WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Tuesday, March 10, 2009

விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்!December 2008
தன்னம்பிக்கை

விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்


திரு மயில்சாமி அண்ணாதுரை
“சந்திராயன்” திட்ட இயக்குநர், இஸ்ரோ
“சந்திரயான் - 1″ வெற்றியின் மூலம் விண்வெளி ஆராய்ச்சியிலும், செயற்கைக் கோள் தொழில் நுட்பத்திலும் நமது இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு, சீனா, ஜப்பான் போன்றநாடுகளே தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதில் ஆதிக்கம் காட்டி வந்தன. இன்று நம்மாலும் முடியும் என பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ. தூரத்தில் உள்ள சந்திரனை ஆய்வு செய்ய “சந்திரயான்-1″ என்ற ஆளில்லா செயற்கைக்கோளை அனுப்பி “இஸ்ரோ” விஞ்ஞானிகள் சாதித்திருக்கிறார்கள்.
“சந்திரயான் -1″ சாதிப்பிற்குப் பின்னால் நம்ம ஊர்த் தமிழர்
திரு. மயில்சாமி அண்ணாதுரை திட்ட இயக்குநராக இருந்து சாதித்துக் காட்டியிருக்கிறார் என்பதில் நாம் எல்லோரும் பெருமைப்பட்டுக் கொள்ளும் ஆனந்தமான காலமிது.
கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி என்னும் கிராமத்தில் பிறந்து தமிழ் வழியில் பயின்று உலகளவில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிற திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் இந்தச் சாதிப்பு அவருக்கு சாதாரணமாக கிட்டியதா என்றால் இல்லை.
“இலட்சியத்தை, முக்கியமான இலட்சியத்தை அடைய இரண்டு மாபெரும் சக்திகள் உள்ளன. ஒன்று வலிமை, இன்னொன்று விடாமுயற்சி. மிகச்சிறப்பு வாய்ந்த வலிமையும், ஆற்றலும் நம்மில் பலரிடம் உள்ளன. ஆனால், மிக்க வலிமை வாய்ந்த விடாமுயற்சி என்னும் அரிய குணம் நம் அனைவரிடமும் மிகச் சிறிதளவே உள்ளது. இந்த எளிய, எந்த சக்தியாலும் எதிர்த்து வெல்ல முடியாத விடாமுயற்சி என்னும் குணத்தை நாம் வளர்த்துக் கொண்டு, தொடர்ந்து அதைப் பயன்படுத்தினால் கரடு முரடான வாழ்க்கைப் பாதையையும் சமாளித்து கடந்து இலட்சியத்தை அடைய முடியும்.
நமது செயல் நோக்கத்தில் விடாமுயற்சி அதிகரிக்க அதிகரிக்க அது, அமைதியாக செயல்பட்டு, ஆற்றலுடன் முன்னோக்கி நம்மை அழைத்துச் செல்லும்” என்பார் கவிஞர் கதே. அந்த வலிமையாலும் அந்த விடா முயற்சி யினாலும் விடாது போராடி இந்த அரிய சாதிப்பை அவர் நிகழ்த்தியிருக்கிறார்.
வாழ்க்கையில் வெற்றியை நினைப்பதும், கற்பனை செய்வதும், நிச்சயம் நிறைவேறும் என்றமுழு நம்பிக்கையும் நிரம்பவே பெற்றுள்ள அவர் தன் ஆய்வுப்பணிக்கு பக்கபலமாக இருந்து நல்வழி காட்டியவர் மேதகு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்று பெருமைபட்டுக் கொள்கிறார்.
ஆறாவது நீள்வட்டப்பாதையான பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து சந்திரயான்-1 செயற்கைக் கோளை நிலவின் பாதையில் சுற்றவிட்ட அந்நேரத்தில் கடினமான அந்த செயல்பாடு வெற்றியைப் பெறவேண்டுமென்று எனது பிறந்த ஊர் கோதவாடி மக்கள் ஆலயம் சென்று வழிபாடு நடத்தியிருக்கிறார்கள். அவர்களின் அன்பு என்னை மேலும் சாதிக்கத் தூண்டுகிறது என தன் கிராமத்து மக்களின் மீது சந்தோசத்தை வெளிப்படுத்தவும் செய்கிறார்.
பெற்றோர்களின் பெயரை “இன்சியல்” போடுவது நாகரீகம் அல்ல என்றும் இயற்பெயரைக் கூட மூன்றெழுத்துக்குள் சுருக்கிக்கொண்டு “ஸ்டைலாக” வாழ்வோர் எண்ணிக்கை கூடி வரும் காலத்தில் அப்பாவின் பெயரையே தன் பெயருக்கு முன்னால் சேர்த்து தந்தையை கௌரவப்படுத்தி மகிழ்பவராய் அதேசமயம் கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி முதல்வராக இருக்கும் தம்பி திரு. மோகனசுந்தரம் அவர்களின் பேராற் றலையும் வெளிப்படுத்த தவறவில்லை. ஆம்! தமிழகப் பள்ளிகளுக்கான கணினி அறிவியல் பாடப்புத்தகத்தை எழுதி தமிழக முதல்வர் டாக்டர்
மு. கருணாநிதி அவர்களால் பாராட்டுப் பெற்றிருக்கிறார் அவர் என எல்லோரையும் நன்கு அரவணைத்து வாழ்வியல் கருத்துக்களை அற்புதமாக வெளிப்படுத்தவும் செய்கிறார்.
தனிமனித சாதிப்பு அல்ல இது. ஒட்டு மொத்த “இஸ்ரோ” விஞ்ஞானிகளின் கூட்டு சாதிப்பு என்று எல்லோரையும் முன்னிலைப்படுத்தி மகிழும் “நல்ல மனிதராகவும்” திகழும் அவரை கௌரவ ஆசிரியர் டாக்டர் ந. செந்தில் அவர்களுடன் நாம் தொடர்பு கொண்ட போது,
“காலத்தை மதித்து, அன்பு செலுத்தி, கடமை உணர்வுடன்
வாழ்ந்தால் அருமையும் பெருமையும் நிச்சயம் கிடைக்கும்”
என்றார்.
சாதித்திருக்கிற இந்த சாதிப்பான நேரத்தில் பிறந்து வளர்ந்த அந்த நாட்களை நினைவு கூறுங்களேன்?
கோவை கிணத்துக்கடவு அருகிலுள்ள கோதவாடி நான் பிறந்து வளர்ந்த ஊர். அப்பா மயில்சாமி. அம்மா பாலசரஸ்வதி. எனக்கு இரு சகோதரர்கள், இரு சகோதரிகள். அப்பாவின் அப்பாவுக்கு தொழில் நெசவு. அப்பா கோதவாடி ஆரம்பப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றியவர். எங்கள் ஐந்து பேரையும் நல்ல முறையில் அவர் வளர்த்திட அதிகம் சிரமம் எடுத்துக் கொண்டவர்.
ஆசிரியப் பணிபோக மாலை மற்றும் இரவு நேரங்களில் தையல் தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தவர்.
தமிழ்வழிக் கல்வியில் அப்பாவின் அறிவுரை யில் ஐந்தாம் வகுப்பு வரை கோதவாடி அரசுப் பள்ளியில் படித்தேன். அதற்குப் பின்பு அப்பா மாற்றலாகி கிணத்துக்கடவு பள்ளிக்குச் சென்றபோது நல்லட்டிபாளையத்தில் குடி பெயர்ந்தோம். அப்போதெல்லாம் தினமும் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் பள்ளிக்குச் செல்வேன். அரசு உதவித் தொகையில் தான் என் கல்விப் பயணமே தொடர்ந்தது.
கல்வி ஒன்று மட்டுமே பெரிய மூலதனம் என்று நன்கு படித்து நநகஇயில் முதல் மதிப்பெண் எடுத்து தங்கப்பதக்கம் பெற்றேன். மேற்கொண்டு மென்மேலும் கல்வியில் ஆர்வம் செலுத்தி கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் பி.இ. படிப்பில் சேர்ந்தேன்.
நாள்தோறும் வந்து போவதற்கு பணம் கேட்டு அப்பாவை துன்புறுத்தக்கூடாது என்று, மற்றதனியார் கல்லூரிகளில் மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைத்தும் தங்கிப் படிப் பதற்கான வசதி ஒன்றைக் கருத்தில் கொண்டு கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் சேர்ந்து பி.இ. முடித்தேன். அதற்குப் பின்பு பி.எஸ்.ஜி. தொழில் நுட்பக் கல்லூரியில் எம்.இ., (அப்ளைடு எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன்) நிறைவு செய்தேன்.
நீங்கள் படித்து முடித்ததும் பிரெஞ்சு கம்பெனி ஒன்று வேலை தரத் தயாராக இருந்தும் அதனை ஏன் தவிர்த்தீர்கள்?
நான் எம்.இ. படித்து முடித்ததும் புதுச் சேரியிலுள்ள “ஆரோலெக்” என்றபிரெஞ்சு கம்பெனி வேலை தரத் தயாராக இருந்தது. ஆனால் அரசுப் பணத்தில் படித்து விட்டு அடுத்த நாட்டுக்காரர்களுக்கு வேலை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் அந்த வேலையை வேண்டாமென்று சொல்லி விட்டேன்.
அதனை அடுத்து மூன்று மாதத்தில் இஸ்ரோவில் வேலைக்கு தேர்வானேன். சேர்ந்த நாள் முதல் வானிலை ஆராய்ச்சிக்காக என்னை அர்ப்பணித்து கொண்டேன்.
தமிழில் படித்தால் விஞ்ஞானம் என்பதெல்லாம் வெகுதூரம் என்கிறார்களே?
கல்லூரியில் சேரும்வரை நான் படித்த தெல்லாம் தமிழில் தான். பத்தாம் வகுப்பி லிருந்தே அரசின் உதவித் தொகையை பெற்றுப் படித்து முன்னுக்கு வந்திருக்கிறேன். எல்லாம் ஆர்வம் தான் காரணம். தாய்மொழியின் மீது பற்றுதல் இல்லாமல் பிறமொழிகளின் மீது ஆர்வம் காட்டுதல் என்பது ஆரோக்கியமான விசயமாகப்படவில்லை.
எந்த ஒன்றையுமே தன் தாய் மொழியில் படிக்கும் போது உணர்தல் என்பது அதிகமாக இருக்கும். தமிழ் படித்தால் விஞ்ஞான அறிவு இருக்காது, வளராது என்பதெல்லாம் கிடையாது. டாக்டர் அப்துல் கலாம் தமிழ் வழியில் பயின்றவர் தான். அவர் சாதிக்க வில்லையா. தமிழில் படித்துக் கொண்டு மற்றமொழிப் பாடங்களையும் சேர்த்து அறிவை வளர்த்துக் கொள்வது என்பது கூடுதல் பலம். அதற்காக கான்வென்ட் சென்று படித்தால் தான் சாதிக்க முடியும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
நம்மவர்கள் பலபேர் அமெரிக்காவின் “நாஸா” விண்வெளி ஆய்வுக்கழகத்தில் இணைந்து நல்ல ஊதியம் வாங்கிக் கொண்டிருக்கும் போது உங்களை அவர்கள் அழைத்தும் ஏன் நீங்கள் செல்ல மறுத்தீர்கள்?
“நாஸா” விண்வெளி ஆய்வுக்கழகத்தில் மாதம் ஐந்து லட்ச ரூபாய் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதாக அறிகிறேன். எனக்கு பல முறை அங்கிருந்து அழைப்பு வந்தது. என் நாடு, என் மக்கள் என்கிற உணர்வு எனக்குள் சிறு வயதில் இருந்தே அதிகம் இருந்தது. சமுதாயத்தின் மீது அக்கரை காட்டிய ஒரு தலைவரின் பெயரை அப்பா எனக்கு சூட்டி “அண்ணாதுரை” என அழைத்து மகிழ்ந்த போதே நான் முடிவெடுத்து விட்டேன்.
நாம் வாழும் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு வகையில் பயன்பாடு மிக்கவனாக நான் இருக்க வேண்டும் என்று. அதனால் “இஸ்ரோ”வை விட்டு எங்கும் வெளியில் செல்ல நான் விரும்பவில்லை. உடன் அற்புதமான விஞ்ஞானிகள், அற்புதமான தலைமை - என எல்லாமுமே நமது நாட்டிலேயே இருக்கும் போது வேற்று நாட்டில் வேலையை நான் ஏன் தேட வேண்டும்.

No comments: