யாழ் குடாநாடு தமிழ்த் தேசிய சக்திகளிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டதா?
இவ் விடயம் 24. 04. 2010, (ஞாயிறு), தமிழீழ நேரம் 11:33க்கு பதிவு செய்யப்பட்டது
கட்டுரைகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்சிறிலங்காவில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. இத்தேர்தலில் பல்வேறு இனங்களினது வாக்களிப்பு நடத்தை ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அதேவேளை, எதிர்பார்ப்புக்களிலிருந்து பெரிய விலகல்களையும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தவில்லை.
தேர்தல் முடிவுகளை தமக்கு சாதகமாக்க வேண்டும் என்பதற்காக பிரதான கட்சிகள் எல்லாம் வியூகங்களை வகுத்திருந்தன.
ஆனால் அவ்வியூகங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைத்த வெற்றி ஏனையவற்றிற்கு கிடைத்தன எனக் கூற முடியாது. சிறிலங்காவின், ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல் என்ற காரணிக்கு அப்பால் வேறு காரணிகளும் இவ்விடயத்தில் தொழிற்பட்டு இருக்கின்றன.
அந்தக் காரணங்களும் கூட இனத்திற்கு இனம் வேறுபட்டிருந்தன என்றே கூற வேண்டும். சிங்கள மக்கள் மத்தியில் தொழிற்பட்ட காரணிகள், தமிழ் மக்கள் மத்தியில் தொழிற்பட்டது எனக் கூற முடியாது. தமிழ் மக்கள் மத்தியில் தொழிற்பட்ட காரணிகள், முஸ்லீம் மக்கள் மத்தியில் தொழிற்பட்டது எனக் கூற முடியாது. அதே போல முஸ்லீம் மக்கள் மத்தியில் தொழிற்பட்ட காரணிகள், மலையக மக்கள் மத்தியில் தொழிற்பட்டது எனவும் கூற முடியாது.
எனினும், ‘இத்தேர்தலில் ஆட்சி மாற்றங்கள் எதுவும் நடைப்பெறப் போவதில்லை. மகிந்தவின் ஆட்சியே தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு இருக்கப் போகின்றது’ என்ற பொதுக் காரணி எல்லா இனங்கள் மத்தியிலும் தொழிற்பட்டிருக்கின்றது. பிரதேசங்களுக்கே உரிய விசேட காரணிகள் ஏனைய இனங்களை விட தமிழ், முஸ்லீம் பிரதேசங்களில் அதிகம் தொழிற்பட்டிருக்கின்றன.
வடக்கு, கிழக்கு மக்களின் தேர்தல் நடத்தைகளை ஆராயும் போது பின்வரும் உண்மைகளை கவனத்தில் எடுக்க வேண்டும்.
1.வடக்கு, கிழக்கு முழுவதிலும் 30 தொடக்கம் 35 வீதம் வரையிலான வாக்காளர்களே வாக்களித்துள்ளனர்.
2.வடக்கு, கிழக்கின் அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை விட எதிராக விழுந்த வாக்குகள் அதிகமானவையாகும்.
3.அதிகரித்த அளவில் சுயேட்சைக் குழுக்களை இறக்குதல் என்ற மகிந்தவின் வியூகம் கணிசமான வெற்றியை அவருக்கு ஈட்டிக் கொடுத்திருக்கின்றது.
4.நிராகரிக்கப்பட்ட வாக்குகள் கணிசமானளவு உயர்ந்திருக்கின்றன.
5.பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு மட்டகளப்பு மாவட்டத்தில் கணிசமான வாக்குகள் கிடைத்திருக்கிறது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 70 சதவீதமான வாக்களர்கள் இத்தேர்தலை பகிஷ்கரித்திருந்தனர். இத்தேர்தலில் வாக்களித்தவர்களில் 43.85 சதவீதமானவர்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர். 32.67 சதவீதமானவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்தனர். 8.5 சதவீதமானவர் ஐக்கிய தேசிய கட்சிக்கும், 4.28 சதவீதமானவர்கள் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கும் வாக்களித்துள்ளனர்.
இத்தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 11.30 சதவீதமான மக்கள் ஏனைய கட்சிகளுக்கும், சுயேட்சைக் குழுக்களுக்கும் வாக்களித்திருந்தனர். இவை ஏறத்தாழ 15,800 வரையிலான வாக்குகளைப் பெற்றிருந்தன.
சுயேட்சைக் குழுக்களில் செங்கை ஆழியான் தலைமையிலான சுயேட்சைக் குழு – 11 அதிகூடிய வாக்குகளாக 2,562 வாக்குகளைப் பெற்றிருந்தது. வெற்றிலைச் சின்னத்திற்கு அடுத்தபடியாக அரசாங்கம் மிக முக்கியத்துவம் கொடுத்த குழு இதுவேயாகும். சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் அனுப்பப்பட்ட சிங்களவரான திலக் உடுகம என்பவர் இக்குழுவினை வழி நடாத்தியிருந்தார்.
ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளை அழைத்து வேலை வாய்ப்புத் தருவதாக விண்ணப்பப் படிவங்களைப் பெற்ற குழு இதுவேயாகும். கட்சி அலுவலகங்களை விட மிக சுறுசுறுப்பாக இயங்கிய அலுவலகம் இதுவேயாகும்.
பிரச்சாரம் என்ற வகையில் இதன் பெரும் பகுதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு எதிராகவே இருந்தது. டக்ளஸ் தேவானந்தாவின் செல்வாக்கினை இறக்குவதற்காகவேதான் இந்தக் குழு நிறுத்தப்பட்டதா? என்ற சந்தேகமும் எழுந்தது. செங்கை ஆழியான் இதற்கு தலைமை தாங்கியதன் மூலம் தமது மதிப்பையும் தாமாக இறக்கிக் கொண்டார்.
இத்தேர்தலில், யாழ் மாவட்டத்தில் 19,774 வாக்குகள் அதாவது 11.75 சதவீதமான வாக்குகள் நிராகரிப்பட்ட வாக்குகளாக இருந்தன. இது ஒரு ஆசனத்தைப் பெற்ற ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த வாக்குகளை விட அதிகமானதாகும்.
ஐக்கிய தேசியக் கட்சி 12,624 வாக்குகள் அதாவது 8.5 சதவீதமான வாக்குளையே பெற்றிருந்தன. இதனை இயல்பான நிராகரிப்பட்ட வாக்குகள் எனக் கூற முடியாது. இதற்குள் வேண்டுமென்றே நிராகரிக்கபட்ட வாக்குகளும் கணிசமானளவு இருந்திருக்கின்றன. களநிலவரச் சூழலில் இது எதிர்பார்க்கப்படக் கூடியதே.
தமிழ் மக்கள் ஐக்கியப்பட்ட கட்டுறுதியான அரசியல் சமூகமாக இருக்க வேண்டும் எனக் கருதியவர்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர். தீவிர தமிழ்த் தேசியத்தை விரும்பாதவர்களும் இதற்குள் அடக்கம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் தமிழரசுக் கட்சியை முதன்மைப்படுத்தி அளிக்கப்பட்டதே தவிர, நபர்களை முதன்மைப்படுத்தி அளிக்கப்பட்டவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 65,119 வாக்குகளைப் பெற்ற போதும், அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மாவை சேனாதிராஜா 20,000 வரையிலான வாக்குகளைப் பெற்றமை இதனையே காட்டுகிறது. தெரிந்த முகங்கள் என்ற வகையிலேயே விருப்ப வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்கள் முழுமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கமே நின்றன. வலம்புரி மட்டும் சற்று விதிவிலக்காக இருந்தது. யாழ் தினக்குரலும், உதயனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலகங்கள் போலவே தொழிற்பட்டிருந்தன. தினந்தோறும் மூளைச் சலவை நடைபெற்றது. எனினும் ஊடகங்களின் உழைப்புக்கு ஏற்ற வகையில் வாக்குகள் கிடைத்தன எனக் கூறமுடியாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரதான போட்டியாளர்களாக இருந்தவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – குறிப்பாக அதில் அங்கம் வகிக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியே ஆகும். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், தமிழ் ஊடகங்களினதும் பிரச்சாரங்கள் கஜேந்திரக்குமார் தலைமையிலான தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு எதிராக இருந்ததே தவிர, ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கு எதிராக இருக்கவில்லை. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் களமிறக்கப்பட்ட சுயேட்சைக் குழுக்களை எவ்வாறு முறியடிப்பது என்ற வியூகங்களும் அதனிடம் இருக்கவில்லை. விரக்தியில் ஒதுங்கி நின்ற வாக்காளர்களைக் கவரும் திட்டங்களும் அதனிடம் இருக்கவில்லை.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நிலையும் இந்தத் தடவை போராட்டமாகவே இருந்தது. அதுவும் ஒரு வகையான அகப் போராட்டம்தான். சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் நேரடியாக இறக்கிவிடப்பட்ட வேட்பாளர்களுடனும், ஐனாதிபதி மகிந்த ராஜபக்சவால் இறக்கிவிடப்பட்ட சுயேட்சைக் குழுக்களுடனும் இந்தப் போராட்டம் இருந்தது. இவை டக்ளஸ் தேவானந்தாவின் வாக்கு வங்கிகளையே ஊடறுப்பனவாக இருந்தன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் நேரடியாக இறக்கிவிடப்பட்ட வேட்பாளர்களில் அங்கஜன் இராமநாதன் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பெரும் சவாலாக விளங்கினார். அத்துடன், சுயேட்சைக் குழுக்களில் செங்கை ஆழியான் தலைமையில் போட்டியிட்ட சுயேட்சைக் குழு 11ம், சிறுபான்மைத் தமிழர் மகாசபை சார்பில் போட்டியிட்ட சுயேட்சைக் குழுவும் டக்ளஸ் தேவானந்தாவிற்கு சவால்களாக இருந்தன.
டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் தளம் என்பது சலுகை அரசியல் தளம்தான். இந்தத் தளத்தினை அங்கஜன் இராமநாதன் ஊடுருவ முயன்றார். சுயேட்சைக் குழு 11ம் ஊடுருவ முயன்றது.
‘சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நேரடி வேட்பாளர் நான்தான். எனக்குத்தான் அமைச்சர் பதவி கிடைக்கும், டக்ளஸ் தேவானந்தாவிற்கு கிடைக்காது’ என அங்கஜன் இராமநாதன் பிரச்சாரம் செய்தார். பணமும் தண்ணீர் போன்று செலவிடப்பட்டது. நாள் கூலி அடிப்படையில் நிறைய ஊழியர்களையும் பிரச்சாரத்திற்காக திரட்டியிருந்தார்.
சுயேட்சைக் குழு 11இன் அலுவலகம் நிவாரணம் வழங்கும் அலுவலகமாக செயற்பட்டது. முன்னர் சலுகைக்காக ஈ.பி.டி.பி யின் அலுவலகத்திற்கு படையெடுத்தவர்கள் தேர்தல் காலத்தில் சுயேட்சைக் குழு 11இன் அலுவலகத்திற்கு படையெடுக்க முனைந்தனர்.
சுயேட்சைக் குழு 11இன் அலுவலகம் மகிந்த ராஜபக்சவினால் அனுப்பப்பட்ட சிங்களவரின் கட்டுபாட்டிலேயே இருந்தது. செங்கை ஆழியான் ஒரு பொம்மை போல கதிரையில் அமர்ந்து வருபவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.
ஈ.பி.டி.பி.யின் சமூகத்தளம் முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ்.விடம் இருந்தது. தற்போது ஈ.பி.டி.பி. யிடம் இருக்கின்றது. சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் சார்பில் போட்டியிட்ட சுயேட்சைக் குழு அந்த தளத்தை ஊடுருவ முயற்சித்தது. அதே நேரம் செந்திவேல் தலைமையிலான சுயேட்சைக் குழுவும் ஓரளவு ஊடுருவ முயற்சித்தது.
எனினும் சலுகை அரசியல் தொடர்பான டக்ளஸ் தேவானந்தாவின் பிரக்ஞை பூர்வத் தன்மையும், கடினமான உழைப்பும் அவரைப் பாதுகாத்தது. ஈ.பி.டி.பி. சார்பில் போட்டியிட்ட பசுபதி ஜீவரத்தினம் கடுமையாக உழைத்தார். இவர் மன்னாரைப் பிறப்பிடமாக் கொண்டவர். குப்பிழானில் திருமணம் செய்தவர். ஈ.பி.ஆர்.எல்,எவ் இன் தொழிற்சங்கமான கிராமிய தொழிலாளர் சங்கத்தின் தலைவராக பணியாற்றியவர். ஈ.பி.ஆர்.எல்.எவ.; நடாத்திய பல சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களுக்கு காரணமாக இருந்தவர். இவரைத் தெரியாத கிராமங்கள் குடாநாட்டில் எதுவும் கிடையாது.
இத்தேர்தலில் இவர் 8,000க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று நான்காவதாக வந்தார். டக்ளஸ் தேவானந்தா, சந்திரகுமார், பசுபதி ஜீவரத்தினம் ஆகிய மூவரையும் முதன்மைப்படுத்தியே ஈ.பி.டி.பி. பிரச்சாரம் செய்யப் போவதாக டக்ளஸ் கூறியிருந்தார் என்றும், ஆனால் நடைமுறையில் பல பிரதேசங்களில் ஜீவரத்தினத்தை முதன்மைப் படுத்தாததினால்தான் அவர் நான்காவதாக வந்தார் என்றும் கதைகள் அடிபடுகின்றன. ஜீவரத்தினத்தின் வாக்குகள் களவாடப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
தற்போது தேசிய பட்டியல் மூலம் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என ஜீவரத்தினத்திற்கு தற்காலிக சமாதானம் கூறப்படுகின்றது.
தேர்தலின் போது இரண்டு பிரதான கட்சிகளுமே அக நெருக்கடிக்குள் தள்ளப்பட்டடிருந்தன. ஈ.பி.டி.பி. சந்தித்த அக நெருக்கடிக்கு மகிந்த ராஜபக்ச காரணமாக இருந்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சந்தித்த அக நெருக்கடிக்கு சம்பந்தனும், சுரேஸ் பிரேமச்சந்தினும் காரணமாக இருந்தனர். இவ் அக நெருக்கடிகள் காரணமாக இரு கட்சிகளும் ஒரு தற்காப்பு நிலைக்கே தள்ளப்பட்டன. எனினும் டக்ளஸ் தேவானந்தா இதற்கு ஒருவாறு முகங்கொடுத்து தனது தரப்பின் வெற்றியை உயர்த்திக் காட்டினார். ஆனால் சம்பந்தன் தரப்பால் அது முடியவில்லை.
இது விடயத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வியூகமே வெற்றி பெற்றது. அவர் சுயேட்சைக் குழுக்களைப் போட்டியிட வைத்ததன் நோக்கமே வாக்குகளைச் சிதறச் செய்து தமிழ்த் தேசியத்தின் மையமான யாழ் குடாநாட்டில் ஒரு பிரக்ஞை பூர்வமான அரசியல் இல்லை என்பதைக் காட்டுவது தான். அதில் அவர் வெற்றி அடைந்திருக்கின்றார்.
கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு தேர்தல் என்பது ஒரு பெரும் போராட்டமாக இருந்தது. ஊடகங்கள் சொற்பளவு இடத்தைக் கூட அவர்களுக்கு வழங்கவில்லை. ஆனால் இதற்கு எதிரான பிரச்சாரத்திற்கு முழுமையான இடத்தை வழங்கியிருந்தன. அந்த எதிர் பிரச்சாரத்தில் கொள்கை வழிச் செயற்பாடுகள் எதுவும் இருக்கவில்லை. தனிநபர் வசைபாடல்களே அதிகமாக இருந்தன.
இதனால் கொள்கை வழி முன்னெடுப்பிற்கு பதிலாக தனிநபர் வசைபாடல்களுக்கு பதில் சொல்வதே இவர்களது பிரச்சாரமாக இருக்க வேண்டியிருந்தது. ஊடகங்கள் ஒத்துழைக்காததினால் தற்காப்பு நிலையினைக் கூடப் பேண இவர்களால் முடியவில்லை. ஆரம்பத்தில் இவர்களை ஊக்குவித்து ஒத்துழைத்த புலம் பெயர் சக்திகளும் களநிலவரம் மாறாக இருந்ததினால் தொடர்ந்து கைகொடுக்க முன்வரவில்லை.
தீவிரத் தேசியவாதிகள் என்ற ஒரு அடையாளம் இவர்களுக்கு இருந்ததினால் போதிய ஆள் பலத்தினைத் திரட்ட முடியவில்லை. இவர்களிடம் நிதி வளமும் போதியளவு இருக்கவில்லை. அதிகளவில் தனித்து விடப்பட்ட நிலையே இருந்தது.
ஐக்கியத்தை குழப்பி விட்டனர் என்ற குற்றசாட்டுக்கு இவர்கள் முகங்கொடுத்தனர். மிக நீண்ட நேரம் பொறுமையாக விளக்கம் அளித்தே மக்களை தம் பக்கம் ஈர்க்க இவர்கள் முயற்சித்தனர்.
இந்த நெருக்கடி வருமென்பது அவர்களுக்கு முன்பே தெரிந்ததுதான். ஆனால் அந்த நெருக்கடி நினைத்ததை விட அதிகமாக இருந்தது. எனினும் இது விடயத்தில் ‘தேர்தலில் தோல்வியடையலாம். ஆனால் கொள்கையினை விட்டுக் கொடுக்க முடியாது’ என்பதே கஜேந்திரகுமாரின் கருத்தாக இருந்தது. இத்தேர்தலில் அவர்கள் தோல்வியடைந்தாலும் மாற்று அரசியல் ஒன்றை களத்தில் விதைத்து விட்டிருக்கின்றார்கள் என்பதை மறுக்க முடியாது. இவர்களின் தோல்விக்கு தற்போதைய நிலையில் தீவிர நிலைப்பாட்டை மக்கள் விரும்பாததும் ஒரு காரணமாகும்.
யாழ் குடாநாட்டு அரசியல்வாதிகளில் ஆளுமை மிக்க அரசியல்வாதிகள் என்பவர்கள் மூவர்தான். சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார், சிறிகாந்தா என்பவர்களே அவர்களாவார். சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது ஆதிக்கத்திற்கு இவர்கள் இருவரும் தடையாக இருப்பார்கள் என்பதற்காக காய் நகர்த்தி வெட்டியிருக்கின்றார் என்ற கதைகளும் அடிபடுகின்றன.
இவர்கள் மூவரில் சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்திய சார்பானவர். சிறிகாந்தா ஒரு குழப்பவாதி. இவர்கள் இருவரினாலும் ஒரு பிரக்ஞை பூர்வமான அரசியலை நகர்த்தியிருக்க முடியாது. ஆனால் கஜேந்திரகுமாரினால் அதனை நகர்த்தியிருக்க முடியும். அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
யாழ் குடாநாட்டு தேர்தல் முடிவுகளிலுள்ள ஒரு பிரதான சோகம் அங்கு மிதவாத தேசிய அரசியலுக்கு ஒரு தளம் இருக்கின்றது. சலுகை அரசியலுக்கு ஒரு தளம் இருக்கின்றது. தனிநபர் செல்வாக்கு அரசியலுக்கும் ஒரு தளம் இருக்கின்றது ஆனால் பிரக்ஞை பூர்வ அரசியலுக்குத் தளம் இல்லை என்பது தான்.
தற்போது கொழும்பு தமிழ் மத்தியதர வர்க்கத்தினருக்கு இன்னொரு கவலை பீடித்துள்ளது. யாழ் குடாநாட்டு அரசியலின் தலைமை கஜேந்திரகுமாரிடம் செல்லாமல் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் செல்லப் போகிறது என்பதுதான் அந்தக் கவலை. கொழும்பில் அதனை பலர் தற்போது வாய்விட்டே கூறத் தொடங்கியுள்ளனர்.
இத்தனைக்கும் இந்த மத்திய தர வர்க்கம் தேர்தல் காலத்தில் சிறிதளவு கூட கஜேந்திரகுமாருக்கு ஆதரவாக இருக்கவில்லை.
எது எப்படியோ ஈ.பி.ஆர்.எல்.எவ் வழிவந்த இரு தலைவர்களிடம் இன்று குடாநாட்டு அரசியல் தலைமை சென்றுள்ளது. ஒருவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், மற்றையவர் டக்ளஸ் தேவானந்தா. ஆரம்ப ஈ.பி.ஆர்.எல்.எவ். இல் சுரேஸ் பிரேமச்சந்திரன் பிரதி செயளாலர் நாயகமாக இருந்தவர். டக்ளஸ் தேவானந்தா படைத் தளபதியாக இருந்தவர். இருவரும் லெபனானில் பாலஸ்தீன விடுதலை முன்னணியிடம் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள்.
இந்தியா நீண்ட காலமாக விரும்பியிருந்ததும் இதுதான். அந்த விருப்பம் மிக இலாவகமாக தற்போது நிறைவேறியுள்ளது.
மொத்தத்தில் யாழ் குடாநாடு பிரக்ஞைபூர்வ தமிழ்த் தேசிய சக்திகளிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டது.
நன்றி: பொங்குதமிழ்
Copyright © 2010 நெருடல்.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment