WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Sunday, July 11, 2010

எதிர்நோக்கும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் தீர்வினைக் காணவேண்டுமென்பதே எனது பிரார்த்தனையாகும். !!!

வடக்கு,கிழக்கு மக்கள், வந்தாரை வாழவைத்தவர்கள்! இன்று தங்களின் வாழ்க்கைக்கே கையேந்துகின்றனர்! : ஸ்ரீரங்கா
[ ஞாயிற்றுக்கிழமை, 11 யூலை 2010, 08:06.34 AM GMT +05:30 ]
ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி என்பது அந்த நாட்டில் கிடைக்கத்தக்கதாகவுள்ள வளங்களை அடிப்படையாகக் கொண்டு பதவியிலுள்ள அரசாங்கம் எத்தகைய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றது என்பதைப் பொறுத்தே அமைகின்றது.
ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் சிறந்த பலாபலன்களை அந்த நாட்டு மக்களுக்கு வழங்கவேண்டுமாயின் பதவியிலுள்ள அரசாங்கமும் அந்த அரசாங்கத்தைச் சார்ந்த அமைச்சர்களும் முன்னெடுக்கும் கொள்கைத் திட்டங்கள் குறிப்பிட்டளவிற்குப் பங்களிப்புச் செய்யவேண்டும்.

வரலாற்று ரீதியாக பல உலக நாடுகள் வேறுபட்ட காலப்பகுதிகளில் வேறுபட்ட வகையிலான பொருளாதார அபிவிருத்திப் பிரச்சினைகளை எதிர்நோக்கியபோதும் அவர்களினால் உரியநேரத்தில் அமுல்படுத்தப்பட்ட சிறந்த பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக குறுகிய காலப்பகுதியிலேயே அத்தகைய பிரச்சினைகளிலிருந்து மீட்சி பெற்றன.

குறிப்பாக 1930 கள் அளவில் உலகப் பெருமந்தத்தின் விளைவாக பல அபிவிருத்தியடைந்த நாடுகள் வேலையில்லாப் பிரச்சினை பண வீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலைமை போன்ற பல பேரினப் பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தன. குறிப்பாக அமெரிக்கா இக்காலப்பகுதியில் மிகமோசமாக பாதிப்படைந்த ஒரு நாடாகக் காணப்பட்டது.

ஆனால் 1930 களின் பின்னர் பொருளியலாளர்களினால் முன்வைக்கப்பட்ட பேரினப் பொருளாதாரக் கொள்கைகள் மிக விரைவாக இந்நாடுகளை மந்த நிலையிலிருந்து மீட்சி பெற வழிசமைத்தன.

உண்மையில் இங்கு குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனின் அக்காலப் பொருளியலாளர்கள் குறிப்பாக கெயின்சியவாதிகள் உலகப்பெருமந்தத்திற்கு காரணமான விடயங்களைக் கண்டறிந்து அவற்றிலிருந்து மீட்சிபெறும் நோக்கில் பொருத்தமான பொருளாதாரக் கொள்கைகளை உரிய நேரத்தில் முன்வைத்தமையேயாகும். அந்தவகையில் பொருளியலாளர்கள் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக அரசாங்கத்தின் தலையீட்டினை வலியுறுத்தியதுடன் இறைக்கொள்கைகளினூடாக (குறிப்பாக வரி அரசாங்க செலவீடு மற்றும் பாதீட்டுப் பற்றாக்குறையை நிதியிடல்) பெரும்பாலான பேரினப்பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வினை பெற்றுக்;கொடுத்தனர்.

இதே போன்று 1970 களிலும் முக்கியமான பேரினப் பொருளாதார மாறிகளான பணவீக்கம் மற்றும் வேலையில்லாப்பிரச்சினை என்பன பாரிய தாக்கங்களை அமெரிக்கா போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏற்படுத்தியிருந்தன. இக்கால கட்டத்திலும் இப்பிரச்சினைகளை இனங்கண்ட மற்றுமொரு பொருளியல் ஆசிரியர்கள் மாறுபட்ட பேரினப் பொருளாதார கொள்கையினை அமுல்படுத்தி குறுகிய காலப்பகுதியில் பிரச்சினைகளிலிருந்து மீட்சி பெற்றனர்.

அந்த வகையில் மில்ரன் பிறீட்மன் (Milton Freedman) போன்றவர்களினால் முன்வைக்கப்பட்ட பேரினப் பொருளாதாரக் கொள்கையே பணக் கொள்கையாகும் (பணநிரம்பல் பணக்கேள்வி மற்றும் கடன் கட்டுப்பாடு). ஆகவே 1930களில் உலக ரீதியாக ஏற்பட்ட பெருமந்தமானது அக்காலத்தில் முன்வைக்கப்பட்ட இறைக்கொள்கைகளினால் மீட்சி பெற்றபோதும் இதே கொள்கைகள் 1970 களில் ஏற்பட்ட அதேவிதமான பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொள்ள தவறிவிட்டன.

ஆகவே குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கை மற்றுமொரு காலப்பகுதியில் தோல்வியடைவது தவிர்க்க முடியாததொரு வரலாற்று உண்மையாகும்.

மேலும் குறித்த ஒரு நாட்டில் அமுல்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கை அந்த நாட்டில் வெற்றியடைந்த போதும் அதே பொருளாதாரக் கொள்கை மற்றுமொரு நாட்டில் வெற்றியை தருமென எதிர்பார்க்கமுடியாது.

அபிவிருத்தியடைந்த நாடுகளில் அமுல்படுத்தப்பட்ட பெரும்பாலான பொருளாதாரக் கொள்கைகள் அந்நாடுகள் எதிர்நோக்கிய பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கியபோதும் அதே கொள்கைகள் குறைவிருத்தி நாடுகளின் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்குமென எதிர்பார்க்க முடியாது. மேலும் ஒவ்வொரு நாடுகளினாலும் அமுல்படுத்தப்பட்டு வரும் பேரினப் பொருளாதாரக் கொள்கைகள் ஒரேவிதமானவையாக காணப்படுவதில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் ஒரேவிதமாக காணப்படாமையினால் பிரச்சினைகளின் வேறுபாட்டிற்கு ஏற்ப பொருளாதாரக் கொள்கைகளும் வேறுபட்டமைவது தவிர்க்கமுடியாததாகும்.

இத்தகைய ஒரு பின்னணியில் எமது நாட்டின் அனுபவத்தை நோக்கும்போது சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலப்பகுதியில் பதவியேற்ற அரசியல் கட்சிகளின் வேறுபட்ட அரசியல் சித்தாந்தங்கள் பொதுவான பொருளாதாரக் கொள்கையினை ஏற்றுக் கொள்ளாமையினால் பெரும்பாலான காலப்பகுதிகளில் அரச மாற்றத்துடன் இணைந்த வகையில் பொருளாதாரக் கொள்கைகளும் மாற்றம்பெற்று வந்தமை அவதானிக்கத்தக்கதாகும்.

அந்த வகையில் ஜக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் பெரும்பாலும் முதலாளித்துவ கருத்துக்கள் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகள் அமுல்படுத்தப்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பதவியேற்ற காலப்பகுதிகளில் சமவுடைமைக் கருத்துக்கள் நிறைந்த பொருளாதாரக் கொள்கைகளே முன்வைக்கப்பட்டன.

இத்தகைய மாறுபட்ட பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் தொடர்ச்சித் தன்மையை ஏற்படுத்த தவறியமையால் இன்றுவரை பெரும்பாலான பேரினப் பொரளாதாரப் பிரச்சினைகளுக்கு (வேலையின்மை விலை உறுதி உறுதியான பொருளாதார வளர்ச்சி மற்றும் சென்மதி நிலுவை உறுதிநிலை) தீர்வு காண்பதென்பது கடினமானதொரு முயற்சியாகவே அவதானிக்கப்படுகின்றது.

இத்தகையதொரு வரலாற்று புலத்திலிருந்து இன்றைய இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியை நோக்கும் போது கடந்த 30 வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற இனத்துவப் போர் அண்மையில் முடிவடைந்து விட்டதாக கூறும் அரசாங்கம் இலங்கையை ஆசியாவிலேயே சிறந்ததொரு நாடாக மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டதாக கூறிக்கொண்டு மாயை நிறைந்த ஒரு வரவு செலவத்திட்டத்தினை மக்கள் முன் வழங்கியிருப்பது ஆச்சரியமானதாகவே நோக்கப்படுகின்றது. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இலங்கை இன்று எதிர்நோக்கும் முக்கியமான பேரினப் பொரளாதார பிரச்சினைகளை அடையாளம் காணாமலேயே தனது பொருளாதாரக் கொள்கைகளை முன்வைக்க முன்வந்துள்ளது.

ஒரு நாட்டில் வரவு செலவுத்திட்டம் என்பது எதிர்வரும் ஒருவருட காலப்பகுதியினுள் அரசாங்கத்தினால் பெறமுடியுடிமன எதிர்பார்க்கப்படும் வருமானத்தினையும் அக்காலப்பகுதியில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளவுள்ள செலவு நடத்தைகள் மற்றும் நிதியீட்டம் போன்ற விடயங்களையும் தெளிவுபடுத்தும் ஒரு அறிக்கையாக உள்ளது. இத்தகைய ஒரு அறிக்கையின் முக்கியத்துவம் வரலாற்று ரீதியாக உணரப்பட்டு அதற்கென தனியிடம் கொடுத்து தயாரிக்கப்படுகின்றது.

நாட்டிலுள்ள கொள்கை வகுப்பாளர்கள் பொருளியலா சார் வல்லுனர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் என்பவர்களது கூட்டு முயற்சியாகத் தயாரிக்கப்படும் இவ்வறிக்கை குறிப்பிட்ட காலத்திலுள்ள முக்கியமான பொருளாதார சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்தி நாட்டு நலன் கருதி தயாரிக்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்பட்ட போதும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவை கருத்தில் கொள்ளப்படாமல் பல்வேறுபட்ட அழுத்தங்களுக்கு அடிபணிந்து தயாரிக்கப்பட்டிருப்பது வரலாற்று ரீதியாக அவதானிக்கப்பட்ட உண்மையாகும்.

1977 ஆம் ஆண்டு ஜக்கிய தேசியக் கட்சி தாராள பொருளாதாரக் கொள்கையினை அறிமுகப்படுத்திய போதும் அத்தகைய கொள்கையினை வகுப்பதில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றின் தொடர்பு மறுக்க முடியாததொரு உண்மையாகும். அவ்வாறானதொரு நிலைமையையே இன்றும் நாம் இலங்கை அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட அறிக்கையிலும் காணமுடிகின்றது.

இன்று அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டமானது இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள எந்த பேரினப் பொருளாதார பிரச்சினையை இனங்கண்டு தயாரிக்கப்பட்டது. நடைமுறைப் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்குத் தீர்வினை முன்வைக்கும் வகையிலேயே வரவு செலவுத்திட்ட அறிக்கை தயாரிக்கப்படவேண்டும். ஆனால் பிரச்சினைகளை இனங்காணாது வெளியார்களின் அழுத்தத்திற்கு தலைசாய்த்து தயாரிக்கப்பட்ட இந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை இன்று இலங்கை மக்கள் எதிர்நோக்கும் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வினைப் பெற்றுத்தராது என்பதே எனது கருத்தாகும்.

இன்று வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விடயம் மரபு ரீதியான கைத்தொழில்களும் சிறிய தொழில் முயற்சி நடவடிக்கைகளுமாகும். ஒரு நாடு பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி நோக்கி சிந்திக்க முற்படுகையில் அந்த நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் மாற்றங்கள் இடம்பெறுவது அவசியமாகும். பொருளாதாரக் கட்டமைப்ப என்பது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு விவசாயதுறை கைத்தொழில் துறை மற்றும் சேவைகள் துறை என்பன செலுத்தும் பங்களிப்பினையே குறிப்பிடுகின்றது.

வரலாற்று ரீதியாக அவதானிக்கப்படும் ஒரு உண்மை யாதெனில் பெரும்பாலான அபிவிருத்தி அடைந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்துறை செலுத்தும் பங்களிப்பு குறைவாக காணப்படும் அதேவேளை இலங்கை போன்ற குறைவிருத்தி நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை நிர்ணயிப்பதில் விவசாயத்துறையே அதிக பங்களிப்பு செலுத்தி வருவதாகும்.

மற்றுமொரு மறுக்க முடியாத பெரும்பாலான அபிவிருத்தி அடைந்த நாடுகள் விரைவான பொருளாதார அபிவிருத்தியை அடைந்தமைக்கு காரணம் அவை கைத்தொழில்துறை வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருவதாகும். ஆனால் பெரும்பாலான குறைவிருத்தி நாடுகள் விவசாயத்துறையையே நமிபி இருப்பதனால் அவற்றின் அபிவிருத்தி பாதை கடினமானதாகவே உள்ளது.

ஆகவே இத்தகைய ஒரு பின்னணியில் இலங்கை போன்ற குறைவிருத்தி நாடுகள் தொடர்ந்தும் விவசாயத்துறை தொடர்பில் ஓரளவிற்கு கவனம் செலுத்தினாலும் கைத்தொழில் துறைகளை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்துவது அவசியமானதொரு நிபந்தனையாகும்.

இன்றைய இலங்கையின் அனுபவத்தை நோக்கும்போது கடந்த பல வருடங்களாக கைத்தொழில் துறையின் வளர்ச்சி என்பது எதிர்பார்த்தளவிற்கு வளராத ஒரு நிலையில் இன்று இத்துறையை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தவேண்டியது காலத்திக் கட்டாயமாகும்.

ஆனால் நாம் எதிர்பார்ப்பது போன்று பாரிய கைத்தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதென்பது இலங்கை போன்ற குறைவிருத்தி நாடுகளுக்கு இலகுவானதொரு காரியமல்ல. அதற்காக பல தியாகங்களை செய்யவேண்டியது அவசியமாகும். ஆனால் மரபுரீதியான கைத்தொழில்களையும் சிறிய தொழில் முயற்சிகளையும் ஆரம்பிப்பதென்பது கடினமானதொரு முயற்சியல்ல. தற்போதய நிலையில் இலங்கைக்கு இருக்கின்ற சிறந்த ஒரு வாய்ப்பு மரபு ரீதியான கைத்தொழில்களையும் சிறிய தொழில் முயற்சி நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கும் வகையில் முதலீட்டாளர்களுக்கு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை வழங்குவதாகும். இத்தகைய முயற்சிகளை மேம்படுத்த வேண்டுமாயின் முதலில் பிரதேச ரீதியாக கிடைக்கத்தக்கதாகவுள்ள வளங்களை அடையாளங்காணுதல் அவசியமாகும். அத்தகைய வளங்களை அடையாளங்கண்டு பொருத்தமான தொழில் முயற்சிகளை பிரதேச ரீதியாக மேற்கொள்ளுதல் சிறந்த ஒரு நடவடிக்கையாக அமையுமென நினைக்கின்றேன். இலங்கை திருநாடு வளங்கள் நிறைந்த ஒரு நாடு ஆனால் அந்த வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தத்தக்க வகையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமையவில்லை என்பதே வருத்தத்திற்குரிய விடயமாகும்.

குறிப்பாக மலையக பகுதிகளிலுள்ள வளங்களை இனங்கண்டு எத்தகைய தொழில் முயற்சிகள் அப்பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என ஆராய்ந்து அவ்வாறான தொழில் முயற்சிகளுக்கு ஊக்குவிப்பு வழங்குவது அரசாங்கத்தினதும் அமைச்சர்களினதும் கடமை என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். இன்று இலங்கையிலுள்ள எல்லா பிரதேசங்களையும் ஒப்பிடுகையில் வடகிழக்கு பகுதிகள் போரினால் பாதிக்கப்பட்டு மிக மோசமான ஒரு நிலையிலுள்ளன.

நாட்டின் அபிவிருத்தி பற்றி சிந்திக்கின்ற அரசாங்கம் வடகிழக்கு அபிவிருத்தி பற்றி சிந்திக்காமல் சிறந்த பொருளாதார வளர்ச்சி அபிவிருத்தியை அடைந்துவிட முடியாது.

ஆகவே அரசாங்கம் பாதிப்படைந்த இப்பிரதேசங்களை வளர்ச்சி நோக்கி திசை திருப்பவேண்டுமாயின் முதலில் மரபுரீதியான கைத்தொழில்களையும் சிறிய தொழில் முயற்சிகளையும் ஆரம்பிப்பதே சிறந்த முயற்சியாகும்.

வடகிழக்கில் விவசாயம் மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு என்பன தொடர்பில் அகிய வாய்ப்புக்கள் காணப்படுவதால் அவற்றினை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்களையும் சிறிய தொழில் முயற்சிகளையும் முதலில் ஆரம்பிப்பது இலகுவானதாகும். அதற்குப் பொறுப்பானவர்கள் இதுவரை வடக்கு, கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளவுள்ள மரபுரீதியான கைத்தொழில்கள் மற்றும் சிறிய தொழில் முயற்சிகள் தொடர்பில் எத்தகைய கவனத்தை செலுத்தியுள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள விரும்புகின்றேன்.

பெரும்பாலான பகுதிகளில் இத்தகைய முயற்சிகள் தொடர்பாக எத்தகைய கவனமும் செலுத்தாது தங்களது வருமானங்களை அதிகரிப்பது தொடர்பாகவே கவனம் செலுத்துவதை அவதானிக்க முடிகின்றது.

அண்மையில் நான் மக்கள் சந்திப்பொன்றை ஏற்படுத்தி அவர்களுடன் உரையாடியபோது அவர்கள் கூறிய ஒரு விடயம் என்னை மிகவும் வருத்தத்திற்கு உட்படுத்தியிருந்தது. வன்னி மக்களது மீள்குடியேற்றம் தொடர்பாக அரசாங்கத்திலுள்ள தமிழ் அரசியல்வாதியின் பங்களிப்பு பற்றி கதைத்தபோது ஒரு அரசியல்வாதியின் நடத்தை வெட்கக்கேடானதாக இருந்தது.

குறிப்பிட்ட அரசியல்வாதி மக்களின் நலன்பற்றி சிந்திக்காமல் வன்னியிலுள்ள இரு பிரதேசங்களில் தனக்குக் கிடைத்த மதுபானசாலை நிறுவுவதற்கான கோட்டாவினை அதிக விலைக்கு விற்று பணம் பெறுவதிலேயே குறிக்கோளாக உள்ளார். தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இதுதான் மக்களுக்கு செய்யும் பரிகாரமா? யுத்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களிற்கு மதுவை வழங்குவதுதான் உங்களின் சேவையா? இதுவரை அந்த மக்களை மீள் குடியேற்றுவது தொடர்பாக எதுவுமே செய்யாத இவர்போன்ற அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் கரிசனையுடையவர்களாகா இருப்பார்களா? என்பது கேள்விக்குறியே.

வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி என்பது அப்பகுதிகளில் மேற்கொள்ளவுள்ள முதலீட்டுத் திட்டங்கள் அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் அப்பிரதேச மக்களின் வருமானம் பெறும் வாய்ப்புக்கள் என்பவற்றிலேயே தங்கியுள்ளன. இன்றுள்ள நிலையில் இது சாத்தியமானதா? கப்பம் பெறும் குழுவினரும் ஆட்கடத்தும் குழுவினரும் வடகிழக்குப் பகுதிகளில் மலிந்துள்ள நிலையில் எந்த ஒரு முதலீட்டாளனும் வடகிழக்கில் முதலிட முன்வரமாட்டார்கள். அவ்வாறு முதலிட முன்வந்தாலும் அவர்களுக்கான பாதுகாப்பை தொடர்ந்து வழங்கமுடியுமா என்பதும் சந்தேகமே.

நீதித்துறையே பயந்துபோயுள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியுமா? வடகிழக்குப் பகுதியின் மேம்பாடடில் அப்பகுதி மக்களிற்கு கிடைக்கின்ற வேலை வாய்ப்புக்களின் அளவும் குறிப்பிடத்தக்களவிற்கு பங்களிப்பு செலுத்த வேண்டும். ஆனால் நடைமுறையில் நாம் காணும் உண்மை யாதெனில் அரசாங்க ஆதரவுபெற்ற தமிழ் அரசியல் வாதிகள் தங்கள் உறவினர்களுக்கும் தமது கட்சிக்காக உழைத்தவர்களுக்கும் வேலை பெற்றுக் கொடுப்பதிலேயே முனைப்பாக இருக்கின்றனர். இந்த நிலைமை மாறவேண்டும். ஒவ்வொருவரினதும் திறன் அறிந்து அவர்களுக்கான வேலைவாய்ப்புக்களை வழங்குவதில் அரச ஆதரவுபெற்ற அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும்.

அதுமாத்திரமன்றி மற்றுமொரு குறிப்பிடத்தக்க விடயம் வடக்குகிழக்கு மக்களின் வருமானம் பெறும் வாய்ப்புக்கள் மிகமோசமாகப் பாதிப்படைந்துள்ளமையாகும். வடகிழக்கு மக்கள் வந்தாரை வாழவைத்தவர்கள். இன்று தங்களில் வாழ்க்கைக்கே கையேந்த வேண்டியவர்களாகிவிட்டனர்.

யுத்தத்தினால் பாதிப்படைந்த பிரதேசங்களில் சில வீடுகள் போரின் பின்பு அழிவடையாமல் காணப்பட்டபோதும் இன்று ஏதோ ஒரு வகையில் பகுதிபகுதியாக அழிவடையாமலிருந்த வீடுகளின் பகுதிகள் ஒவ்வொன்றாக கழற்றப்படுவது தெரிந்தும் ஏன் இந்த அரசியல்வாதிகள் மௌனிகளாக இருக்கின்றனர். வன்னி மாவட்டத்திலுள்ள பல மக்களை சந்தித்தபோது அவர்களின் ஆதங்கள் அளவிட முடியவில்லை.

போரினை தொடர்ந்து தாங்கள் தங்களின் வீடுகளைப் பார்வையிடச் சென்றபோது எந்தவித பாதிப்புமற்றுக் காணப்பட்ட வீடுகளின் கதவுகள் ஜன்னல்கள் மற்றும் ஓடுகள் என்பன படிப்படியாக கழற்றப்படுவதாகவும் அதுபற்றி எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியும் பாராளுமன்றத்தில் கதைக்கவில்லை எனவும் கவலைப்பட்டனர். துங்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் மௌனமாக இருப்பது தங்களிற்கு கவலை தருவதாக குறிப்பிட்டனர். தமிழ் பேசும் அரசியல்வாதிகளாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு இத்தகைய விடயங்களை வெளிக்கொணர்வது எமது கடமையல்லவா? குறிப்பாக அரசினைச் சார்ந்துள்ள அரசியல்வாதிகளுக்கு இது விடயத் தொடர்பாக அதிக கடைப்பாடு உள்ளது என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஆகவே இனிவரும் காலங்களிலாவது நாட்டு மக்களின் தேவை அறிந்து அவர்களது வாழ்வினை முன்னேற்றும் வகையிலான சிறந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதுடன் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் யாவும் பாரபட்சமின்றி அனைத்து மக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டமென்பதே அனைவரதும் அவாவாகும். இந்த வரவு செலவுத்திட்டம் இலங்கை இன்ற எதிர்நோக்கும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் தீர்வினைக் காணவேண்டுமென்பதே எனது பிரார்த்தனையாகும்.

Sri ranga
srimediau@gmail.com


Copyright 2005-10 © TamilWin.com

No comments: