WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Friday, August 6, 2010

எங்களுக்காக குரல் கொடுங்கள்! தாய்லாந்தில் கஸ்டப்படும் இலங்கைத் தமிழ் அகதிகள் வேண்டுகோள்..!!!

எங்களுக்காக குரல் கொடுங்கள்! தாய்லாந்தில் கஸ்டப்படும் இலங்கைத் தமிழ் அகதிகள் வேண்டுகோள்
[ வெள்ளிக்கிழமை, 06 ஓகஸ்ட் 2010, 02:01.22 PM GMT +05:30 ]

எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே, எங்களுக்காக குரல் கொடுங்கள். எல்லைகளற்ற தமிழீழப் பாராளுமன்ற உறுப்பினர்களே! எங்களைப் பாருங்கள், எங்கள் நிலைமைகளி வெளிக்கொண்டுவாருங்கள். எங்களை இங்கு வந்து பாருங்கள்,
இது தொடர்பாக தாய்லாந்தில் வாழும் இலங்கை அகதிகள் விடுத்துள்ள வேண்டுகோள்:

அன்பார்ந்த உலகத் தமிழர்களே,

இலங்கைத் தமிழர்களாகிய நாங்கள் தாய்லாந்தில் படும் கஸ்ட நிலைமைகளை யாருமே அறியவே இல்லையா?

தாய்லாந்தில் UN இல் அகதி அந்தஸ்து பெற்றவர்கள் படும் பாடு

நாங்கள் இங்கு வந்து 3, 4, 5, 6 இப்படி பல வருடங்கள் ஆகின்றன. நாங்கள் இங்கு வரும்போது 2006ஆம் ஆண்டு அரிசி, இறைச்சி, வாடகை (அறை) என்பன மிகவும் குறைவாக இருந்தது. தற்போது UN எங்களுக்குத்தரும் பணம் ஒரு தனி நபருக்கு 2500Baht. ஆனால் தாய்லாந்துப் பணம் மூன்று மடங்காய் அதிகரித்துவிட்ட நிலையிலும் கூட, UN தரும் பணம் அதிகரித்தபாடில்லை.

அகதிகள் அனைவரும் இந்த நிலை பற்றி UN இடம் கோரிக்கையிட்ட போது, உங்கள் நாட்டில் பிரச்சினை தீர்ந்துவிட்டது, நீங்கள் அங்கு சென்று வாழலாம் என்கிறார்கள்.

இலங்கையில் UN நிறுவனத்திற்கே பாதுகாப்பு இல்லை, அதைவிட வன்னியில் UN அலுவலகம் திறப்பதற்கே அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், கொழும்பிலுள்ள UN அலுவலகம் மூடப்படவேண்டும் என்று, விமல் வீரவன்ச சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபொழுது, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ, தங்கள் நாடு ஜனநாயக நாடு அதனால்தான் அவர் உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறியிருந்தார். ஆனால் தமிழர்கள் 30 வருடங்கள் மந்தவெளியில் போராடி எந்தவொரு பலனும் கிடைக்கவில்லையே. தியாகி திலீபன், அன்னை பூபதி, தந்தை செல்வா, இவர்க்ளெல்லாம் எந்த பூமியில் போராடினார்கள்?

பான் கி மூன் விமல் வீரவன்சவின் உண்ணாவிரதத்தின் போது போர்குற்ற விசாரணைகளை நடத்தவேண்டாம் என்றபோது என்ன நடந்தேறியது? இறுதிக்கட்டப் போரின்போது உலகத்தமிழர்கள் எத்தனை பேர் தீக்குளித்தார்கள், எத்தனை பேர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்கள். அதிலும் இலண்டனைச் சேர்ந்த பரமேஸ்வரன் புனிதமாக இருந்த உண்ணாவிரதத்தை இலங்கை அரசுக்குத் துணையோடு இருந்த பத்திரிகைக்காரர்கள் அநியாய வளியில் குற்றம் சுமத்தினார்கள்.

கடைசியில் பரமேஸ்வரனால் மீண்டும் போராடி ஈழத்து தமிழன் என்று நிரூபித்துக்காட்டி, ஈழத்துத் தமிழர்களுக்கே பெருமை சேர்த்தார். பரமேஸ்வரன் வன்னிமக்கள் உயிர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக, போரை நிறுத்தும்படி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்.

ஆனால் பான் கி மூன் என்ன செய்தார். இறுதியில் 50 000 உயிர்களையும் இலங்கை அரசாங்கப் பயங்கரவாதம் கொன்று குவித்தபின் ஹெலியில் சென்று சுடுகாடுகளைப் பார்வையிட்டார். இவைமட்டுமல்ல, அகதிகளாக வாழும் எங்களை பிரச்சினை தீர்ந்துவிட்டது இலங்கையில் சென்று வாழுங்கள் என்கிறார்கள்.

மன்னார் உயிலங்குளம் என்னுமிடத்தில், 74 வயதான மூதாட்டி ஒருவரை 5 இலங்கை இராணுவம் கற்பழித்த சம்பவம் உலகிற்கே தெரியும். அப்படியென்றால் அதைவிட குறைவான வயதில் உள்ள பெண்கள் அங்கு எப்படி வாழமுடியும்.

இவையெல்லாம் தாய்லாந்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு நன்கு தெரியும். இந்த நிலையில் எப்படி நாங்கள் மீண்டும் இலங்கையில் சென்று வாழமுடியும்?

தாய்லாந்தில் இருக்கும் இலங்கை அகதிகளுக்கு UN சட்டப்படி என்ன சுதந்திரம் இருக்கிறது? முழுமையான சாப்பாடு, கல்வி, அறைவாடகை, வெளியில் நடமாடும் சுதந்திரம், உடுப்பதற்கு உடுபுடவை, சிறுபிள்ளைகளுக்கு பால்மா, காயப்பட்டு கைகால் முறிந்த நிலையில் வந்தவர்களுக்கு வைத்தியம், வை எதுவுமே இங்குள்ள அகதிகளுக்குக் கிடைப்பதில்லை. இவர்களுக்காக குரல் கொடுப்பதற்கும் யாரும் இல்லை.

UN இல் அகதி அந்தஸ்து பெற்ற குற்றத்திற்காக 4, 5 வருடங்களாக இலங்கை அகதிகள் பலபேர் சிறையில் வாடுகிறார்கள். இத்தனை வருடங்களாக எந்த முடிவும் தெரியாமல் சாப்பாடு, கல்வி, மருத்துவம் எந்த வசதியுமின்றி மிகவும் கஸ்டப்படுகிறார்கள். சில கணவன்மார்கள் சிறையிலும், மனைவி மற்றும் பிள்ளைகள் வெளியிலும் இருக்கும்பொழுது, அவர்கள் அனுபவிக்கும் சிரமங்கள் ஏராளம்.

எந்தவொரு நிறுவனமோ எங்களைப் பார்த்து இரக்கப்படுவதே இல்லை. மூன்றாவது நாட்டில் வாழ்வதற்கான நேர்காணல் நடைபெற்றால் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் நிராகரித்துவிடுவார்கள்.

இந்த நிலைமையில் இந்த அகதிகள் பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கையை நினைத்து, பிள்ளைகளும் பெற்றோரும் உளநலன் பாதிக்கப்பட்ட நிலையில் இங்கு கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தவர்களாக அலைகின்றார்கள்.

எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே, எங்களுக்காக குரல் கொடுங்கள். எல்லைகளற்ற தமிழீழப் பாராளுமன்ற உறுப்பினர்களே! எங்களைப் பாருங்கள், எங்கள் நிலைமைகளி வெளிக்கொண்டுவாருங்கள். எங்களை இங்கு வந்து பாருங்கள், நாங்களும் தமிழர்கள்தான். இங்கு கிட்டத்தட்ட 1000 தமிழர்கள் இருக்கின்றார்கள்.

தாயை, தகப்பனை, பிள்ளையை, கணவனை, சொத்துக்களை, கை கால்களை இழந்த நிலையில் இங்கு வந்தோம். இறுதியில் எங்கள் ஒவ்வொருவரின் நிலைமை குடும்பத்துடன் UN முன்னால் தற்கொலை செய்வதைத் தவிர வேறுவழி தெரியவில்லை.

கல்வியை கேட்டோம், இல்லை, பணத்தைக் கேட்டோம், இல்லை, வேறு நாட்டுக்கு அனுப்புங்கள் என்று கேட்டோம், இல்லை, மருத்துவம் இல்லை. தாய்லாந்து சட்டப்படி நாங்களாகவே இங்கு உழைத்து வாழக்கேட்டோம். எந்த உரிமையும் எங்களுக்குக் கிடையாது. இந்த நிலைமையில் இன்னும் எத்தனை காலம் இங்கு வாழப்போகின்றோம் என்றும் தெரியாது. பிள்ளைகளின் கல்வி மறுக்கப்பட்டு கலாச்சாரம் போய்விட்டது.

தயவுசெய்து உலகத்தமிழினமே எங்களையும் பாருங்கள். இந்த நிலைமையில் இருந்து எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் விடுதலை செய்யுங்கள். தாய்லாந்தில் வாழும் அனைத்து இலங்கைத் தமிழர்களின் பணிவான வேண்டுகோள் இது, தயவு செய்து இந்தப் பிரச்சினையை எல்லாப் பத்திரிகைகளிலும் வெளியிட்டு எங்களுக்காகவும் பாடுபடுங்கள்.

இங்கனம்
தாய்லாந்தில் வாழும் இலங்கை அகதிகள்


Copyright 2005-10 © TamilWin.com

No comments: