WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Tuesday, March 10, 2009

"போதும் நிறுத்துங்கள் உங்கள் அரசியலை!!!

"போதும் நிறுத்துங்கள் உங்கள் அரசியலை' இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை என்ன
என்று புரியாத அரசியல் கட்சியோ, தலைவர்களோ தமிழ்நாட்டில் இல்லை. அரசியல்வாதிகள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள், அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் என்று சகல தரப்பினரும் அவர்களுடைய வேதனை யை அறிந்தவர்களாகத்தான் இருக்கின்றனர். ஆயினும் ஒருங்கிணைந்த, உறுதியான, முதிர்ச்சியான நடவடிக்கைகள் இல்லாததால் இலங்கைத் தமிழர்களும் பராதீனப்பட்டு அவர்களுடைய பிரச்சினையும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய, திராவிட அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் தமிழ்நாட்டு வழக்கறிஞர்களும் திரைப்படத்துறையினரும் இந்த நேரத்திலாவது சிறிது ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும். இதுவரை தாங்கள் நடத்திய கிளர்ச்சிகள், உண்ணாவிரதங்கள், முழு அடைப்புகள், இயற்றிய தீர்மானங்கள் போன்றவற்றுக்கு உருப்படியான பலன் ஏதாவது ஏற்பட்டிருக்கிறதா?

மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்டதால் இதை காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கூட்டணிக்கும் எதிராகப் பயன்படுத்த ஒரு சில அமைப்புகள் தீவிரம் காட்டுவதாகத் தெரிகிறது. இலங்கைப் பிரச்சினையைத் தமிழ்நாட்டு தமிழர்கள் கையாளும்விதம் இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிராகவே போய்க்கொண்டிருக்கிறது என்பதை யாருமே இப்போதாவது உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.

இனி எந்த அரசியல் கட்சியும் சமுதாய இயக்கமும் இதைத் தங்களுடைய தனியுரிமைப் பிரச்சினையாகக் கையில் எடுக்கக் கூடாது. தமிழர்களுடைய முழு அக்கறையும் ஆதரவும் தேவைப்படும் இப் பிரச்சினையைத் தீர்க்க தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த அரசு அதிகாரிகள், இராஜதந்திரிகள், பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்கள், தன்னார்வத் தொண்டு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும்.

சர்வதேச அரங்கில் இப்பிரச்சினையைக் கொண்டு செல்ல அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் ஆற்ற வேண்டிய செயல்களை உடனே தொடங்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்குத் தேவைப்படும் உணவு, உடை, மருந்து போன்ற அவசியப் பொருட்களைத் திரட்டி அதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலமும் உற்ற தன்னார்வத் தொண்டு அமைப்புகள் மூலமும் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் உள்ள இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் நல்ல கல்வியைப் பெற எல்லா வசதிகளையும் செய்து தர வேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் பாரம்பரியமாக வசித்துவரும் பகுதிகளான வடக்கு, கிழக்கு ஆகியவற்றின் தனித்தன்மையைக் காப்பதிலும் அங்கு மற்ற இனத்தவரைக் குடியமர்த்தாமல் தடுப்பதிலும் அக்கறை எடுக்க வேண்டும். தமிழர்களுக்குச் சம உரிமை, அந்தஸ்து வழங்கி தமிழர் பகுதிகளில் அமைதி ஏற்பட இந்திய அரசின் மூலம் இலங்கை அரசுக்கு நெருக்குதல் அளிக்க வேண்டும்.

விடுதலைப் புலிகளையும் இலங்கை அரசையும் அவர்களுக்கு உற்ற நண்பர்கள் மூலம் மீண்டும் அணுகி உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதைவிடுத்து தமிழ்நாட்டில் அறிக் கைப் போர் நடத்துவதும், சுவரொட்டி விளம்பரங்கள் செய்வதும் வழிநடைப் பயண இயக்கம் மேற்கொள்வதும் போட்டி உண்ணாவிரதங்கள் நடத்துவதும் நமக் குள் மேலும் பிளவைத்தான் ஏற்படுத்துமே தவிர, பிரச்சினை தீர இம்மியளவும் உதவாது. சில நாட்களுக்கு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இந்தப் பிரச்சினையில் முழு அமைதி காப்பதுகூட நல்லது என்று தோன்றுகிறது.

இலங்கைத் தமிழர்களுக்கு உதவ அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த தமிழர்களும் டுபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஆலோசனைகளையும் கேட்டு, சர்வதேச அரங்கில் தமிழர்கள் ஒற்றுமையுள்ள ஓர் அணியாகச் சென்று முறையிட்டு ஈழத் தமிழ் இனத்தைக் காப்பதுதான் விவேகமாக இருக்கும். வெற்று கூச்சல்களால் இந்தப் பிரச்சினை தீராது.

வழக்கறிஞர்கள், மாணவர்கள் என்று சகல தரப்பினரும் உணர்ச்சிபூர்வமாகச் சிந்திப்பதைக் கைவிட்டு அறிவுபூர்வமாக சர்வதேச அரங்கில் காய்களை நகர்த்துவதே இலங்கைத் தமிழ் இனத்தைக் காப்பதற்குப் பெரிதும் உதவும். உடனடியாகப் போர்நிறுத்தம்; சர்வதேச அளவிலான சமரசத் தீர்வு இதற்கு வழிகோலுவதுதான் புத்திசாலித்தனம்.

ஈழத் தமிழர்களுடன் தொப்புள்கொடி உறவு ஏதும் இல்லாத நோர்வே நாட்டவர்கள் காட்டிய அளவுக்காவது உண்மையான அக்கறையுடன் நாம் செயல்பட்டிருக்கிறோமா என்று தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டால் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கும் என்பதை வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே உங்களுக்கு ஒரு வேண்டுகோள், "போதும் நிறுத்துங்கள்' உங்கள் அரசியலை!

தினமணி ஆசிரியர் தலையங்கம்

9 மார்ச் 2009

No comments: