BY ...............................................C.S.BASKARAN,CHICAGO,USA
முட்கம்பி வேலிக்குள் முடக்கி வைத்திருந்த முகாமில் அன்றைய தினம் செய்யவேண்டிய பணிகள் சிலவற்றை முடித்துக்கொண்டு அங்கே இருந்த கடைப் பக்கமாக வந்து கொண்டிருந்தேன்.
"தம்பி", என்ற தளதளத்த குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.
"எனக்கொரு பாண்துண்டு வாங்கித் தர முடியுமா?"
பொத்தான் அறுந்து போய், பல நாட்கள் துவைக்கப்படாத சட்டையும் தூக்கிக் கட்டிய வேட்டியுடன் கலைந்த முடியும் சவரம் செய்யாத முகமுமாக அந்த மெல்லிய உருவம் என்னை நோக்கி மெள்ள வந்தது. காயத்திற்காகக் கையில் கட்டப்பட்டிருந்த துணியில் இருந்து சற்று இரத்தம் கசிந்திருந்தது. மிகக் கிட்ட வந்ததும் அந்த முகம் எனக்கு மிகவும் அறிமுகமானதாக தோன்றியது. யாராக விருக்கும்? என் ஆழ் மனதிற்குள் சற்றுத் துளாவினேன்.
கந்தையா வாத்தியார் போல இருக்கிறதே. அவராய் இருக்குமோ?
"ஐயா! நீங்கள் கந்தையா மாஸ்டரோ.....” சற்று இழுத்தேன்.
அருகே வந்து பார்த்துவிட்டு "தம்பி, உம்மையும் தெரிஞ்சது போலத்தான் இருக்குது ஆனா..கண்ணும் சரியாத் தெரியுதில்லை."
"ஐயா, நான்தான் சுந்தர், கிளாக்கற்றை கடைசி மகன்“. என்றேன். சுகமாய் இருக்கிறியளோ என்ற வார்த்தை வாய்வரை வந்து அடங்கிக் கொண்டது.
"நீர் எங்கை தம்பி, இங்கை நிக்கிறீர்?" குரலில் ஆர்வம்மேலிட என்னைக் கூர்ந்து நோக்கினார்.
“ஒன்றுமில்லை ஐயா, நான் இங்கு வவுனியாவில் வேலை பார்க்கிறேன். இந்த முகாமில் சில வேலைகள் செய்யவேண்டி இருந்தது. அதுதான். இரண்டு மூன்று நாட்களாக இங்கு வந்து போய்க்கொண்டிருக்கிறேன் நீங்கள் எப்படி ஐயா இங்கை.? ..இப்படி ஆயிட்டீங்களே.?” என்று மிகக் கவலையுடன் கேட்டேன்.
"என்ன செய்வது தம்பி, எல்லாம் விதி. தமிழருடைய தலை எழுத்து நாங்கள் செய்த பாவங்களுக்கு இப்ப அனுபவிக்கிறோம்" என்று இரு கைகளையும் விரித்தபடி கூறினார்.
"நீங்கள் என்ன சொல்கிறீர்கள்..எனக்குப் புரியவில்லை" என்றேன்.
அப்போது அங்கே வந்த இராணுவத்தினர் என்னிடம் வந்து அதட்டலாகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர். நான் என்னிடம் இருந்த அனுமதிக் கடிதத்தைக் காட்டி விபரத்தை எடுத்துக் கூறியதும் பேசாமல் போய்விட்டார்கள்.
அவர்கள் அப்பால் சென்றதும் அவர் தொடர்ந்தார். "என்ன செய்வது..எங்கள் சமூக அமைப்பு எங்களுக்குள்ளே பல பிரிவினைகளை ஏற்படுத்தி அதன் மூலம் வேறுபாடான கருத்துகளை தோற்றுவித்து முரண்பாடான செயற்பாடுகளை உருவாக்கி எங்கள் இனத்தின் ஒற்றுமையை குலைத்துவிட்டது. இந்தப் பலவீனத்தையே மற்றவர்கள் தங்கள் ஆயுதங்களாகப் பாவித்துக் கொண்டார்கள். நாங்கள் ஒரு இனம். ஒரு நோக்கத்தோடு இருக்கிறோம் என்பதை மறந்து,செய்யும் தொழிலைவைத்து சமூக ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்கி,எங்களுக்குள்ளேயே ஆயிரம் பிரிவினைகளை ஏற்படுத்திவிட்டனர். சாதி என்றும், தீவு என்றும், ஊரென்றும், குறிச்சி என்றும், வெள்ளை வேட்டிக்காரர், கூலிக்காரரென்றும் வடக்கத்தியான் தெற்கத்தியான் என்றும் பாகு பாடு காட்டி...எவ்வளவு கொடுமைகளை செய்திட்டம் தம்பி. .. சின்ன வயதிலை என் கையாலேயே எத்தினை பேருக்கு தேங்காய் சிரட்டையிலை தண்ணி குடுத்திருப்பன்.இப்ப நினைக்க வெட்கமாயிருக் குது,வேதனையாயிருக்கிது.வீட்டைக் கட்டித் தந்தவனை வெளியே விட்டு பெருமைப்பட்ட ஒரே இனம் நமது சனங்கள்தான் தம்பி, அந்த அநியாயத்திற்குத்தான் இன்றைக்குப் பாருங்க, இந்த முள்ளு வேலிக்கு உள்ளே அவங்கள் தருகின்ற இரண்டு வாய்ச் சோத்துக்கு, இரண்டு கரண்டிக் கஞ்சிக்கு பிச்சை எடுக்கிறோம். சாப்பிட்டால் கழிக்க வேண்டுமே, அதற்கு இரண்டு மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டுமேஎன்பதற்காக எத்தனை பேர் சாப்பிடாமல் இருக்கிறார்கள்.என்னைப் போல சலரோக நோய்க்காரர்கள் நேரத்திற்கு சாப்பாடில்லாமல் மருந்தில்லாமல் துடிக்கிற துடிப்பு இந்த வேலிக்கு வெளியே வருவதில்லை, தெரிவதில்லை.உண்மையும் நீதியும் கூட இந்த வேலிக்குள் முடக்கப்பட்டுவிட்டன. ஒருநாளைக்கு இங்கு குறைந்தது பத்துப்பேர் அநியாயமாக அனாதைகளாக ஏதிலிகளாக பட்டினிகிடந்து, பரிதவித்து செத்துப்போகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் முழு உலகமுமே இந்த அநியாயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.” என்றவாறே பெருமூச்சை விட்டுக்கொண்டார்.
"ஐயா, நீங்க இப்ப எங்கு தங்கி இருக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.
“அந்த கூடாரத்திலைதான் தம்பி” கையைத் தூக்கித் தூரத்தே இருந்த அந்த வெள்ளைக் கூடாரத்தைக் காண்பித்தார்.
"ஐயா, இப்ப தனிய இருக்கிறியளோ? அல்லது குடும்பத்தோடு இங்கு தங்கி இருக்கிறியளோ." தயக்கத்துடன் கேட்டேன்.
மேலே நிமிர்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டே தாடையைத் தடவிக்கொண்டு
"நான் இப்ப தனியாத்தான்..என்ரை மனைவி விசாலம்...மகள்...மகன்..எல்லாம் போச்சு..." குரல் கரகரகரக்க என்னை நோக்கினார். கண்களில் கண்ணீர் நிரம்பி வடிந்தது. அவர் கைகளை இறுக்கமாகப் பற்றினேன். என்னைக் கட்டிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதார். ஆதரவாய் தாங்கிக் கொண்டேன். சிறு நிமிடங்கள் மௌனமாய்க் கழிந்தன.
அவர் என்னை நோக்கி முதல் கேட்டது திடீரென்று ஞாபகம் வந்தது. அவரை அழைத்துக் கொண்டு அருகிருந்த கடைக்குச் சென்றேன். காலைச் சாப்பாட்டுடன் தேநீரும் வாங்கிக் கொடுத்தேன். என்னைக் கையெடுத்துக் கும்பிட்டார். என் அடி வயிறு பற்றி எரிந்தது.
மடிப்புக் குலையாத வெள்ளைச் சட்டையும் சிவப்புக் கரை வேட்டியும், நெற்றியில் வீபூதிக் கீற்றும் நடுவில் சிறிய சந்தனப் பொட்டுமாக கந்தையா மாஸ்ரர் வரும்போது மிகக் கம்பீரமாகவிருக்கும். வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கு பாடப் புத்தகம், பேனா மட்டுமல்ல உணவும் வாங்கிக் கொடுத்ததை நானே பார்த்திருக்கிறேன். ஒருதடவை எனக்கு சரியான பசி. பாடத்தை கவனிக்க முடியவில்லை. சோர்ந்து போயிருந்தேன். அதனை குறிப்பால் உணர்ந்த கந்தையா வாத்தியார் என்னிடம் பணத்தைத் தந்து சாப்பிட்டு வரும்படி கூறினார். தாராள மனம் கொண்டு ஏராளமான உதவிகளைச் செய்து உயர்ந்த எண்ணமும் எளிய வாழ்க்கையும் பேணும் தற்பெருமை அற்ற அற்புத மனிதர். “அப்படிப்பட்டவர் இன்று இப்படி இருக்கிறாரே. நானில்லாவிட்டால் இன்று யாரோ ஒருவரிடம் பிச்சை கேட்டிருப்பாரே” என்று நினைத்த போது….எனக்குள் ஏதோ செய்தது. எப்படியோ இருந்தவர் இப்படியாகிவிட்டாரே. இவர் நெற்றியில் பூசிய வீபூதிக்கும் இவருடைய ஆழ்ந்த பக்திக்கும் ஒரு அர்த்தம் இல்லாது போய்விட்டதே என்று எண்ணத் தோன்றியது.
சற்று மெதுவாக அவரிடம் பேச்சை ஆரம்பித்தேன். யாழ்ப்பாணத்தில் எனது ஊரான கோப்பாயில்தான் கந்தையா வாத்தியாரும் வாழ்ந்து வந்தார். அத்துடன் நான் படித்த பாடசாலையில்தான் அவரும் தமிழ் வாத்தியாராக இருந்தார். எனக்கும் இரண்டு வருடங்கள் அவரே தமிழ் வகுப்பு எடுத்திருந்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இடப்பெயர்வில் குடும்பத்தோடு முல்லைத்தீவிற்கு சென்ற அவர் அங்கேயே தங்கி அங்குள்ள பாடசாலையில் பணியாற்ற ஆரம்பித்தார்.
கோப்பாயில் இருந்தபோதே இயக்கத்தில் தொடர்பாக இருந்த அவருடைய மகன், நாதன் படிப்படியாக இயக்கத்தில் இணைந்து கொண்டான். அப்பப்போ வீட்டுக்கு வந்து போவான். மூத்த பிள்ளை இப்படியானது வாத்தியாரின் மனைவிக்கு மிகவும் கவலையாயிருந்தது. வாத்தியாரோ தமிழ் மொழிக்கு தனது சேவை என்றும் தமிழ் மண்ணுக்கு தனது மகனின் சேவை என்றும் தனக்குள் பெருமைப்பட்டுக்கொண்டார். வாத்தியாரின் மகள் மல்லிகாவிற்கு காலில் ஏற்பட்ட காயத்திற்கு வைத்தியம் செய்யப் போனபோது அங்கு இருந்த உதவியாளருக்கும் அவளுக்கும் இடையில் ஏற்பட்ட கண்களின் பரிமாற்றங்கள் கடிதங்கள் பரிசுகள் கொஞ்சல்கள் கெஞ்சல்கள் என பலதும் பரிமாறப்பட்டு ஒருமாதிரி திருமணத்தில் முடிந்தது. வாத்தியார் பள்ளிக்கூடத்தில் பாடம் கற்பிப்பதோடு வீட்டில் பேரனுக்கும் பாடம் சொல்லித்தந்து மகிழ்ந்திருந்தார். தனது கடந்தகால நிகழ்வுகளை அமைதியாகக் கூறிகொண்டிருந்தவர் சற்று மெதுவான குரலில் ஆனால் உணர்ச்சி வயப்பட்டவராக அங்கும் இங்கும் பார்த்துவிட்டுத் தொடர்ந்தார்.
“தம்பி,
கிளிநொச்சியைத் தாண்டி சிங்கள இராணுவம் வந்து கொண்டிருந்த போது பலர் அங்கும் இங்குமாக யாழ்ப்பாணத்திற்கும் வேறு இடங்களுக்குமாக பல வழிகளிலும் செல்லவாரம்பித்தனர். எங்கள் பையனும் அவசரமாக எங்களை வந்து பார்த்துக்கொண்டு போய்விட்டான். தாயின் கையால் இரண்டு வாய்ச்சோறு வாங்கிச் சாப்பிட்டவன்போகும்போது தாயைக் கட்டிக் கொண்டு அழுதான். அதைப்பார்த்து கொள்ளி போடாமலே என்வயிறு பற்றி எரிந்தது. அன்று போனவன்தான்....எந்த விதமான தகவலும் இல்லை“.
சற்று ஓய்வெடுத்துக் கொண்டவர் மறுபடியும் தொடர்ந்தார்.
“தம்பி, அவன் போனதிலையிருந்து தாய் நொடிந்து போய்விட்டாள். சாப்பிட மறந்தாள், தூக்கத்தை மறந்தாள். இடையில் போர் மிகவும் உக்கிரமாக தொடங்கியது. பாதி நாட்களும் பல இரவுகளும் பதுங்கு குழிக்குள் கழித்தோம். சில நாட்கள் பட்டினி கிடந்தோம். என்பேரன் தமிழரசன், பாவம் பசியால் துடித்துப் போனான். அந்தப் பிள்ளைக்காகவாவது என் மகளும் மருமகனும் அங்கிருந்து எங்காவது போகவேண்டும் என்று அவர்களை வற்புறுத்தினேன். வாழ்ந்தால் ஒன்றாக இந்த மண்ணில் வாழ்வோம் இல்லையேல் ஒன்றாக மண்ணில் வீழ்வோம் என்று என்மருமகன் மறுத்தார். என் மனதிலும் நிறைந்தார். எத்தனையோ தியாக சீலர்களை ஏற்றுக்கொண்ட இந்த மண் எங்களை புறக்கணித்து விடவா போகிறது?
அப்பப்போ பசி எடுக்கும்போதெல்லாம் ஏதேதோ தத்துவம் பேசி மனத்தைக் கட்டுப் படுத்த முடிந்ததே தவிர வயிற்றுப் பசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அள்ளி அள்ளி உண்ட கரங்களுக்கும் அடுத்த வேளை உணவுக்கு என்றுமே காத்திராத இரைப்பையுக்கும் எமது நீண்ட நாள் போராட்டங்களும் மனதில் ஏற்பட்ட வடுக்களும் தெரிந்திருக்க நியாயம் இல்லையே. பசி என்பது பட்டு உணர்ந்தால் மட்டுமே தெரியும். சாதரணமாக விரதம் இருக்கும்போது விரதம் முடிய உணவு கிடைக்கும் என்பது எங்களுக்கு முன்கூட்டியே தெரியும். ஆனால் பட்டினி கிடக்கும் போது அடுத்த உணவு எப்போ என்பது ஆண்டவனுக்குத்தான் புரியும். ஆனால் பாவம், இங்குள்ள தெய்வங்களுக்குக் கூட, பூசை, புனருத்தானம், நெய்வேத்தியம், படையல் என்று எதுவுமே இப்போது கிடையாது.
"புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது" என்று பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன், ஆனால் நாங்கள் புல்லை மட்டுமல்ல, இலை குழைகளைக் கூட புசிக்க முயற்சித்தது எனக்குத்தான் தெரியும் “என்று கூறிவிட்டு வாத்தியார் குலுங்கக் குலுங்க அழுதார்.
திடீரென்று மேலும் உணர்ச்சிவசப்பட்டவராக, “என் கண்முன்னே எத்தனையோ குண்டுகள் வெடித்துச் சிதறின. குண்டுகள் மட்டும் சிதறவில்லை. கைகள், கால்கள், உடல்கள்...ஐயோ அந்தக் கொடுமையை என்னென்று சொல்வேன். இரத்தம் பீறிட்டுப் பாயும் காயங்களுக்கு மருந்தோ போதிய பராமரிப்போ உடன் கிடைப்பது அரிதாகவிருந்தது. காய்ந்து வறண்டு போன மண்மட்டுமே அப்போது காயங்களுக்கு முதலுதவி. அப்பிய மண்ணுக்கூடாக இரத்தத்தை மட்டுப்படுத்த முடியவில்லை. அதுவும் வயதுபோனவர்களைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. தங்கள் சட்டையைக் கிழித்து மற்றவர்களின் காயதுக்குக்குக் கட்டியவர்களை அன்று பார்த்து நெகிழ்ந்தேன். குறிப்பாக தமது சேலையை பல துண்டுகளாகக் கிழித்துக் காயத்துக்குக் கட்டிய பெண் தெய்வங்களையும் மனதால் அன்று வணங்கினேன்.
தம்பி...அந்தநாள் என் வாழ்விலே வந்திருக்கக் கூடாது. முறிகண்டிப் பிள்ளையாரும் வத்தாப்பளை கண்ணகி அம்மனும் கூட எங்களைப் பாதுகாக்க வரவில்லை. வந்ததெல்லாம் குண்டுகளும், எறிகணைகளும்தான். அவை தந்ததெல்லாம் காயங்களும், அங்க இழப்புகளும், உயிர் வதைகளும், மனதிலே மாறாத வடுக்களுமே.
அன்றைய தினம் விடாது குண்டுகள் வீசப்பட்டுகொண்டிருந்தன. தொடர்புகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் எங்கு பார்த்தாலும் புகை மண்டலம். பதுங்கு குழிகளை விட்டு வர முடியாத நிலமை. கையில் உணவுப் பொருட்களும் இல்லை. இரண்டு போத்தல் நீர்மட்டும் எங்களிடம் இருந்தது. அதுவும் பேரனுக்காக நான் கொண்டு திரிந்தது.
வெளிநாட்டு உதவி எப்படியாவது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை எல்லோரது மனதிலும் ஆழமாக பதிந்திருந்த தோடு, எமது போராளிகளின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை எங்கள் எல்லோருக்கும் இருந்தது.
மதியப் பகலின்போது சற்று அமைதி நிலவவே அனைவரும் பதுங்கு குழியை விட்டு வெளியே வந்து சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா என்று திரிந்து கொண்டிருந்தார்கள். நானும் சற்று வெளியே வந்து அங்கும் இங்கும் பார்த்தேன்.
திடீரென்று போராளிகள் வேகமாக ஒரு புறமாக ஓடி வந்துகொண்டிருந்தார்கள். தலைக்கு மேலே மூன்று விமானங்கள் சீறிக் கொண்டு போயின. சமாதானப் புறாக்கள் வட்டமிடும், வாழ்வு வரும் என்று காத்திருந்த எங்களுக்கு வானில் வட்டமிட்டு வந்தது விமானம் குண்டுபோட்டு! பதுங்கு குழிக்குள் ஓடுங்கள் ஓடுங்கள் என்று சத்தம் போட்டுக்கொண்டே இரண்டு போராளிகள் ஓடிச்சென்றனர். நான் எனது குடும்பம் இருந்த பதுங்கு குழியை நோக்கி ஓடினேன்.
அந்த நேரம் என்னைக் காணவில்லை என்று எனது பேரன் தமிழரசன் எப்படியோ குழியை விட்டு வெளியே வந்து “தாத்தா தாத்தா” என்றவாறே என்னை நோக்கி
ஓடிவந்தான். “தமிழ், தமிழ் அங்கை இரு அங்கை இரு..நான் இந்தா வந்திட்டேன்” என்றவாறு நான் அவனை நோக்கி ஓடினேன். கண்ணிமைக்கும் நேரத்தில் மேலே பறந்து வந்த விமானம் ஒன்று கீழாகப் பறந்து சில குண்டுகளை உமிழ்ந்து விட்டுப் போனது. ஓடிவந்து தமிழரசனைத் தூக்கி அணைத்துக்கொண்டு அவனிருந்து ஓடி வந்த புதைகுழியை நோக்கினேன். தம்பி, அந்தக் குண்டு வீச்சில் என்குடும்பம் இருந்த பதுங்கு குழி அப்படியே மண்ணால் மூடப்பட்டுக் கிடந்தது. என்மனைவியின் உடல் குழிக்குள் பாதியும் வெளியில் பாதியுமாகக் கிடந்தது. என் கண்முன்னே அந்தப் பதுங்கு குழி அவர்களுடைய புதைகுழி ஆச்சுது. ஐயோ! எனது மகள் மருமகன் இருவரும் மண்ணோடு மண்ணாகிப் போனார்கள். எனது தலை கிறுகிறுக்க தள்ளாடியவாறு தரையில் சாய்ந்தேன்.
மறுபடியும் கண்ணை விழித்தபோது யாரோ நீர் தெளித்து என்னை எழுப்பியதைத் தெரிந்து கொண்டேன். என்னை எழுப்பி யாரோ ஒரு நல்லவர் கைத்தாங்கலாகத் தாங்கிக்கொண்டார். சுற்றும் முற்றும் பார்த்து விழித்தேன். திடீரென்று என் பேரன் ஞாபகத்திற்கு வந்தது. “என் பேரன்.. பேரன்.. தமிழ்..தமிழ்.. தமிழரசன்...” என்று மெதுவாகச் சத்தம் இட்டேன். “ஐயா, நீங்கள் இறந்து விட்டீர்கள் என்று நினைத்து உங்கள் பேரனை யாரோ எடுத்துச் சென்றுவிட்டார்கள். உங்கள் அருகால் ஓடிக்கொண்டிருந்த போது நீங்கள் முனகிக் கொண்டு கிடப்பதைப் பார்த்து நான்தான் உங்களை தண்ணீர் தெளித்து எழுப்பினேன். வாங்க இப்படியே நடந்து அந்தப் பக்கம் போயிடலாம்.” என்று கூறிக்கொண்டே ஆதரவாக அணைத்துக்கொண்டு புறப்பட்டார்.
“என் மனைவி, மகள், மருமகன்” என்று பதைபதைத்தேன். அவர்கள் அந்தக் குழிக்குள் புதைந்தது பின்புதான் நினைவிற்கு வந்தது..தேம்பி அழுதேன்.துடித்தேன்..”ஐயோ..ஐயோ..” என்று தலையில் அடித்து குழறினேன். நான் மட்டுமல்ல.. எத்தனையோ உறவுகள்..வாய்விட்டுக் கதறினார்கள். எங்கு பார்த்தாலும் நிர்க்கதியற்று செய்வதறியாது ஏங்கிக் கலங்கித் துடித்து பதைபதைத்து சின்ன பின்னமாக்கப்பட்டு அங்கும் இங்குமாக ஓடித்திரிந்தார்கள். ஆங்காங்கே விழுந்த குண்டுகளும் துப்பாக்கி சன்னங்களும் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது.
"ஐயா அந்தக் குழிக்குள் இருந்தவர்கள் யாருமே தப்பவில்லை. வாருங்கள் போயிடலாம். இங்கே நிற்பது மிகவும் ஆபத்து..வாங்க" என்று கூறியவர் என் பதிலுக்குக் காத்திராமல் என்னை இழுத்துக் கொண்டு போனார். இழுத்துக் கொண்டு போனார் என்று கூறுவதைவிட ஓடினார் என்றுதான் கூறவேண்டும். ஓடும் வழியில் நான் கண்ட காட்சிகள்...ஐயோ..கையின்றி, காலின்றி, தலையின்றி, உயிரின்றி.. தெய்வமே! இதைப் பார்ப்பதற்கா என்னை உயிருடன் வைத்திருந்தாய்? அப்போது ஆண்டவனைக் கூட நிந்தித்துக் கொண்டேன். தம்பி, பள்ளிக்கூடத்தில் பாரத, இராமாயண யுத்தக் காட்சிகளை பிள்ளைகளுக்கு மிகவும் தத்துரூபமாக சொல்லிக் கொடுப்பதில் எனக்கு நிகர் நானேதான் என்று பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். வியாசரும் கம்பரும் எழுத்தில் வடித்ததற்கு நான் கற்பனையில் உருவகம் கொடுத்தவன். போரின் வலியை அன்று நான் உணர்ந்து கொள்ளவில்லை. காரணம் தலைவிதி, கர்மவினை என்று எத்தனையோ காரணங்களை எடுத்துக் காட்டி போரில் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களின் இழப்புகளுக்கும் வலிகளுக்கும் சமூகக் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் அர்த்தம் கற்பித்திருந்தார்கள்.
கிளிநொச்சியை கைப்பற்றியதற்குப் பிறகு இராணுவம் தர்மபுரம், வடக்கச்சி, விசுவமடு, உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளை கடந்தபோது, ஒவ்வொரு நாளும் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
போரின் இறுதிகட்டத்தில் சில நாட்களில் மட்டும் 18,000 பேருக்கும் மேல் கொல்லப்பட்டனர். 7,000 பேர் படுகாயமுற்றனர். 5,000 பேர் ஏதாவது ஒரு அங்கத்தை இழந்து ஊனமுற்றுக் கிடந்தனர். பல்லாயிரக்கணக்கான பேர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆனார்கள். நூற்றுக்கும் அதிகமான மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
தம்பி! எனது வாழ்கை எதுக்கும் உதவாததாக, எந்த ஒரு அர்த்தமும் இல்லாததாக போய்விட்டதே. எங்களுடைய காலம் எப்படியோ போகட்டும்.இனி வருங்காலத்துப் பிள்ளைகளின் வாழ்கை எப்படி அமையப்போகுதோ? அவர்களும் எங்களைப்போல ஓடி ஓடி அர்த்தமில்லாத ஒரு வாழ்கையைத்தான் வகுத்துக்கொள்ளப் போகிறார்களோ? தெரியவில்லை! எமது இனம் போராட்டத்துக்கு தயாராகிவிட்ட இனம். எங்களின் போராட்டத்தை நாங்களே முன்னெடுத்துச் சென்றவர்கள். அந்த உணர்வு இன்றும் குன்றாமல் எங்களிடம் இருக்கிறது. எனவே இன்றில்லாவிட்டலும் என்றோ ஒருநாள் நிச்சயம் வெற்றி பெறுவோம். சகல உரிமையுடன் கூடிய ஒரு நாட்டை இதர நாடுகளின் ஆதரவுடனும் அங்கீகாரத்துடனும் உருவாக்குவோம்!
தம்பி,
எமது பிள்ளைகள் முட்கம்பி வேலிக்குள் இருந்து கொண்டு எங்களுக்கு விடிவு வராத? யாரும் எங்களைக் காப்பாற்ற மாட்டார்களா?
என்ற ஏக்கத்துடன் பட்டினியோடு காத்துக் கிடப்பதை என்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை.
ஆனால் ஒன்று தம்பி. எங்கடை பிள்ளைகள் நன்றாய் படிக்கவேண்டும். பல துறைகளிலும் ஒப்புயர்வற்றவர்களாகத் திகழவேண்டும். உலக அரங்கில் இவர்களா தமிழர்கள்? இப்படிப்பட்டவர்களா தமிழர்கள்? என்று அகில உலகமும் ஆச்சரியப்படும் வண்ணம் எங்கள் தமிழ் பிள்ளைகள் ஒரு உன்னதமான, உயரிய நிலையை அடையவேண்டும். தமிழர்கள் அடிமைகள், கூலிகள், ஏதிலிகள், உரிமைகளற்றவர்கள், நாடற்றவர்கள் என்ற நிலை மாறவேண்டும். அது மாற்றப்படவேண்டும். இது உங்களைப் போன்ற இளைஞர்களால் முடியும் தம்பி! என்றுமே இல்லாதவாறு பெரும் சரித்திரத்தை இப்போது தமிழர்கள் இந்த மண்ணில் படைத்திருக்கிறார்கள். எங்களது வீர வரலாறு காலத்தால் அழிக்க முடியாதது. நம்மவர்கள் இந்த நாட்டு இராணுவத்தை மட்டுமல்ல அடுத்த நாட்டு இராணுவத்தையும் ஓட ஓட விரட்டியடித்தவர்கள். நீதி நியாயத்தின் கண்களைக் கட்டிவைத்துவிட்டு அகில உலகத்தின் துரோகத்தனமான, போக்கிலித்தனமான செயற்பாட்டுக்கு இன்று இரையாகியிருக்கிறது எமது தமிழினம். எவர் என்ன செய்தாலும் தமிழ் மொழியையோ, தமிழினத்தையோ யாராலும் அழித்துவிட முடியாது. தமிழர்கள் ஆற்றலிலும் திறமையிலும் எவருக்கும் சளைத்தவர்களல்ல. எங்கள் குறிக்கோள்களை ஒருமுகமாக உருவாக்கி தமிழினத்தை ஒன்று சேர்த்தால் நிச்சயமாக வெற்றிக்கனியை நீங்கள் பறிக்கமுடியும். ஆங்காங்கே பரந்து பிளவு பட்டிருக்கும் எங்கள் தமிழினத்தை ஒன்றாக இணையுங்கள். ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்துங்கள். எமது எதிர்காலம் இருண்டுதான் தெரிகிறது. நீதி என்ற ஒளியை கையிலேந்தி நேர்மை என்ற பாதையில் நிமிர்ந்து அடியெடுத்துச் செல்லுங்கள். உங்களைப் போல எத்தனையோ இளம் தலைமுறையினர் மிகுந்த அறிவோடும் ஆற்றலோடும் உலகெங்கும் தமிழ் இனத்தின் விடியலுக்கு வழிகோல விழி பார்த்துக் காத்திருக்கிறார்கள். தர்மத்தின் வழிநின்று தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்மண்ணுக்கும் உரித்தான உரிமைகளை உலகத்தின் உதவியோடு பெறுவதற்கு உழையுங்கள். தமிழர்கள் ஒன்று பட்டு வாழ்ந்திருந்தால் இன்று உலகமே உதவியிருக்கும். ஆனால் இன்று நம் இனம் காக்க உலகமெல்லாம் கண்ணீர் மல்க கையேந்தி நிற்கின்றோமே!
தம்பி, சிந்திக்கத் தெரிந்த உங்களைப் போன்ற இளைஞர்களால் நிச்சயமாக செயற்கரிய செயல்களை செய்யமுடியும். உண்டு படுத்து உறங்கி எழுந்து ஒரு சாதாரண வாழ்க்கையினை வாழ்ந்து முடிக்காமல் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை ஏற்படுத்துங்கள். இது உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு ஒப்புயர்வற்ற பணி! சேவை
நாங்கள் இந்த முள்ளுக் கம்பி வேலிக்குள் இன்னும் எவ்வளவு நாட்கள் கிடந்து சீரழிய வேண்டுமோ தெரியவில்லை. தம்பி, நான் இனி வாழ்ந்து என்னத்தைச் சாதிக்கப் போகிறேன். ஆனால் என்னுடைய பேரன் தமிழ் எங்கிருக்கிறானோ? எப்படி இருக்கிறானோ? தம்பி உங்களிடம் நான் ஒரு உதவி கேட்கிறேன் என்னுடைய பேரனை எப்படியாவது தேடிக் கண்டுபிடிச்சு கொடுங்கள். என்னுடைய தமிழ் அனாதையாகக் கூடாது. எப்படியாவது தமிழுக்கு ஒரு வாழ்வு கொடுங்கள். நான் உங்களை என்றைக்கும் மறக்க மாட்டேன்" என்றவாறே என் கைகளைப் பற்றிக் குழந்தையைப் போல அழுதார். நேரமானதினாலும் அடிக்கடி அங்கே நோட்டமிட்டவாறே குறுக்கும் மறுக்குமாக நடந்து கொண்டிருந்த இராணுவத்தின் கெடுபிடிகளின் காரணமாகவும் வாத்தியாரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டேன். அடிக்கடி வந்து பார்க்கும்படி கேட்டுக் கொண்டார்.
மறுநாள் காலை வாத்தியாரை சந்திக்கவேண்டும் என்று அவசரமாக அவர் இருந்தமுகாமின் வடக்கு திசை நோக்கி நடந்தேன். இன்னும் பல செய்திகளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலில் சற்று வேகமாக நடந்தேன்.
அவர் இருந்த கூடாரத்தை அண்மித்தபோது அங்கெ ஒரு பெரிய கூட்டமே கூடியிருந்தது. கூட்டத்தின் நடுவே ஒரு ஓரமாக கந்தையா வாத்தியார் உயிர் பிரிந்த நிலையில் கண்மூடிப் படுத்திருந்தார். மிகுந்த அதிர்ச்சியுடன் அவர் சாந்தமான முகத்தைப் பார்த்தேன். ஒரு பெரும் சுமையினை இறக்கிவைத்த அமைதி அவர் முகத்தில் தெரிந்தது. மார்பை நிமிர்த்தி, கரங்களை விரித்து காலனை எதிர்கொண்டார் போலும்.
என்னை அறியாமல் என் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. கந்தையா மாஸ்டர் நேற்றைய தினம் என்னிடம் கடைசியாகக் கூறிய வார்த்தைகள் மீண்டும் என் காதில் ஒலித்தன.
“ஒன்று தம்பி. எங்கடை பிள்ளைகள் நன்றாய் படிக்கவேண்டும். பல துறைகளிலும் ஒப்புயர்வற்றவர்களாகத் திகழவேண்டும். உலக அரங்கில் இவர்களா தமிழர்கள்? இப்படிப்பட்டவர்களா தமிழர்கள்? என்று அகில உலகமும் ஆச்சரியப்படும் வண்ணம் எங்கள் தமிழர்கள் ஒரு உன்னத நிலையை அடைய வேண்டும். தமிழர்கள் அடிமைகள், கூலிகள், ஏதிலிகள், உரிமைகளற்றவர்கள், நாடற்றவர்கள் என்ற நிலை மாறவேண்டும், மாற்றப்படவேண்டும். எமது எதிர்காலம் இருண்டுதான் தெரிகிறது. நீதி என்ற ஒளியை கையிலேந்தி நேர்மை என்ற பாதையில் நிமிர்ந்து அடியெடுத்துச் செல்லுங்கள். அறிவோடும் ஆற்றலோடும் உலகெங்கும் இன்றைய இளைஞர்கள் தமிழ் இனத்தின் விடியலுக்கு வழிகோல, விழி பார்த்துக் காத்திருக்கிறார்கள். தர்மத்தின் வழிநின்று தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்மண்ணுக்கும் உரித்தான உரிமைகளை உலகத்தின் உதவியோடு பெறுவதற்கு உழையுங்கள். என்னுடைய தமிழ் அனாதையாகக் கூடாது. எப்படியாவது தமிழுக்கு ஒரு வாழ்வு கொடுங்கள்”
அந்த வார்த்தைகள் என் இதயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின. அந்த புனிதமான ஆத்மா கந்தையா மாஸ்டராக உயிரோடு இருந்தபோது என் மனதில் ஆழமாக ஊடறுத்தி புரியவைக்க முடியாததை ஒரு பிணமாக மாறிய நிலையில் புரியவைத்தது. உணரவைத்தது. உறையவைத்தது.
அரசமரத்துக்குக் கீழே தான் ஞானம் பிறக்கவேண்டும் என்றில்லை! முட்கம்பி வேலிக்குள்ளும் ஞானம் பிறக்கலாம்!
அன்று ஈழமெங்கும் ஒலித்த "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்" என்ற காசி அண்ணாவின் பாடல் தேனிசை செல்லப்பாவின் குரலில் என் இதயத்தில் எதிரொலிக்க ஒரு தீர்க்கமான முடிவோடு முட்கம்பி வேலியைவிட்டு வெளியே வந்தேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment