courtesy: lankasri கவிதைகள்
www.lankasripoems.com
அழிக்கப்படும் இனத்திற்கு கண்ணீர் அஞ்சலி!
எண்ணற்ற சுமைகளை வாங்கி- ஆழப்
புண்பட்ட மனதோடு ஏங்கி
இந்நாளில் மனதினிலே தாங்கி- இன்று
அஞ்சலிக்கும் அனைவருக்கும் வணக்கம்.
ஆண்டுகள் பலவற்றைக் கடந்தும்- என்றும்
எண்ணற்ற புகழது கொண்டும்
ஆண்டிட நாடொன்று இன்றி- இன்று
அகதியாய் அலையும் என் தமிழே!
முட்கம்பி நடுவினில் சுருண்டு- மிகப்
புண்பட்டுத் தவியாகத் தவித்து
துப்பாக்கி சூழ்ந்திட மிரண்டு- பெரும்
துன்பத்தில் துடிக்கும் ஈழத் தமிழே!
அரசியல் கையினில் திணறி- தினம்
அன்றாடம் சோத்துக்குக் கதறி
செய்வது தெரியாது பதறி- வன்னியில்
செத்து அழிகின்ற இனமே!
வளம் கொழித்த வன்னியில்- தமிழ்
இனம் ஒழித்த கண்ணீர் காவியம்
மனம் திறந்து எழுதுகிறேன்- ஐயோ
தினம் நினைந்து கதறுகிறேன்!
நினைக்காது நானன்று தாவி- இங்கு
கோழையாய் ஓடிவந்தேன் பாவி
தூக்கத்தில் விழிக்கிறேன் பாதி- நாளை
எப்படிப் போகுமென் ஆவி?
கண்ணிலும் நீர்வற்றிப் போச்சு- என்
கவிதையும் புலம்பிட லாச்சு
புண்ணாக வலிக்குது நெஞ்சு- நான்
உண்கின்ற சோறெல்லாம் நஞ்சு!
தாயவள் ஊட்டிய பால்- அடி
வயிற்றினில் பொங்கிக் கொதிக்கிறதே
தூயவள் ஈழத்தின் பால்- என்னை
பெற்றனள் பேடியாய் நிற்கிறேன் பார்!
அழுங்கள் நீங்களும் அழுங்கள்- ஒரு
தமிழனாய் பிறந்ததற்காய் அழுங்கள்
தொழுங்கள் நன்றாய் தொழுங்கள்- இனி
தமிழராய் பிறக்காதிருக்க தொழுங்கள்!
ஒருலட்சம் தமிழரைக் கொன்றார்கள்- சிறையில்
மூன்றுலட்சம் மக்களை வதைக்கிறார்கள்
ஒருவேளை சோத்துக்கே தவிக்கிறார்கள்- தமிழர்
பட்டினியால் செத்துத் தொலைக்கிறார்கள்.
புலியைப் பிடிக்கவென்று போனார்கள்- பூக்கள்
பிஞ்சுகளையும் கொன்று குவித்தார்கள் புத்தன் காவியில் கறையினைப்பூசி- கேவலம்
உண்மையை மூடி மறைத்தார்கள்.
அழுது ஏங்கி பொழுதெல்லாம் துடித்து- இன்னும்
ஆற முடியலையே! தேற முடியலையே!
ஆறுகோடி உறவுகள் அருகிருக்க- அநியாயமாக உறவுகளைக் கொன்று குவித்தார்களே!
தஞ்சைக்கோபுரம் தலைகுனிந்து வெட்க- கை காட்டும் அறிஞரண்ணாவும் கண்துடைக்க
வள்ளுவர் சிலையும் கசிந்துருக- தமிழ்
நாட்டு அரசுமட்டும் பாராதிருப்பதேனோ?
என்ன கொடுமை செய்தோம்- எவர்
குடியை நாம் கெடுத்தோம்
சின்னப் பிஞ்சுகளையும் பிச்செறிந்தார்களே- எவரும்
ஏனென்று கேட்க வில்லையே?
மூன்றுலட்சம் பேருக்கு உணவில்லை- அங்கு
முப்பதாயிரம் தமிழர்க்கு உறுப்பில்லை
மூப்படைந்த பெரியோர்க்கு மருந்தில்லை- இன்று
பூப்படைந்த பெண்களுக்கும் பாதுகாப்பில்லை.
நல்லதோர் ஈழம் செய்தே- அதை சிங்களத்திடம் இழந்துவிட்டோமா? சொல்லுங்கள் என்னுறவுச் சொந்தங்களே- இனியாவது
ஒன்றிணைந்து உரிமைக்கு குரல்கொடுங்கள்.
சாவீட்டில் அழுவதற்கு பிரேதமில்லை-
அங்கு ஓலமிட்டுக் கதறுதற்கும் சுதந்திரமில்லை குளித்திடப் பெண்களுக்கு மறைப்பில்லை- எங்கு
போவதற்கும் முள்வேலி விடுவதில்லை.
பெற்று வளர்த்தவளே என்தாயே- உன்
பதுங்கு குழியே சவக்குழியானதோ?
பத்துமாதம் சுமந்தென்னைப் பெற்றவளே- உனக்கு
வாய்க்கரிசி போடுதற்கும் வக்கில்லையே.
செல்விழுந்து செத்ததொரு தாயாம்- அவள்
பால்குடிக்க பரிதவித்த சேயாம் கஞ்சிக்கு திரிந்ததோர் பெண்ணாம்- கெட்ட சிங்களன் கெடுத்துப் புதைத்தானாம்.
ஒருவேளை கஞ்சிக்கு அலைகிறாள் – தங்கை
சிலவேளை இராணுவம் பசிதீர்க்கும் தன்பங்கை மறுவேலை மாற்றுடைக்கு இல்லாத மங்கை மானத்தோடு வாழணுமா சொல்லுங்கள் பங்கை முத்துக்குமாரன் பத்தி எரிந்தானே- அதைப்
பற்றி யாரும் கேட்டாரா? இல்லையே!
ஐ.நா முன்பு முருகதாசன் பொசுங்கினானே- எந்த
நாயாவது திரும்பிப் பார்த்ததா? இல்லையே!
என்செய்வோம் எவரிடம் முறையிடுவோம்- ஆண்டவனே
உன்கையில் ஆயுதம் தாங்கியதால்
உன்னையும் பயங்கரவாதி என்றாரோ- முள்
வேலிக்குள் அடைத்து வைத்தாரோ?
கந்தனே, எம்மைக்கைவிட்டு விட்டாயே- எங்கள் கர்த்தரே, நீரும் கண்மூடிக் கொண்டீரே காக்காதிருக்க கைலஞ்சம் தந்தாரோ- எம்மை பார்க்காதிருக்க பெட்டிசமே போட்டாரோ?
இறந்த தங்கையை நிர்வாணம்செய்து- கொடிய
இராணுவம் புரிந்த கொடூரங்களையின்று
உலகமே பார்த்து வாய்மூடிநிற்க- தமிழ் பெண்கள்
செய்த பாவம்தான் என்ன?
சிங்களப் பெண்களை தொட்டதுண்டா- புலிகள்
நிர்வாணம் செய்து இழிவு படுத்தியதுண்டா?
எங்களின் உரிமையை தந்திருந்தால்- அங்கு
வேங்கைகள் தோன்றிட காரணம் ஏது?
உரிமை கேட்டபோது உதைத்தார்கள் – தந்தை அஹிம்சைப் போராட்டத்தை நகைத்தார்கள் ஆயுதம் கண்டுதான் அலறினார்கள் – பின்பு பேச்சு வார்த்தை என்று பேய்க்காட்டினார்கள்.
புத்தனது கோயிலும் பிக்குகளின் காவியும்- நம்
வன்னியிலே குடியேறப் போகுதாம்
சிங்களவர் பாசையும் சிங்களத்தின் ஆட்சியும்- எம் செந்தமிழை கற்பழிக்கப் போகுதாம்.
உணவும் உடையும் எமக்குப் போதுமாம்- அவனுக்கு
உரிமை உடமை யாவும் வேண்டுமாம் உணர்வு உணர்ச்சியின்றி வாழ்வதா?- தமிழன் தாகத்தை மறந்து இனிச்சாவதா?
வெள்ளை மாளிகைமுன் மண்டியிட்டோம்- கடும் கொட்டும் பனியிலும் கதறி நின்றோம் கனடா விலிருந்து நடந்து வந்தோம்- உலகம் கேட்கவில்லை காதில் வாங்கவில்லை.
நாதியற்று நிற்கிறோம் ஓபாமா- உன் கண்களை
நீ மூடிக் கொள்ளலாமா? அடிமையினம் ஆளுகின்ற போது- நாம்
ஆண்ட இனம் ஆளமுடியாதா?
கருணை இல்லாதவன் கருணாநிதி- ஈழத்து
கருணா இழைத்ததோ பெரிய சதி வைக்காது உன்பெயரை நம்சந்ததி- இனி மறக்க மாட்டோம் கருணாநிதி உனதுசதி.
தலைவனாக நீயிருக்கும் வேளையில்- நம் தமிழகத்து மீனவரைக் கொன்றதை தடுக்காமல் தவறிழைத்த பாவி நீ- ஈழத் தமிழனையா பாதுகாக்கப் போகிறாய்? தண்ணிக்காய் தமிழர்களை
உதைத்ததை- அன்று கச்சதீவை தாரைவார்த்துக் கொடுத்ததை
கேளது பாராது இருந்ததை- அறிஞர் அண்ணாவே பார்த்தாலும் கலங்குவார்.
கடிதமெல்லாம் எழுதியது போதும்- ஐயா கவிதை பாடிக் கிழித்ததெல்லாம் காணும் தமிழர்கள் தலைநிமிர வேண்டும்- அதற்கு தன்மானம் உனக்கென்றும் வேண்டும்!
உன்னைத்தான் நம்பினோம் தலைவா- எம்மை
உதாசீனம் செய்தாயே சரியா?
மண்ணைத்தான் மதிக்காது போனாய்- தமிழன்
மானத்தையும் மிதித்தாயே முறையா?
போராட்டம் முடிந்தது புலிகளும் ஒழிந்தது- சரி புதைச்சாச்சு மனிதபிமானத்தோடு தமிழரைப் பாருங்கள்- உங்களை மன்றாடிக் கேட்கிறேன் மக்களைக் காப்பற்றுங்கள்.
மூன்றுலட்சம் தமிழர்க்கு வாழ்வுதருங்கள்-
அங்கு குற்றுயிராய் கிடப்போருக்கு மருந்து பூசுங்கள்
கேட்பாரற்ற சிசுக்களுக்கு உதவி செய்யுங்கள்- கம்பி வேலிக்குள் துடிப்போர்க்கு பிச்சை போடுங்கள்.
கடையிலுடை வாங்கும்போது பார்த்து வாங்குங்கள்- இரத்தக் கறையிருக்கும் வேண்டாமென்று மறுத்துவிடுங்கள்
கொடுக்குமுங்கள் பணம்நாளை கொல்லும் தமிழனை- எனவே
மேடின் சிறிலங்கா கண்டால் போட்டு மிதியுங்கள்!
வருங்கால சந்ததியர் விழித்துக் கொண்டார்கள்- நமது
உரிமைப் போராட்டத்தைப் புரிந்து கொண்டார்கள்
பிறந்தமண்ணின் விடிவிற்கு எழுந்து விட்டார்கள்- சற்று பொறுத்திருப்போம் உரிமையினை பெற்றிடுவார்கள்
ஓரணியில் நாங்களினி ஒன்று சேருவோம்- நம்
உரிமைகளைப் பெற்றிடனாம் இன்று கூடுவோம்
உண்மைக்கும் நீதிக்கும் என்றுமுழைப்போம்- இந்த
உலகமே உரிமைகளை தந்திட வைப்போம்.
ஒன்றாக வேண்டும் வென்றாக வேண்டும்- தமிழர்
நன்றாக வேண்டும் நலமாக வேண்டும்
நன்றாள வேண்டும் நின்றாள வேண்டும்- நாம்
மண்ணாள வேண்டும் உங்களுதவி வேண்டும்.
வன்னியையவன் எரிச்சதனால் அங்கே- தமிழ்
தாகமது குறைந்திடுமா இங்கே உரிமையது வந்துவிடும் வேளை- ஈழம் மலர்ந்துவிடும் புலர்ந்துவிடும் நாளை.
நாளைய பொழுது நல்லாய் விடியும்- என்றும்
நினைத்தது நடக்க தமிழர் துன்பம் மடியும்
நல்லதை நினைத்து நன்றாய் வாழுங்கள்- இனி
நல்லது நடக்கும் ஒன்றாய்க் கூடுங்கள்!
சிகாகோ பாஸ்கர்
இணைப்பு: Nila20 Aug 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment