ஈழத் தமிழர்களின் அறிவாற்றல் என்று குறிப்பிடுவது பல்கலைகழகத்தில் பட்டம் பெறுவதையோ அல்லது தமிழ் மாணவர்களின் வகுப்பறை கெட்டித்தனத்தையோ அல்ல. படிப்பு எனப்படுவது இவ்வாறான விடங்கள்தான் என்ற மாயையொன்று நம் சமூகத்தில் நீண்டகாலமாக நிலவி வருகிறது. சமீப காலங்களில்தான் யார் படித்தவன் என்றதொரு கருத்து தமிழ் புலமைச் சூழலில் ஓரளவாவது உரையாடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இந்திரன் போன்றவர்கள் இது பற்றி பேசியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். படிப்பு என்பது ஈழத் தமிழ் சமூகத்தைப் பொருத்தவரையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில், தோழர் பா.செ. சொல்வது போன்று வெள்ளாளர்கள் மத்தில் ஒரு அந்தஸ்த்தின் குறியீடாகப் பார்க்கப்பட்டதேயொழிய அறிவாற்றலின் வெளிப்பாடாகப் பார்க்கப்படவில்லை. இந்த நிலைமை காலப் போக்கில் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திலும் ஒரு நோய்க் கூறாகவே பரவியது எதைப் படித்தால் எங்களுக்கு சமூகத்தில் அந்தஸ்த்து கிடைக்கும், எதைப் படித்ததால் எங்களை மற்றவர்கள் மதிப்பார்கள் என்ற கல்வியடிப்படையிலான அந்தஸ்த்து மோகம் காலப்போக்கில் அறிவாற்றலையும் புலமைத்துவ தேடலையும் இரண்டாம் பட்சமாக்கியது. இந்த பின்புலத்தில்தான் வைத்தியராக வேண்டும், பொறியியலாளராக வேண்டும் என்ற மோகமும் அதனை அடிப்படையாகக் கொண்டதொரு சமூக ஈடுபாடும் உருவாகியது. இந்த அந்தஸத்து சாாந்த கல்வி மோகம் மறுபுறமாக என்னவகையான பாதகத்தை ஏற்படுத்திய என்றால், ஈழத் தமிழர் சமூகத்தில் அரசியல், பொருளாதாரம், சமூகவியல் மற்றும் கலைகள் சார்ந்த துறைகளை அந்தஸ்த்தற்ற துறைகளாகவும், பயனற்ற துறைகளாகவும் கருதும் மனோபாவம் ஏற்பட்டது. ஒவ்வொரு புதிய தலைமுறையினர் மத்தியிலும் தொற்றி வளரும் இந்த மனநோய் இறுதியில் நமது சமூகத்தை உயிரற்ற சமூகமாக உருமாற்றியது. சாதாரணமாவே இந்த நிலைமையை ஈழத் தமிழ் பாடசாலைகளில் தெளிவாகப் பார்க்கலாம். கலைப்பிாிவில் படிக்கும் மாணவர்கள் எப்போதுமே கடைநிலையில்தான் நோக்கப்படுவார்கள். ஏனைய துறைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் ஒரு சிறிதளவு கூட கலைப்பிாிவு மாணவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. இந்த நிலைமை அப்படியே சமூகத்திற்கும் கடத்தப்படுகின்றது. இன்றைய புதிய தலைமுறையினர் மத்தியில் சமூக விஞ்ஞானங்கள் சார்ந்த துறைகளெல்லாம் பணம் சம்பாதிக்க உதவாத அந்தஸ்தற்ற துறைகளாகவே மதிக்கப்படுகின்றன. இந்த நிலைமையை நாம் எவ்வாறு வளர்சியடைந்த நிலைமையென்று சொல்ல முடியும். இவ்வாறானதொரு கல்வியை எவ்வாறு சிறந்ததென்று நாம் கொண்டாட முடியும்? இந்த நிலைமை இறுதியில் படைபாற்றலற்ற சமூகத்தை உருவாக்கவே வழி வகுத்திருக்கிறது.
ஒரு முறை எதேச்சையாக ஒருவரை சந்தித்தேன். அவர் யாழ் பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறைக்கு தலைவராக இருந்த கலாநிதி.இராமகிஸ்ணா. தான் நீண்ட காலத்திற்கு பின்னர் இலங்கை வந்திருப்பதாகவும் தற்போது சிட்ணியில் வசிப்பதாகவும் கூறினார். அவர் கல்வி பற்றிக் கூறிய ஒரு விடயம் எனக்கு மிகவும் உடண்பாடாக இருந்தது ஏனென்றால் அது ஏலவே எணக்குள்ளும் இருந்தது. “ நாங்கள் தம்பி ஒரு காலத்தில் படிச்சவங்கள் என்று யாரையெல்லாம் எண்ணினமோ அவங்கள் எல்லாம் நாட்டவிட்டு ஓடிட்டாங்கள் ஆனால் யாரை படிக்காதவங்கள், மடையர்கள் என்றெல்லாம் சொன்னமோ அவங்கள்தான் இங்கயிருந்து ஏதோ இருக்கிறதை காப்பாற்றிக் கொண்டிருக்கிறாங்கள். கல்வி என்றது என்ன? அவரவர் வேலைகளை செய்துவிட்டு ஓய்வு நேரங்களில் நல்ல அறிவுசார் நூல்களை தேடிப் படிக்கிறதுதான்”
உண்மையில் நாம் நமக்குள் உள்ளுக்குள்ளும் பரந்தும் சிந்திப்பதற்கான வழி வகைகள் குறித்து சிந்திக்க வேண்டும். அப்போதுதான் நம்மைச் சுற்றி பின்னப்படும் சவால்களை வெற்றி கொண்டவாறு நம்மால் முன்னோக்கி நகர முடியும். அவ்வாறில்லாது போனால் நம்மை நாமே புகழ்ந்தவாறு தேங்கித்தான் கிடப்போம். இது ஒரு சிந்தனை முறையாகவே நமது புதிய தலைமுறை மத்தியில் வளர்க்கப்பட வேண்டும், இல்லாவிட்டால் தமிழ் சமூகத்தில் வைத்தியர்களும் பொறியலாளர்களும், கணக்காளர்களும்தான் எஞ்சியிருப்பர். இறுதியில் நம் முன் ஒரு மலட்டுச் சமூகமே எஞ்சியிருக்கும்.
அடுத்தது சாதி இதைப் பற்றி பேசுவதும் எந்தவகையிலும் தமிழ் சமூகத்தை குறைத்து மதிப்பிடுவதாகாது. நம்முள் ஊடுருவியிருக்கும் ஒரு அசிங்கம் பற்றி போசாது விட்டால் அது நாளடைவில் நாற்றமெடுத்து நம்மையே மூச்சுத் தினறச் செய்யும். ஆயுத விடுதலைப் போராட்டம் அதன் உச்ச நிலையில் இருந்த காலத்தில் இவ்வாறான அகநிலை சிக்கல்களை முதன்மைப்படுத்துவது மறுபுறமாக போராட்டத்திற்கு குந்தகமானதான அமையும் என்ற வகையில் அவ்வாறான கருத்துக்களுக்கு இது காலமல்ல என்று நானும்தான் எழுதியிருக்கிறேன். அது சாியானதும் கூட. ஆனால் இப்போது நிலைமை வேறு. நாம் அனைவரும் ஒன்றுபடுவதற்கான புள்ளியை எதுவெல்லாம் தடுக்கக் கூடுமோ அனைத்தையும் பற்றி நாம் பேசித்தான் ஆக வேண்டியிருக்கின்றது. அவ்வாறு பேசாது விட்டால் நமது ஒன்றிணைந்த செயற்பாடுகள் மேலும் மேலும் சிக்கலுக்குள்ளாகலாம். ஆனால் இந்த விடயங்களை வைத்துக் கொண்டு மட்டுமே மல்லுக் கட்டித்திாிபவர்களின் பிரச்சனை வேறு. நான் அவர்கள் பற்றி இங்கு கூறவில்லை.
அடுத்து, நன்பர் பாண்டியனின் கருத்துக்கள், அவர் சிங்கள ராஜதந்திரத்தை நான் அதிகம் சிலாகிப்பது போன்று குறிப்பிட்டிருக்கிறார். அது குறித்து எனக்கு எந்த சிலாகிப்பும் இல்லை நன்பரே! ஆனால் அது குறித்த நமது அறியாமை குறித்து அல்லது அதன் பிரயோகம் குறித்த குறைமதிப்பீடு குறித்து எனக்கு ஆதங்கம் உண்டு. அவ்வளவுதான்
சிங்களவர்கள் எப்படியிருக்கிறார்கள் அவர்கள் மீது யார் யாரெல்லாம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதல்ல இங்கு விடயம். நாங்கள் எங்கு நிற்கிறோம்? விறுகொண்டு நிமிர்ந்த எங்கள் அரசியல் எங்கு நிற்கிறது? இவைதான் நாம் கருத்தில் கொள்ள வேண்டியவை.
ஈழத் தமிழர் அரசியல் போக்கில் பல படிமுறைகளை நாம் கடந்து வந்திருக்கிறோம். மார்க்சிய வழிமுறை, காந்திய வழிமுறை இறுதியில்தான் ஆயுத வழிமுறை. இந்த வழிமுறைகள் எவற்றாலும் நமது இலக்கினை நெருங்க முடியாமல் போயிருக்கிறது. இந்த அனைத்து வழிமுறைகளும் சிங்களம் வகுத்த உபாயங்களின் முன்னால் தோல்வியடைந்திருக்கின்றன என்பதே வரலாறு. இது ஒன்றும் இரகசியமானதல்ல. ஆகவேதான் இப்போது புதிய வழிமுறையொன்றை கண்டடைய வேண்டிய நிர்பந்தம் ஈழத் தமிழர்கள் மேல் என்று மில்லாதவாறு அழுத்தி நிற்கிறது. அது வெறும் கற்பனை கடலில் நீச்சலடிப்பது பற்றியதல்ல. நிஜக்கடலில் மூழ்கி முத்தெடுப்பது பற்றியது நாலாப்புறமும் சுறாக்கள் சூழந்த அந்த கடலில் வெறும் உணர்வை மட்டும் வைத்துக் கொண்டு எதையும் சாதித்துவிட முடியாது. நிதானமான இராஜதந்திர அணுகுமுறையே இங்கு தேவை. இராஜதந்திர ஆற்றல் மட்டுமே இங்கு எல்லா தடைகளையும் உடைக்கவல்லது. இராஜதந்திர ஆற்றல் வாய்ந்த சமூகமொன்று உருவாக வேண்டுமாயின் அதற்கு படைபாற்றல் மிக்க சிந்தனை முறை நம் மத்தியில் வளர வேண்டும். நமது தேடல் வாழ்வு பெற வேண்டும்.
Yasinthiran
No comments:
Post a Comment