செட்டிகுளம் முகாம் மக்கள் மீதான பழிவாங்கல்கள் தொடர்கின்றன
[ புதன்கிழமை, 14 ஏப்ரல் 2010, 10:04.59 AM GMT +05:30 ]
வவுனியா செட்டிகுளத்தில் அமைந்துள்ள நலன்புரி நிலையங்களைச் சேர்ந்த மக்கள் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்ட றிசாட்பதியுதீன் மற்றும் அவரது கைக்கூலிகளுக்குச் சார்பாக வாக்களிக்க வேண்டும் என கடந்த பொதுத் தேர்தலின் போது எச்சரிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தமக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக முகாம் மக்கள் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முகாம் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து நலன்புரி நிலையங்களில் இருந்து இதுவரை கழிவுப் பொருட்களும், மலக் கழிவுகளும் வெளியே எடுத்துச் செல்லப்படவில்லை.
தற்காலிகமான முறையில் பலகைகளால் அமைக்கப்பட்டு அவற்றின் மீது பொலித்தீன்களால் மூடப்பட்டே மலக்குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை என சுற்றின் அடிப்படையில் மலக்கழிவுகள் வாகனங்களின் ஊடாக வெளியேற்றப்பட்டு வருகின்ற செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஒருவார காலமாக அவை அகற்றப்படாமையால் மல கூடங்கள் நிறைவடைந்துள்ளமையால் மக்கள் இயற்கைக் கடன்களைக் கழிப்பதில் பாரிய அவலத்தினை எதிர்கொண்டுள்ளனர்.
இதே வேளை மலக்குளிகள் நிறைந்துள்ளதால் அவற்றில் இருந்து கழிவு நீர் வெளியேறும் அதேவேளை அவற்றுடன் புளுக்களும் வெளியேறி வருகின்றன. மலசல கூடங்கள் மக்கள் வாழ்விடங்களுக்கு மிக அருகருகாக அமைக்கப்பட்டுள்ளமையால் துர்நாற்றம், மற்றும் தொற்றுக்களால் மக்கள் பலத்த அவதியினை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று பிரதேச சபையின் ஏற்பாட்டில் முகாம்களில் மக்களால் வீசப்படும் ஏனைய கழிவுப் பொருட்கள் உழவூர்திகள் மூலம் வெளியே எடுத்துச் செல்லப்பட்டுவந்தது. இந்தப் பொருட்களுக்கென முகாம்களின் மத்தியில் தனித்தனியான குப்பை கொட்டுவதற்கான பரல்கள் மற்றும் பைகள் வைக்கப்பட்டிருக்கும். குறித்த பரல்கள் மற்றும் பைகள் தற்போது நிறைந்து வழிவதாகவும், இதனால் வீதியோரங்களில் பயணிக்கவோ வீடுகளில் குடியிருக்கவோ முடியாத அளவிற்கு சூழல் நாற்றமடைந்துள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனைவிடவும் இலையான் மற்றும் தொற்றுக்கிருமிகள் மிகத் துரிதமாய் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கைகளால் ஆனந்தகுமாரசுவாமி, இராமநாதன், அருணாசலம் ஆகிய முகாம்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தமைக்காக இராமநாதன் நலன்புரி நிலையத்தில் தண்ணீர் விநியோகத்தினை இடைநிறுத்தியதுடன் அதனைக் கேட்ட மக்கள் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Copyright 2005-10 © TamilWin.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment