குடியிருக்க வீடுதேடி அலைகிறோம்…
எழுதியவர்ஏதிலி on November 17, 2009
வன்னியில் சொல்லொணாத் துயரங்களைச் சுமந்து வந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்கள் கட்டம்கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு விடுதலையான மக்கள் இயல்பு வாழ்வில் ஈடுபட முடியாத வண்ணம் அவர்களைப் பின்தொடர்கிறது துயரம். நலன்புரிநிலையங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட 58,296 பேர் இதுவரை குடாநாட்டுக்கு வந்துசேர்ந்துள்ளனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான நெருக்குதல்களையும், அழுத்தங்களையும், பிரச்சினைகளையும் நிதமும் சந்திக்க வேண்டியிருக்கிறது. அவர்களில் சிலர் இவ்வாறு பிரச்சினைகளால் சூழப்பட்ட தமது தற்போதைய அவல நிலைகளை வெளிப்படுத்துகிறார்கள்.
“இரண்டும் கெட்டான் வாழ்க்கை”
குடும்பஸ்தர் (வயது55, கடற்தொழிலாளிதற்போது கரவெட்டியில் வசிக்கிறார்)
நாங்கள் பல படகுகளை வைத்துத் தொழில் செய்து சீரும் சிறப்புமாகத்தான் இருந்தோம். ஆயினும் யுத்தம் எல்லா வற்றையுமே தலைகீழாக மாற்றி விட்டது. யுத்தத்தின் இறுதிநாள்களில் எம்முடைய உயிரைக் கடைசியாக எஞ்சியிருந்த ஒரேயொரு படகிலேயே சுமந்துவந்தோம். நாங்கள் தரை யிறங்கிய முனைப்பகுதியில் படகினைக் கைப்பற்றிய கடற்படையினர் எம்மை நலன்புரிநிலையத்தில் தங்க வைத்தனர். தாம் தடுத்துவைத்துள்ள எமது படகினை நாங்கள் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டதும் எம்மிடமே மீள ஒப்படைப்பதாகவும் கூறினர். நாங்கள் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் பூர்த்தியாகப் போகின்றது. ஆயினும் எம்முடைய படகு எம்மிடம் தரப்பட வேயில்லை. பல இடங்களுக்கும் அலைந்து திரிந்ததுதான் மிச்சம். எதுவுமே நடக்கவில்லை. அத்தோடு எம்முடைய சொந்த இடத்திற்குச் சென்று அங்கு மீளக்குடியமரவோ அல்லது கடற்தொழில் செய்யவோ இதுவரை அனுமதி தரப்படவேயில்லை. இதனால் இன்னமும் நாங்கள் உறவினர் ஒருவரின் வீட்டிலேயே ஒண்டிக்குடித்தனம் செய்துவருகிறோம். இதனால் பல சிக்கல்கள் எழவே செய்கின்றன. அவர்களது வீட்டிலும் ஏழெட்டுப் பேர். எமது குடும்பத்திலும் ஆறு பேர். மிகச் சிறிய வீட்டில் பத்துப் பன்னிரண்டு பேர் வசிப்பது மிகவும் சிக்கலான விடயம்தான். தண்ணீர், கழிப்பிடப்பாவனை, உணவு சமைத்தல் போன்ற விடயங்களில் இப்போதே சிறுசிறு முரண்பாடுகள் தோன்றத் தொடங்கிவிட்டன. போக்கிடமேது மின்றி தஞ்சமடைந்துள்ள நாம் எதுவுமே பேசாமல் ஒதுங்கித்தான் போகவேண்டும். இல்லாவிட்டால் இருக்கும் இடமும் இல்லாமல் போய்விடும். இப்படியாக இரண்டும் கெட்டான் நிலையில் எம்முடைய வாழ்க்கையை நகர்த்த வேண்டியிருக்கிறது. வன்னியிலிருந்தபோது எம்முடைய உறவினர்கள் அனுப்பிவைத்த பணத்தைத்தான் இத்தனைநாளும் வைத்திருந்த எம்முடைய செலவுகளுக்குப் பயன்படுத்தி வருகிறோம். எத்தனை நாளுக்குத்தான் அதுவும் அப்படியே இருக்கும்? அந்தப் பணம் முடிந்த பின்னர்தான் எமக்கு தொழில் இல்லாததன் உண்மையான விளைவு தெரியவரும். அவ்வாறான நிலை வரமுன்னரே எம்முடைய படகினை மீளவும் தருவார்களாயின் இங்குள்ள கடற்தொழிலாளர் சங்கங்களோடு தொடர்புகொண்டு தொழில் செய்து வருவாய்க்கு ஏதாவது ஒருவழி செய்யலாம். முன்னரைப்போல செல்வச் செழிப்போடு வாழமுடியா விட்டாலும் வயிற்றைக் கழுவவாவது எமது தொழில் உதவும் என்று நம்புகிறோம். ஆனால் அவற்றுக் கெல்லாம் அடிப்படையாக எம்முடைய உயிரைக் கடைசிக் கணத்திலும் காவிவந்த படகினை உரியவர்கள் எம்மிடம் தருவார்களா?
அகதி முகாம்களில் இருந்து வெளியே வந்த போதிலும்
அவலங்களுடன் வாழும் மக்களின் ஆதங்கங்கள்
“எங்களுக்கு பிரபல கல்லூரிகள் எட்டாக் கனிகள்தானா?”
மாணவன் (தரம்8, கொக்குவில்)
வன்னியிலிருந்தபோது குண்டு மழைக்கு நடுவிலும் ஏதோ படிக்க முடிந்தது. போர் பற்றிய யோசனையைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையும் எங்களுக்கு இருக்கவில்லை. முகாமிலிருந்தபோது எப்போது வெளியே வருவோம்? மற்றைய பிள்ளைகள்போல எப்போது கல்வி கற்கத் தொடங்குவோம்? என்று ஏங்கித் தவித்தோம். முகாமிலிருந்து வெளியே வந்த பிறகுதான் கல்வி கற்பதில் உள்ள பல பிரச்சினைகளை நாங்கள் தெளிவாக அறிய முடிந்தது.
நான் நன்றாகப் படிக்கக்கூடியவன் என்பதால் எனது பெற்றோர் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபலமான கல்லூரியொன்றில் என்னைச் சேர்ப்பதற்கு ஆசைப்பட்டனர். அவர்கள் ஆசைப்பட்டு என்ன பிரயோசனம்? கையிலே காசேயில்லாத எங்களிடம் மிகப்பெரியளவில் அன்பளிப்புத் தொகையொன்றைக் குறித்த பாடசாலை நிர்வாகம் கட்டுமாறு கோரியது. அவ்வாறு அன்பளிப்புத் தொகை வழங்கப்பட்டால் மட்டுமே குறித்த கல்லூரியில் எனக்கு இடம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் அதற்கு எங்களது குடும்பப் பொருளாதார நிலைமை எள்ளளவும் இடம் கொடுக்காததால் கல்லூரி பற்றிய கனவுகளை மூடைகட்டி வைத்துவிட்டு எமக்கு அருகிலுள்ள ஒரு பாடசாலையில் இணைந்து கற்று வருகிறேன். மாணவர்களை இணைப்பதற்கு எவ்வித நிதியினையும் பாடசாலை அதிபர்கள் வசூலிக்கக் கூடாதென அறிக்கையொன்றை அனுப்பிய பின்னரும்கூட இவ்வாறான நிலைமை எனக்கு நேர்ந்துள்ளது. பணம் படைத்தவர்கள் மட்டும்தான் வசதிகள் நிறைந்த கல்லூரிகளில் கற்க முடியுமா? என்னைப்போல எல்லாவற்றையும் இழந்துவிட்டுத் தவிக்கும் ஏழை மாணவர்களுக்கு இக்கல்லூரிகள் எட்டாக் கனிகள்தானா?
“வன்னியிலிருந்து வந்தவள் என்பதால் வேலையில்லை”
குடும்பப்பெண் (கணவனையிழந்தவர்வயது 35 தற்போதுசங்கானையில் வசித்து வருகிறார்.)
நானும் கணவரும் எமது பிள்ளைகளை சுமந்துகொண்டு வரும்வழியில் ஷெல்பட்டு என் கண்முன்னாலேயே அவர் இறந்துவிட்டார். பிள்ளைகளின் வாழ்வுக்காக மனதைக் கல்லாக்கிக் கொண்டு முகாமுக்கு வந்துசேர்ந்தேன். முகாமிலிருக்கும்வரை பெரிதாக எந்தத் தேவையும் எமக்கு இருக்கவில்லை. உணவுக்குத் தேவையான பொருள்கள் கிடைத்தன. அத்தோடு தொண்டு நிறுவனங்களும் அன்றாடத் தேவைக்குரிய பாத்திரங்கள், உடுபுடைவைகள், பால்மா வகைகள், சத்துணவுப் பொதிகள் என்பவற்றை வழங்கியமையால் ஓரளவுக் கேனும் நிம்மதியாக இருக்கமுடிந்தது. முகாமிலிருந்து வெளியே வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்றெண்ணி எப்போது விடுவிக்கப்படுவோம் என்று காத்திருந்தோம். ஆனால் இப்போது விடுவிக்கப்பட்டதை விடவும் முகாமிலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அந்தளவுக்கு நிலைமைகள் எங்களுக்கு எதிராகவே இருக் கின்றன. முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை ஆயிரத் தெட்டுப் பதிவுகளை மேற்கொண்டு விட்டோம். எங்கும் ஒரே பதிவுதான். பிரதேச செயலகம், கிராம அலுவலர் அலுவலகம், தொண்டு நிறுவனங்களின் அலுவலகங்கள் என்பவற்றுக்கு மாறி மாறி ஓடித்திரிந்து கால்கள் சோர்ந்து விட்டன. இத்தனைக்கும் எமது வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு ஒரு சைக்கிள்கூட இல்லை. கையிலும் போதிய காசு இல்லை. இவ்வாறான ஏழைகளுக்கு கால்நடைதான் தோழன். நடந்து கொண்டேயிருக்கிறோம். ஆயினும் நல்லது எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. கணவர் இல்லாததால் நான்தான் ஏதாவது வேலைசெய்து குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய கட்டாயம். ஆயினும் வேலைக்குச் சென்றால் “வன்னியால் வந்தவள்” என்று எனக்கு எவருமே வேலைதர முன் வருவதில்லை. இப்படியே தொடர்ந்தால் பட்டினி கிடந்து சாவதைத் தவிர வேறு வழியில்லைத்தான்.
“குடியிருக்க வீடுதேடி அலைகிறோம்”
இளைஞன் (வேலையற்ற பட்டதாரிவயது 29 தற்போது கல்வியங்காட்டில் வசித்து வருகிறார்.)
படித்துப் பட்டம் பெற்றிருந்தும்கூட நான் இப்போது கூலி வேலைக்குத்தான் சென்று வருகிறேன். நாள் ஒன்றுக்கு முந்நூறு ரூபா கிடைக்கும். சிலவேளைகளில் ஐந்நூறு ரூபாவும் கிடைப்பதுண்டு. இந்தச் சொற்ப சம்பளத்தை வைத்துக்கொண்டுதான் ஐந்து பேர் கொண்ட எம்முடைய குடும்பத்தின் நாளாந்தச் சக்கரம் சுழல்கிறது. எல்லாவற்றுக்கும் பிறரிடம் கையேந்த வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். முன்னர் நாங்களும் நல்ல வசதியாகத் தான் இருந்தோம். வன்னியில் ஏக்கர் கணக்கில் காணியும், வசதியான வீடு வளவும் எங்களுக்கு இருந்தது. அவ்வளவற்றையும் தொலைத்து விட்டு இப்போது பிறரின் வீடுகளில் கூலி வேலை செய்ய வேண்டிய நிலைமை.
முன்னர் அப்பாதான் குடும்பத்தைச் சுமந்தார். வன்னியில் அப்பா வைத்திருந்த கடையில் எப்போதுமே நல்ல வியாபாரம்தான். அவர் ஒரு போதும் ஓய்ந் திருப்பதில்லை. எப்போதுமே பம்பரம் போல சுற்றிக் கொண்டிருப்பார். ஆனால் இப்போது ஒற்றைக் காலில்லாமல் மூலையில் முடங்கிக் கிடக்கிறார். இதனால் குடும்பப் பொறுப்பைச் சுமக்க வேண்டிய நிலை என்னில் வந்து விட்டது. அதனால்தான் கௌரவத்தைப் பார்க்காமல் கூலித் தொழிலுக்குச் சென்று வருகிறேன். அங்கும் மிகக்குறைந் தளவு சம்பளத்தையே தருகிறார்கள். நாங்களும் வேறு வழியின்றி அவர்கள் தருவதை பேசாமல் வாங்கிக் கொண்டு வருகிறோம். தற்போது எம்முடைய உறவினர் ஒருவரின் வீட்டிலேயே தங்கியிருக்கிறோம். எத்தனை நாளுக்குத் தான் பிறத்தியாரின் வீட்டிலேயே சீவிப்பது? நாங்கள் தனியாக வசிக்க வீடொன்றைத் தேடி வருகிறோம். ஆனால் இப்போது வீடுகளின் வாடகை மிகமிக உயர்ந்து விட்டது. அத்தோடு வன்னியிலிருந்து அதிகளவானோர் வருவதால் வீடுகள் கிடைப்பதும் அரிதான விடயமாகவே இருக்கின்றது. எனக்கு ஒரு அரசாங்கத் தொழில் கிடைக்கும் வரையும் இவ்வாறான இன்னல் நிறைந்த வாழ்வு தான் தொடரப்போகிறது.
ஒளண்யன்
நன்றி: உதயன்
WWW.MEENAKAM.COM
--------------------------------------------------------------------------
மீளக்குடியமர்ந்தும் வாழ வழி தெரியவில்லை! ஏங்கித்தவிக்கும் முஸ்லீம் மக்கள்
எழுதியவர்.......வன்னியன் on November 17, 2009
மீளவும் குடியமர யாழ்ப்பாணம் வந்துள்ள முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இடர்களையும் தமது மன அவசங்களையும் தேவைகளையும் அவர்களில் சிலர் இங்கு வெளிப்படுத்துகிறார்கள்.
எப்போதுமே வளங்கொழிக்கும் பூமி யாகத் திகழ்வது யாழ்ப்பாணம். இங்கு காலங்காலமாகத் தமிழ் மக்களோடிணைந்து முஸ்லிம் மக்களும் வாழ்ந் திருந்தனர். ஆயினும் 1990 களில் ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களும் குடாநாட்டில் இருந்து வெளியேற வேண்டிய துன்பியல் சூழல் ஒன்று ஏற்பட்டது. 19 வருட காலம் அகதியாக அலைந்த இவர் கள் இப்போது மீளவும் குடியமர யாழ்ப்பாணம் வரத் தொடங்கியிருக்கிறார்கள். ஆயினும் இங்கு அவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. தாம் எதிர்கொள்ளும் இடர்களையும் தமது மன அவசங்களையும் தேவைகளையும் அவர்களில் சிலர் இங்கு வெளிப்படுத்துகிறார்கள்.
முகமது ஜின்னா
நான் 1986ஆம் ஆண்டில் இருந்து 1990 ஆம் ஆண்டு வரை நவீன சந்தைப் பகுதியில் தையல் கடை ஒன்றை நடத்தி வந்தேன். அதன் பின்னர் முஸ்லிம் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட போது நானும் இடம் பெயர்ந்து புத்தளத்தில் தற்காலிகமாக தங்கியிருந்தேன். நான் தையல் கடை வைத்திருந்த காலப்பகுதியில் எனது கடையில் ஏறக்குறைய 13 தொழிலாளிகள் பணிபுரிந்தார்கள். இப்போது போர் முடிந்த பின்னர் நிலைமைகள் சுமூகமாக இருப்பதை அறிந்து மீண்டும் யாழ்ப்பாணம் வந்துள்ளேன். பழைய படி என்னுடைய தையல் கடையை ஆரம்பிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஒரே ஒரு குறிக்கோளாக இருக்கின்றது. ஆனால் எனக்கு வாழ்வழித்த அந்தக் கடை போரின் உக்கிரத்தால் இப்போது உடைந்து போய் சிதைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.
வேறு ஏதாவது கட்டடத்தில் எனது தையல் கடையை தொடங்குவோம் என்று நினைத்தால் கூட அதுவும் சாத்தியமாகாத ஒன்றாகவே உள்ளது. ஏனெனில் இப்போதெல்லாம் கடைகளின் வாடகையும், அவற்றுக்கான முற்பணமும் மிகமிக அதிகரித்து விட்டன. 5 லட்சம் ரூபா வரை முற்பணமும் 5000 ரூபா வாடகையும் கேட்கிறார்கள். 15 வருடங்களுக்கு மேலாக அகதிகளாக இருந்த எங்களிடம் அவ்வளவு பணம் எப்படி இருக்கும். ஆயினும் எப்படியாவது கஷ்டப்பட்டு கடையை ஆரம்பித்து விட்டால் கைநிறைய சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கை என்னிடம் இப்போதும் உண்டு. ஆனால் அதற்கு யாராவது உதவி செய்தால் தான் முடியும் போலிருக்கின்றது. ஆனால் அவ்வாறான உதவிகளுக்கு யாரை அணுகுவதென்று தெரியாமல் இருக்கின்றது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் எமக்கும் ஏதாவது நிதியுதவி என்பது கூடத் தெரியவில்லை. எனினும் இங்கு ஏற்கனவே குடியேறியுள்ள எமது சமூகத்தை சார்ந்தவர்களிடம் இது பற்றி அறியலாம் என எண்ணுகின்றேன். இடம்பெயர்வதற்கு முன்னர் நான் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு அண்மையில் தங்கியிருந்தேன். இப்போது தங்குவதற்கு வீடு இல்லை. ஆகவே அதற்குரிய வசதிகளும் எனக்கு தேவைப்படவே செய்கின்றன. என்னுடைய குறைகளை உரியவர்கள் தீர்த்து வைப்பார்கள் என்று நம்பிக்கையோடு இன்னமும் காத்திருக்கிறேன்.
றிஸ்லின் பர்ஸானா பேகம் (காதி அபூபக்கர் வீதி)
எனக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். நாங்கள் புத்தளத்தில் இருந்து 2003ஆம் ஆண்டே இங்கு வந்து விட்டோம். ஆயினும் இங்கு வந்து பார்த்த போது நாங்கள் வாழ்ந்து குதூகலித்திருந்த எம்முடைய வீடு தரைமட்டமாக இருந்தது. அந்தக் காட்சியைப் பார்த்த போது எங்களுக்கு அழுகையே வந்துவிட்டது. எனினும் நாங்கள் சோர்ந்து போய்விடவில்லை. யாழ்ப்பாணத்திலேயே தொடர்ந்தும் இருப்பது என்று தீர்மானித்தோம். எங்களுக்கு உதவி செய்ய மக்கள் பணிமனையினர் முன்வந்தார்கள். சில காலம் மக்கள் பணிமனையிலேயே தங்கியிருந்தோம். அதன் பின்னர் எமது பள்ளியால் நாங்கள் குடியிருக்க ஒரு வீட்டினைத் தந்துதவினார்கள். ஆயினும் அதற்கு மாதாந்தம் 500 ரூபா வாடகையாகக் கட்டியாக வேண்டும். என்னுடைய கணவர் வேறு தொழில்கள் எதுவும் கிடைக்காத காரணத்தால் கூலி வேலைக்குத் தான் செல்வதுண்டு. அதுவும் ஒழுங்காகக் கிடைப்பதில்லை. அப்படி வேலை கிடைத்தாலும் கூட வேலைக்குத் தகுந்த ஊதியமும் கிடைப்பதில்லை. இதனால் குடும்பச் சுமையைக் குறைப்பதற்காக நான் சாப்பாடு செய்து விற்று வருகின்றேன். மதிய உணவு மற்றும் காலை உணவு தேவைப்படுபவர்கள் என்னிடம் முற்கூட்டியே சொல்லி வைப்பார்கள். ஆயினும் இவ்வாறு சாப்பாடு செய்து கொடுக்கும் வேலை கூட நிரந்தரமானதல்ல. எப்போதாவது தான் கிடைக்கும். நான்கு பிள்ளைகளும் பாடசாலைக்குச் செல்வதால் அவர்களுக்குரிய செலவீனங்களை ஈடு செய்யவே மிகுந்த கஷ்டப்பட வேண்டியிருக்கின்றது. சமுர்த்தி நிவாரணம் எங்களுக்கு கிடைகின்றது. எனினும் நலிவுற்றோருக்கான பண உதவி நிறுத்தப்பட்டுவிட்டது. இப்போது நாங்கள் வாடகைக்கு குடியிருக்கும் வீடு கூட வெகு விரைவில் விற்பனை செய்யப்படவிருக்கின்றது. இதனால் வெகு விரைவில் நாங்கள் இங்கிருந்து வெளியேற்றப்படும் சந்தர்ப்பம் நெருங்கி வருகின்றது. அவ்வாறான நிலை ஏற்பட்டால் எமது குடும்பம் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டியிருக்கும். எனவே அவசரமாக நாங்கள் தங்குவதற்கு ஒரு உறைவிடம் தேவை. அதனை யாரிடம் சென்று பெறுவதென்று தெரியால் தவிக்கின்றோம். எம்முடைய பொருளாதார நிலையை உணர்ந்த சர்வோதய நிறுவனம் தொழில் முயற்சிக்காக எமக்கு 20,000 ரூபா தர முன்வந்தது. ஆயினும் எவ்வித காரணங்களும் தெரிவிக்கப்படாமல் அத் தொகை நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்பட்டது.
புத்தளத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் எம்முடைய பணத்தையும் போட்டு வீடு ஒன்றைக் கட்டியிருந்தோம். ஆயினும் அங்கு தொழில் வாய்ப்புகள் மிக மிக குறைவு. எனவேதான் யாழ்ப்பாணத்திலேயே நிரந்தரமாகத் தங்கியிருக்கத் தீர்மானித்தோம் எனவே தொழில் ஒன்றை ஆரம்பித்து நாங்கள் முன்னேறுவதற்கும், இன்னமும் அலைந்து திரியாமல் நிம்மதியாக வாழ்வதற்கு வீடு ஒன்றைப் பெற்றுத்தரவும் தொண்டு நிறுவனங்களோ, அதிகாரிகளோ முன்வருவார்களா?
“வடக்கின் வசந்தம்” திட்டம்
வாழ்வு தருமா இவர்களுக்கும் ?
தாரிக் மகமத் சுலைமான் (மீராப்பிள்ளை அவனியூ)
19 வருட அகதி வாழ்க்கையில் நாங்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஏறக்குறைய உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் பாதிப்புற்றவர்களாகவே நாம் இருந்தோம். புத்தளத்தில் நாம் அகதிகளாகத் தங்கியிருந்த இடத்தில் இப்போது தான் வீட்டுத்திட்ட வேலைகள் நடைபெறுகின்றன. அதற்கு முன்னர் தங்குமிடம் சீரின்மையால் மிகுந்த கஷ்டப்பட்டோம். இங்கிருந்து நாங்கள் வெளியேற்றப்பட்ட போது கையிலே வெறும் ஆயிரம் ரூபா மட்டும் தான் இருந்தது. அதை வைத்துக் கொண்டு எத்தனை நாள் தான் வாழ முடியும்.
மீளவும் யாழ்ப்பாணம் வந்தபோது எங்களுடைய வீடுகள் எல்லாம் உடைந்திருந்தன. எம்முடைய வீடுகள் உடைபடுவதற்கு காரணமானவர்கள் இப்போதும் இங்கு இருக்கிறார்கள். மீளவும் குடியமர்ந்துள்ள பல முஸ்லிம் குடும்பங்கள் தங்க இடமின்றித் தவித்து வருகிறார்கள். இது பற்றி அண்மையில் இங்கு வந்திருந்த மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாட் பதியுனியிடமும் தெரிவித்திருக்கிறோம். ஆயினும் அவர் வந்த பின்னர் கூட மக்களுக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. இங்குள்ள அரசாங்கக் காணிகளில் எமக்கு வீடு கட்டித் தருவதாக சொல்லப்பட்டது. ஆயினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இங்கிருந்து இடம்பெயர்ந்து போன 4800 குடும்பங்களில் இதுவரை 192 குடும்பங்களே மீளவும் குடியேறியுள்ளன. அது தவிர இப்போது 8200 குடும்பங்களாக பெருகியும் விட்டனர். அவர்கள் அனைவரும் இங்கு வரும் போது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தங்குமிடப் பிரச்சினை தீவிரமாகி விடும்.எனவே இப்போதே உரியவர்கள் செயலில் இறங்க வேண்டும். 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாங்கள் யாழ்ப்பாணத்தில் எவ்வாறு சந்தோஷமாக வாழ்ந்திருந்தோமோ அந்த நிலை மீண்டும்மலர வேண்டும்.
சுஹைலா (ஆஸ்பத்திரி வீதி)
நாங்கள் 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்வுக்கு பின்னர் அநுராதபுரத்தில் உள்ள இக்கிரிகொலாவ என்னும் இடத்தில் தங்கியிருந்தோம். அங்கு வாழ்க்கையை நகர்த்திச் செல்ல மிகவும் கஷ்டப்பட்டோம். எனவே யாழ்ப்பாணம் வந்து மீண்டும் வீடு கட்டி மகிழ்வாக வாழ நினைத்தோம். நாங்கள் வீடு கட்டுவதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதுவரை 50,000 ரூபா தந்துள்ளார். ஆயினும் அந்தப் பணம் வீடு கட்டப் போதாதென்பதால் அதனை வங்கியில் வைப்புச் செய்துள்ளோம். இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்து பின்னர் அந்த நிதியையும் கொண்டு வீடு கட்டலாம் என எண்ணியுள்ளோம். அராலி வீதியில் உள்ள புதுக்குடியிருப்பில் வீடு கட்டலாம் என எனது கணவர் கூறுகின்றார். ஏனெனில் அங்குள்ள கோயில் காணியில் அதற்குரிய பணத்தைக் கொடுக்காமல் வீட்டினைக் கட்டமுடியும்.
ஆயினும் அப்பகுதியில் நன்னீர் வசதியோ, மின்சார வசதியோ எதுவுமே இல்லை. அத்தகைய வசதிகள் செய்துதரப்படும் போது எம்மைப்போல தங்குமிடம் இன்றி நிர்க்கதியாக நிற்பவர்கள் இப்பகுதியில் குடியிருப்புகளை அமைத்து கொஞ்சமேனும் நிம்மதியாக வாழமுடியும். எனது கணவர் தற்போது இரும்பு வியாபாரம் செய்து வருகின்றார். ஒரு கிலோ இரும்பை 5 ரூபாவுக்கு எடுத்து 8 ரூபாவுக்கு வியாபாரிகளிடம் விற்றுவருகின்றார். இது மட்டும் தான் எமக்குத் தெரிந்த தொழில். எம்முடைய குடும்ப வாழ்க்கை, பிள்ளைகளின் படிப்புச் செலவு என்பனவெல்லாம் இரும்பு வியாபாரத்தை நம்பியே இருக்கின்றன. ஆயினும் தென்னிலங்கைக்கு இரும்புப் பொருள் வியாபாரத்திற்காக கொண்டு செல்லப்படுவது தடைசெய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது இதனால் எம்முடைய குடும்ப வருமானம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் இந்தத் தொழிலை நம்பியுள்ள குடும்பங்கள் மத்தியிலே எழுந்துள்ளது. வேறு ஏதாவது தொழில்கள் செய்ய தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி செய்தால் எம்முடைய வாழ்வு வளம் பெறும்.
முகமத் காலித் (பொம்மை வெளி)
நாங்கள் நீண்ட காலமாக கடற்றொழில் செய்து வருகின்றோம். இப்போது எங்களுக்கு கடற்றொழிலை மீண்டும் செய்வதற்கு எவ்வித உபகரணங்களும் இல்லை. கடலில் மீன் பிடிப்பதற்கான தடை நீக்கப்பட்டிருப்பதால் கடற்றொழிலில் ஈடுபடுவதன் மூலம் அதிக வருவாயை ஈட்ட முடியும். எனவே எங்களுக்கு கடற்றொழில் செய்வதற்குரிய உதவிகள் செய்யப்பட வேண்டும். மேலும் இங்குள்ள முஸ்லிம் பிள்ளைகள் ஒஸ்மானியாக் கல்லூரியில் தான் கல்வி பயின்று வருகிறார்கள். ஆயினும் அக்கல்லூரியில் பல்வேறு வசதியீனங்கள் காணப்படுகின்றன. அவற்றை நிவர்த்திப்பதன் மூலம் எமது பிள்ளைகளின் கல்விக்கான அடித்தளத்தைப் பலமாக இடமுடியும்.
நன்றி: உதயன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment