WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Wednesday, December 9, 2009

திருகோணமலைமாவட்டம் இராணுவமயமாக்கப்பட்டுக்கொண்டுவருகின்றது! வரலாற்றுப் பழைமைவாய்ந்த இந்து ஆலயங்கள் திட்டமிட்ட முறையில் இடித்துஅழிக்கப்படுகின்றன..!!!

இந்துக் கோயில்கள் இடித்து அழிப்பு: சபையில் சம்பந்தன் பா.உ. தெரிவிப்பு
எழுதியவர்......காந்தரூபன் on December 9, 2009

திருகோணமலை மாவட்டம் இராணுவ மயமாக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. அங்குள்ள வரலாற்றுப் பழைமைவாய்ந்த இந்து ஆலயங்கள் திட்டமிடப்பட்ட முறையில் இடித்து அழிக்கப்படுகின்றன. இவ்வாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் இராணுவ மயமாக்கல் நடவடிக்கை நிறுத்தப்பட்டு அங்கு அதி உயர் பாதுகாப்பு வலயமும் சுருக்கப்படவேண்டும். வரலாற்றுப் பழைமை வாய்ந்த இந்துக் கோயில்கள் திருமலையில் இடித்து அழிக்கப்படுகின்றன. அதனையும் அரசு நிறுத்த வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் அரசிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடயங்களை வற்புறுத்தினார்.

அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:

திருகோணமலை மாவட்டம் இராணுவ மயமாக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. அங்குள்ள வரலாற்றுப் பழைமைவாய்ந்த இந்து ஆலயங்கள் திட்டமிடப்பட்ட முறையில் இடித்து அழிக்கப்படுகின்றன. மூதூர் சங்குவேலிப் பகுதியில் உள்ள சிவன்கோவிலின் சிவலிங்கம் இடிக்கப்பட்டுள்ளது.

பௌத்த நாடு என்ற அடிப்படையிலேயே இங்கு ஆட்சி நடைபெறுகின்றது. இங்கு மற்ற மதங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இச்செயற்பாடுகள் அனைத்தும் திட்டமிட்டபடியே மேற்கொள்ளப்படுகின்றன.

திருகோணமலையில் சிங்கள குடியேற்றத்தை நிறுவுவதற்காகவே இவ்வாறு வரலாற்றுப் பழைமைவாய்ந்த இந்துக் கோயில்கள் இடித்து அழிக்கப்படுகின்றன.

இராணுவ மயமாக்கலை மேற்கொண்டே இந்த நாசகாரச் செயல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. முதலில் இராணுவ மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும். அதி உயர் பாதுகாப்பு வலயமும் சுருக்கப்படல் வேண்டும்.

இந்த இராணுவ மயமாக்கலை மிக இலகுவாக முன்னெடுப்பதற்காக ஓய்வுபெற்ற படை அதிகாரிகள் அரச அதிபர்களாகவும், மாகாண ஆளுநர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர். இந்தப்போக்கு முதலில் நிறுத்தப்படவேண்டும்.

இராணுவ மயமாக்கல் மற்றும் சிங்கள மயமாக்கல் போன்ற நடவடிக்கைகளை நிறுத்தி, இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களும் மீள்குடியமர்த்தப்பட வேண்டும் என்றார் சம்பந்தன்.

WWW.MEENAKAM.COM

No comments: