WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Sunday, April 25, 2010

யூதர்களை பற்றி பேசிக்கொண்டிருப்பதைவிடுத்து அருகில்இருக்கும் எமதுசகோதரஇனமான முஸ்லீம்சமூகத்தில் இருக்கும் அரசியல்விழிப்புணர்ச்சியைநாம் படிப்பினையாக..!!!

முஸ்லீம் மக்களின் அரசியல் விவேகமும் தமிழ் மக்களின் அசமந்த போக்குகளும் : இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2010, 04:34.32 AM GMT +05:30 ]

இலங்கையின் அரசியல் பொருளாதார சமூகதுறைகளில் ஏனைய இனங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த தமிழர் சமூகம் இப்பொழுதும் அந்த நிலையை தக்க வைத்துள்ளதா என்ற கேள்விக்கு மிகக்கசப்பான பதில்களே வெளிவருகின்றன.
அரசியல்துறையாக இருந்தாலும் சரி கல்வி பொருளாதார சமூகதுறைகளாக இருந்தாலும் சரி தமிழர்களே இலங்கையில் ஏனைய இனங்களுக்கு முன்னோடியாக இருந்ததாக நாம் பெருமையாக பேசிக்கொண்டாலும் இன்று அந்நிலை தலைகீழாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

இன்று தமிழர்கள் இருக்கும் நிலையில் ஏனைய இனங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே உள்ளன. குறிப்பாக இலங்கையில் தமிழர்களோடு மொழியால் இணைந்து வாழும் முஸ்லீம் சமூகத்திடமிருந்து நிறையவே கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

அவர்களின் அரசியல் வியூகம் கல்வி பொருளாதார முன்னேற்றம் அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள் திட்டமிட்ட செயற்பாடுகள் அவர்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமை, தமது சமூகம் என்று வருகின்ற போது அவர்களிடம் காணப்படும் ஒன்றிணைவு என பல விடயங்களில் முஸ்லீம் மக்களிடமிருந்து தமிழர்கள் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

கடந்த தேர்தலில் கூட முஸ்லீம்கள் தமது சமூகத்திற்காக எவ்வாறு ஒற்றுமையாக பல வியூகங்களை வகுத்து செயற்பட்டார்கள் என்பதை பார்த்தால் தமிழர்கள் அவர்களிலிருந்து எவ்வளவு தூரம் பின்தங்கி உள்ளனர் என்பதை உணரமுடியும்.

வடக்கு கிழக்கில் கடந்த கால போரினால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டதால் அரசியல் ரீதியாக செயற்பட முடியாத சோர்வு நிலை காணப்படுவதாக காரணத்தை கற்பித்துக்கொண்டாலும் வடக்கு கிழக்கிற்கு வெளியில் நிரந்தரமாக வாழும் தமிழர்களிடம் இந்த அரசியல் விவேகமோ, தமது சமூகம் பற்றிய சமூக பொருளாதார முன்னேற்றத்தில் அக்கறை இன்மையோ ஏன் காணப்பட வேண்டும்.

கடந்த தேர்தலின் போது வடகிழக்கிற்கு வெளியில் இருந்த தமிழர்கள் மிக மோசமான அரசியல் வியூகங்கள் அற்றவர்களாகவே இருந்துள்ளார்கள் என்பது புலனாகும். முக்கியமாக வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழும் மலையகத்தமிழர்களை விட வடகிழக்கை பூர்வீகமாக கொண்ட ஈழத்தமிழர்களிடம் இந்த அசமந்த போக்கு அதிகமாக காணப்பட்டு வருகிறது.

கொழும்பு மாவட்டத்தில் சிங்களவர்கள் 76.6 வீதமும், 2,47,139 பேரைக்கொண்ட இலங்கை தமிழர்கள் 11வீதமும், 2,02731பேரைக்கொண்ட முஸ்லீம்கள் 9 வீதமும் 24821பேரைக்கொண்ட மலையகத்தமிழர்கள் 1.1வீதமும் உள்ளனர்.

நடந்து முடிந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் வடகிழக்கை சேர்ந்த இலங்கை தமிழர்கள் 1இலட்சத்து 80ஆயிரம் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கூட தெரிவு செய்ய முடியாமல் போய்விட்டது.

வடகிழக்கு தமிழர்கள் சரியான அரசியல் வியூகத்துடன் கொழும்பு மாவட்டத்தில் வாக்களித்திருந்தால் நான்கு தமிழர்களை தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்திருக்க முடியும். ஆனால் அவர்கள் எந்த அரசியல் வியூகமோ அக்கறையோ இல்லாமல் இருப்பது ஏனைய இனங்களுக்கு பெரும் சாதகமாக அமைந்து விடுகிறது.

கொழும்பில் உள்ள வடகிழக்கு தமிழர்கள் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சட்டத்தரணி குமரகுருபரன் போன்றவர்களுக்கு வாக்களித்திருந்தால் மிக இலகுவாக கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளில் வெற்றிபெற்றிருக்க முடியும்.

கொழும்பு மாநகரசபைப்பகுதியில் தற்போது சிங்களவர்களை விட தமிழர்களும் முஸ்லீம்களுமே அதிகமாக உள்ளனர். ஆனால் தமிழர்கள் தங்களுக்கிடையில் ஒற்றுமையின்மை காரணமாக இன்னமும் அவர்கள் பலமிழந்தவர்களாகவே உள்ளனர்.

அதேபோன்று கண்டி மாவட்டத்தில் கூட தமிழர்கள் இம்முறை பல படிப்பினைகளை பெற்றுள்ளனர். கண்டி மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 12.1வீத சனத்தொகைக்கொண்ட தமிழர்கள் ஒரு நாடாளுமன்ற பிரதிநிதியைக்கூட பெற்றுக்கொள்ளவில்லை. 11.2வீதமாக உள்ள முஸ்லீம்கள் 4நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்துள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் மலையகத்தமிழர்கள் ஒரு இலட்சத்து 3622பேரும் வடகிழக்கை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள் 52052பேருமாக 1,55674 பேர் உள்ளனர். கண்டி மாவட்டத்தில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் இருந்த போதிலும் மொத்த சனத்தொகையில் 12.2 வீதம் இருந்த போதிலும் அவர்களால் தங்களுக்கென்று ஒரு பிரதிநிதியை ஏன் பெற்றுக்கொள்ள முடியவில்லை?

இந்த தோல்வியில் ஒரு பாடத்தை கற்க வேண்டுமாக இருந்தால் அங்குள்ள முஸ்லீம்களின் அரசியல் விவேகத்திலிருந்து தமிழர்கள் கற்பதற்கு நிறையவே உள்ளன. கண்டியில் உள்ள தமிழர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பாக வேறு இன நாடாளுமன்ற உறுப்பினர்களையே நாடி செல்வ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

கம்பஹா மாவட்டத்தில் கூட கணிசமான தமிழர்கள் வாழ்கின்றனர். கம்பஹா மாவட்டத்திற்குட்பட்ட நீர்கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளிலும் இலங்கைத்தமிழர்கள் 65302பேரும் மலையகத் தமிழர்கள் 7621 பேருமாக மொத்தம் 72923பேர் நிரந்தர குடியிருப்பாளர்களாக உள்ளனர். அவர்கள் அரசியல் விழிப்புணர்ச்சியுடன் செயற்பட்டால் தங்களுக்கான ஒரு பிரதிநிதியை பெற முடியும்.
இது தவிர வன்னி மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் முஸ்லீம் மக்களின் வியூகம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

2இலட்சத்து 66ஆயிரத்து 975 வாக்காளர்கள் உள்ள வன்னி மாவட்டத்தில் முஸ்லீம் வாக்காளர்கள் ஆகக்கூடியது 30 ஆயிரம் வாக்காளர்களே உள்ளனர். 2இலட்சத்து 20ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட தமிழர்கள் மூன்று பிரதிநிதிகளை பெற்ற அதேவேளை 30ஆயிரம் வாக்காளர்களை கொண்ட முஸ்லீம் மக்கள் மூன்று பிரதிநிதிகளை பெற்றிருக்கிறார்கள்.

இது முஸ்லீம் மக்களின் தவறல்ல. அவர்களின் அரசியல் வியூகம் விவேகம் என்றுதான் சொல்ல வேண்டும். வன்னிமாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வெற்றிபெற்ற ரிச்சாட் பதியுதீன் பெரும்பான்மையாக தமிழர்களின் வாக்குகளிலேயே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் உள்ள முஸ்லீம்களில் ஒருவர் கூட தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களித்ததாக தகவல் எதுவும் இல்லை. ஆனால் அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை, வன்னி மாவட்டங்களில் உள்ள தமிழர்கள் பலர் முஸ்லீம் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்த அதேவேளை தமிழ் வேட்பாளர்கள் யாருக்கும் முஸ்லீம் சிங்கள வாக்காளர்கள் வாக்களித்த வரலாறு இல்லை.

அத்தகைய விழிப்புணர்வு ஏனைய இனங்களுக்கு இருக்கும் அளவிற்கு தமிழ் மக்களிடம் ஏன் அற்றுப்போய்விட்டது என்பதை தமிழர் சமூகம் நன்றாக ஆராய வேண்டும். அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 வீதமாக உள்ள தமிழர்கள் 3 பிரதிநிதிகளைப்பெற்ற அதேவேளை 25 வீதமாக உள்ள முஸ்லீம்கள் இரு பிரதிநிதிகளைப்பெற்றுள்ளனர். இவர்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஹிஸ்புல்லா பெரும்பான்மையான தமிழர்களின் வாக்குகளிலேயே தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

அம்பாறை மாவட்டத்தில் 44 வீதமாக உள்ள முஸ்லீம்கள் 4 பிரதிநிதிகளை பெற்றிருக்கிறார்கள். 20வீதமாக உள்ள தமிழர்கள் ஒரு பிரதிநிதியை மட்டுமே பெற்றிருக்கிறார்கள். அரசியல் விடயங்களில் மட்டுமல்ல இன்று கல்வித்துறையிலும் பொருளாதார சமூக துறைகளிலும் முஸ்லீம் மக்களின் முன்னேற்றம் என்பது வியக்கத்தக்க அளவு வளர்ந்து இருக்கிறது.

1978ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மாவட்ட ரீதியான தேர்தல் முறையில் வாக்குகளின் மகிமையையும் முக்கியத்துவத்தையும் முஸ்லீம் சமூகமே சரியாக புரிந்து கொண்டு செயற்பட்டு வருகிறது. அவர்கள் அந்த வாக்குரிமையையே தமது அரசியல் இலக்கை அடைவதற்கான ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார்கள். முஸ்லீம் மக்களின் இந்த எழுச்சிக்கு காரணம் மறைந்த முஸ்லீம் காங்கிரஷ் ஸ்தாபகர் அஷ்ரப் என்றுதான் சொல்ல வேண்டும்.

அது போன்று கல்வி பொருளாதார துறைகளிலும் தமிழர்களை விட முஸ்லீம் மக்கள் பல மடங்கு உயர்ந்து நிற்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். 1977ஆம் ஆண்டுவரை முக்கியமாக கிழக்கு மாகாணத்தில் கைத்தறி போன்ற உள்நாட்டு உற்பத்தியிலும் வர்த்தகத்திலும் ஈடுபாடு காட்டிவந்த முஸ்லீம் சமூகம் இன்று கல்வித்துறையில் காட்டிவரும் ஆர்வம் என்பது வியக்கும் வண்ணம் உள்ளன.

இலங்கை நிர்வாக சேவை மற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவைதுறைகளில் தெரிவு செய்யப்படுபவர்களில் தமிழர்களை விட முஸ்லீம்களே அதிகமாகும். இதுதவிர மருத்துவ பொறியியல்துறைகளில் கூட தமிழர்களை விட முஸ்லீம்களின் வரவு அதிகமானதாகும்.

பொருளாதார ரீதியாக முஸ்லீம் சமூகம் எவ்வாறு முன்னிலையில் உள்ளது என்பதை பார்ப்பதாக இருந்தால் கிழக்கில் இருக்கும் முஸ்லீம் கிராமம் ஒன்றிற்கும் அதற்கு அருகில் இருக்கும் தமிழ் கிராமங்களுக்கும் செல்லும் போது இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.

காத்தான்குடியிலோ அல்லது ஏறாவூரில் ஏற்பட்டிருக்கின்ற அபிவிருத்திகளையும் பொருளாதார விருத்தியையும் அந்த கிராமங்களுக்கு அருகில் உள்ள தமிழ் கிராமங்களான ஆரையம்பதி அல்லது செங்கலடியை பார்த்தால் இந்த வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இடையிலானதாக இருக்கும்.

எந்த ஒரு சமூகமும் தன்னை உறுதி உள்ள சமூகமாக நிலை நிறுத்திக்கொள்ளுகின்ற போதுதான் உரிமைகளையும் விடுதலையையும் பெற்றுக்கொள்ள முடியும். யூதர்களைப்பற்றி உதாரணத்திற்கு பேசும் தமிழர்கள் யூதசமூகம் தன்னை உறுதிப்படுத்திக்கொண்டது போல கல்வி பொருளாதார துறைகளில் தங்களை பலப்படுத்திக்கொண்டதில் ஒரு வீதத்தினைக்கூட அடையாத நிலையில் யூதர்களை உதாரணமாக பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

தமிழர் சமூகம் விடுதலை பெற்ற சமூகமாக திகழ வேண்டுமாக இருந்தால் முதலில் அரசியல் கல்வி பொருளாதார சமூக ரீதியில் தன்னை பலப்படுத்திக்கொள்ள வேண்டும். அதை விடுத்து எல்லாவற்றையும் இழந்து விட்டு விடுதலை பற்றியோ உரிமை பற்றியோ எப்படி பேச முடியும்?

எனவே எங்கோ இருக்கும் யூதர்களை பற்றி பேசிக்கொண்டிருப்பதை விடுத்து அருகில் இருக்கும் எமது சகோதர இனமான முஸ்லீம் சமூகத்தில் இருக்கும் அரசியல் விழிப்புணர்ச்சியை நாம் படிப்பினையாக கொள்ள வேண்டும்.

இரா.துரைரத்தினம்
thurair@hotmail.com


Copyright 2005-10 © TamilWin.com

No comments: