WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Saturday, June 27, 2009

முள்வேலிக்குள் மூச்சுவிட மட்டுமே சுதந்திரம் : மெனிக் முகாம் சொல்லும் கதை ...!!!

முள்வேலிக்குள் மூச்சுவிட மட்டுமே சுதந்திரம் : மெனிக் முகாம் சொல்லும் கதை
on 27-06-2009 02:27

விடுதலைப் புலிகளுடனான இறுதி மோதலின்போது முல்லைத்தீவுப் பிரதேசத்திலிருந்து வெளியேறிய மூன்று இலட்சம் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மெனிக் முகாமுக்கு தனது உறவினரைப் பார்ப்பதற்காகச் சென்ற ஒரு வயதானவர்தான் அங்கு கண்டவற்றை இங்கு விவரிக்கிறார். வவுனியாவிலிருந்து 30 கி.மீ. தொலைவில் மெனிக் முகாம் அமைந்துள்ளது. இராணுவத்தால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய முகாம் இது. 160000 ற்கு மேற்பட்ட இடம் பெயர்ந்த மக்கள் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட கடும் எறிகணைத் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து இறுதி நேரத்தில் வெளியேறிய மக்கள் இவர்கள்.
மெனிக் முகாமுக்குள் செல்லும் ஒருவர் பல்வேறு இராணுவ சோதனைச் சாவடிகளுள் மேற்கொள்ளப்படும் சோதனைகள், கெடுபிடிகள் விசாரணைகளைத் தாண்டியே செல்ல முடியும். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், காயமடைந்தோர் என அனைவரையும் கொண்ட ஒரு திறந்த வெளிச்சிறைச்சாலையாகவே இது உள்ளதை உள்ளே செல்லும் ஒருவர் காண முடியும். இம் முகாமைச் சுற்றி கடும் பாதுகாப்புடைய முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, ஆயுதம் தாங்கிய படையினரும் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நீண்ட வரிசையாக சிறிய ரென்ட்லீல் ஆன அறைகள் அலுமினியத் தகடுகள் கொண்டு பிரிக்கப்பட்டு, இம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடிப்படைத் தேவைக்கான தண்ணீரும் சுகாதார வசதிகளும் மிகவும் பற்றாக்குறையாகவே உள்ளன.

ஒரு அறைக்குள் அல்லது ஒரு தரப்பாளுக்குள் ஆகக் குறைந்தது இரண்டு குடும்பங்கள் வாழ்கின்றன. காற்றடிக்கும் போதோ அல்லது வாகனம் ஒன்று செல்லும் போதோ ஏற்படும் புழுதியால் அவற்றில் உள்ள மக்கள் குளிப்பாட்டப்படுகிறார்கள். இந்த மெனிக் முகாமுக்குள் இராமநாதன் முகாம், கதிர்காமர் முகாம், அருணாச்சலம் முகாம், ஆனந்தக்குமாரசாமி முகாம் ஆகிய நான்கு முகாம்கள் உள்ளன. ஒவ்வொன்றும் நாற்பதாயிரம் மக்களைக் கொண்டுள்ளது. முகாம் பகுதியில் இராணுவ வாகனங்கள் எந்நேரமும் சுற்றிக்கொண்டே இருக்கும். ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு நடந்து செல்ல மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் அதற்கு ஓட்டோக்களையே பயன்படுத்த வேண்டும். அதற்கு நூறிலிருந்து நூற்றைம்பது ரூபாய்வரை அறவிடப்படுகிறது.

முகாமுக்கு அருகில் உள்ள இரண்டு புறமும் முட்கம்பிகளால் ஆன சிறிய வழி ஒன்றினூடாகவே முகாமுக்குச் செல்பவர் நடந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். முகாமிலுள்ளவரைச் சந்திப்பதற்காகச் சிறிய குடில் ஒன்றில் காத்திருக்கவேண்டும். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தமது அன்புக்குரிய உறவினர்களைச் சந்திக்கக் காத்திருக்க அக்குடில் போதுமானதாக இல்லை. இதனால் அவர்கள் குடிலுக்கு வெளியே எரிக்கும் வெய்யிலில் காத்திருக்க நேர்கிறது. அங்கு மலசலகூடவசதிகளோ எவையும் இல்லை. ஒவ்வொரு குடிலுக்கும் ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் பரல் வைக்கப்பட்டுள்ளது. வெளியேயுள்ள சிறிய கடைகளில் தேநீரும், சில குளிர்பானங்களும் கிடைக்கின்றன.

பொலிஸ் அதிகாரிகள் காலை ஒன்பது மணிக்குப் பின்பே வருகை தருகிறார்கள். அவர்கள் உங்களது விபரங்களையும், நீங்கள் சந்திக்கவுள்ள உறவினருடைய யுனிட் இலக்கம், புளொக் இலக்கம் என்பவற்றையும் உள்ளடக்கிய விபரங்களையும் பதிந்து கொள்கிறார்கள். கைத்தொலைபேசிகளும், கமெராக்களும் உள்ளே கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. அவற்றை அங்குள்ள கடைகளில் ஒன்றில் கொடுத்துவிட்டே உள்ளே செல்ல வேண்டும். சில கடைக்காரர்கள் ஒரு கைத்தொலைபேசியை வைத்திருந்து தருவதற்கு ஐம்பது ரூபாய் வரை அறவிடுகிறார்கள்.

என்னுடைய பல உறவினர்கள் மெனிக் முகாமிலிருந்தார்கள். நான் முதலில் இராமநாதன் முகாமிலிருந்த எனது சகோதரியையும் அவருடைய மகன்களையும் பார்க்கச் சென்றேன். தமிழ் பேசும் ஒருவர் சிவில் உடையில் வந்து நாங்கள் ஒவ்வொருவரும் யார் யாரைச் சந்திக்கவுள்ளோம் என்ற விபரங்களை எல்லாம் எடுத்துச் சென்றார். நான் என்னுடைய விபரங்களை அவரிடம் கொடுத்தேன். அவர் கடும் தொனியில் சொன்னார் நான் இன்று எனது உறவினர்களைச் சந்திக்க முடியாதென்று. ஒவ்வொரு முகாமுக்கும் அவர்கள் வௌ;வேறு நாட்களை ஒதுக்கியுள்ளார்கள்.

எனினும் நான் இதற்காகவே கொழும்பிலிருந்து வந்ததாகத் தர்க்கித்தேன். அவர் சொன்னார் அதனாலென்ன அதற்கும் கூட ஒன்றும் செய்வதற்கில்லை என. அவருடைய சிரேஸ்ட அதிகாரிகளைச் சந்தித்து முறையிடுவதற்குக் கூட அவர் அனுமதிக்கவில்லை. அம் முகாமிலிருந்த எனது உறவினரைப் பார்க்க முடியாதவாறு நான் தடுக்கப்பட்டேன். பின்னர் நான் கதிர்காமர் முகாமுக்குச் சென்று முன்னரைப் போல எனது விபரங்களையும் நான் சந்திக்க வேண்டியவர்களின் விபரங்களையும் கொடுத்தேன்.

அவர்கள் எனது சகோதரரை அழைத்தனர். ஆனால் அவர் முட்கம்பி வேலிக்கு அப்புறத்தில் நின்றார். அவர் என்னைக் கண்டதும் அழுதார். தங்களுடைய உறவினரைக் கண்டதும் அங்கிருந்த பலர் அழுததை நான் கண்ணுற்றேன். சிலர் தங்களுடைய பெற்றாரிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்தனர். இன்னும் சிலர் தங்களுடைய கணவன் அல்லது மனைவியிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர். உறவினருடன் பேசுதல் என்பது ஒரு சிறைக் கைதியுடன் பேசுவதைப் போன்றதாகும். உங்களுக்கு 15 அல்லது 30 நிமிடங்கள் வழங்கப்படும். அங்கு காவலிருக்கும் பொலிசார் வந்து உங்களுடைய நேரம் முடிவடைந்து விட்டது எனத் தெரிவிப்பார்கள். எவருக்கும் மேலதிக நேரம் வழங்கப்பட மாட்டாது. நீங்கள் உணவு அல்லது உடுதுணியை மட்டுமே அவர்களுக்குக் கொடுக்க முடியும். அதனையும் அங்குள்ள பொலிசார் முழுவதும் பரிசோதித்து விட்டே கொடுப்பார்கள். நீங்கள் கதைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் அங்கிருக்கும் பொலிசார் உங்களை அவதானித்துக்கொண்டே இருப்பர்.

கடந்த டிசம்பரிலிருந்து ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு எவ்வாறு தாங்கள் இடம் பெயர்ந்து சென்றதாக எனது சகோதரர் எனக்கு விளக்கினார். இறுதியாக முல்லைத்தீவிலுள்ள மாத்தளனை அடைந்ததாக அவர் தெரிவித்தார். அங்கு ஏற்கெனவே ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சேர்ந்திருந்தனர். அவர்களுக்கு உணவு போதுமானதாக இருக்கவில்லை. உடுத்த உடையுடனேயே அவர்கள் வந்து சேர்ந்திருந்தனர். கடும் எறிகணைவீச்சுக் காரணமாக அவர்கள் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஓடிக்கொண்டிருந்தனர். பலர் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர்.

இறுதியாக ஏப்ரலில் அங்கிருந்து வெளியேறுவதென அவர்கள் முடிவு செய்தார்கள். அவர்கள் 8 கிலோ மீற்றர்கள் கால்நடையாக நடந்தார்கள். இராணுவத்தினர் முதலில் அவர்களைச் சுட முயன்றார்கள். பின்னர் அவர்கள் அங்கு பல மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டார்கள். பின்னர் இறுதியாக அவர்கள் மெனிக் முகாமுக்கு அழைத்து வரப்பட்டார்கள். முதலில் இரண்டு வாரங்களுக்கு அவர்களுக்குச் சமைத்த உணவு வழங்கப்பட்டது. இப்போது அவர்களுக்குச் சில பாத்திரங்களும் கரண்டிகளும் வழங்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் மாதமொன்றுக்கு 3 கிலோ மாவும், 300 கிராம் சீனியும், கொஞ்சம் பருப்பும் வழங்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினர் சில கடைகளைத் திறந்து மரக்கறி வகைகளையும் சில உணவுப் பொருட்களையும் விற்பனை செய்கிறார்கள். பணம் இல்லாத காரணத்தால் பெரும்பான்மையான மக்களுக்கு எவற்றையும் வாங்க முடியவில்லை. அவர்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களைக் கொண்டு அவர்கள் எவ்வாறு உயிர்வாழ்கிறார்கள் என்று கற்பனை பண்ணவே முடியவில்லை.

லொறிகளில் குடிதண்ணீர் கொண்டு வந்து வழங்கப்படுகிறது. ஆனால் அது போதுமானதாக இல்லை. அப்பகுதியிலுள்ள சிறிய குளம் ஒன்றில் குறைந்தளவு தண்ணீரே குளிப்பதற்கு இருக்கிறது. அவர்களுக்கு குளிப்பதற்கு சோப் எதுவும் இல்லை. மலசலகூடங்களின் கூரைகள் பொலித்தீனினால் அல்லது அலுமினியத்தகடுகளால் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் மலசலகூடங்கள் போதுமானதாக இல்லை.

சிவில் உடையிலுள்ள பொலிசாரும் இராணுவத்தினரும் அங்கு சுற்றிக்கொண்டே இருக்கின்றனர். அவர்கள் மலசலகூடங்களைக் கூடப் பரிசோதிக்கின்றனர். குடில்களுக்கு வெளியே எவரும் நிற்க அனுமதிக்கப்படுவதில்லை. இளம் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் இரவில் நித்திரை கொள்வதில்லை. தங்களுடைய மகனோ மகளோ கடத்தப்பட்டு விடுவார்கள் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.

இளைஞர்கள் யுவதிகளுடைய பெயர்கள் ஒலிபெருக்கியில் அழைக்கப்பட்டு அவர்கள் முகாமுக்கு வருமாறு அழைக்கப்படுகிறார்கள். அந்த இளைஞர்கள் விசாரணைக்குள்ளாக்கப்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிலர் மீளத் திரும்பி வருகிறார்கள், பலர் திரும்புவதேயில்லை. பெற்றாருக்குக் கூட அவர்கள் எங்கே கொண்டு செல்லப்படுகிறார்கள், ஏன் கொண்டு செல்லப்படுகிறார்கள், எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று அறிவிக்கப்படுவதில்லை.

http://adhikaalai.com

No comments: