விசாரணைக்கென கூட்டிச் செல்லப்பட்டவர்கள் திரும்பி வரவில்லை..ஏதிலி முகாம் மக்கள்
எழுதியவர் ...வன்னியன் on November 17, 2009
எம்மையும் அழைத்துச் செல்வார்களோ என்ற அச்சத்துடன் நாம் ஏதிலி முகாம் மக்கள் கூட்டமைப்பு எம்.பிக்களிடம் தெரிவிப்பு
எமது பிள்ளைகள் மற்றும் உறவினர்களை விசாரணைக்கென முகாம்களிலிருந்து கூட்டிச்செல்கின்றனர். ஆனால் அவர்கள் பின்னர் விடுவிக்கப்படுவதில்லை; திரும்பி வருவதில்லை. அதனால்,எம்மையும் எந்த நேரத்தில் அழைத்துச் செல்வார்களோ என்ற அச்சத்துடனேயே, அச்சமான சூழ்நிலையிலேயே நாம் இந்த ஏதிலிமுகாம்களில் எமது நாள்களை ஓட்டுகிறோம்; வாழ்ந்து வருகின்றோம்.
இவ்வாறு வவுனியா ஏதிலி முகாம்களில் வாழும் மக்கள் தம்மை நேற்றுச் சந்தித்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களிடம் தெரிவித்தனர்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர் முடி வுற்ற ஆறு மாதங்களில் நேற்று முதன் முறையாக முகாம்களில் உள்ள ஏதிலிகளைப் பார்வையிடச் சென்றனர். அவர்களில் ஒருவரான பா.அரியநேத்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், என்.ஸ்ரீகாந்தா, செல்வம் அடைக்கலநாதன்,டாக்டர்.தோமஸ் வில்லியம், சி.கிஷோர், வினோநோகராதலிங்கம் ஆகியோர் நேற்று வன்னி ஏதிலி முகாம்களுக்கும், மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளுக்கும் நேற்று அரசினால் அழைத்துச்செல்லப்பட்டனர்.
இது தொடர்பாக பா.அரியநேந்திரன் நேற்று உதயனுக்குத் தெரிவித்தவை வருமாறு:
ஏதிலி முகாம்களில் உள்ள மக்கள் தம்மை சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யுங்கள் என்றே எம்மிடம் கோரிக்கை விடுத்தனர்.
அரிசி, மா, பருப்பு மட்டுமே தற்போது மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்படுவதால் தமக்கு குடிதண்ணீர், மலசல கூடப்பிரச்சினைகள் இல்லை என்றும் கூறினர். ஆனால் அன்று முதல் இன்று வரை தமக்கு அரிசி, மா, பருப்பு மாத்திரமே வழங்கப்பட்டு வருகின்றன. என்று கூறினார்.
அதேவேளை “விசாரணை எனக்கூறி எம்மை எப்போதாவது அழைத்துச்சென்று விடுவார்களோ என்ற அச்சமான சூழ்நிலையில் நாம் தொடர்ந்து ஏதிலி முகாம்களில் வாழந்துவருகின்றோம்” .”எமது பிள்ளைகள், உறவினர்களை விசாரணைக்கென அழைத்துச் செல்கின்றனர். ஆனால் பின்னார் அவர்கள் விடுவிக்கப்படுவதில்லை. எம்மையும் விசாரணைக்காக அழைத்துச்செல்வார்களோ என்ற அச்ச சூழ்நிலையிலேயே நாம் வாழ்ந்து வருகின்றோம்” என்று ஏதிலிகளில் சிலர் என்னிடம் கூறினர். துணுக்காய், மன்னார், அடம்பன் பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்டவர்களை சென்று பார்வையிட்டோம்.
கண்ணிவெடி அகற்றும் பகுதிக்குச் சென்று அங்கு நடைபெறும் பணிகளையும் பார்வையிட்டோம். தாம் இழந்த சொந்தங்களை யார் பெற்றுத் தருவார் என்ற ஆதங்கத்திலேயே இம்மக்கள் இன்னும் வாழ்கின்றனர் என்பதை அறியக்கூடியதாக இருந்தது.
ஏதிலி முகாம் மக்கள் தம்மை சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்ய உதவி செய்யுங்கள் என்று தான் தொடர்ந்து எம்மிடம் கேட்டனர் என்றார்.
முகாம்களைப் பார்வையிடச் சென்ற கூட்டமைப்பின் எம். பிக்களில் ஒருவரான என். சிறிகாந்தா ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்ததாக அந்தப் பத்திரிகை வெளியிட்டதாவது: செட்டிக்குளம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமரவே விரும்புகிறார்கள். ஒரு நலன்புரி நிலையத்தில் இருந்து இன்னொரு நலன்புரி நிலைத்தில் இருக்கும் தமது உறவினர்களை அவர்கள் சந்திக்க வசதியாக ஓர் ஒழுங்கமைப்பின் கீழ் “பாஸ்” வழங்க வேண்டும். மக்கள் தமது குறைபாடுகளைத் தெரிவித்தனர். அவை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடியிருக்கிறோம். மக்களை மீள்குடியமர்த்தும் செயற்பாட்டின் வேகம் தொடர்பாக நாம் திருப்தியடைகிறோம்.ஏதிலிகளுக்கு அடிப்படைத் தேவைகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் நிலைமை விளங்கிக் கொண்டுள்ளனர். மிகத் துணிச்சலுடன் தமக்கு நேர்ந்த நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். ஏதிலிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அரசாங்கமும் இராணுவ அதிகாரிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நாம் பாராட்ட வேண்டும். ஏதிலியின் முழுப் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் நாம் ஆக்கபூர்வமான வழியில் அணுகவேண்டும் என்றார்.
மீள் குடியேற்ற அமைச்சர் ரிஸாட் பதியுதீனின் ஏற்பட்டில் கூட்டமைப்பின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பத்துப்பேர் அடங்கிய குழுவினர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கொழும்பு இரத்மலானை விமான நிலையத்திலிருந்து அழைத்து செல்லப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களைச் சந்தித்தபோது மன்னார், வவுனியா, கிளிநொச்சி அரச அதிபர்களும் அவர்களுடன் பிரசன்னமாகி இருந்தனர்.
WWW.MEENAKAM.COM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment