WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Saturday, May 22, 2010

சுதந்திரமும் இறைமையும்கொண்ட தமிழீழத்தனியரசை அமைப்பதற்காகப் பாடுபடக்கூடியவகையில் நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் அரசியலமைப்பை உருவாக்குவதிலும்...!!!

சனிக் கிழமை, மே 22, 2010 விரிவான செய்தி  
நாடுகடந்த அரசில் தேர்வுசெய்யப்பட்ட செயல்பாட்டாளர்கள் குறித்த அறிக்கை
20 May, 2010 by admin

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின் முதலாவது அமர்வு மே 17-19 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் பென்சிலேவேனியா மாநிலத்தின், பெலடெல்பியா நகரில் அமைந்துள்ள அமெரிக்காவின் அரசியலமைப்பு எழுதப்பட்ட வரலாற்றுப் புகழ் மிக்க தேசிய அரசியலமைப்பு மையத்தில் கூடியது.

இம் அமர்வில் அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், சுவிற்சலாந்து, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்காக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகக் கலந்து கொண்டனர். இவர்களுடன் லண்டன், ஜெனிவா ஆகிய நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணொளி மாநாட்டு வசதிகளின் ஊடாக பிரான்ஸ், ஜேர்மனி நோர்வே, சுவீடன், சுவிற்சலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அமர்வில் பங்குபற்றினர்.

அமர்வின் முதலாவது பகுதி கடந்த வருடம் சிறிலங்கா அரச ஆயுதப்படைகளால் படுகொலைசெய்யப்பட்ட நம்மவர்களுக்கான மலர்வணக்கத்துடன் ஆரம்பமாகியது. அனைத்துலக சட்டத்துறைப் பேராசிரியரும் மதியுரைக்குழு உறுப்பினருமான பிரான்சிஸ் பொய்ல், 'இனப்படுகொலைக்கெதிரான தமிழர்கள்' அமைப்பைச் சேர்ந்த செல்வி ஜனனி ஜனநாயகம் ஆகியோர் இம் முதலாவது பகுதியில் சிறப்புரை ஆற்றினர். இவர்களின் உரைகள் சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது நிகழ்த்திய இனப்படுகொலையினைச் சுட்டி நின்றன. பேராசிரியர் பொய்ல், தனது உரையில் இனப்படுகொலைக்கெதிரான ஈடு செய்பரிகாரமாக தமிழ் மக்கள் தமக்கென சுதந்திரத் தனிநாட்டினை அமைத்துக் கொள்ள உரித்துடையர்கள் எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து நிகழ்ந்த அங்குரார்ப்பணப் பகுதியில் உரை நிகழ்த்திய சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் (SPLM) அமெரிக்கச் செயலாளர் நாயகம் திரு Domach Rauch தமிழ் மக்களதும் தென்சூடான் மக்களதும் விடுதலைப்போராட்டங்களில் உள்ள ஒத்த தன்மைகளை எடுத்துக் கூறினார். ஜனநாயகப் பாதையில் அமையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது தமிழ் மக்களது சுதந்திரத்துக்கு சரியான திசையில் முன்னெடுக்கப்படும் ஒரு படியாகும் எனவும் சுட்டிக் காட்டினார்.

அமெரிக்காவின் முள்னாள் சட்டமா அதிபர் திரு Ramsey Clark அமெரிக்க நாட்டை உருவாக்கிய மூதாதையர் பிலடெல்பியாவில் கூடி அமெரிக்காவின் அரசிலமைப்பை உருவாக்கியமையினை நினைவு கூர்ந்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலமர்வை கூட்டுவதற்கு இவ்விடம் மிகவும் பொருத்தமானது எனத் தெரிவித்ததோடு, தமிழர்களுக்கிடையிலான ஒற்றுமையினையும் தனது உரையில் வலியுறுத்தினார். அரசவையில் அமர்ந்திருந்த ஓவ்வொரு நாட்டைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் திரு விசுவநாதன் ருத்ரகுமாரனும் இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் சிறப்புரையாற்றினர்.

இரண்டாம் நாள் அமர்வில், மக்கள் பிரதிநிதிகளின் உரைகளைத் தொடர்ந்து மனித உரிமைகள் தொடர்பான சட்ட அறிஞரும், மனித உரிமைச் செயற்பாட்டாளரும், மதியுரைக்குழு உறுப்பினருமான கரன் பார்க்கர் அரசியல் நிர்ணயசபை தொடர்பாக அதன் வழிமுறைகள் செயற்பாடுகள் குறித்து ஒரு விளக்கவுரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து சபை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனரைத் தெரிவு செய்தது. திரு விசுவநாதன் ருத்ரகுமாரன் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனராகத் தெரிவு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மேலும் ஏழு பிரதிநிதிகள் இடைக்கால நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாகப் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்;டனர். மிகிந்தன் சிவசுப்பிரமணியம், சாம் சங்கரசிவம், ஜெராட் பிரான்சிஸ், செல்வா செல்வநாதன், வித்யா ஜெயசங்கர், சசிதர் மகேஸ்வரன், ஜனார்த்தன் புலேந்திரன் ஆகிய ஏழு பேரும் இடைக்கால நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாகப் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டனர்.

இறுதிநாள் நிகழ்வில், அமர்வு தன்னை அரசியல் நிர்ணய சபையாக மாற்றிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அரசியல் அமைப்பு விவகாரக்குழுவும் அமைக்கப்பட்டது. இதனை விட, கல்வி, பாரம்பரியம், சுகாதாரம், விளையாட்டுத் துறைகளுக்கான குழு, வர்த்தகத்துறைக்கான குழு, அனைத்துலக ஆதரவுத்திரட்டலுக்கான குழு, இடம் பெயர்ந்தோர் மற்றும் மனித உரிமைகள் விடயங்களுக்கான குழு, மாவீரர்கள், போராளிகள் குடும்ப நலன் பேணும் குழு, வளங்களைப் பாதுகாப்பதற்கான குழு, பொருளாதார விவகாரங்களுக்கான குழு, போர்க்கைதிகளை விடுவிப்பதற்கான குழு, போர்க்குற்ற விசாரணைக்குழு பெண்கள், சிறுவர், மூதாதையர் நலன் பேணும் குழு ஆகிய செயற்குழுக்களும் அமைக்கப்பட்டன. இக் குழுக்களுக்கு உதவி வழங்குவதற்காக நிபுணர்கள் கொண்ட குழுவொன்றினை அமைப்பது எனவும் சபை தீர்மானித்துக் கொண்டது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வின் சபாநாயகராகத் திரு பொன் பாலராஜன் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவது தொடர்பாக மதியுரைக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் அமைந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வழிகாட்டிக் கோட்பாடுகளுக்கு அமைவாக, சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசை அமைப்பதற்காகப் பாடுபடக்கூடிய வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பை உருவாக்குவதிலும், இவ் அரசியலமைப்பை உருவாக்கி முடிக்கும் காலம்வரை இடைக்கால நிறைவேற்றுப்பொறிமுறையின் ஊடாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் முழு ஈடுபாட்டோடு உழைப்போம் என அமர்வில் கூடியிருந்த பிரதிநிதிகள் உறுதிப்பாடு எடுத்துக் கொண்டனர்.

அரசியலமைப்பு உருவாக்கப்படும் இடைக்காலத்தில் தொடர்ந்து தமது மதியுரைப்பணியினை ஆற்றுமாறு மதியுரைக்குழுவுக்கு சபை உத்தியோகபூர்வமான அழைப்பு விடுத்தது. சபை அமர்வு நிறைவுக்கு வரும் வேளையில், இல் அமர்வுகளின் வழிநடாத்தனராக இருந்து வழங்கிய பெரும் உதவிகளுக்காக போராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜாவுக்கு சபை நன்றி தெரிவித்தது. இறுதியாக நடைபெற்ற நிறைவு நிகழ்வில் மதியுரைக்குழு உறுப்பினர் பேராசிரியர் பீற்றர் சால்க்,

கனடாவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈழவேந்தன் ஆகியோர் உரையாற்றினர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வு கூடியமை எறத்தாழ ஒரு வருடகாலமா புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சியின் பலாபலனாகும்.


விசுவநாதன் ருத்ரகுமாரன்

இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர்

© 2009 Athirvu. All Rights Reserved.

No comments: