Thursday, September 29, 2011
தமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தி நின்ற பல கட்டடங்கள் புனரமைப்பு என்கிற பெயரில் இடிக்கப்பட்டு பின்னர் சிங்கள பண்பாட்டுடைய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சேதமடைந்த தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களைத் திருத்திக் கொடுப்பதற்குப் பதிலாக இடித்துவிட்டு, தமிழர் வாழ் பிரதேசங்களில் புத்தர் சிலைகள், விகாரைகள் என்பன புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. சிங்களமக்களை தமிழர்பிரதேசங்களில் குடியமர்த்தும் வேலைகளும் அதிவேகத்தில் நடைபெற்று வருகின்றன.! இதுபோன்ற பல சிங்களமயமாக்கல்திட்டங்கள் தமிழர்பிரதேசங்களில் அதிவேகமாக நடைபெறுகின்றன.!!!
தமிழீழப் பிரதேசத்தில் அதிகரிக்கும் சிங்களமயமாக்கல்
அனலை நிதிஸ் ச. குமாரன்
தமிழீழத் தேசத்தின் பாரம்பரிய பிரதேசங்களில் பாரிய அளவிலான சிங்களமயமாக்கல் அதிகரிக்கின்றன. தமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தி நின்ற பல கட்டடங்கள் புனரமைப்பு என்கிற பெயரில் இடிக்கப்பட்டு பின்னர் சிங்கள பண்பாட்டுடைய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சேதமடைந்த தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களைத் திருத்திக் கொடுப்பதற்குப் பதிலாக இடித்துவிட்டு, தமிழர் வாழ் பிரதேசங்களில் புத்தர் சிலைகள், விகாரைகள் என்பன புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. சிங்கள மக்களை தமிழர் பிரதேசங்களில் குடியமர்த்தும் வேலைகளும் அதிவேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற பல சிங்களமயமாக்கல் திட்டங்கள் தமிழர் பிரதேசங்களில் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.
தமிழர்களின் வீடுகள் அழிக்கப்பட்டு தற்போது குறித்த பிரதேசங்களிலுள்ள மக்கள் சிறுகுடிசைகளை அமைத்து வாழ்கின்றனர். வடபகுதிக்கு செல்லும் நுழைவாயிலாகவுள்ள ஓமந்தை சோதனைச் சாவடியானது ‘ஓமந்த’ என்ற சிங்கள உச்சரிப்பிலேயே உச்சரிக்கப்படுகின்றது. குறித்த நுழைவாயிலுள்ள சோதனைச் சாவடியின் ஊடாகப் பயணிப்பவர்களில் 90 வீதமானவர்கள் தமிழர்களாவர். ஆனால் இங்கு கடமையில் நிற்கும் சிங்களப் படையினர் ஒவ்வொருவரிடமும் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிங்களத்திலேயே பதில் சொல்ல வேண்டும் என்கிற பரிதாப நிலையையே தமிழர்கள் நாள்தோறும் எதிர்கொண்டு வருகிறார்கள்.
தமிழீழ விடுதலைப்புலிகளை வெற்றிகொண்டு விட்டதாகவும், வடக்குக்குத் தேவை அபிவிருத்தியே என்கிற பிரச்சாரத்தை முடக்கி விட்டார் மகிந்த ராஜபக்ச. இவருடைய அபிவிருத்திப்பணிக்கு கொடுக்கப்பட்ட பெயர்தான் ‘வடக்கின் வசந்தம்’. அடிக்கட்டுமானப் பணிகள், மின்சாரம், நீர் வழங்கல், விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை அபிவிருத்தி, நன்னீர் மீன்பிடி, சுகாதாரம், விளையாட்டு, கலாச்சார விடயங்கள், போக்குவரத்து போன்ற பல்வேறு விடயங்கள் ‘வடக்கின் வசந்தம்’ அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சில இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.
இத்திட்டத்தின் உண்மையான பயனாளிகளாகவுள்ள தமிழர்களை குறித்த ‘வடக்கின் வசந்தம்’ திட்டம் அதிகம் சென்றடையவில்லை. மாறாக வேலையற்ற சிங்கள இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு கட்டுமானப் பணிகளை மேற்கொள்கின்றனர். தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் ‘வடக்கின் வசந்தம்’ திட்டத்திற்கான ஒப்பந்தக்காரர்களாக சிங்களவர்களே உள்ளனர்.
வடக்கின் வசந்தத்தின் பயனாளிகள்
தமிழர்களையும் மற்றும் உலக நாடுகளையும் ஏமாற்றச் சூட்டப்பட்ட பெயர்தான் ‘வடக்கின் வசந்தம்’. வெளிநாடுகளின் பணத்தை பெறுவதற்கும் மற்றும் தமிழர்களை ஏமாற்றி காலத்தை கழிப்பதற்குமே குறித்த திட்டம் தொடங்கப்பட்டது. குறித்த திட்டத்தினால் பயனடைபவர்கள் அதிகமானோர் சிங்கள மக்களே. போரின்போது புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்களுக்கும் மற்றும் நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதியில் அகதிகளாக்கப்பட்ட மூன்று லட்;சத்திற்கும் அதிகமான தமிழர்களை மனிதக்கேடயங்களாகவே இன்னும் சிங்கள அடக்குமுறை அரசு வைத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய அகதிமுகாம் என்று பெயரெடுத்த மனிக்பார்ம் முகாமை மூடிவிட்டு அடுத்த இரு வாரங்களுக்குள் அங்கிருக்கும் 7இ400 மக்களையும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கோம்பாவில் பகுதியில் இதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ள 600-ஏக்கர் காணியில் குடியேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.
தமது சொந்த இடங்களுக்கு சென்று வாழ அனுமதி மறுக்கும் சிங்கள அரசு மீண்டும் தற்காலிக இடத்திலேயே தங்கவைக்கவுள்ளது. தமிழ் அசியல்வாதிகள் இதனை எதிர்த்து காரணம் கேட்டதற்கு குறித்த பிரதேசங்களுக்கு மக்களை அனுமதிக்க முடியாதென்றும் குறித்த இடங்களை வணிக, இராணுவ நோக்கத்திற்காக அரசு பாவிக்கப்போவதாகக் கூறியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி மோதல்கள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் கண்ணிவெடிகள் மற்றும் வெடிப்பொருட்கள் அகற்றப்படாமல் இருப்பதனாலும் குறித்த இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த முடியாதெனத் தெரிவிக்கிறது சிங்கள அரசு.
சிறிலங்காவின் ஒட்டுமொத்த பரப்பளவான 65,619 சதுரகிலோமீற்றரில் 18,880 சதுரகிலோமீற்றர் தமிழ் மக்கள் வாழ்கின்ற வடக்குக் கிழக்குப் பிரதேசமாகும். இரு வருடங்களுக்கு முன்னர் நிறைவடைந்த நான்காம் கட்ட ஈழப்போரின் பின்னர் தமிழர் வாழ் பிரதேசங்களில் 7இ000 சதுரகிலோமீற்றரை பாதுகாப்புப் படையினர் தமது ஆளுகைக்குட்படுத்தியுள்ளனர். தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு அடிக்குஅடி தடுப்புக் காவல் நிலையங்களும், இராணுவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இருந்த முகாம்களின் தொகையிலும் விட இப்போது அதிகம் தமிழர் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
‘வடக்கின் வசந்தத்தின்’ திட்டத்தின்படி கலாச்சார நிலையங்களை மீள்கட்டிக் கொடுப்பதற்குப் பதில் அவற்றை தரைமட்டமாக்கி பின்னர் சிங்கள கலாச்சார நிறுவனங்களை கட்டுகிறது சிங்கள அரசு. தமிழர் பிரதேசங்களிலிருந்த 2இ500 சைவ ஆலயங்களும், 400 கிறிஸ்தவ தேவாலயங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அழிக்கப்பட்ட வணக்க தலங்களை மீளப்புனரமைப்பதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கவில்லை. அத்துடன் இத்தலங்களில் அதிகமானவை முற்று முழுதாக சேதமாக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் தாயகப் பூமியில், கடந்த இரு வருடங்களுக்குள் 2இ500 புத்தர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்ககூடாது என்கிற பழமொழிக்கேற்ப சிங்கள அரசும் புத்த விகாரைகளையும், சிலைகளையும் அமைத்த பின்னர் ஒட்டுமொத்த தமிழர் பிரதேசங்களிலும் சிங்கள மக்களை குடியமர்த்தத் திட்டம் போட்டுள்ளது போலும். இதற்கு இடப்பட்ட பெயர்தான் ‘வடக்கின் வசந்தம்’. இதன் பயனாளிகள் சிங்களவர்களும், சிங்கள அரசுமே.
துரிதகெதியில் இடம்பெறும் சிங்களமயமாக்கல்
தமிழர்களை அவர்களின் கிராமங்களிலிருந்து துரத்தியடித்துவிட்டு சிங்களவர்களை குடியமர்த்தும் வேலைகளை துரிதகெதியில் செய்கிறது சிங்கள அரசு. ஏற்கனவே, புதிதாகக் குடியேறிய சிங்கள மக்களுக்கான வீடுகளை அமைக்கும் பணி செட்டிகுளத்தில் இடம்பெற்றது. 75 சிங்களக் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த வீடுகள் அமைக்கப்பட்டன. இவற்றைவிட, கொச்சான்குளம் என்ற இடத்தில் 165 சிங்களக் குடும்பங்கள் புதிதாகக் குடியேற்றப்பட்டனர். மேலும், தற்போது கொச்சான்குளம் என்பது ‘காலபொவசெவெள’ என சிங்கள மொழிப்பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்கிளாய்ப் பகுதியில் இலவசமாக காணிகள் வழங்கப்பட்டு 82 சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. கொக்கிளாய் மேற்கு, கொக்கிளாய் கிழக்கு, புளியமுனை, கருநாட்டுக்கேணி, முகத்துவாரம், தென்னமரவாடி, முந்திரிகைக்குளம், அக்கரைவெளி, கலியாணபுரம், மாரியாமுனை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் 1983-ஆம் ஆண்டு அரசின் ஆதரவோடு அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன்போது அக்கரைவெளி, முந்திரிகைக்குளம், கலியாணபுரம் போன்ற இடங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. எஞ்சியிருந்த தமிழ்ப் பிரதேசங்களான கொக்கிளாய் மேற்கு, கொக்கிளாய் கிழக்கு, புளியமுனை, தென்னமரவாடி ஆகிய கிராமங்கள் சிங்கள மொழிப் பெயர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு இப்போது சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்படுகின்றன.
கொக்கிளாய்ப் பகுதியில் பொது மற்றும் தனியார் காணிகளை உள்ளடக்கி பௌத்த விகாரை ஒன்று கட்டுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொக்கிளாய் மருத்துவமனைக் காணியின் ஒரு பகுதி கொக்கிளாய் உபதபாலகக் காணியின் ஒரு பகுதி மற்றும் தனியார் ஒருவரது காணி என்பவற்றை இணைத்து இந்த விகாரை அமைக்கப்படவுள்ளது. ஏற்கனவே பிரசித்தமான அரசடிப் பிள்ளையார் ஆலயம் இந்தப் பகுதியிலிருந்து அழிக்கப்பட்டு அவ்விடத்திலேயே விகாரை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கருணாற்றுக்கேணி, கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், தண்ணிமுறிப்பு, குமுழமுனை, தென்னமரவாடி, போன்ற தமிழ்க் கிராமங்களை உள்ளடக்கி வெலிஓயா என்ற பிரதேச செயலர் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்வுள்ளன என தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த பிரதேச பிரிவொன்று சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டால் தமிழர்கள் சில வருடங்களில் சொந்தக் கிராமங்களை விட்டு வெளியேறுவதைத் தவிரவேறு வழியில்லை.
1980-களின் ஆரம்பத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோரக் கிராமங்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டபோது கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் சுமார் 11 சிங்களக் குடும்பங்களே தொழில் நோக்கத்திற்காக தங்கியிருந்தனர். தற்போது குறித்த முகத்துவாரம் பகுதியில் 280 குடும்பங்களைச் சேர்ந்த சிங்கள மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் தங்கியிருக்கும் பகுதியில் அநேகமானவை தமிழர்களுக்குச் சொந்தமானவை என்பதுடன் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைக் காணியும் தமிழர்களுக்குச் சொந்தமானது. குறித்த இப்பெரதேசத்தில் மேலும் சுமார் 140 சிங்களக் குடும்பங்கள் இந்த வாரம் குடியமர்த்தப்பட்டுள்ளனர். கொக்கிளாய் ஏரி, முகத்துவாரம் கடற்பகுதி போன்றன தற்போது சிங்கள மக்களின் அதிக்கத்தின் கீழ் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழர் பிரதேசங்களைச் சட்ட ரீதியாகவே கொள்ளையடிக்கும் சிங்கள அரசு, குடியேறும் சிங்கள மக்கள் அறியும் வகையில் சிங்கள மொழியை தமிழர் பகுதிகளில் ஊக்கிவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே மடு வீதியை அண்மித்துள்ள தமிழ்ச் சிறார்களுக்கான பாடசாலைகள் மிகவும் சேதமடைந்துள்ள இந்நிலையில், இப்பாடசாலைகள் திருத்தப்படாது புதிதாகக் குடியேற்றப்பட்டுள்ள சிங்களச் சிறார்களுக்கான சிங்கள மொழிப் பாடசாலை ஒன்று புதிதாகக் கட்டப்படுகின்றது.
சிங்கள மொழியில் எழுதப்பட்ட ஒரு சில பெயர்ப்பலகைகள் காணப்பட்ட வடக்குப் பகுதியில் தற்போது பெருமளவான சிங்களப் பெயர்ப்பலகைகள் காணப்படுகின்றன. சில இடங்களின் முன்னணி சந்திகளில் காணப்படும் பெயர்ப்பலகைகள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலுமே காணப்படுகிறது. பேரூந்துகளிலும் சிங்கள மற்றும் ஆங்கிலச் சொற்களையே அதிகம் காணக்கூடியதாக உள்ளது.
ஏ-09 நெடுஞ்சாலையில் உள்ள கனகராயன்குளத்திலிருந்து பிரிந்து செல்லும் மூன்று வீதிகளுக்கு கொசல பெரேரா வீதி, அனுரா பெரேரா வீதி, வணக்கத்திற்குரிய யற்றிராவன விமல தேர வீதி எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. குறித்த முதல் இரண்டும் யுத்தத்தில் பங்குகொண்ட இராணுவ வீரர்களின் பெயர்களாகவும், மூன்றாவது வீதிக்கான பெயர் புத்த பிக்கு ஒருவரின் பெயருமாகும். கிளிநொச்சி நகரில் உள்ள தெருக்களின் பெயர்கள் மகிந்த ராஜபக்சா மாவத்தை, அலுத் மாவத்தை போன்ற சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன.
‘வடக்கின் வசந்தம்’ என்கிற திட்டத்தின் மூலமாக இடம்பெற்றுவரும் சிங்களமயமாக்கல் துரிதகெதியில் தமிழரின் பிரதேசங்களில் இடம்பெற்று வருகிறது. தமிழர்கள் தூங்கி எழும்புவதற்கு முன்னரே சிங்கள ஆதிக்கம் தென்படுகிறது. உலக நாடுகளை ஏமாற்றவும், தமிழர்களின் கண்களைக் கட்டிவிட்டு தமிழீழப் பிரதேசத்தை கொள்ளையடிக்கிறார்கள் பகல் கொள்ளையர்கள். விடுதலைப்புலிகளுக்கு பயந்து ஒதுங்கியிருந்தவர்களெல்லாம் துணிந்து சென்று தமிழர்கள் மீது சேட்டை செய்யும் நிலை இன்று மாறியுள்ளது.
அதிவேகமாக இடம்பெறும் சிங்களமயமாக்கல் திட்டத்தின் மூலமாக அடுத்த ஒரு தசாப்தங்களுக்குள்ளாகவே தமிழர்களின் தாயக பூமி என்கிற இடம் காணாமல் போய்விடும் என்று உறுதியாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். வரும் முன் காப்போம் என்கிற நோக்கில் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் சிங்கள அரசின் பகல் கொள்ளையை தடுத்து நிறுத்துவதுடன் தமிழர்களின் பிரதேசத்தை காப்பாற்றலாம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com
Sinhala colonization on the rise in Tamileelam.doc
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment