Friday, July 29, 2011
மீள்குடியேற்றம் முடியாத நிலையில் ஆசனங்களை குறைக்கும் நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டிருக்கக் கூடாது.!!!
28 ஜுலை, 2011 - பிரசுர நேரம் 16:01 ஜிஎம்டி
யாழ். தேர்தல் பிரதிநிதிகள் குறைகின்றனர்
'யாழ். தேர்தல் மாவட்டத்திற்கு தற்போது 9 ஆசனங்கள்'
இலங்கையின் வடக்கே யாழ். தேர்தல் மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையை ஒன்பதில் இருந்து ஆறாக குறைக்க தேர்தல் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இடம்பெயர்வு காரணமாக மக்கள் தொகை கணிசமாக குறைந்ததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேர்தல் திணைக்களம் கூறுகிறது.
கடந்த 2009 ஆம் ஆண்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை படி 8 லட்சத்து 16 ஆயிரம் வாக்காளர்கள் இருந்ததாகவும், 2010 ஆம் ஆண்டில் இந்த தொகை 4 லட்சத்து 84 ஆயிரமாக குறைந்ததாகவும் யாழ் மாவட்டத்துக்குப் பொறுப்பான, தேர்தல் திணைக்களத்தின் துணை ஆணையாளர் கருணாநிதி தமிழோசையிடம் தெரிவித்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தலைநகர் கொழும்பிலும் ஓர் ஆசனம் குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டும் அவர், இது வழமையான நடைமுறையென்றும், அடுத்த தேர்தலுக்குள் வெளிநாடுகளில் இருக்கும் பலர் நாடு திரும்பினால் ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம்
சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி.
ஆனால் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், மீள்குடியேற்றம் முடியாத நிலையில் ஆசனங்களை குறைக்கும் நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டிருக்கக் கூடாது என்றார்.
மக்கள் தொகைக்கேற்ப நாடாளுமன்ற இடங்களை பிரிக்கும் நடைமுறையின் படியே இது செய்யப்பட்டிருந்தாலும், போருக்குப் பின்னர், யாழ்ப்பாணத்தில் நிலவும் சூழல் கருத்தில் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்திற்கான 9 ஆசனங்களில் 5 இடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
BBC News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment