WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Thursday, July 15, 2010

இனி போராட்டத்தில் எத்திசையில் பயணிக்கிறோம் எனஅறிய புலம்பெயர்தமிழர்களின் போராட்டமுறை எவ்வாறு உருபெற்றிருக்கிறது என புரிந்துக் கொள்வதே மிகஅவசியம்.!!!

...............மீனகம்.COM.....................
புதிய பலத்துடன் புலம்பெயர் தமிழர்கள் – தமிழ்ச்செல்வன்
July 14th, 2010 வன்னியன்

வன்னியில் கொடுமையான போர்ச் சூழல் சூழ்ச்சியால் முடிவுக்கு வந்து ஒராண்டு நிறைவடைந்து, தமிழர்களுக்காக பேசும் சக்தியாக இதுவரை இருந்து வந்த போராளிகள் செயல்பாடிழந்திருக்கும் இச்சூழல் தமிழர்களின் போராட்டத்தில் ஒருவித வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது போன்ற பிம்பத்தை உருவாக்கியிருக்கும். நாம் இனி நம் போராட்டத்தில் எத்திசையில் பயணிக்கிறோம் என்பதனை அறிய புலம்பெயர்ந்தத் தமிழர்களின் போராட்ட முறை எவ்வாறு உருவம் பெற்றிருக்கிறது என்பதனை புரிந்துக் கொள்வதே மிக அவசியம்.

மே 18ற்கு பின் போராட்டம் எப்படி புதிய உரு பெற்றது?

முப்பது வருடத்திற்கு மேலாக தமிழ் மக்களுக்காக இயங்கி வந்த போராட்ட இயக்கம் ஓர் நாளில் இல்லாது போகும் என்று யாரும் கனவிலும் கற்பனை செய்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால், இப்பெருந்துயரைக் கடந்துதான் தமிழினம் விடுதலை பெறவேண்டும் என்பது இயற்கையின் தீர்ப்பாயின் அதனை நாம் எதிர்க்கொள்ளத்தான் வேண்டும். இனப்போராட்டம் பெருஞ்சரிவைச் சந்தித்துவிட்டது என்ற துயரைவிட இனி தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க, தமிழர்களுக்கு விடியலினை பெற்றுத்தர பொறுப்பாய் நின்றவர்கள் இல்லை என்று நினைக்கும்பொழுது வரும் இதயச்சுமை சொல்லில் அடக்கிவிடமுடியாதது.

அப்படி ஒரு கொடுமையை எமக்கு மே 18 ஆம் நாள் கொணர்ந்து வந்துவிட்டது. இருப்பினும் அடுத்தக் கட்டம் பற்றியும் போராட்டம் வீரியமிழக்காமலும் நகர்த்த பல்வேறு மட்டங்களில் ஆலோசிக்கப்பட்டது. வன்னியில் இருந்து வரும் தகவலைக் கொண்டு வேலைத்திட்டங்களை வகுத்து வந்த புலம்பெயர்த் தமிழர்கள் மீது முழு சுமையும் இயற்கை சுமத்தியபொழுது, அதனை எதிர்க்கொள்ள சிந்தனைத் தெளிவுள்ள புலம்பெயர் சமூகம் தயாராகவே இருந்தது. பலத்தரப்பட்ட நாடுகளில் வகுக்கப்பட்ட வியூகங்களில் நோர்வே தமிழீழ மக்களவைக்கான கட்டமைப்பும் ஒன்று.

நோர்வேயில் தமிழீழ மக்களவை என்னும் அரசியல் அமைப்பை தமிழீழ மக்களின் துணையுடன் நிறுவ நோர்வே தமிழர்கள் களமிறங்கினர்.

ஏன் நோர்வேயில் முதலில் செய்யவேண்டும்?

காரணம் ஒன்று : போர் இறுதிக்கட்டத்தை நெருங்கி வந்துக்கொண்டிருந்த வேளையில், நோர்வேயில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் தேர்தல் நடந்தது. அதில், நோர்வேயில் வசிக்கும் எண்பது சதவிகிதத் தமிழர்கள் கலந்துக்கொண்டு தமிழீழத்திற்கு ஆதரவாக 99% வாக்கினை அளித்தார்கள். அவற்றை இவ்வுலகிற்கு எடுத்துச் செல்ல மக்களின் ஆணையினைப் பெற்ற பிரதிநிதிகள் இருப்பது அடுத்தக் கட்டப் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் என கருதப்பட்டது.

காரணம் இரண்டு: போர் காலங்களில் நோர்வே செயல்படுத்தியிருக்க வேண்டிய கடமையினைத் தவறவிட்டிருந்தது. போர் நிச்சயமாக முடிவுக்கு வரும். பிறகு தனிநாட்டு கோரிக்கையினை தமிழர்கள் மறந்துவிடுவார்கள். அதன் பிறகு தமிழர்களுக்கு தேவையானதை பெற்றுக்கொடுக்கலாம் என்று எவ்வாறு இவ்வுலகம் நினைத்ததோ அவ்வாறே நோர்வேயும் நினைத்தது. தமிழர்கள் தனித்தமிழீழத் தீர்விலேயே உறுதியாக இருப்பார்கள் என்பதைனையும் இவ்வுலகம் எப்போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்ததோ அதனையே அறவழியில் கொண்டு சென்று உலகின் மனசாட்சியைத் தட்டவேன்டியது புலம்பெயர்ந்தத் தமிழர்களின் பொறுப்பென உணரப்பட்டது. அதுவும், சமாதானக் காலத்தில் தூதுவராகப் பணியாற்றிய நோர்வேயில் தமிழர்கள் மனதை பிரதிபலித்திட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

காரணம் மூன்று: பெரும்போர் ஒன்றும் அதனை வழிநடத்திச் சென்றவர்களும் திடீரென அமைதியான சூழலைப் பயன்படுத்தி, சிங்கள இனவெறி அரசும் எம்மை அடக்கி ஆள நினைக்கும் இன்னபிற ஆதிக்க சக்திகளும், தமிழர்களை குறைவாக நினைத்து, எம் மனதிடத்தைச் சிதைத்து, போராட்ட குணத்தை வீரியமிழக்கச் செய்ய வாய்ப்பு உண்டு. அதுபோல, பல்லாண்டாய் போராட்டத்தில் பங்கு கொண்டு முழு ஆதரவினை வழங்கிய சராசரி புலம்பெயர்ந்த தமிழ் சமூகம், தோல்விக்கு பிறகான சோர்வினை பெற்றுவிடும். அச்சோர்வை உடைக்க ஒரே வழி அடுத்தக்கட்டத்திற்கு போராட்டத்தை நகர்த்தியாக வேண்டும் என்பது சராசரி கணக்கு.

அதுமட்டுமல்லாது, ஒவ்வொரு தமிழனையும் போராட்டத்தின் பாதையில் எந்தவொரு குழப்பும் அடையாமல் பாதுகாத்து, பலதரப்பட்ட முரண்பாடுகளையும் களைந்து, அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி ஒவ்வொரு நாட்டிலும் அமைக்கப்படும் அரசியல் அமைப்புகளுக்கு இருக்கும்பட்சத்தில், உலக அளவில் விரிந்துவிட்ட தமிழினப் போராட்டத்திற்கு இவ்வமைப்புகள் தூணாய் விளங்கும். இவைகளை அடிப்படையாகக் கொண்டே முதலில் நோர்வே தமிழீழ மக்களவை என்னும் கட்டமைப்பு கருவானது.

நாடுகடந்த தமிழீழ அரசிற்கும் மக்களவைகளுக்கும் வித்தியாசம் என்ன?

நோர்வேயில் மக்களவைக்கான கட்டமைப்பு பணிகள் தொடங்கிய குறுகிய காலக்கட்டத்திலேயே நாடுகடந்த அரசாங்கத்திற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு புலம்பெயர்ந்தத் தமிழர்களின் பேராதரவினைப் பெற்றது. இச்சூழலைப் பயன்படுத்தி தமிழர்கள் ஒன்றுசேரக்கூடாது என்று நினைத்த இன விரோதக்கூட்டம், இவ்விரு கட்டமைப்புகளுக்கும் முரண்பாடு இருப்பது போன்ற புறத்தோற்றத்தை உருவாக்கி அதன்மூலம் போராட்டத்தை கூர்மையிழக்கச் செய்யும் முயற்சியும் நடந்தது கசப்பான வரலாறு.

பல குழப்பமான சூழலில் இருந்து வந்த தமிழர்களும் எப்பாதையில் தங்களை இணைத்துக்கொள்வது என்றும் விழிப்பிதிங்கி நின்றனர். சிற்சிலர் தங்களுக்கேற்ற பாதையினைத் தேர்ந்தெடுத்து தங்கள ஆதரவினை வழங்கினர். இரண்டுமே தங்கள் போராட்டத்தின் வெவ்வேறு செயல்வடிவங்கள் என்றுணர்ந்தத் சிற்சில தமிழர்கள் இரண்டின் பக்கமும் நின்று போராடினர். காலங்கள் கடந்துவிட்ட நிலையில், நாம் முரண்படாது ஒவ்வொருவரும் தோள் கொடுத்து போராட்டத்தைச் சுமக்காதுவிட்டால், எதிரி நம்மை பிரித்தாளும் சூழ்ச்சியில் வெற்றிபெற்று இலக்கினை அடைந்துவிடுவான் எனபதை பலரும் உணர்ந்துவிட்ட (அல்லது உணர வாய்ப்பிருக்கும்) சூழலில், இன்று அனைத்து கட்டமைப்புகளும் புலம்பெயர் சூழலில் மக்கள் பலத்துடன் உலக அரங்கில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு நாடுகளிலும் அமைக்கப்பட்ட மக்களவைக் கட்டமைப்புகள் ஆகட்டும் நாடுகடந்த அரசாங்கம் ஆகட்டும் ஒன்றுக்கொன்று இயைவாகவும் பாதுக்காப்பு தரக்கூடியதாகவும் பயணிக்கும்பொழுது எந்தவொரு நெருக்கடியும் கொடுக்காத போராட்டக்களங்கள் செயலில் இருக்கும். இவ்வுண்மையை உணராது இருப்பவன் நிச்சயமாக மனசாட்சியினை விற்றவனாகத்தான் இருப்பான்.

எத்தனை நாடுகளில் மக்களவைகள் உருவாக்கம் பெற்றுள்ளது?

நோர்வேயில் தொடங்கி, இன்று பிரான்ஸ், சுவிசர்லாந்து, இத்தாலி, டென்மார்க், கனடா என விரிவடைந்து செழிப்புடன் இருக்கிறது. ஒவ்வொரு நாடுகளிலும் நிறுவப்பெற்ற தமிழீழ மக்களவைகளும் அவை இயங்கும் நாடுகளுக்கேற்ப யாப்பினை (Constitutional Draft) வரைந்துள்ளனர். என்றாலும், அனைத்து மக்களவைகளுக்கும் பொதுவான ஒன்று, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் உருவாக்கம் பெற்ற தனித்தமிழீழ நாட்டை அடைய போராடுவதுதான்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு இயங்கி வருகிறது?

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல் கடந்த மே மாதன் 2ஆம் நாள் நடந்து முடிந்துள்ளது. இந்தியா உள்ளிட சில நாடுகளில் தேர்தல் நடத்தமுடியாத சூழலில் அங்கிருந்து பிரதிநிதிகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்க அவைக் கூட்டத்தில் பங்குபெறும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பார்கள். ஏனைய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை உள்ளடக்கிய முதலாவது அமர்வு அமெரிக்காவின் பிலடெல்பியா, லண்டன் மற்றும் செனீவா நகரங்களில் ஒரே நேரத்தில் நடந்தது. மூன்று அவைகளும் தொழிற்நுட்ப வசதியுடன் ஒளித்திரையில் இணைக்கப்பட்டிருந்தது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளை யாப்பு வரைவு குழு, அரசியல் விவகாரக்குழு, போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை விசாரனைக் குழு, இயற்கை வள மேம்பாட்டுக்குழு, கல்வி, பண்பாடு, மருத்துவம் மற்றும் விளையாட்டுக் குழு, பொருளாதார மேம்பாட்டுக்குழு, அனைத்துலக விவகாரக்குழு என்பன உள்ளிட்ட பதினொருக் குழுக்களில் பிரித்துள்ளனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு தற்காலிக செயற்குழு உறுப்பினர்களையும் நிகழ்கால ஒருங்கிணைப்பாளராக திரு. உருத்திரக்குமாரையும் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதுதான் தற்போதைய புலம்பெயர் தமிழர்களின் அறவழிக் கட்டமைப்புகள். நேர்மையாகப் பார்த்தாலும் சரி, நேர்மறையாகப் பார்த்தாலும் சரி உலக அரசியலில் புலம்பெயர்ந்தத் தமிழர்கள் முன்னிலும் பலமாக இருக்கிறோம்.

அனைத்துத் தமிழர்களும் ஓர் சிந்தனை ஓர் தெளிவு பெற்று போராட்டக் களத்திற்கு வரும்வேளையில் நாம் நம் இலக்கினை நிச்சயம் அடைந்துவிடுவோம். மேலதிகத் தகவல்களோ அல்லது ஆலோசனைகளோ வழங்க விரும்பினால், arasiyal@ncet.no என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

நம்பிக்கையுடன்,

தமிழ்ச்செல்வன்

No comments: