புலனாய்வுத்துறையால் கடத்தப்பட்ட மாணவன் சாட்சியம்
ஏப்ரல் 14th, 2010 ரமணன்
விடுமுறைக்கு இலங்கை செல்லும் மற்றும் அவசர தேவை கருதி இலங்கை செல்லும் இளையோர்கள் இலங்கை புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டு விசாரணை என்ற பெயரில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதை நாம் பல இணையத்தளங்களில் படித்திருக்கிறோம்.
சபேசன் என்னும் இளைஞர் பிரித்தானியாவில் கல்வி கற்றுவருபவர். இவர் தாயார் உடல் நிலை மோசமடைந்ததன் காரணமாக இலங்கை செல்லவேண்டி நேர்ந்தது. வவுனியா சென்ற இவரை மறுதினமே இலங்கை புலனாய்வுத்துறையினர் கடத்தியுள்ளனர்.
இலக்கத் தகடு அற்ற வாகனத்தில் வந்த புலனாய்வுத்துறையினர், இவர் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வந்து இவரை வாகனத்தில் ஏறுமாறு அச்சுறுத்தி பின்னர், இவரை பலவந்தமாக இழுத்து வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
இலக்கத்தகடற்ற வாகனம் கறுப்புக் கண்ணாடிகளால் ஆனது, வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாது. இவரது கண்கள் கட்டப்பட்ட நிலையில், கைகளையும் கட்டிய புலனாய்வுத்துறையினர், இவரை மதவாச்சியில் அமைந்துள்ள சித்திரவதை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
வாகனம் பயணித்தவேளை பல சோதனைச் சாவடிகள் இருந்தும் எந்தச் சோதனைச் சாவடியிலும் இவர்கள் வாகனம் நிறுத்தப்படவில்லை எனக் கூறுகிறார் சபேசன். மதவாச்சியில் உள்ள சித்திரவதை முகாமில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அவர் தொங்கவிடப்பட்டு, ஆணுறுப்பில் சரமாரியாகத் தாக்கப்பட்டுள்ளார்.
பின்னர் இவரை விசாரணைசெய்ய வந்த அதிகாரிகள் வேறு ஒரு நபரைப் பற்றி இவரிடம் கேட்டுள்ளனர். சபேசனுக்கு அந்தக் குறித்த நபரைப் பற்றி எத் தகவலும் தெரிந்திருக்கவில்லை. மாறாக அவர் யார் என்றே தெரியவில்லை. எதற்காக தாம் தாக்கப்படுகிறோம் என்று கூட தெரியாத நிலையில் சபேசன் இருந்திருக்கிறார்.
தான் வெளிநாட்டில் கல்வி கற்பதாகவும், அம்மாவை பார்ப்பதற்காக வந்ததாகவும் அவர் பல தடவை கூறியும் பலன் இல்லை. சபேசன் கைகளை கட்டி அவரின் முதுகில் பழுக்கக் காய்ச்சிய கம்பிகளைக் கொண்டு சூடுகாட்டியுள்ளனர் புலனாய்வுத்துறையினர். பின்னர் அப் புண் ஆறாதவாறு நீரை ஊற்றி சில நாட்கள் கழித்து ஆறாத அப்புண் மீது மிளகாய் தூளை தடவி மேலும் சித்திரவதைக்கு உள்ளாக்கியும் உள்ளனர். இவ்வாறு அல்லலுற்ற சபேசனை மீட்க அவர் பெற்றோரும் உறவினர்களும் மனித உரிமைக்கழகத்தில் முறைப்பாடு செய்தும் எதுவித பலனும் இல்லை.
பின்னர் அவர் உறவினர்கள் பெருந்தொகையான பணத்தை கப்பமாகச் செலுத்தி அவரை விடுவித்துள்ளனர். திரும்பவும் 5 நாட்களில் வந்து சரணடையவேண்டும் என்ற கட்டளையில் அவர் விடுவிக்கப்பட்டார். அச் சமயத்தில் அவர் அங்கிருந்து தப்பி திரும்பவும் கொழும்பு வந்து தற்போது பிரித்தானியாவில் கல்வி கற்று வருகிறார். தனக்கு நடந்ததைப் போலவே பல இளைஞர்களுக்கும் இவ்வாறு நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மதவாச்சியில் உள்ள இராணுவ தடுப்பு முகாமில் பல காணாமல் போனவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு பல சித்திரவதை சிறைச்சாலை அறைகள் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
போர் முடிவுற்றது. இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்கள், இலங்கை சென்று வந்தேன் அங்கு ஒரு பிரச்சனையும் இருக்கவில்லை எனப் பலர் கூறிவருகின்றபோது, தமிழ் இளைஞர்கள் நாளாந்தம் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர் என்பதே உண்மை நிலையாகும். இதனையே சபேசனின் சம்பவமும் நினைவுபடுத்தி நிற்கிறது.
Copyright © மீனகம்.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment