வவுனியா பம்பை மடு பல்கலை வளாகத்தில் கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களின் நிலை -
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களில் த.வி.புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் என சந்தேகிக்கப்பட்ட அனைத்து பெண்களும் வேறாக பிரிக்கப்பட்டு பம்பை மடு பல்கலை வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் 1850 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 50 கர்ப்பிணி தாய்மாரும் உள்ளனர். சென்ற கிழமை ஓர் பெண் பிள்ளையும் இங்கு வைத்து பிறந்துள்ளது. இக் கர்ப்பிணி தாய்மாரில் சிலருக்கு தாங்கள் எவ்வாறு கற்பவதி ஆனார்கள் என்றே தெரியவில்லை என கூறியுள்ளனர். மே 17 இன் பின்பு கொண்டுவந்து விடப்பட்ட பெண்கள் சிலர் தாம் மயக்கமுற செய்யப்பட்டதாகவும் பின்பு இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்டு முகாமில் விடப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
ஆரம்பத்தில் 2200 க்கு மேற்பட்டோர் இங்கு தங்கவைக்கப்பட்டதாகவும், அதில் சிலர் இலங்கை இராணுவ புலனாய்வுத்துறையினரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், சிலர் திரும்பி வந்துள்ளனர் என்றும் அதே நேரம் நூற்றுக்கு மேற்பட்டோர் இதுவரை எவரும் திரும்பி வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இக் கட்டிடத்தில் உள்ள பெண்களுக்கு அரிசி, பருப்பு மாத்திரமே தொடர்ந்து கிடைக்கின்றது. மற்றும் ஏனைய அனைத்து தேவைகளும் இன்றி மிக கஸ்டப்படுகின்றனர். மேலும், வைத்திய வசதி இன்றி சிலர் நோய்வாய்ப்பட்ட நிலையிலும், கர்ப்பிணி தாய்மார்கள் போசாக்கு குறைபாட்டால் பாதிப்புற்றும் காணப்படுகின்றனர்.
இவர்களுக்கு பொறுப்பாக உள்ள பெண் பாதுகாப்பு உத்தியோகத்தரின் அனுமதியுடன் சில உதவிகளை செய்யக்கூடிய வசதி இருந்தும், இவர்களுக்கு உதவுவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னிற்பதில்லை. காரணம் தாங்கள் இவர்களுக்கு உதவி செய்தால் தங்களது நிறுவனத்திற்கு புலி முத்தரை குத்தப்பட்டுவிடும் என்ற பயத்தினாலாகும். எது எவ்வாறாக இருப்பினும் மனித நேய உதவியின்றி ஏக்கங்களுடனும், தவிப்புக்களுடனும், ஒவ்வொரு நாளும் அச்சத்துடனும் இவர்கள் காலத்தை கழிக்கின்றனர்.
TNC
http://adhikaalai.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment