மகிந்தவின் விசாரணை ஆணைக்குழுவும்,திருப்திப்படும் தமிழர்களும் : இரா.துரைரத்தினம்
[ திங்கட்கிழமை, 10 மே 2010, 12:37.28 PM GMT +05:30 ]
இலங்கையில் போர் நடந்த காலப்பகுதிகளின் அனுபவங்களில் இருந்து படிப்பினைகளை பெற்று, நல்லிணக்கத்துக்கு இட்டுச் செல்லும் வகையில் ஆய்வு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கும் நோக்கில் ஆணைக்குழு ஒன்றை இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராசபக்ச விரைவில் நியமிக்க உள்ளார் என அண்மையில் அவரின் ஊடகப்பிரிவு அறிவித்திருந்தது.
இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராசபக்சவினால் விரைவில் நியமிக்கப்பட இருக்கும் இந்த ஆணைக்குழுவின் அறிக்கைகள் எப்படி இருக்கும் என்று இப்போது கூறமுடியாவிட்டாலும் இந்த ஆணைக்குழுவின் நோக்கம், அவர்கள் எந்த இலக்கை நோக்கி செல்வார்கள், மகிந்த ராசபக்ச அரசு இதன் மூலம் எதைச் சாதிக்க முற்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது சர்வதேச நாடுகளோ ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் இலங்கை போர் குற்றம் புரிந்ததற்கான ஆதார காணொளிகள் பென்டகனில் இருக்கிறது என்றும் வாதிடுபவர்களும் இருக்கிறார்கள். கூடவே மகிந்த அரசின் ஆணைக்குழு அறிக்கையை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றோ அல்லது எமது மக்களை படுகொலை செய்தற்கான ஆதரங்களை அமெரிக்க வைத்திருக்கிறது என்று எண்ணிக்கொண்டோ நாங்கள் திருப்திப்பட்டு கொண்டிருக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.
அல்லது இலங்கை போர்க் குற்றச் செயல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்க இருக்கும் ஆலோசனை குழுவின் நடவடிக்கைகளால் ஸ்ரீலங்கா அரசின் போர்க்குற்றத்தை ஐக்கிய நாடுகள் சபை அம்பலப்படுத்தும் என எவ்வளவு தூரம் நம்பிக்கை வைக்க முடியும்?
எதிரியின் பலத்தை அல்லது நடவடிக்கைகளை குறைவாக மதிப்பிட்டு சிங்களவர்களால் எங்களை வெல்லமுடியாது என்று இறுமாப்பு கொண்டிருப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை அனுபவங்களில் ஊடக பெற்றிருக்கிறோம்.
மன்னார் பூநகரி பாதையில் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில்- அப்பாதையை இராணுவம் கைப்பற்றினால் கிளிநொச்சியை மட்டுமல்ல வன்னிப்பிரதேசத்தை கூட விடுதலைப்புலிகளால் தக்கவைத்துக்கொள்ள முடியாது என சொன்னபோது அதற்கு எதிராக வந்த எதிர்வினைகளைப் பார்த்த போது எம்மவர்கள் எதிரியின் பலத்தையும் வியூகத்தையும் எப்போதும் குறைவாக மதிப்பிட்டே வருகிறார்கள் என்பதை உணரமுடிந்தது.
ஆயுதப் போராட்டமாக இருக்கலாம் அல்லது அரசியல் போராட்டமாக இருக்கலாம் எப்போதும் எதிரியின் பலத்தை இரட்டிப்பாக மதிப்பிட்டு அதை எதிர்கொள்ளும் போதுதான் அதில் வெற்றி கொள்ள முடியும். ஆனால் எதிரியின் பலத்தை குறைவாக மதிப்பிட்டு செயற்படுவதும் அவர்களால் எங்களை ஒன்றும் பிடுங்கேலாது என இறுமாப்புடன் இருப்பதும் எதிரிக்கு சாதகமாகவே அமைந்து விடுகிறது. இதை நாம் பல காலகட்டங்களில் அனுபவரீதியாக பெற்ற போதிலும் அந்த அனுபவங்களிலிருந்து பாடங்களை கற்றிருக்கிறோமா என்ற சந்தேகமே எழுகிறது.
எதிரியின் வியூகங்கள் நடவடிக்கைகள் பற்றி எப்போதும் விழிப்புடன் செயற்பட்டு அதை முறியடிக்க கூடிய பலமான செயற்பாடுகளை செய்யும் போதுதான் செல்லும் இலக்கை நாங்கள் அடைய முடியும்.
எனவே மகிந்த ராசபக்ச நியமிக்க இருக்கும் ஆணைக்குழு பற்றியும் அவற்றின் விசாரணைகள் எப்படி அமையப்போகிறது என்பது பற்றியும் அதன் ஊடாக எத்தகைய இலக்கை அடைய இலங்கை அரசு முயற்சி செய்கிறது என்பதையும் அறிந்து செயற்பட வேண்டிய பொறுப்பு தமிழர் தலைமைகளிடம் இருக்கிறது.
யார் அந்த தமிழர் தலைமை என நீங்கள் என்னிடம் கேள்விக்கணை தொடுத்து வேறு ஒரு சிக்கலில் என்னை மாட்டிவிடவும் நினைக்கலாம். அந்த சிக்கலுக்குள் இப்போது மாட்டிக்கொள்ளாது தாங்கள் தான் தமிழர்களின் தலைமை என யார் யார் சொல்கிறார்களோ அவர்களிடம் அந்த பொறுப்பை இப்போதைக்கு ஒப்படைத்து விடுவோம்.
இந்த ஆணைக்குழுவில் யார் யாரை விசாரணைக்கு உட்படுத்துவது, எத்தகைய கோணத்தில் விசாரணைகளை நடத்துவது, விசாரணை அறிக்கை எந்த இலக்கை நோக்கி செல்ல வேண்டும், அந்த அறிக்கையை வைத்துக்கொண்டு எதனை சாதிக்க முடியும் என்பதை ஆணைக்குழுவை நியமிப்பதற்கு முதலே அரசு திட்டமிட்டு செயற்படுத்தி வருகிறது .
இந்த ஆணைக்குழு விசாரணைகளில் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்த தெரிவு செய்யப்பட்ட மக்கள், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தெரிவு செய்யப்பட்ட போராளிகள், அங்கு பணியாற்றிய அரச ஊழியர்கள் ( மருத்துவர்கள் உட்பட) , அரசசார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றிய உள்ளுர் உறுப்பினர்கள், போரை வழிநடத்திய படை அதிகாரிகள், என ஐந்து கட்டங்களாக இந்த விசாரணைகளை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டு வருவதாக தெரியவருகிறது.
இது தவிர இந்த ஆணைக்குழு நியமனம் உத்தியோகபூர்வமாக அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின் இதில் சாட்சி சொல்ல முன்வருபவர்கள் விண்ணப்பிக்குமாறு பொது அறிவித்தலை வர்த்தமானியிலும், பத்திரிகைகளிலும் வெளியிடுவதற்கும் இலங்கை அரசு செயலகம் வெளியிட உள்ளதாகவும் தெரியவருகிறது.
இதற்கு முன்னோடியாக முகாமிலிருந்த மக்களிடம் தனித்தனியாக விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தது. இதன் பின்னர் இதிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பொதுமக்கள் மீண்டும் அழைக்கப்பட்டு அவர்களது வாக்குமூலங்கள் ஒலி, ஒளி வடிவிலும், எழுத்து மூலமாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தேவைப்படும் போது மீண்டும் தாம் அழைக்கும் போது சமுகமளித்து இதனை அப்படியே சொல்ல வேண்டும் என அம்மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தமக்கு சாதகமாக இருக்கும் இந்த சாட்சிகளை இலங்கை அரசு இந்த விசாரணை ஆணைக்குழுவில் நிறுத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறது.
அது போல தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கும் மருத்துவர்கள் அரச ஊழியர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் உள்ளுர் பிரதிநிதிகள் ஆகியோரும் இந்த ஆணைக்குழு விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளனர்.
இந்த ஆணைக்குழுவுக்கு சர்வதேச மட்டத்தில் அங்கீகாரத்தை தேடிக்கொடுக்கும் வகையில் விசாரணைகள் சுதந்திரமாக நடைபெறுகிறதா என அவதானிப்பதற்கு சர்வதேச பிரதிநிதிகள் விசாரணைகளின் போது அவதானிப்பாளர்களாக சமுகமளிப்பதற்கும் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த ஆணைக்குழுவின் நோக்கம் பற்றி இந்த அறிவிப்பை விடுத்த இலங்கை அரசுத்தலைவரின் ஊடகப்பிரிவு சூசகமாக இதனைத் தெரிவித்திருந்தது.
அண்மைய போர் பற்றிய ஆய்வுகளின் மூலம், அந்தக் காலகட்டத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சர்வதேச நியமங்கள் எதுவும் எவராலும் மீறப்பட்டதா என்பது கண்டறியப்பட்டு, அவற்றுக்குக் காரணமான தனி நபர் அல்லது குழு எது என்றும் அடையாளம் காணப்படும் என்று ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.
இலங்கை அரசு மீது போர் குற்றம் சுமத்தப்படும் போது அதை மறுதலித்து தம்மால் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளே சர்வதேச நியமங்களை மீறி செயற்பட்டனர் என பெறப்படும் சாட்சிகளின் மூலம் நிரூபிப்பதற்கும் அது தொடர்பான தமது தரப்பில் சட்டபூர்வமான ஆவணம் ஒன்றை சர்வதேச சமூகத்தின் முன் வைப்பதற்குமே இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை பயன்படுத்தப்போகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான்.
ஆனால் இந்த நடவடிக்கைகளால் சர்வதேச சமூகத்தை இலங்கை தன்பக்கம் திருப்ப முடியாது என்றும், பென்டகனிடம் இலங்கையின் போர்க்குற்ற காணொளி இருக்கும் வரை இந்த ஆணைக்குழுவின் அறிக்கை எல்லாம் செல்லுபடி அற்றதாகி விடும் என தமிழர்கள் இறுமாப்புடன் இருந்துவிடுவதால் தமிழர்களுக்கு நீதி கிடைத்து விடுமா என்பதற்கு இந்த தமிழர் தரப்புக்கள் தெளிவு படுத்த வேண்டும்.
தமிழரின் ஆயுதப்போராட்ட தரப்பை போர் குற்றவாளியாக்கி அவர்களை ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் அந்த பயங்கரவாத அமைப்பிடமிருந்தே மக்களை மீட்பதற்காக தாம் போரை நடத்தியதாக நியாயம் சொல்லிக்கொண்டிருக்கும் இலங்கை அரசு அதை வெறும் வார்த்தைகளில் சொல்லிக்கொண்டிருக்காமல் பொதுமக்களின் வாக்கு மூலங்களை கொண்டு ஒரு ஆவண அறிக்கையாக தயாரிப்பதற்கும் இந்த ஆணைக்குழுவின் மூலம் இலங்கை திட்டமிட்டு வருகிறது.
போர் குற்றத்தை புரிந்த இலங்கை தனது குற்றத்தை மறைத்து தன்னை நியாயப்படுத்துவதற்கும் எதிர்தரப்பை போர் குற்றவாளியாக்குவதற்கும் எடுத்திருக்கும் நடவடிக்கைகளில் ஒரு வீதத்தையாவது பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பு எடுத்திருக்கிறதா ?
தமிழர் தரப்பு தன்மீது நடத்தப்பட்ட போர் குற்றங்கள் உட்பட ஆதரபூர்வமான ஆதாரங்களை சட்டரீதியான ஒரு ஆவணமாக இதுவரை தயாரித்திருப்பதாக தெரியவில்லை. இலங்கை அரசு புரிந்த போர் குற்றங்களை ஒரு சுதந்திரமான விசாரணைக்குழு ஒன்றை நியமித்து அந்த அறிக்கையை சட்டரீதியான ஆவணமாக பெற்றுக்கொள்வதற்கு தமிழர் தரப்பு நடவடிக்கை எடுத்ததாகவும் தெரியவில்லை.
வன்னி இறுதி போரில் இறுதி தினங்கள் வரை அங்கிருந்த அரச உயரதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் உயரதிகாரிகள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் என பலர் தற்போது வெளிநாடுகளில் உள்ளனர்.
உதாரணமாக வன்னியில் இறுதி போரின் போது அங்கு பணியாற்றிய மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், யூ.என்.எச்.சி.ஆர். பிரதிநிதி, வடகிழக்கு மனித உரிமைகள் செயலக பணிப்பாளர், மருத்துவ பணியாளர்கள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் என பலர் இன்று ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். சுதந்திரமான விசாரணைக்குழு ஒன்றை நியமித்து இவர்களிடம் இருந்து வாக்கு மூலங்களை பதிவு செய்வதன் மூலம் உண்மையில் போர் குற்றங்களை யார் செய்தார்கள் என்ற ஆதாரபூர்வமான அறிக்கை ஒன்றை தமிழர் தரப்பு பெற்றுக்கொள்ள முடியுமல்லவா?
தமிழர்களை இலங்கை அரசு படுகொலை செய்ததற்கான ஆதாரங்களை அமெரிக்க பென்டகன் வைத்திருக்கிறது என்றோ அல்லது இலங்கையில் நடந்த போர் குற்றச்செயல்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் குழு ஒன்றை நியமிப்பதன் மூலம் தமிழர் தரப்பு நியாயங்கள் வெளிப்படுத்தப்படும் என்றோ அல்லது இலங்கை ஒரு போர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்று தமிழர் தரப்பு நம்பிக்கொண்டிருக்கப் போகிறதா?
இந்த நிலையில் தமிழர் தரப்பிலும் அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் இலங்கை அரசுக்கெதிரான போர் குற்ற வழக்குகளை தாக்கல் செய்ய முடியும் என்று கூறப்படுகின்ற போதிலும் இதுவரை எந்த ஒரு வழக்கும் இலங்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டதாக தெரியவில்லை.
வெளிநாடுகளில் உள்ள தமிழர் தலைமைகள் என சொல்லிக்கொள்பவர்கள் இதற்கு ஏன் முன்வரவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர்களில் சிலர் முன்வைக்கும் வாதம் பாதிக்கப்பட்டவர்கள் சத்தியக்கடதாசி மூலம் தமது பாதிப்புக்கள் குறித்து ஆதாரங்களுடன் சமர்ப்பித்தால் வழக்கு தாக்கல் செய்வதற்கான ஏதுநிலைகள் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
அப்படியானால் தமிழர் தரப்பிலிருந்து இவ்வாறான ஒரு வழக்கை இலங்கை அரசு மீது தாக்கல் செய்வதற்கு ஏன் முன்வரவில்லை என்ற கேள்வி எழுகிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் முன்வரவில்லையா மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர் தரப்பு அவர்களுக்கு உதவுவதற்கு முன்வரவில்லையா என்பது தெரியவில்லை. உதாரணத்திற்கு ஒரிரு சம்பவங்களை இங்கே குறிப்பிடலாம்.
வன்னியின் இறுதி போரின் போது இலங்கை அரசு நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதை தான் ஆதாரபூர்வமாக வைத்திருப்பதாக ஒருவர் பிரித்தானியாவில் உள்ள தொலைக்காட்சி ஒன்றிற்கு தெரிவித்திருந்தார்.
அதேபோன்று வன்னி இறுதி போரின் போது மருத்துவ பணியாற்றிய தமிழ்வாணி என்ற பெண் அங்கு நடைபெற்ற படுகொலைகளை நேரில் பார்த்ததாக கூறியிருந்தார்.
இவர்களின் சாட்சியங்களை வைத்து இலங்கை அரசுக்கெதிராக போர் குற்ற வழக்கு ஒன்றை பிரித்தானிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியுமா என்பதை தமிழர் தரப்பு இதுவரை முயற்சிகள் எதும் எடுத்ததாக தெரியவில்லை.
அது மட்டுமல்ல மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் மட்டக்களப்பு நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் வைத்து பல பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். அந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் கூட தற்போது வெளிநாடுகளில் உள்ளனர். மகிந்த ராசபக்ச அரசுத்தலைவராக பதவி ஏற்றபின் அவரின் சகோதரர் கோத்தபாய ராசபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த வேளையில் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் ஜோசப் பரராசசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்தவிடயம். அதற்கு ஆதாரபூர்வமாக சாட்சிகளும் இருக்கின்றன. கொலையாளிகள் யார் என்ற பெயர் விபரங்கள் கூட உள்ளன. ஆனால் இக்கொலைகளின் சூத்திரதாரிகளான மகிந்த மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக ஏன் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட முடியாது.
பிரித்தானியாவில் உள்ள தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் இதற்கு ஏன் முயற்சி செய்யவில்லை. பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கிய உறுப்பினராக இருக்கும் ஜோசப் பரராசசிங்கத்தின் மகன் டேவிட் ஜோசப் அவர்கள் தனது தந்தையின் படுகொலை தொடர்பாக பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை இதுவரை முயற்சி செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தாலும் அது தமிழர்களுக்கு சாதகமான தீர்ப்பு வருமா என்று நீங்கள் சந்தேகம் கொள்ளலாம். சாதகமான தீர்ப்பு வருகிறதோ இல்லையோ தமிழர்களுக்கு சாதகமானதும் மகிந்த தரப்புக்கு பாதகமான ஒரு நிலையும் ஏற்பட வழி இருக்கிறது.
பிரித்தானிய அல்லது அமெரிக்க நீதிமன்றத்தில் மகிந்த அல்லது கோத்தபாய அல்லது இலங்கை அரசு படைத்தரப்பின் முக்கிய புள்ளிகள் மீது வழக்கு தாக்கல் செய்கின்ற போது விசாரணைக்கென நீதிமன்றத்தில் அவர்கள் சமுகமளிக்க வேண்டி ஏற்படும். மகிந்தவோ கோத்தபாயவோ அந்நீதிமன்ற விசாரணைகளுக்கு சமுகமளிக்க முன்வரமாட்டார்கள். அவ்வாறு அவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு சமுகமளிக்க தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தால் பிடிஆணை பிறப்பிக்கப்படும். வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நாடுகள் உட்பட மேற்குலக நாடுகளுக்கு அவர்களால் செல்லமுடியாத ஒரு சூழல் கூட ஏற்படும். பிடிஆணை பிறப்பிக்கப்பட்ட நபர்களாகவே கோத்தபாய போன்றவர்கள் வெளிநாடுகளில் பார்க்கப்படுவார்கள்.
ஜோசப் பரராசசிங்கம் படுகொலை செய்யப்பட்டு ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது, முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து ஒரு வருடம் கடந்து விட்டது. அந்த படுகொலைகளை செய்தவர்கள் சர்வதேச நாடுகளில் புனிதர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நாங்களோ பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்னால் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னால் அல்லது அமெரிக்காவில் ஒபாமாவின் வெள்ளை மாளிகைக்கு முன்னால் வெறும் கொட்டொலிகளை போடும் கூட்டங்களாகத்தான் நின்று கொண்டிருக்கிறோம்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஒருவருட பூர்த்தியை இன்னும் ஒரு சில நாள்களில் சந்திக்க இருக்கிறோம். வழமைபோலவே பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்னாலும் ஜெனிவா ஐ.நா.சபைக்கு முன்னாலும் அல்லது ஒபாவின் வீட்டு வாசலுக்கு முன்னாலும் கத்தி குளறிவிட்டு திருப்திப்பட்டுக்கொள்ளப் போகிறோமா? அல்லது ஆகக்குறைந்தது போர் குற்றவாளிகளான மகிந்த, கோத்தபாய போன்றவர்களை மேற்குலக நாடுகளில் நடமாட முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்கள் என்ற நிலைக்காவது தள்ளுவதற்கு முயற்சிகள் எடுக்கப்போகிறோமா?
இரா.துரைரத்தினம்
thurair@hotmail.com
------------------------------------------------
Copyright 2005-10 © TamilWin.com, All rights reserved.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment