WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Monday, August 17, 2009

எதிர்காலத்தில் அமெரிக்கதமிழ்ச்சமூகத்துடன் கலந்துரையாட தனக்கிருக்கும் ஆர்வத்தை கலந்துரையாடலின் போது அமெரிக்க துணை அமைச்சர்பிளேக் வெளிப்படுத்தினார்..!!!



தமிழர்களுக்கு அதிகாரப்பரவலாக்கம்-தன்னாட்சி உரிமை:அமெரிக்கா ஆதரவு உறுதி

on 16-08-2009 16:55

தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கம், தன்னாட்சி உரிமைக்கு அமெரிக்கா உறுதியான ஆதரவு - அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை நம்பிக்கை : இலங்கையில் அரசியல் அதிகாரம் பரவலாக்கப்படுவதற்கும் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்படுவதற்கும் அமெரிக்கா உறுதியான ஆதரவு அளிக்கும் என்று அந்த நாட்டின் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக் அவரைச் சந்தித்த அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை உறுப்பினர்களிடம் தெரிவித்ததாக செயலவை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் அமெரிக்க தமிழ்ச் சமூகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 அமைப்புகளைச் சேர்ந்த 3 தமிழ் நாட்டுத் தமிழர்கள் உட்பட 16 பிரதிநிதிகள் 'அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை' (US Tamil Political Action Council - USTPAC) என்ற ஒரு குடையின் கீழ் இணைந்து பங்கேற்றனர்.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து அதன் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பாளர் ஜேம்ஸ் மூரே மற்றும் அனைத்துலக மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் (US AID) செயல்திட்ட இயக்குநர் ரிபேக்கா கோன் ஆகியோர் காணொளி இணையத் தொடர்பு மூலம் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் அரசியல் மற்றும் மனிதார்ந்த சிக்கல்கள் மற்றும் அரசியல் மாற்றத்துக்கான நம்பிக்கைகள் என்பன தொடர்பாக இந்த சந்திப்பில் கலந்து ஆராயப்பட்டதான அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை வெளிவிவகார அமைச்சர் றொபேட் ஓ பிளேக் இந்த சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கும்போது பின்வருமாறு குறிப்பிட்டார்.

வவுனியாவிலும் மற்றைய இடங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்துகின்றது. எல்லோருக்கும் அடிப்படை உணவு கிடைக்க அது வழி செய்கின்றது. ஆனால், அந்த மக்கள் விருப்பப்படும் உணவு கிடைப்பது தொடர்ந்து பிரச்சினையாகவே உள்ளது. கழிவகற்றல் மற்றும் சுகாதார விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அவை அனைத்துலக தரத்துக்கு அமைவானவையாக இல்லை. நெருக்கடியைத் தவிர்க்கும் பொருட்டு 'மெனிக் பாம்' முகாம் 8 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

6 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரையிலான மக்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வயது முதிர்ந்தவர்களும் ஊனமுற்றவர்களும் ஆவர். முகாம்களில் உள்ள ஏனைய ஊனமுற்றவர்களும் விடுவிக்கப்படவேண்டும் என்று அமெரிக்கா ஆலோசனை வழங்கியுள்ளது. அவர்கள் குடும்பத்தினருடன் தங்கியிருந்தால் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் குடிபெயர்வுத்துறை துணை அமைச்சர் எரிக் சுவார்ட்ஸ், தனது பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணமாக சிறிலங்காவுக்குச் சென்றிருந்தபோது, ஓகஸ்ட் மாத இறுதிக்குள் 75 ஆயிரம் பேர் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்ற தகவலை அவர் பெற்றிருந்தார். அவர்களில் 15 ஆயிரம் பேர் வவுனியாவுக்கும் 25 ஆயிரம் பேர் கிளிநொச்சிக்கும் மீதி 35 ஆயிரம் பேர் ஏனைய பகுதிகளுக்கும் விடுவிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சுவார்ட்சின் பயணத்தின்போது, இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியமர்வே தமது மிக முக்கிய கவனத்துக்கு உரியதாக இருக்கும் என்று சிறிலங்கா அரசாங்கம் அவருக்கு உறுதியளித்திருந்தது.

அரசின் வழிகாட்டலில் 'மெனிக் பாம்' முகாமின் அனைத்துப் பகுதிகளுக்கும் அவர் பயணம் செய்திருந்தார். அவருடன் சென்ற அமெரிக்க அதிகாரிகள், முகாமின் எப்பகுதிக்கும் அரச அதிகாரிகள் அல்லது படையினரின் பாதுகாப்பு இன்றி செல்ல முடிந்தது. ஆனால் ஊடகவியலாளர்களுக்குத் தொடர்ந்தும் கட்டுப்பாடுகள் இருந்தன. அங்கு பாதுகாப்பு தொடர்பான நிறைய விடயங்கள் உள்ளன. பாதுகாப்பு தொடர்பான முதல் விடயம் முகாம்களில் உள்ள மக்களைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள். கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பாதுகாப்புத்துறை அதிகாரி ஜேம்ஸ் மூரே கூறுவதன்படி, ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பதிவுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அங்குள்ள மக்களில் 55 விழுக்காட்டினருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகள் இன்னும் எஞ்சியிருக்கின்றன. ஜூலை மாத தொடக்கத்தில் அது முகாம்களில் பிரசன்னமாகி இருக்கவில்லை. அதுவரைக்கும், கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்களை பார்வையிடுவதற்கு செஞ்சிலுவைச் சங்கத்துக்கு ஓரளவு அனுமதி இருந்தது. குடும்ப உறுப்பினர்களை மீண்டும் சேர்க்கும் பணிகளை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதரகம் மேற்கொண்டுள்ளது. மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகம் பொறுப்பேற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், சிறிலங்கா ஒரு இறைமையுள்ள நாடு என றொபேட் பிளேக் தெரிவித்தார்.

போர் முடிவதற்கு முன்னரே வன்னியில் இருந்து அகற்றப்பட்ட குழந்தைகள் உள்ளிட்ட படுகாயமடைந்தவர்களின் நிலை குறித்தும் முகாம்களில் இருந்து மக்கள் காணாமல் போவதாக வரும் அறிக்கைகள் குறித்தும் தமது கவலையை அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை வெளிப்படுத்தியது. பதில் அளித்த அமெரிக்கத் துணை அமைச்சர், அவ்வாறு காணாமல் போனவர்களின் பெயர், பிறந்த நாள் போன்ற விபரங்களை புலம்பெயர் சமூகம் வழங்கினால் அந்த விடயத்தை தொடர்ந்து கண்காணிக்க வசதியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மீள்குடியமர்வுக்காக, கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் முழுவதுமாக முடியும் வரைக்கும் மக்கள் காத்திருக்க வேண்டியது இல்லை என்பதை அமெரிக்கா அழுத்திக்கூறியது. துண்டுதுண்டாக மேற்கொள்வதற்குப் பதில் ஒருங்கிணைக்கப்பட்ட கண்ணிவெடி அகற்றும் திட்டம் ஒன்றினை சிறிலங்கா அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிய அதேநேரம், அப்பணிகளுக்கு என 66 இலட்சம் அமெரிக்க டொலர் நிதியை 4 அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.

கண்ணிவெடிகள் அகற்றும் பணி தெடர்பாக வாரத்துக்கு இரு கூட்டங்களை சிறிலங்கா அரசு நடத்திவருகிறது. அதில் அமெரிக்கப் பிரதிநிதி ஒருவரும் கலந்துகொள்கிறார். மன்னார் மாவட்டத்தில் 15 கிராமங்கள் ஏற்கனவே கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகள் ஆக்கப்பட்டுள்ளன. முன்னாள் போராளிகள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்றுள்ளது. அதற்காக 60 இலட்சம் அமெரிக்க டொலர் நிதியையும் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மேலும் நிதி வழங்குனர்களை அரசு தேடி வருகிறது. அமைச்சர் மிலிந்த மொறகொடவின் நீதித்துறை அமைச்சு இந்த புனர்வாழ்வு நடவடிக்கைகளைப் பொறுப்பு ஏற்றுள்ளது.

போர் கடுமையாக நடைபெற்றபோது மக்களுடன் தங்கியிருந்து காயம்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு சிகிச்சைகளை அளித்து வந்த 5 மருத்துவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பற்றிய மேலதிக விபரங்கள் தமக்குத் தெரியவில்லை என்று அமெரிக்கா அதிகாரிகள் கூறினர். ஆனால், அவர்கள் கொழும்பில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளனர் என்று நம்பிக்கை வெளியிட்ட அமெரிக்க அதிகாரிகள், அவர்களுக்கு எதிரான வழக்கைத் தாக்கல் செய்வதற்கான தயாரிப்பில் சிறிலங்கா ஈடுபட்டுள்ளது என்றனர்.

மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா நிதி உதவி வழங்குவதற்கு எந்த நிபந்தனையும் கிடையாது. ஆனால் இடம்பெயர்ந்த மக்களை அணுகுவதற்கான அனுமதி, பதிவுகள் மற்றும் மீள்குடியமர்வு விடயங்களில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் எட்டப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா குறியாக இருக்கின்றது. இன்னும் 3 முதல் 6 மாதங்களுக்குள் இந்த விடயங்களில் குறிப்பிடத்தக்களவு அடைவு எட்டப்பட்டாலேயே அபிவிருத்திக்கான உதவிகள் வழங்கப்படும்.

இலங்கையில் அதிகாரம் பரவலாக்கப்படுவதற்கும் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்படுவதற்கும் அமெரிக்கா உறுதியான ஆதரவு வழங்குகின்றது என்று தெரிவித்தார் துணை அமைச்சர் பிளேக். 2010 ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலின் பின்னரே அரசியல் தீர்வு குறித்துக் கருத்துத் தெரிவிக்க முடியும் என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்திருப்பது தமக்கு விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் பிளேக் கூறினார்.

இனங்களுக்கு இடையில் கருத்து இணக்கம் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளே இன முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உண்மையான அறிகுறிகளாக இருக்க முடியும். அமைதி நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கான அடைவு மட்டங்களாக, அதிகாரப் பரவலாக்கம் மற்றும் நல் இணக்க நடவடிக்கைகளே அமைய முடியும். எதிர்கால இன நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு உலகத் தமிழ்ச் சமூகம் ஒரு முக்கிய பங்காளியாக இருக்கும் என அமெரிக்கா கருதுவதாக பிளேக் தெரிவித்தார்.

கலந்துரையாடல்களில் வெளிநாட்டுத் தமிழ்ச் சமூகமும் பங்கேற்க வேண்டும் என்ற சிறிலங்கா அரசின் விருப்பம் குறித்த தமிழ் அரசியல் செயலவையின் கருத்து என்ன என்று பிளேக் கேள்வி எழுப்பினார். செல்வராசா பத்மநாதனின் கைது, சட்டவிரோத நாடு கடத்தல் மற்றும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் உள்ள ஏனைய தலைவர்களுக்கு விடுக்கப்படும் அதுபோன்ற அச்சுறுத்தல்களின் அடிப்படையில் சிறிலங்கா அரசின் உண்மையான நோக்கம் என்ன என்பதை செயலவையின் பிரதிநிதிகள் அமெரிக்கர்களுக்கு எடுத்து விளக்கினர்.

பதிலளித்த பிளேக், புலிகள் இயக்கத்துக்கு பொருள் அல்லது நிதி உதவியளித்து அமெரிக்கச் சட்டங்களை மீறியவர்களைத் தவிர அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்தாலும்கூட அவர்களுக்கு எதிராக சிறிலங்கா விசாரணை நடத்துவதற்கு இடமளிக்கப்படமாட்டாது எனத் தெரிவித்தார். தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் அமெரிக்க அரசின் கொள்கை மற்றும் செயற்பாடுகள் குறித்த பல கேள்விகளை தமிழ் அரசியல் செயலவையின் பிரதிநிதிகள் எழுப்பினர். இந்த கேள்விகள் எல்லாம் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ஏனைய வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அமைந்தசையாக இருந்தன.

தடுப்பு முகாம்களில் உள்ள மக்களின் நிலை, மீள்குடியமர்வு, வடக்கு-கிழக்குப் பகுதிகள் தொடர்ந்து இராணுவ மயமாக்கப்படுவது, தமிழர்கள் காணாமல் போதல் மற்றும் சித்திரவதை, தமிழர்களின் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவது, வடக்கு-கிழக்கின் அபிவிருத்தி என்ற பெயரில் வழங்கப்படும் உதவிகள் பயன்படுத்தப்படும் விதம், வடக்கு-கிழக்கில் உள்ள வளங்கள் வெளியாட்களுக்கு வழங்கப்படும் விவகாரம் மற்றும் அரசியல் மாற்றம் தொடர்பான எதிர்பார்ப்பு ஆகிய விடயங்கள் குறித்து சந்திப்பில் முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் அமெரிக்க தமிழ்ச் சமூகத்துடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை நடத்துவதில் தனக்கிருக்கும் ஆர்வத்தை கலந்துரையாடலின் போது அமெரிக்க துணை அமைச்சர் பிளேக் வெளிப்படுத்தினார். மேலும் - புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர் பட்ரீசியா பியூடெனிஸ் குறித்த நம்பிக்கையை தமிழ் அரசியல் செயலவை வெளிப்படுத்தியது.

- US Tamil Political Action Council - USTPAC
TNC
http://adhikaalai.com

No comments: