வவுனியாவில் நடைபெறும் கொலை, கொள்ளை, கப்பம் மற்றும் ஆட்கடத்தல்களைத் தடுத்து நிறுத்த கோரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2010, 01:12.58 AM GMT +05:30 ]
வவுனியாவில் அண்மைக் காலமாக நடைபெற்று வருகின்ற கொலை, கொள்ளை, கப்பம் கேட்டல் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்களை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தேர்தல் நடந்து முடிந்த கையுடன் வவுனியாவில் நடைபெற்றுவரும் குற்றச் செயல்கள் இங்குள்ள பொதுமக்களைப் பெரிதும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளன.
கடந்த 20ஆம் திகதி வவுனியா திருநாவற்குளத்தில் உள்ள ஒருவீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் மகாவித்யாலயத்தில் நான்காம் தரத்தில் கல்விபயின்று வந்த தனுஷா என்னும் ஒன்பது வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அந்த சிறுமியின் தாயாராகிய மகாறம்பைக்குளம் அ.த.க..பாடசாலை ஆசிரியை திருமதி. கௌரியாம்பிகை நெஞ்சிலும் வயிற்றிலும் கத்துக்குத்துக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் வவுனியா பொது மருத்துவமனையில் இன்னும் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றார்.
இந்தச் சம்பவமானது மாணவர் சமுதாயத்தினரையும், ஆசிரிய சமூகத்தினரையும் பொதுமக்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, 22.04.2010 ஆம் திகதியன்று வவுனியா தனியார் பஸ்தரிப்பிடத்தில் பேருந்திற்காக நின்றுகொண்டிருந்த பெண் பயணி ஒருவரிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறிப்பதற்கான முயற்சியும் இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் பொதுமக்கள் கள்வனைப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வந்த 28 வயதுடைய இளைஞன் ஒருவர் கடந்த 24.04.2010 ஆம் திகதியன்று வவுனியா பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்த வேளையில் பத்து லட்சம் ரூபாய் கப்பம் கேட்டு கடத்திச்செல்லப்பட்டார்.
பின்னர் பொலிசாரின் நடவடிக்கையினால் கடத்தப்பட்டவர் வவுனியா, பூவரசங்குளம் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் அமைச்சர் ஒருவரின் கட்சியைச் சார்ந்தவர்களாகவும், அரசிற்கு ஆதரவு வழங்கும் கட்சியின் உறுப்பினர்களாகவும் உள்ளனர் என்பது பொலிசாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. இவர்கள் யார் என்பது பொதுமக்களுக்கும் நன்கு தெரியும்.
பல்வேறு அனர்த்தங்களினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ள எமது மக்கள் சொல்லொணாத் துன்பங்களிலிருந்து தம்மை விடுவிப்பதற்கு யாராவது முன்வரமாட்டார்களா என்று ஏங்கித்தவிக்கும் இச்சூழலில் இத்தகைய சம்பவங்கள் எமது மக்களை விரக்தியின் விளிம்பிற்கே தள்ளியுள்ளன.
இதுவரை காலமும் வவுனியாவில் நடந்துள்ள கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கப்பம் தொடர்பான சம்பவங்களில் வர்த்தகர்கள், மருத்துவர், அதிபர், கிராமசேவகர், தனியார் பேருந்து உரிமையாளர், முச்சக்கரவண்டி உரிமையாளர், தனியார் கல்வி நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். மேலும் பலர் தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்வதற்காக பல லட்சம் ரூபாய்களைக் கப்பமாக கொடுத்து இன்று பெரும் கடனாளிகளாகவும் தொழிலைத் தொடர முடியாதவர்களாகவும் உள்ளனர்.
சிலர் கப்பமாகக் கேட்கப்பட்ட தொகையைக் கொடுக்க முடியாமல் தொழில், வர்த்தகம், வீடுவாசல்களைக் கைவிட்டு நாட்டைவிட்டே ஓடிப்போய்விட்டனர். இவைகளுக்கு ஒரு முடிவுகிட்டாதா. இவைகளை யாரிடம் சொல்லி முறையிடுவது ‘மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகிவிட்டதே’ என்று மக்கள் தங்களைத் தாங்களே நொந்துகொண்டுள்ளனர்.
நாம் எமது உரிமைகளை ஜனநாயக வழிமுறைகளில் பெற்றுக்கொள்வதற்காகப் பெரிதும் முயற்சிகள் மேற்கொண்டுவரும் இத்தருணத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இனியாவது இச்சம்பவங்களுடன் சம்பந்தப்பட்ட தலைமைகள், சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடும் தமது தொண்டர்களை வெளியேற்றி அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை பகிரங்கமாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தொடர்ந்தும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எமது மக்களின் சார்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
Copyright 2005-10 © TamilWin.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment