Date: Mon, 27 Apr 2009 08:51:57 -0400
ஏ சர்வதேச சமூகமே! - கவிப்பேரரசு வைரமுத்து
சொந்தநாய்களுக்குச்
சொத்தெழுதிவைக்கும் தேசங்களே!
ஓர் இனமே
நிலமிழந்து நிற்கிறதே
நெஞ்சிரங்க மாட்டீரா?
பூனையொன்று காய்ச்சல் கண்டால்
மெர்சிடீஸ் கார் ஏற்றி
மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!
ஈழத்து உப்பங்கழியில்
மரணத்தின் வட்டத்தில்
மனித குலம் நிற்கிறதே!
மனம் அருள மாட்டீரா?
வற்றியகுளத்தில் செத்துக்கிடக்கும்
வாளை மீனைப்போல்
உமிழ்நீர் வற்றிய வாயில்
ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு
ரொட்டி ரொட்டி ரொட்டியென்று
கைநீட்டும் விரல்கள்
கண்குத்தவில்லையோ அமெரிக்க அதிபரே!
தமிழச்சிகளின் மானக்குழிகளில்
துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்
சிங்களவெறிக் கூத்துகளை
அறிந்தும் அறியாயோ ஐ.நாவே?
வாய்வழி புகட்டிய தாய்ப்பால்
காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு
கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்
கதறும் தாய்மார் மறந்தொழிந்தாயோ
அழத்தெரியாத ஐரோப்பாவே!
அடுக்கிவைத்த உடல்களில்
எந்த உடல் தகப்பன் உடல் என்று தேடி
அடையாளம் தெரியாத ஒரு பிணத்துக்கு
அழுது தொலைக்கும் பிள்ளைகளின்
பெருங்குரல் கேட்டிலையோ பிரிட்டிஷ் அரசே!
எனக்குள்ள கவலையெல்லாம்
இனம் தின்னும்
ராட்சசபக்ஷே மீதல்ல
ஈழப்போர் முடிவதற்குள்
தலைவர்கள் ஆகத்துடிக்கும்
தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல
எம்மைக்
குறையாண்மை செய்திருக்கும்
இறையாண்மை மீதுதான்
குரங்குகள் கூடிக்
கட்டமுடிந்த பாலத்தை
மனிதர்கள் கூடிக்
கட்ட முடியவில்லையே
ஆனாலும்
போரின் முடிவென்பது
இனத்தின் முடிவல்ல
எந்த இரவுக்குள்ளும்
பகல் புதைக்கப்படுவதில்லை
எந்த தோல்விக்குள்ளும்
இனம் புதைக்கப்படுவதில்லை
அங்கே
சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்
பீரங்கி ஓசையில்
தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்
ஈழப்பனைமரத்தில்
என்றேனும் கூடுகட்டும்
---------------------------------------------------
From: தமிழினி .
Date: Mon, 27 Apr 2009
*இன்னும் சில மணித்துளிகள் * ஆகாயமே கூரை இங்கு
இன்னும் சில மணித்துளிகளே
வன்னி மண்ணில் எமக்கென
மரண விட்டத்தில் சுழல்கிறது
மூவி்னக் கொல்லிகளான
கொத்தணிக்குண்டுகள்
நேபாம் குண்டுகள்
பொஸ்பரஸ் எரி குண்டுகளால்
சிங்கள இனவாத கொடுங்கோலர்
எம்மை துண்டாடி கொல்கிறார்
அவலக் குரல் கேட்கலையோ - அகிலமே
அராயக அரசுக்கு நீங்களும்தான் உறுதுணையோ
விழியிலிருந்து சொரிகின்ற குருதியிலும்
உடலங்களில் லிருந்து சொரிகின்ற குருதியிலும்
இரத்தக்களறி ஓடுதிங்கே
உயிர் கொல்லிக் குண்டுகள்
எண்ணற்று வீழ்கிறது எம் தலைமேலே
அங்கம் அங்கமாய் துண்டம் துண்டமாய்
தமிழரின் உடலங்கள் வீதியெங்கும்
பிணக்காட்டிலிருந்து யனனத்தை யாசிக்கின்றோம்
இந்திய வல்லாதிக்கமே - இன்னல்
இளைப்பதை விட்டுவிடு
உன் துணை மிதவாத செருக்கிலே
இனவாத கொடியோன் ராஜபக்ச
தன்னின பரிவாரத்துடன்
தமிழின பிணம் தின்று களிக்கின்றான்
இரங்கலுரை இறந்தோரை மீட்ப்பதில்லை
பொல்லாங்கு விட்டு போடும் வேசம் விட்டு
வாழ்வளியுங்கள் வந்து கரம்கொடுங்கள்
மரண விட்டத்திற்குள் வீழும்
நரமாமிச குவியலை தடுத்தாட்கொள்ளுங்கள்
யனனம் மணித்துளிகளை வெல்லும்
சுய உரிமை வாழ்வொன்றே - சுதந்திர
கேடுன்றி நிரந்தர அமைதி தரும்.
வல்வை சுஜேன்.
-------------------------------------------------------
அன்பின்,
தமிழினி
மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்.
http://tamilmutram.com/
No comments:
Post a Comment