December 2009 November 2009 தேர்தல் தொடர்பாக கூட்டமைப்பு சரியான முடிவை உரிய நேரத்தில் அறிவிக்கும்: சம்பந்தன்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும். அந்த முடிவு தமிழ் மக்களின் நலன் கருதியதாகவே இருக்கும். அதற்கு முரணாக இருக்காது. எனவே, இந்த விடயம் குறித்துத் தமிழ் மக்கள் வீணாகக் குழப்பமடையவோ, சஞ்சலப் படவோ தேவையில்லை.
இப்படித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் அறிவிப்பு விடுத்திருக்கின்றது.தமிழ்க் கூட் டமைப்பின் இந்த நிலைப்பாட்டை அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. நேற்று வெளியிட்டார்.2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக எடுக்கப்பட்ட முடிவு தவறானது என்ப தனால் தான் இன்று பல்வேறுபட்ட இன்னல் களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் நேற்று
வியாழக்கிழமை காலை தமிழ்ப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி விளக்கமளித்தபோதே இரா.சம்பந்தன் இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பாக மிக விரைவில் கூட்டமைப்பு அறிவிக்கும். சிவாஜிலிங்கத்தின் முடிவு தன்னிச்சையானது
சிவாஜிலிங்கம் பொதுவேட்பாளராகப் போட்டியிட எடுத்த தீர்மானம் தன்னிச்சையானது. அது குறித்துக் கவலையடைகிறோம். ஆனாலும், அதற்காகத் தமிழ் மக்கள் குழப்பமடைய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. என்றும் அவர் கூறினார்.இரண்டு பிரதான வேட்பாளர்களுடனும் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் தொடர்பாகப் பேசிவருகின்றோம். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், துரைரெட்ணசிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இந்தச் சந்திப்புகளில் கலந்துகொண்டுள்ளனர் என்றும் தெரிவித்த இரா. சம்பந்தன், வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு மிகவும் முக்கியமானது எனத் தாங்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்றும் சொன்னார்.
இரண்டு வேட்பாளர்களையும் தாங்கள் சந்தித்தபோது, தமது தரப்பிலிருந்து தாங்கள் முன்வைத்த விடயங்கள் தொடர்பாக சம்பந்தன் பின்வருமாறு கூறினார்:
தமிழ் மக்களுடைய சகலவிதமான பிரச்சினைகளுக்கும் நிரந்தரமான தீர்வு அவசியம். அதாவது, உடனடியாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வீட்டு வசதி, தொழில்வாய்ப்பு, சமூகக் கட்டமைப்பு போன்ற விடயங்கள் குறித்துக் கவனம் எடுக்கவேண்டும்.
வடக்கு கிழக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு அங்கு மக்கள் மீளக் குடியேற உடனடி ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும். யுத்தம் முடிவடைந்துவிட்ட நிலையில் அவ்வாறான உயர் பாதுகாப்பு வலயம் இனித் தேவையில்லை.இராணுவக் கட்டமைப்புகள் இராணுவ மயமாக்கல் உடன் விலக்கப்பட வேண்டும் யுத்தம் முடிவடைந்த நிலையில் வடக்கு, கிழக்கில் இராணுவ மயமாக்கல் மற்றும் சோதனைச் சாவடிகள், இராணுவக் கட்டமைப்புகள், யுத்த முனைப்புகள் அனைத்தும் உடனடியாக விலக்கப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கில் உள்ள காணிகள், அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் யார் யாருக்கோ விநியோகம் செய்யப்படுமானால் அவ்விதமான ஒழுங்குகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
அத்துடன் பெரும்பான்மை இனத்தவர்கள் வடக்கு, கிழக்கிலுள்ள அரச காணிகளில் குடியமர்த்தப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும். யுத்தத்தினால் வெளியேறிய தமிழர்களின் காணிகளில் பெரும்பான்மை இன மக்களைக் குடியேற்றும் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
அதேவேளை, வடக்கு, கிழக்கிலுள்ள தமிழர்களின் காணிகளின் உரிமைப் பத்திரங்களை ரத்துச் செய்து, நீக்குவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
தடுப்புக்காவலில் உள்ள தமிழ் இளைஞர்கள், யுவதிகளுக்கு எதிராகப் போதிய சாட்சியங்கள் இல்லையானால் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும். ஏனையவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கவேண்டும். யாரையாவது சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமானால் அவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி விடுதலை செய்யவேண்டும். நிரந்தரமான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும்
தமிழ் மக்கள் தமது அரசியல், பொருளாதார, கலாசார விடயங்களை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு ஏற்றவகையில் நிரந்தரமான நீதியான நடைமுறைப்படுத்தக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததும் முன்வைக்க வேண்டும்.
இந்த முக்கியமான விடயங்கள்தான் கூட்டமைப்பினால் முன்நிலைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், மேற்குறித்த இந்த விடயங்கள் தொடர்பாக இரண்டு பிரதான வேட்பாளர்களின் கருத்துகளையும் அறிந்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்; ஆராய்கின்றனர்.
இவ்வாறான முறையில் தீர்வுகள் ஏற்படுவதற்கு இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் உதவிகளும் தேவை. அது தொடர்பாக அவர்களுடனும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடி வருகின்றனர்.
நல்ல சந்தர்ப்பம் நிதனமாக நடக்க வேண்டும்
முன்னர் நாம் குறிப்பிட்ட விடயங்களை உறுதிப்படுத்தக்கூடிய வேட்பாளருக்குத்தான் நாம் ஆதரவை வழங்கமுடியும்.
எவ்வாறாயினும் ,இந்த விடயங்கள் தொடர்பாகத் தீவிரமான கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றமையினால் தமிழ் மக்களை இன்னமும் சிறிது காலத்திற்குப் பொறுமையுடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு நல்ல சந்தர்ப்பம். எனவே, மக்கள் நிதானமாக செயற்பட வேண்டும். மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும். இது அவர்களுடைய புனிதக் கடமை என்றுதான் கருதுகின்றோம். மக்கள் எந்தவிதமான குழப்பங்களும் அடையவேண்டிய அவசியம் இல்லை. என்றார்.
25 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment