WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Tuesday, April 19, 2011

நிபுணர்குழுவின் அறிக்கை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு இழுத்துச் செல்லும்! அடித்துக் கூறுகிறார் கோர்டன் வீஸ்..!!!


நிபுணர்குழுவின் அறிக்கை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு இழுத்துச் செல்லும்! அடித்துக் கூறுகிறார் கோர்டன் வீஸ்

செவ்வாய், 19 ஏப்ரல் 2011 15:24

இலங்கையில் பாரிய குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன என்பதில் எந்த சந்தேகத்தையும் விட்டுவைக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் தான் நிபுணர் குழு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக நான் நினைக்கின்றேன் என்று ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வீஸ் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய வானொலிக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டியில் ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் பாரிய குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதை ஐ.நா.நிபுணர் குழு அறிக்கைத் தெளிவுபடுத்துகிறது. யுத்தத்தின் கடைசிக் காலப்பகுதியில் இலங்கையில் 10ஆயிரத்துக்கும் 40 ஆயிரத்துக்கும் இடைப்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கடந்த ஜனவரி முதல் நான் கூறி வருகின்றேன்.
இப்போது இதே காலப்பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தாங்கள் நம்புவதாக நிபுணர்கள் குழு அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதூரமான குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதை இந்த அறிக்கைத் தெளிவுபடுத்துகின்றது. எனவே அது குறித்து சர்வதேச நீதி விசாரணை நடத்தப்படவேண்டும்.
மோதல்களின் போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா என்பன தாக்கப்பட்டுள்ளமை குறித்து நிபுணர்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் கூறப்பட்டவை உண்மையானவையே என்கிறார் ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வீஸ். அரச படைகள் ஏதோ காரணத்துக்காக ஐ.நா.நிலைகள் மீது ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளன.

அத்தோடு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு நெருக்கமான நிலைகள் மீதும் ஆபத்தான முறையில் ஷெல் வீச்சு மேற்கொண்டுள்ளது. முற்றுகை வலயத்துக்குள் காணப்பட்ட பொது மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட, வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிலைகள் மீதும் அரசாங்கம் திட்டமிட்ட முறையில் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முற்றுகை வலயத்துக்குள் சிக்கியிருந்த 3 இலட்சம் மக்களின் மனிதாபிமானத் தேவைகளை அரசாங்கம் திட்டமிட்ட முறையில் மறுத்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று வீஸ் தெரிவித்தார்.
நிபுணர்குழு இலங்கை சென்றிருந்தால், இலங்கை அரசு இப்போது என்ன சொல்கின்றதோ அதைத்தான் கேட்டிருக்க முடியும். புலிகள் மீதான அரசின் வெற்றி இரத்தக்களரியற்றது.
சிவிலியன் மரணங்கள் எதற்கும் அரச படைகள் பொறுப்பல்ல. 2009ஆம் ஆண்டின் முற்பகுதியில் வேண்டத்தகாத எதுவுமே நடக்கவில்லை என்ற கருத்துக்களைத்தான் நிபுணர்குழு கேட்டிருக்க வேண்டும்.

இந்த நிபுணர்குழு அறிக்கையில் விடுதலைப்புலிகளையும் சாடியிருக்கின்றது. இந்த விடயத்தில் நான் மிகவும் தெளிவாக இருக்கின்றேன். அறிக்கையும் அதுபோலவே உள்ளது. விடுதலைப்புலிகள் வேண்டுமென்றே ஆயிரக்கணக்கான மக்களை பணயக் கைதிகளாக வைத்திருந்தார்கள்.
முற்றுகை தீவிரமடைந்ததும், அவர்கள் மக்களை வெளியேற விடவில்லை. மக்கள் தப்பிச் செல்ல முனைந்தபோது அவர்களைச் சுட்டனர். மக்ளைப் பாரிய அளவில் படை நடவடிக்கைகளில் இணைத்துக் கொண்ட குற்றச்சாட்டும் அவர்கள் மீது உள்ளது.
என்னுடைய புத்தகத்தில் கூட ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின் மரணங்களுக்கு விடுதலைப்புலிகள் காரணமாக இருந்துள்ளனர் என்றும், அவர்கள் பலவந்தமாக சேர்க்கப்பட்டவர்கள் என்றும் நான் நம்புவதாக விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.

இலங்கை அரசின் பதில் அளிக்கப் போகும் விதம் கடுமையான தொனியில் அமையக் கூடும் என நினைக்கிறேன். இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்தல், மறைத்தல், எதுவுமே நடக்கவில்லை எமது வெற்றி இரத்தக் கறை படியாதது என்ற அடிப்படைகளில் தான் இலங்கை அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் அமையும்.
இலங்கையில் பாரிய குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன என்பதில் எந்த சந்தேகத்தையும் விட்டுவைக்கக் கூடாது. என்பதை உறுதி செய்யும் வகையில் தான் நிபுணர் குழு இந்த அறிக்கையை எழுதி வெளியிட்டுள்ளதாக நான் நினைக்கின்றேன்.
இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் விடுவது ஐ.நா வுக்கும், அதன் உறுப்பு நாடுகளுக்கும் ஒரு கஷ்டமான விடயமாக அமையப் போகின்றது. குறிப்பாக இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளைப்பற்றி நான் யோசிக்கின்றேன்.

சிவில் யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் என்ன நடந்தது என்பது பற்றிய பாரதூரமான நம்பத்தகுந்த சர்வதேச விசாரணை ஒன்றை தடுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது. இறுதியில் ஒரு யுத்தக்குற்ற விசாரணை நடக்கும் என்றே நான் நம்புகின்றேன்.
அடுத்தகட்டமாக முழு அளவிலான அறிக்கையொன்று வெளி வர வேண்டும். இதற்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்காது என்றே நான் கருதுகின்றேன். அவர்கள் ஒத்துழைப்பது போன்று பாசாங்கு செய்வார்கள். ஆணைக்குழுக்கள் விசாரணைகள் என இழுத்தடிக்கும் வரலாறு இலங்கையில் ஏற்கனவே உண்டு.
இலங்கையில் இவ்வாறான விசாரணைகள் மற்றும் ஆணைக்குழுக்களால் எதுவும் நடந்ததில்லை. எனவே சர்வதேச விசாரணையொன்று நடத்தப்படவேண்டியது அவசியமாகும்.
இந்த சர்வதேச விசாரணைகள் யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு இட்டுச் செல்லும் என்றே நான் நம்புகின்றேன் என்று அவுஸ்திரேலிய வானொலிக்கு அளித்துள்ள பேட்டியில் ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வீஸ் தெரிவித்துள்ளார்.

No comments: