From: Bas Baskaran
Date: 2011/3/29
Subject: எங்கும் நீதி கிடைக்காது... இனி என்ன செய்வது?
To: chelvadurai@gmail.com
சோகம் தாங்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் கதறியழ சக்திதரனின் பூதவுடல் குப்பிளான் காடாகடம்பை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது... 28.03.2011
தங்களது மைந்தன் சக்திதரனை இழந்த சோகம் தாங்காது குப்பிளான் கிராமமே இருள் சூழ்ந்து கடும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது.
கவிஞராக, மிகச் சிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக, தீவிர சமயப் பற்றுக் கொண்ட பல்வேறு பரிமாணங்களைப் பெற்ற மிகச் சிறந்த ஆளுமையாகக் காணப்பட்ட சக்திதரனின் மரணத்தை ஜீரணிக்க முடியாத நிலை குப்பிளான் எங்கும் காணப்பட்டது.
கிராமம் எங்கும் தோரணங்கள், கறுப்புக் கொடிகள், மதில்கள் தோறும் கண்ணீர் அஞ்சலிச் சுவரொட்டிகளுடன் எங்கும் ஒரு வித மயான அமைதி..
குப்பிளான் கிராமமே திரண்டு வந்து எம் தவப் புதல்வனுக்கு தமது இறுதிஅஞ்சலியைச் செலுத்தியது. குடும்பத்தினரைக் கண்கொண்டு பார்க்கவே முடியவில்லை.
அவர் ஆசிரியராகப் பணியாற்றிய சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் , மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.
சக்திதரனின் வீட்டில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று பின்னர் கண்ணீர் அஞ்சலிக்கூட்டம் இடம்பெற்றது.
அதில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் அதிபர் பேசுகையில்,
மிகச் சிறந்த ஆசானை தமது பாடசாலை இழந்து விட்டதாகக் கூறினார். அவர் கல்வி கற்பித்த மாணவர்கள் தங்கள் பாடசாலையில் என்றுமில்லாதவாறு சிறந்த பெறுபேற்றைப் பெற்றதாகக் கூறினார். பாடசாலையில் இடம்பெறும் சமய நிகழ்வுகளிளிலும் சரி ஏனைய விழாக்கள் குறிப்பாக பட்டிமன்றம் போன்றவற்றிலும் சிறப்பாக மாணவர்களை வழிநடாத்தும் பண்பைக் கொண்டவர் என்றும் எப்போதும் குறித்த நேரத்துக்கு பாடசாலைக்கு வந்துவிடும் அவரது நேரம் தவறாமை தன்னை வெகுவாக ஈர்த்ததாகவும் குறிப்பிட்டார். (குப்பிளானுக்கும் சாவகச்சேரிக்கும் இடையிலான தூரம் யாவரும் அறிந்ததே).
அதிபருடைய இரங்கலுரையை அடுத்து பலரும் இரங்கல் உரையாற்ற முன் வந்தனர். அடுத்து வந்த ஆசிரியர் ஒருவர் உரையாற்ற வந்தார் ஆனால் அவரால் பேச முடியவில்லை. கண்ணீரையே உரையாகத் தந்து விட்டுப் போய்விட்டார். இதே நிலை அவரைத் தொடர்ந்து பேச வந்த நிறையப் பேருக்குக் காணப்பட்டது.
பின்னர் அவர் கற்பித்த தரம் 7 C மாணவர்களின் இரங்கலுரையும் இறங்கற்பாடலும் இடம்பெற்றன.
குப்பிளான் கிராமமே கண்டிராத அளவுக்கு ஏராளமான மக்களால் வீடு நிரம்பி வழிந்தது. அங்கு வந்த எல்லோருமே துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு கதறி அழுத வண்ணமிருந்த்தனர்.
பின்னர் மதியம் 1.40 மணியளவில் எம்மைந்தனின் பூதவுடல் குப்பிளான் இளைஞர்களால் காடகடம்பை மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது வீட்டிலிருந்து பூதவுடல் கொண்டு சென்ற வழி நெடுகிலும் தெருவெங்கும் வெள்ளைத்துணி விரிக்கப்பட்டு அதன் மேலேயே கொண்டு செல்லப்பட்டது.
போகும் வழியெங்கும் இளைஞர்கள் கண்ணீர் விட்டுக் கதறியழுதது பார்ப்போரின் நெஞ்சை உருகச் செய்தது. மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இளைஞர்களின் ஓலத்துக்கு நடுவே எம் மைந்தனின் பூதவுடல் கனத்த மனதுடன் புதைக்கப்பட்டது.
எப்போதும் சிரித்த அந்த அப்பாவித்தனமான முகத்தையும் யதார்த்தமான சொல்லாடல்களையும் நாம் இனி எங்கு காண்போம்?
சில கேள்விகளும் விடை தெரியாத வினாக்களும்?
* இன்று ஊடகங்களில் வந்த செய்தியை யாவரும் அறிந்திருப்பீர்கள்... தோற்கடிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் துப்பாக்கிகளால் சூழப்பட்டு இருக்கும் ஒரு பிரதேசத்தின் தனி மனிதனின் பாதுக்காப்பும் எதிர்க் கேள்வி கேட்க முடியாத ஒரு சர்வாதிகாரப் போக்கும் கொண்ட இராணுவ ஆட்சியில் உயிர் வாழ்தலென்பது கஷ்டமான காரியம் தான்... வேறு எதுவும் பேசாமல் உணவு உட்கொள்ள மட்டும் வாயைத் திறந்தால் அதிககாலத்துக்கு உயிர் வாழலாம்.
* இன்று ஊர் மக்களோ அல்லது குடும்பத்தினரோ சக்திதரனுக்கு என்ன நடந்தது என்பது குறித்து பேசுவதற்கு கூட ஒரு வித பய உணர்வு காணப்படுகின்றது... உண்மைதான் நடந்து கொண்டிருக்கும் மிகச் சிறந்த ஜனநாயக ஆட்சியில் நாளைக்கு அவர்களின் பாதுகாப்பை யார் உறுதிப்படுத்துவது...?
* சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரு வாரங்களின் பின்னர் யாழ் மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி சக பொலிஸார்கள் சகிதம் இன்றைய தினம் சக்திதரனின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளார். இன்று ஊடகங்களில் செய்தி வெளியாகும் மட்டும் குறிப்பாக இவ்வளவு நாளும் இந்தப் பொலிஸார் உரிய விசாரணை நடத்தாமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்பட்டது நிதர்சனமாகியுள்ளது.
* இன்றைய தினம் அச்செழு இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் சக்திதரனின் வீட்டுக்குச் சென்று மலர் வளையம் வைத்து அனுதாபம் தெரிவித்தார்களாம்... (ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதை ஞாபகத்துக்கு வருகிறது)
* இவரின் விடை தெரியாத அந்த மரணத்தை நீதிமன்றில் கூட முறையிட முடியாத நிலை காணப்படுகின்றது. இதைத் தான் பாரதி அழகாகச் சொன்னான்... பேய் அரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் என்று...
* வேறு எங்கும் நீதி கிடைக்காது... இனி என்ன செய்வது? கடவுள் என்ற ஒருவர் இருந்தால் அவரிடம் பிரார்த்தியுங்கள்.. எங்கள் அன்பு மைந்தனின் ஆத்மா சாந்தியடைய....
No comments:
Post a Comment