WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Saturday, November 7, 2009

தமிழகத்தில் உள்ள நாங்களும் கம்பி வேலிகளுக்கு இடையில்தான் வசிக்கிறோம் ‐ தமிழக அகதி முகாம்களின் அவலம் ...!!!

தமிழகத்தில் உள்ள நாங்களும் கம்பி வேலிகளுக்கு இடையில்தான் வசிக்கிறோம் ‐ தமிழக அகதி முகாம்களின் அவலம்
இவ் விடயம் 06. 11. 2009, (வெள்ளி), தமிழீழ நேரம் 16:45க்கு பதிவு செய்யப்பட்டது
தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதி முகாம்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பிரச்சனைகள் இருப்பதாகவும். அவைகளைக் களையவும். அகதிகளின் வாழ்வை மேம்படுத்தவும் 12 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியிருப்பதாகவும் அண்மையில் அறிவித்தார். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி.


இந்நிலையில் தமிழக அகதி முகாம்களின் அவல நிலைக்கு எடுத்துக் காட்டாய் உள்ளது சேலம் மாவட்ட அகதி முகாம். சேலம் மாவட்டத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளின் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகிவருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத முகாம்களில் வசிக்கும் இவர்களது நிலை பரிதாபகரமாக உள்ளது. சேலம் மாவட்டத்தில் செந்தாரப்பட்டி தம்மம்பட்டி நாகியம்பட்டி அத்திக்காட்டனூர் குருக்கப்பட்டி பவளத்தானூர் சித்தர் கோயில் ஆகிய பகுதிகளில் உள்ள 8 முகாம்களில் 972 குடும்பங்களைச் சேர்ந்த 3746 இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்கள்.

கடந்த பல ஆண்டுகளாக கண்டு கொள்ளப்படாமல் இருந்து வந்த இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலை அமைச்சர்களின் ஆய்வையொட்டி தெரியவந்துள்ளது. இங்கேயும் கம்பி வேலிக்குள்தான்… இலங்கையில் உள்ள முகாம்களில் மட்டும்தான் கம்பி வேலிக்குள் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால் தமிழகத்தில் உள்ள நாங்களும் கம்பி வேலிகளுக்கு இடையில்தான் வசிக்கிறோம் என்கின்றனர் அத்திக்காட்டனூர் முகாம் மக்கள். இந்த முகாமில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 116 ஆண்கள் 93 பெண்கள் உள்ளிட்ட 209 பேர் வசிக்கின்றனர். இந்த முகாமின் நிலை குறித்து வவுனியாவில் இருந்து 1987‐ல் அகதியாக வந்து குடியேறிய ராசு (68) கிளிநொச்சியில் இருந்து வந்த ரமேஷ் (32) ஆகியோர் கூறினர்.

இந்த முகாமில் உள்ள பெண்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை கழிப்பிட வசதியே கிடையாது. 1987‐ல் நாங்கள் வந்தபோது கட்டப்பட்ட தாற்காலிக கழிப்பிடங்கள் சில ஆண்டுகளிலேயே பழுதடைந்து உபயோகமற்றுப் போயின. அதன் பிறகு அந்த நிலத்தை முகாமிற்கு அருகில் உள்ள விவசாயிகள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் பெண்களுக்கு மட்டுமாவது கழிப்பிடம் வேண்டும் என்று அரசுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.33 ஆயிரம் செலுத்தி நாங்களே பெண்களுக்காக கழிப்பிடம் கட்டியுள்ளோம். இந்த முகாமுக்கு மட்டுமல்லாது அருகிலுள்ள பவளத்தானூர் குருக்கப்பட்டி முகாம்களுக்கும் போதுமான மின்சார வசதி கிடையாது. குறைந்த அழுத்த மின்சாரம் மட்டுமே வழங்கப்படுவதால் மின் விளக்குகள் கூட சரிவர எரிவதில்லை. இதனால் குழந்தைகள் படிக்க முடிவதில்லை. மேலும் இங்கு சாக்கடை வசதி இல்லாததால் கழிவு நீரை சாலையிலும் அருகிலுள்ள விவசாய நிலத்திலும் வெளியேற்றி வருகிறோம். இதனால் முகாமில் இருப்பவர்களுக்கும் சுற்றுப்புற விவசாயிகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.

பழுதடைந்த வீடுகள்: மேலும் இங்குள்ள தாற்காலிக வீடுகள் கட்டப்பட்டு சுமார் 20 ஆண்டுகள் ஆகின்றன. இதனால் ஓடுகள் அனைத்தும் பழுதடைந்தும், சுவர்கள் எப்போது வேண்டுமானாலும் விழக்கூடும் என்ற நிலையில் உள்ளன. எங்களுக்கு வழங்கப்பட்ட வாகன ஓட்டுநர் உரிமத்தை கியூ பிரிவு போலீஸôர் பறித்துக் கொண்டுள்ளனர். அவற்றை உடனடியாக திருப்பித் தர வேண்டும். கடந்த ஓராண்டுக்கு முன்பு இப்பகுதிக்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம் குடிநீர், கழிப்பிடம், கான்கிரீட் சாலை, மின்சார வசதி கோரி மனு அளித்தோம். ஆனால் குடிநீருக்கு மட்டும் ஒரு குழாய் அமைத்துக் கொடுத்தனர். அதிலும் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்றனர்.

அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் மண் வெட்டுவது, கட்டட வேலை போன்ற கூலி வேலைகளை செய்து வருகின்றனர். இவர்களது குழந்தைகளை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். அத்திக்காட்டனூர் முகாமைச் சேர்ந்த கெனட் நிரோமன் (19) பிளஸ்‐2 முடித்து சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஸியோதெரபி படிப்பில் சேர்ந்துள்ளார்.

இவரது தாய் அற்புதமேரி தாயகத்தில் எங்கு இருக்கிறார் என்று தெரியாத நிலையில் தந்தை செபஸ்டினுடன் (60) வசிக்கிறார். செபஸ்டின் கூலி வேலையில் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு அவரை படிக்க வைத்து வந்த நிலையில், வயது முதிர்ச்சி காரணமாக செபஸ்டின் வேலைக்குச் செல்ல முடியவில்லை. இதனால், கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கிறார் நிரோமன். இவர்கள் நிலை இப்படி என்றால் இதே முகாமைச் சேர்ந்த சிவரஞ்சனியின் (32) நிலை பரிதாபத்துக்குரியது. இவரது கணவர் சுரேஷ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், விபத்தில் கை ஊனமுற்ற ஜேம்ஸ் (17), 6‐ம் வகுப்பு படிக்கும் ஐசக்ராஜ் (12), 4‐வது படிக்கும் சிந்துஜா (9) ஆகியோருடன் வசித்து வருகிறார் சிவரஞ்சனி.

சித்தாள் வேலைக்குச் சென்று குழந்தைகளை படிக்க வைக்கும் இவரது இரண்டாவது மகன் ஐசக்ராஜூக்கு வயிற்றில் புற்று நோய் இருப்பது கடந்த ஒராண்டுக்கு முன்பு தெரியவந்துள்ளது. இதற்காக ரூ.70 ஆயிரம் செலவழித்து இரண்டு முறை அறுவைச் சிகிச்சை செய்துள்ள நிலையில் மேலும் ஒரு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வரும் தன்னால் அவ்வளவு செலவு செய்ய முடியாது. எனவே தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை எங்களுக்கும் விரிவுபடுத்தி என் மகனைக் காப்பாற்ற வேண்டும் என்றார் சிவரஞ்சனி. இதே கோரிக்கையை வலியுறுத்திய இதய நோயாளி சுசீலா (38), எங்களது இழிநிலையை பார்வையிட்டதுடன் நின்றுவிடாமல் நல்வாழ்வுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார் ஏக்கத்துடன்.



நெருடல்.com

No comments: