சிறிலங்கா அரசு முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் - அதிருப்தியில் தமிழர்கள்
[ திங்கட்கிழமை, 26 ஏப்ரல் 2010, 19:26 GMT ] [ தி.வண்ணமதி ]
சிறிலங்காவின் வடக்கு நகரமான யாழ்ப்பாணத்திலுள்ள ஒரேயொரு பௌத்த ஆலயத்திற்கு நாட்டினது குடியரசு அதிபர் வருகை தந்தபோது அந்த ஆலயம் அமைந்திருக்கும் பகுதிக்கு அண்மையில் தமிழ்ச் சமூகத்தினைச் சேர்ந்த இருவர் துவிச்சக்கரவண்டியில் பயணித்தபோது அங்கு கடமையில் நின்ற அரச படையினர் அவர்களை அடிக்காத குறையாகத் துரத்துகிறார்கள்.
ஆனால் குறிப்பிட்ட விகாரையின் வாயிலை நோக்கி சிங்களக் குடும்பமொன்று நடந்து செல்கிறது. வாயிலில் காவலில் நின்ற படையினர் அவர்களுடன் நட்புடன் உரையாடுகிறார்கள்.
சிங்களவர்களையே பெரும்பான்மையினராக கொண்ட நாட்டினது அரச படையினர் தமிழ்பேசும் மக்களை எப்படி நடாத்துகிறார்கள் என்பதை கடந்த ஏப்பிரல் முதலாம் திகதி குடியரசு அதிபர் ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப்பயணம் செய்திருந்தபோது இடம்பெற்ற இந்த இரண்டு சம்பவங்களும் தெளிவாக எடுத்து விளக்குகின்றன.
இவ்வாறு யாழ்ப்பாணம் பற்றிய செய்திக் கட்டுரை ஒன்றை அனைத்துலக செய்தி நிறுவனங்களில் ஒன்றான ஜபிஎஸ் [Inter Press Service - IPS] வெளியிட்டுள்ளது.
அதன் செய்தியாளராகிய Feizal Samath எழுதிய அச்செய்திக் கட்டுரையை 'புதினபலகை'க்காக தமிழாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.
எழுபதுகளின் ஆரம்பம் முதல் சிறிலங்காவின் சிறுபான்மைத் தமிழர்கள் பெரும்பான்மை இனத்தவர்களால் ஓரங்கட்டப்பட்டுவருவதாக தமிழர்கள் வாதிடுகிறார்கள்.
தமிழர்களுக்குத் தனிநாடு அமைப்பதற்கான ஆணையினை வழங்குமாறு கோரி 1977ம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்க் கட்சிகள் பெருவெற்றி பெற்றன.
இதனைத் தொடர்ந்து ஓரிரு வருடங்களின் பின்னர் தமிழர்களின் ஆயுதப்போராட்டம் உதயமாக, நாட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இனப்போர் தொடர்ந்தது.
போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், நாட்டினது வடக்கில் செறிந்து வாழும் சிறுபான்மை இனத் தமிழர்களின் மனங்களை வெல்லுவதற்கு அரசாங்கம் இன்னமும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியிருக்கும் எனப் பலரும் அஞ்சுகிறார்கள்.
கத்தோலிக்க மதகுரு ஒருவரிடம், தமிழர்களின் ஆதரவினைத் தனதாக்குவதற்கு அரசாங்கம் விட்டுக்கொடுப்புக்களைச் செய்து வளைந்து கொடுக்கிறதா எனக் கேட்டபோது 'எங்களால் எதுவுமே செய்ய முடியாது' என பாதுகாப்புக் கருதி தனது பெயரினை வெளியிட விரும்பாத அந்த மதகுரு தெரிவித்தார்.
20 மில்லியனைக் கொண்ட சிறிலங்காவினது சனத்தொகையில் 13 சதவீதமான தமிழர்கள்தான் சிறிலங்காவின் அளவில் பெரிய சிறுபான்மையினர். கொழும்புக்கு அடுத்ததாக அதி முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும் தமிழ்த் தேசியவாதம் புரையோடிப்போயிருக்கும் பிரதேசமாககவும் கருதப்படும் யாழ்ப்பாணத்திலேயே தமிழர்கள் செறிந்து வாழுகிறார்கள்.
நாட்டினது சிறுபான்மைத் தமிழர்களுக்குத் தனிநாடு அமைக்கும் இலக்குடன் போராடிவந்த விடுதலைப் புலிகளுடனான கசப்பான போர் மே 2009ல் முடிவுக்கு வர, யாழ்ப்பாணக் குடாநாட்டில் வர்த்தகம்சார் நடவடிக்கைகள் தீவிரம் பெற்றிருக்கிறன.
1977ஆம் ஆண்டு சிறிலங்காவில் தாராள பொருளாதாரக் கொள்கை கொண்டுவரப்பட்டாலும் அதன் தாக்கத்திற்கு யாழ்ப்பாணம் உட்படவில்லை என்றே கூறவேண்டும்.
போர் முடிவுக்கு வந்து ஆண்டொன்று கடந்துவிட்ட நிலையில், யாழ்ப்பாணத்தில் உருவாகிய புதிய வர்த்தக வாய்ப்புக்களை கொழும்பினைத் தளமாகக் கொண்ட வர்த்தக நிறுவனங்கள் பற்றிப்பிடிக்கின்றன.
இந்த நிலையில், குடாநாட்டில் வங்கி மற்றும் நிதிசார் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் புதிய கட்டடங்களுக்கு அருகாக எறிகணைத் தாக்குதல்களுக்கு உள்ளாகி எரிந்து அழிந்து உருக்குலைந்திருக்கும் கட்டடங்களைத் தற்போதும் அவதானிக்க முடிகிறது.
ஆனால் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக குடாநாட்டின் இளம் சமூகத்தவர்களும் முதியவர்களும் குழப்பம் நிறைந்த கருத்துக்களையே கொண்டிருக்கிறார்கள்.
'எங்களது பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை அருகேநின்று பார்ப்பதை விட இந்தப் பணிகள் எங்களுடையதாக இருக்கவேண்டும்' என பாதுகாப்புக் கருதி தனது பெயரை வெளியிட விரும்பாத வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
வடக்கில் இடம்பெற்றுவரும் அபிவிருத்திப் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் குடியரசு அதிபரின் சகோதரருமான பசில் ராஜபக்சவின் தலைமையில் அரசாங்கம் சிறப்புச் செயலணி ஒன்றை அமைத்திருக்கிறது.
தற்போதைய சூழமைவில் புதிய வங்கிகளும் நிதிசார் சேவைகளும் யாழ்ப்பாணத்துத் தமிழர்களுக்குத் தேவையற்றதொன்றே என பாடசாலை மாணவியான நிர்மலா [உண்மையான பெயர் அல்ல] கூறுகிறார்.
'பல வங்கிகள் தங்களது கிளைகளை யாழ்ப்பாணத்தில் திறப்பதோடு அதற்கான பணியாளர்களைக் கொழும்பிலிருந்தே கொண்டு வருகிறார்கள். எங்களுக்கு வேலை வாய்ப்பினை இவை பெற்றுத்தரவில்லை. மறுவளத்தில், நிலையான வைப்புக்கள் என்ற பெயரில் வங்கிகள் எமது பணத்தினை சுருட்டுகின்றன.'
'இந்த வங்கிகளில் கடன் பெறுவதும் இலகுவான காரியமன்று. வங்கியில் கடன் கேட்கச் சென்றால் நிலையான சொத்துக்கான ஆதாரத்தினைக் கோருகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்த போரினால் எங்களது சொத்துக்கள் அழிந்துவிட்டன அல்லது தங்களது தேவைக்காக இராணுவத்தினால் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டுவிட்டன' என தனது ஆதங்கத்தினை எம்மிடம் கூறுகிறார் இந்த மாணவி.
ஆனால் குடாநாட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் வங்கிக் கிளைகளில் மிகவும் குறைந்த அளவிலான யாழ்ப்பாணத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவராட் கப்றேல் கூறுகிறார்.
வாழ்வாதாரத்தினை வளப்படுத்துவற்கான சந்தர்ப்பங்கள் மற்றும் வேலை வாய்ப்புக்கள் அரிதாகக் காணப்படும் ஒரு சூழமைவில் தங்களது எதிர்காலம் தொடர்பாக என்ன கருதுகிறார்கள் என்பது தொடர்பாக 16 வயது தொடக்கம் 17 வயதிற்கு இடைப்பட்ட 30 இளைஞர் யுவதிகளுடன் IPS கலந்துரையாடியிருந்தது. இவர்களில் நிர்மலாவும் ஒருவர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களில் குடாநாட்டு மக்கள் பங்கெடுப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என இவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறுகிறார்கள்.
Copyright © 2009-10 Puthinappalakai.com, All Rights Reserved.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment