப்பட்டவை என நம்புவதாகும். ஒன்று இம் முகாம்களில் உள்ள மக்கள் யாவரும் தமிழ் இனக்குழுவைச் சேர்ந்தவர்களாவர். எனவே, இதன் நியாய அநியாயங்கள் பற்றி தெற்கிற்கு ஒரு அக்கறை காணப்படவில்லை என்று கருதப்படுகின்றது. இரண்டாவது, யுத்தப் பிரதேசங்களில் வேற்று இன மக்கள் இருந்திருப்பார்களேயானால் இவ்விதமான முகாம்கள் அமைக்கப்பட்டிருக்க மாட்டாது எனவும் கருதப்படுகின்றது. உதாரணமாக கிழக்கு மாகாணத்தில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது தடுப்பு முகாம்கள் அமைக்கப்படாமைக்கான காரணம் அங்கு ஏனைய இன மக்கள் தொடர்புபட்டிருந்தமையாகும் என்று வாதிடப்படுகின்றது. இவ்விதம் இனவாதம் காரணமாகவே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்ற நம்பிக்கையானது, இனங்களுக்கிடையில் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் எனக் கருதப்படுகின்ற நல்லுறவை மட்டுப்படுத்தக்கூடியதாகும். இது நீண்ட காலத்தில் தேசிய நலனுக்கு உகந்ததல்ல.
அச்சம் ஏற்பட்டுள்ளமைக்கான இன்னுமொரு காரணம் இதன் பின்னணியில் பாரிய ஒரு அரசியல் நோக்கம் காணப்படுகின்றது என்று கருதப்படுகின்றமையாகும். அதாவது, சிலர் வன்னி மக்கள் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் இப்பிரதேசங்களில் சிங்கள மக்களை குடியேற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளமையினாலேயே எனக் கருதுகின்றனர். இவ் அச்சம் தமிழ் மக்களின் மரபு ரீதியான அச்சம் என்பதுடன் தொடர்புபட்டது. உண்மையில் அவர்களது அரசுக்கு எதிரான அதிருப்தி அதிகரிப்பதற்கும் போராட்டம் உந்தப்படுவதற்கும் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் என்ற விடயமே அடிப்படையா அமைந்தது. அதன் காரணமாகவே பண்டாசெல்வா ஒப்பந்தம், டட்லிசெல்வா ஒப்பந்தம் ஆகிய இரண்டிலுமே திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு எதிரான பாதுகாப்புகள் தேடப்பட்டிருந்தன.
எனவே, இப்பொழுது ஏற்பட்டுள்ள அச்சமும் மீண்டுமொருமுறை பதற்றத்தை தூண்டிவிடுவதற்கான காரணிகளா அமைந்துவிடக் கூடும். எனவே, இவ் அச்சத்தை நீக்கி முகாம்களில் உள்ள மக்களை மீளக்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தேசிய ஒருமைப்பாடு என்ற அடிப்படையில் மிக அவசியமாகின்றது. முகாம்கள் ஏற்படுத்தியுள்ள கண்ணீர்க் கதைகளும் அம்மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த விரக்தியும் இவ்விடயத்தை அரசியல் ரீதியாக நோக்காமல் மனிதாபிமான ரீதியாகப் பார்க்க வேண்டிய அவசியத்தைத் தோற்றுவித்துள்ளது.
வன்னி முகாம்கள் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளமையினால் அரசினால் முன்வைக்கப்படுகின்ற சில நியாயப்படுத்தல்களை அவர்கள் புரிந்துகொள்ளத் தவறியுள்ளனர். முகாம்களில் மக்கள் "ஜொலியாக' இருக்கிறார்கள் என்ற விதமான முட்டாள்தனமான அபிப்பிராயங்களுக்குப் புறம்பாக இரண்டு பிரதானமான நியாயப்படுத்தல்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஒன்று, முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை அடையாளம் காண்பதற்கு இது அவசியமானது. இரண்டாவது பிரச்சினைக்குரிய பிரதேசங்களில் பாரிய அளவிலான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளமையினால் உடனடியாக மீள்குடியேற்றம் நடைமுறைப்படுத்தப்பட முடியாது என்பதாகும். முதலாவது விடயம் தென்னிலங்கையின் கோணத்தில் இருந்து நோக்குவது முக்கியமானதாகும். புலிகள் மீதான வெற்றி பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் அடையப்பட்டதாகும். அதன் காரணமாக புலிகள் மீண்டும் தலைதூக்கிவிடக்கூடாது என்பதில் கவனம் அதிகமாகவே உள்ளது. இதற்கு எல்லாப் புலி உறுப்பினர்களையும் அடையாளம் காண வேண்டியது அவசியம். எனவே, அடையாளம் காணும் செயன்முறை பூர்த்தி அடையும் வரை மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
இங்கு முக்கியமானது என்னவெனில் பெரும்பாலான புலி உறுப்பினர்கள் ஏற்கனவே சரணடைந்துள்ளனர். ஏனையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரு சிறிய தொகையினர் மட்டும் இன்னும் அடையாளம் காணப்படாமல் இருப்பதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. இச் சிறு தொகையினரை அடையாளம் காண்பதற்காக குழந்தைகள், சிசுக்கள் உட்பட ஒரு பெருந்தொகையான மக்களை கூட்டாகத் தண்டிக்க வேண்டிய அவசியம் உள்ளது எனக் கூறமுடியாது.
கண்ணிவெடிப் பிரச்சினையைப் பொறுத்தவரை இவற்றை சரியாக அகற்றாமல் மக்களை மீள அனுப்பமுடியாது என்பது நியாயமானது. எதிர்காலத்தில் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் கண்ணிவெடிகளினால் பாதிக்கப்படுகின்றபோது அரசாங்கமே குற்றம் சாட்டப்படும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எனினும், வன்னி முழுமையாக இப்பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறமுடியாது. அங்கு இதுவரை மக்கள் வாழ்ந்த கிராமங்கள் காணப்படுகின்றன. இப்பிரதேசங்கள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், அரசாங்கத்தின் நியாயப்படுத்தல்களையும் அரசியல் கரிசனைகளையும் அடிப்படையாகக் கொண்டு நோக்குகின்றபோது முகாம்களை உடனடியாக மூடிவிடுவது சாத்தியமற்றது என்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது. எவ்வாறாயினும் முகாம்களில் உள்ள மக்களை மீளக்குடியேற்றுவதற்கான திட்டமிடப்பட்ட, படிப்படியான ஆனால் துரிதமான செயன்முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படுவது அவசியமானது. அவ்வகையில், முதியவர்களும் நோயாளர்களும் குழந்தைகளும் யுத்தத்தில் பங்கெடுத்திருக்க முடியாது என்கின்ற வயதெல்லையைக் கொண்டிருந்த பெண்களும் முதலில் விடுவிக்கப்படலாம். அவ்வகையில் அரசாங்கம் வயோதிபர்கள் சிலரை ஏற்கனவே விடுவித்துள்ளமை ஒரு ஆரம்பமாக இருக்குமாயின் அது பாராட்டப்பட வேண்டியது.
அதேசமயம், துரிதமாக அடையாளம் காணும் செயன்முறை ஒன்று இருக்குமாயின் வடக்கின் ஏனைய பிரதேசங்களில் தமது உறவினர்களுடன் சென்று வாழக்கூடிய மக்களை விடுவிப்பதும் கூட சாத்தியமானதே. முகாம்களில் உள்ள மக்கள் தொகை பாரிய அளவில் விரைவாகக் குறைக்கப்படுவது பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைய முடியும்.
இங்கு அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் என்னவெனில், முகாம்கள் அடிப்படையான மூன்று பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றன என்பதாகும். அவை (1) தேசிய ஒருமைப்பாட்டுப் பிரச்சினை, (2) நிதிப் பிரச்சினை, (3) வெளிவிவகாரக் கொள்கைப் பிரச்சினை.
முதலில் இவ்விடயம் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளமையினால் அது அரசு மீது அவர்கள் கொள்ளக்கூடிய நம்பிக்கையை பாதிக்கின்றது. இதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டு நோக்கம் பாதிக்கப்படலாம். இரண்டாவது, முகாம்களை பேணிக்கொள்ள பாரியளவான நிதி வளங்கள் தேவைப்படுகின்றன. இது அரசாங்கத்தின் மீது ஏற்கனவே காணப்படுகின்ற நிதிப் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தும். இறுதியாக முகாம்கள் காரணமாக அரசுக்கு எதிரான, சர்வதேச ரீதியான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் பல முன்வைக்கப்படுகின்றன. இது வெளிவிவகாரக் கொள்கை, சிக்கல்கள் பலவற்றைத் தோற்றுவித்துள்ளது. எனவே, முகாம்களில் உள்ள மக்கள் விரைவாக மீளக்குடியேற்றப்படுவது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல அரசாங்கத்துக்குமே கூட சாதகமானது.
-Thinakural.-
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment