WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Tuesday, October 13, 2009

உங்களிடத்தில் எங்களால் எல்லாவற்றையும் இப்படியான முற்றுகைத் தருணத்தில் பேசிவிட முடியாது:யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்...!!!

உங்களிடத்தில் எங்களால் எல்லாவற்றையும் இப்படியான முற்றுகைத் தருணத்தில் பேசிவிட முடியாது:யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
எழுதியவர் பகலவன் on October 12, 2009

தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாக சொந்த இடங்களில் குடியமர்த்தி சிதைந்த தேசத்தை அபிவிருத்தி செய்து இழந்த வாழ்வை கட்டி எழுப்ப நடவடிக்கை எடுங்கள். நிரந்தரமான உரிமையற்ற அகதிகளாக அலைந்து கொண்டிருக்கின்ற எமது மக்களுக்கு நிரந்தரமான வாழ்வுரிமையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுங்கள் என்று தமிழகத்தில் இருந்து இலங்கை வந்துள்ள தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினரிடம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

நேற்றுக்காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அக்குழுவினருடன் இடம்பெற்ற சந்திப்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். இந்தச் சந்திப்பின் போதே இக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக் கோரிக்கை தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அன்புக்குரிய தமிழக அரசியல் பிரதிநிதிகளுக்கு!

உங்களுடைய வருகை எங்கள் மக்களிடத்தில் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இன்றைக்கு தமிழ் மக்கள் அவதியான காலத்திற்குள் சிக்குபட்டுக் கிடக்கிறார்கள். மிக பிரமாண்டமான முட்கம்பி வேலிகளுக்குள் அவர்கள் பெரிய ஏக்கத்துடன் இருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகளை இங்கே உங்களால் பார்க்க முடிகிறது.

உங்களிடத்தில் எங்களால் எல்லாவற்றையும் இப்படியான முற்றுகைத் தருணத்தில் பேசிவிட முடியாது. அப்படி ஒரு சூழல் எங்களுக்கு இல்லை என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். உங்களது பயணம் எப்படியானது எதற்காக நிகழுகிறது என்பதைக்கூட அதன் சாட்சியத்திற்கு வலுத்தருகிற விதமாக அல்லது எங்கள் பாடுகளை சொல்லுகிற விதமாக கூட இந்த வாழ்வுச் சூழலும் இங்கு நடந்த உரையாடல் சூழலும் இல்லை என்பதுதான் எங்கள் துக்கமாக இருக்கிறது.

மிகவும் கொடுமையான யுத்தம் நடந்த பிறகு அதன் விளைவாக பெரியதாய் விளைந்து போய்க்கிடக்கிறது இன்றைய எமது மக்களின் துயரங்கள். எங்கள் மாணவர்கள் கால்களை, கைகளை, மனங்களை இழந்து யுத்தத்தின் விளைபொருட்களாக இங்கு வந்திருக்கின்றார்கள்.

சமூக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். கல்வியையும் மாணவத் தன்மையையும் முழுமையாக இழந்து கற்க முடியாத நிலையிலேயே வந்திருக்கிறார்கள். இதை யாரால், எப்படி ஈடுசெய்ய முடியும்? இந்த விளைவுகளுக்கு எல்லோருமே காரணமாக இருந்தவர்கள். யுத்தம் முடிவடைந்தது. உயிரழிவை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. போதும் என்ற வெறுப்பையும் உலகத்தால் கைவிடப்பட்ட கையறு நிலையையும் உணர்த்தியிருக்கிறது.

நடந்து முடிந்தவைகள் தொடர்பான விசாரணைகளைப் பற்றியும் அதற்கு காரணமானவர்கள் மீதான குறை கூறுதலைப் பற்றியும் நாம் எதைப் பேசியும் பிரயோசனமில்லை என்றே நினைக்கிறோம். அது ஒட்டுமொத்த உலகம் அதன் ஒழுங்கு, அதிகாரம் பற்றிய சாமானிய சனங்களின் கேள்வியாக இருக்கும். இன்று இங்கு நீங்கள் பார்க்கப் போகிறவைகள் பற்றி நீங்கள் கலைஞர் அவர்களுக்கு என்ன அறிக்கை கொடுக்கப் போகிறீர்கள்? அவர் பிரதமருக்கு அதை அனுப்பி வைக்கும்பொழுது என்ன நடக்கப் போகிறது? என்ற கேள்விகள் அல்லது எதிர்பார்ப்பு எமக்கு இருக்கிறது.

உண்மையில் எங்கள் மக்களுக்கு விமோசனம் தருகிற விடயங்கள் நடக்க வேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம். மக்கள் யுத்த களத்தில் எல்லாவிதமான துன்பங்களையும் அனுபவித்து விட்டு வந்து தற்போது முட்கம்பிச் சிறைக்குள் வார்த்தைகளால் குறிப்பிட முடியாத துயரத்தை அனுபவிக்கிறார்கள். முகாம்களிலுள்ள மக்களை உடனடியாக சொந்த இடங்களில் குடியமர்த்தி சிதைந்த தேசத்தை அபிவிருத்தி செய்து இழந்த வாழ்வை கட்டி எழுப்ப நடவடிக்கை எடுங்கள்.

நிரந்தரமான உரிமையற்ற அகதிகளாக அலைந்து கொண்டிருக்கின்ற எமது மக்களுக்கு நிரந்தரமான வாழ்வுரிமையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுங்கள் என்ற இரண்டு கோரிக்கைகளையும்தான் எமது மாணவர்கள் சார்பாக மக்களுக்காக உங்கள் முன் தருகிறோம். தமிழ் மக்களாக அவர்களின் மாணவர்களாக இருந்து கொண்டு இந்தக் கோரிக்கைகளையே உங்களிடம் முன்வைக்கிறோம்.

தமிழ் மக்களின் அரசியல் தொடர்பாக ஈழப் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே அதாவது 30 வருடத்திற்கு மேலாக எல்லோருடனும் பேசி வருகிறோம். ஏமாற்றங்களும் படுதுயரங்களும்தான் எமக்கு கிடைத்திருக்கின்றன. தமிழகமும் இந்தியாவும் எமது மக்கள் விடயத்தில் வகித்த பாத்திரங்கள் முக்கியமானவை. அது எங்கள் மக்களின் 30 வருட கால போராட்டத்தில் எல்லாவிதமான மாற்றங்களுடனும் விளைவுகளுடனும் சம்பந்தப்பட்டவை.

இனி, அதாவது இன்றைய இத்தகைய விளைவுகளின்பொழுது தமிழகமும் இந்தியாவும் இன்றைய ஈழத் தமிழ் மக்கள் விடயத்தில் எப்படி செயற்படப் போகின்றது? எமது மக்களின் வாழ்வை மீளவும் அத்துடன் புதிதாகவும் கட்டியெழுப்பி இயல்பு வாழ்வொன்றுக்கு திரும்ப உங்களது நடவடிக்கை அல்லது உதவி எங்களுக்கு உடனடியாகவே தேவைப்படுகிறது. நீங்கள் எங்கள் மக்களை போய்ப் பாருங்கள். எமது மாணவர்களின் பெற்றோர்களை சகோதரர்களை உறவினர்களை பாருங்கள்.

உண்மையில் எமது மக்களது நிலைமை என்ன? என்பதையும் அவர்களுக்கு என்ன தேவை என்பதையும் நேரடியாக கண்டுகொள்ளுங்கள். அவர்களுக்கு உங்களால் என்ன செய்ய முடியும்? எங்கள் மக்களை இப்படி ஒரு நிலமையிலிருந்து எப்படி காப்பாற்றலாம்? அதற்கு உங்கள் பங்கு என்ன வகையில் தேவைப்படுகிறது என்பதை உடனேயே செய்யுங்கள்.

வன்னி அகதிகள் எதிர்பார்க்கிற மாதிரி உங்களது சந்திப்பு மாற்றத்தை தந்து எமது மக்களை அமைதியான வாழ்வுக்கு திரும்ப உதவ வேண்டும் என்பதை மிகவும் அவசியமாக வலியுறுத்துகிறோம். எமது மக்களின் மாணவர்களாக இந்த கொடும் யுத்தம் நடந்த பூமியில் எங்கள் உள்ளார்ந்த அபிலாசைகளை அல்லது கோரிக்கைகளை உங்களின் வாயிலாக முழுத் தமிழக உறவுகளுக்கும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.


மீனகம்.கொம்

No comments: