WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Tuesday, November 2, 2010

SEE HOW CRUEL/ INHUMAN THESE SINHALA POLITICIANS,BUREAUCRATS,TID/CID/CCD,TROOPS,POLICE IN SRILANKA TOWARDS TAMIL POWs/IDPs/POLITICAL PRISONERS...!!!

'நாங்கள் சித்திரவதைக்கு உள்ளாகிறோம்' - அவலக் குரல் எழும்பும் தடுப்பிலுள்ளவர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 02 நவம்பர் 2010, 08:29 GMT ] [ தி.வண்ணமதி ]

சிறிலங்காவிலுள்ள தடுப்பு முகாம்களிலுள்ள 'அவர்களைப்' பற்றி எவரும் கவலைகொள்வதாகத் தெரியவில்லை.

'இவர்களது' அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு சிறிலங்காவிலுள்ள எந்தவொரு மனித உரிமை அமைப்போ அன்றி சட்டவாளரார்களோ இன்னமும் துணியவில்லை.

இவர்களை இவ்வாறே நாங்கள் கைவிட்டோ அன்றி 'காணாமற்போகவோ' விட்டுவிடலாமா?

இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளது Green Left Weekly என்னும் இணையத்தளம். அத்தளத்தில் Lee Yu Kyung என்பவரால் எழுதப்பட்ட செய்திக் கட்டுரையை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்யதவர் தி.வண்ணமதி.

சிறிலங்காவில் சிறுதேசிய இனமான தமிழர்களுக்குத் தனிநாடுகோரிப் போராடிவந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டவர்கள் சிறிலங்கா இராணுவத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற தடுப்புமுகாம்களின் நீண்டநாள் போர் கைதிகளாகிவிட்டார்கள்.

போரின் இறுதி நாட்களில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் படையினரால் கைதுசெய்யப்பட்டார்கள் அல்லது அவர்களிடம் சரணடைந்தார்கள்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அல்லது சரணடைந்தவர்களில் சிலரது விதி எதுவென இதுவரை எவருக்கும் தெரியாத அதேநேரம் பலர் படையினரால் நடாத்தப்படுகின்ற பல்வேறுபட்ட தடுப்பு முகாம்களிலும் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

நாட்டின் பல பாகங்களிலும் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் தங்களது அன்புக்குரியவர்களை அடிக்கடி சென்று பார்ப்பதற்குப் போதுமான பண வசதிகள் இல்லாத பல குடும்பங்கள் உள்ளன. இவற்றுள் 32 வயதுடைய பாத்திமாவும் ஒருத்தி.

நாட்டினது தென்முனையில் காலி மாட்டத்திலுள்ள பூசா முகாமில் இவளது கணவன் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறான்.

போர் உக்கிரமாகத் தொடர்ந்த நாட்டினது வடக்குப் பகுதியில் இவள் மீள்குடியேறிவிட்ட நிலையில் தீவின் மறுபுறத்தே பூசா முகாமில் வாடும் தனது கணவனைப் பார்ப்பதற்காக இவள் கடந்த எட்டுமாதங்களில் ஓரிரு முறைதான் சென்றுவந்திருக்கிறாள்.

"நான் ஒவ்வொரு முறை செல்லும் போதும் நான் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறேன். தமிழர் புனர்வாழ்வுக்கழகம் என்ற தொண்டு நிறுவுனத்தில் அவர் பணியாளராகப் பணிசெய்திருந்தார்" என்கிறாள் அவள்.

"அவர் மாதக் கொடுப்பனவிற்குப் பணிசெய்த ஒரு பணியாளர். எனது கணவர் ஒருபோதும் களமுனைக்குச் சென்றதில்லை" என அவள் கண்ணீருடன் தொடர்ந்தாள்.

போரின் இறுதிநாட்களில் தங்களது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தப்பிவந்த மக்களை ஓமந்தைச் சோதனைச் சாவடியில் விசாரணைக்குட்படுத்திய படையில் ஒரு நாளேனும்; புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டிருந்தால் அவர்கள் தங்களது பெயர்களைப் பதிவுசெய்யவேண்டும் எனப் படையினர் ஒலிபொருக்கி மூலம் அறிவித்திருந்தார்கள்.

"இவ்வாறு புலிகள் அமைப்புடன் தொடர்பினை வைத்திருந்தவர்கள் தங்களது விபரங்களைப் பதிந்தவுடன் அவர்களை உடனடியாகவே குடும்பத்துடன் இணைப்போம் என்றும் குறிப்பிட்ட சிலரை மாத்திரம் ஆகக்கூடியது 3 மாதாங்களுக்கு தடுத்து வைத்திருந்துவிட்டு விடுதலை செய்துவிடுவோம் என்றும் படையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்ததனர்" என்கிறார் 43 வயதுடைய ரஞ்சிதம்.

இந்தநிலையில்தான், வீண் வம்பு வேண்டாம் என நினைத்த ரஞ்சிதம் தனது 25 வயது மகனை இராணுவத்தினரிடம் சென்று பதியுமாறு கூறியிருக்கிறார்.

ஆனால் இவளது மகன் கைதுசெய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் இவன் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படாது தொடர்ந்தும் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கிறான்.

ஆனால் ஓமந்தையில் வைத்து அரச படையினர் உறுதியளித்தது போல கைதுசெய்யப்பட்டவர்கள் எவரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் விடுதலை செய்யப்படவில்லை என்கிறார்கள் இவர்கள்.

"ஏப்பிரல் 2007 அன்று எனது மகன் புலிகளால் பிடித்துச்செல்லப்பட்டார். ஆனால் அடுத்த ஆண்டே எனது மகன் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்துவிட்டார். எனது மகனை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பதுங்கு குழியில் ஒழித்து வைத்திருந்தேன்" என சோகத்தில் மூழ்கியிருக்கும் இந்தத் தாய் கூறினாள்.

நாட்டினது வடக்குப் பகுதியில் பத்துக்கும் அதிகமான தடுப்பு முகாம்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இவ்வாறு எத்தனை தடுப்பு முகாம்கள் உள்ளன, எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றும் அந்த முகாம்கள் எங்கெங்கே அமைந்திருக்கின்ற என்ற கேள்விகளுக்கான பதில் நாம் யாரிடம் கேள்வியினைக் கேட்கிறோம் என்பதைப் பொறுத்து மாறுபடும்.

அரச படையினரால் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த 11696 பேரில் 5819 பேர் விடுவிக்கப்பட்டிருப்பதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டீ.யு குணசேகர கூறியதாக அரச பத்திரிகையான டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஆனால் எந்தவிதக் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படாது தனியாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 800க்கும் அதிகமானவர்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
"இவை தடுப்பு முகாம்கள் இல்லை. முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்படுகிறது. அவ்வளவுதான். வேண்டுமானால் நீங்கள் நேரில் வந்து உறுதிப்படுத்தலாம்" என கடந்த பெப்பிரவரி முதல் இந்த முகாம்களுக்குப் பொறுப்பாக இருக்கும் பிரிகேடியர் சுனந்த ரணசிங்க கூறுகிறார்.

"கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக புலிகளின் முன்னாள் போராளிகளும் இராணுவத்தினரும் ஒன்றாக, அந்நியோன்னியமாக இருக்கிறார்கள். இவர்களிடத்தே நட்பு வளர்ந்திருக்கிறது" என அவர் தொடர்து தெரிவித்தார்.

சரி, இந்த முகம்களில் முன்னாள் போராளிகள் அடித்துத் துன்புறுத்தப்படுவதாகச் செய்திகள் வெளிவருகிறதே எனக் கேட்ட போது, "நீங்கள் கேட்கும் இந்த கேள்வியினை நான் வெறுக்கிறேன். சித்திரவதை, துன்புறுத்தல் என நீங்கள் கூறும் இந்தச் சொற்களை நெடு நாட்களின் முன்னர் நாங்கள் எங்கள் அகராதியிலிருந்து எடுத்துவிட்டோம்" என்றார் அவர்.
எது எவ்வாறிருப்பினும் தடுப்பில் இருந்தவர்கள் வேறு விதமான கதைகளைக் கூறுகிறார்கள்.

"சிங்கள மொழியில் அமைந்த தேசிய கீதத்துடன் தடுப்பு முகாமில் எங்களது நாள் ஆரம்பிக்கும். காலையில் நாங்களும் இதனைப் பாடவேண்டும் தடுப்பில் இருந்த எனது கூட்டாளி ஒருவர் தேசிய கீதத்தினைச் சரியாகப் பாடவில்லை என நாள்பூராவும் முட்டுக்காலில் வெய்யிலில் இருந்து தேசிய கீதத்தினைப் பாடவேண்டுமென அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது" எனத் தனது தடுப்பு முகாம் வாழ்க்கையினை விபரிக்கிறார் அண்மையில் விடுவிக்கப்பட்ட 39 வதுடைய முன்னாள் போராளி ஒருவர்.

"காலையில் தேசிய கீதம் பாடப்பட்டுக்கொண்டிருந்த போது இருமியதுக்காக இன்னொருவருக்கு உதை விழுந்தது" என அவர் தொடர்ந்தார்.

தடும்பு முகாம்களில் அனைத்துத் தேவைகளுக்கும் சிங்கள மொழியே பயன்படுத்தப்பட்டது எனவும் தங்களில் பலருக்கு அந்த மொழி தெரியாது என்றும் கூறுகிறார் இந்த முன்னாள் போராளி.

"டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் குறிப்பிட்ட ஒருவருக்கு அங்கு நின்ற படையினர் அங்கிருந்து அகலுமாறு சிங்களத்தில் கூறியிருக்கிறார். ஆதனை விளங்கிக்கொள்ளாத அவர் எதனையும் செய்யாமல் அப்படியே இருக்க, தங்களை அவமதிப்பதாகக் கூறி கடுமையான அடி விழுந்தது. இதுபோன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றன" என்றார் அவர்.

கடந்த ஏப்பிரலில் உடல் உறுப்பிழந்தவர்களும் குழந்தைகளுடன் இருந்த பெண்களும் விடுவிக்கப்பட்டபோது தனது ஒரு காலினை இழந்த ஜெயா என்பவரும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

தாங்கள் விடுவிக்கப்படுவதற்கு முன்னர் உடல் உறுப்பிழந்த 107 முன்னாள் போராளிகள் அருகிலிருந்த கட்டடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு வந்த பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் உடல் உறுப்பிழந்த ஏழு போராளிகளைத் தனிமைப்படுத்தி எதுவெனத் தெரியாத இடமொன்றுக்குக் கூட்டிச் சென்றதாகவும் ஜெனா கூறுகிறார்.

தடுப்பிலிருந்த பல போராளிகள் பூசா சிறைக்கூடத்திற்கு மாற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.

எவ்வாறிருப்பினும், அனைத்துலக செஞ்சிலுவைக்குழு போன்ற நடுவு நிலையுடன் செயற்படும் அனைத்துலக அமைப்புக்களால் முன்னாள் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதற்கு அனுமதிக்கப்படாதமையினால் எத்தனைபேர் இவ்வாறு கொண்டுசெல்லப்பட்டனர், அவர்கள் தற்போது எங்குள்ளார்கள் என்ற தகவல்களைப் பெறுவது முடியாத காரியமாகவே உள்ளது.

'காணாமற்போதல்கள்' அதிகம் இடம்பெறும் இருண்ட வரலாற்றினைச் சிறிலங்கா கொண்டிருக்கும் நிலையில் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் உறுப்பினர்கள் பலர் காணாமற்போயிருக்கலாம் என்ற நீதியான அச்சம் அதிகம் காணப்படுகிறது.

தமிழ் இளைஞர்கள் பலர் சிறிலங்கா அரச படையினரால் குறுகிய தூரத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுக் கொலைசெய்யப்பட்டதைக் காட்டும் ஒளிப்படங்களை மனித உரிமை அமைப்புக்கள் வெளியிட்டிருக்கின்றன.

"ஒரு நாள் இரவு தடுப்பில் இருந்த மூன்று போராளிகள் ஓடிவிட்டதாக மறுநாள் காலையில் இராணுவத்தினர் கூறினார்கள். இராணுவத்தினர் கூறியதை நம்பவேண்டிய நிலையில் நாம் இருந்தோம்.

ஆனால், நாங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாமைச் சுற்றி இரட்டை வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆயுதம் தாங்கிய படையினர் எந்த நேரமும் கண்ணுக்குள் எண்ணெயினை விட்டவாறு காவல் கடமையில் இருந்தார்கள்.

நாங்கள் யாரும் தப்பியோட முற்பட்டால் படையினர் எண்களைச் சுட்டுக் கொலைசெய்து விடுவார்கள் என நாம் எச்சரிக்கப்பட்டிருந்தோம்" என ஜெயா எங்களிடம் கூறினார்.
தான் ஒருபோதும் விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டதில்லை என ஜெயா கூறுகிறார்.

தனது குடும்பத்துடன் இடம்பெயர்ந்தோர் முகாமில் தங்கியிருந்ததாகவும் கடந்த ஓகஸ்டில் தனது குடும்பத்தின் முகாமை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டபோது தன்னை சந்தேகத்தின் பேரில் படையினர் கைது செய்ததாகக் கூறுகிறார் இவர்.

கைதுசெய்யப்படுவதற்கு முன்னர்; 15 தடவைகளுக்கு மேல் தான் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக ஜெயா தொடர்ந்து தெரிவித்தார்.

"இந்த விசாரணைகளின் போது படையினர் என்னை அடித்துத் துன்புறுத்தினர். நான் புலிகளின் உறுப்பினர் என யாரோ தங்களிடம் கூறியதாக படைப்புலனாய்வாளர்கள் என்னிடம் கூறினர்.

நான் ஒரு புலி என்பதை ஏற்க மறுத்தால் தொடர் சித்திரவதைக்கு உள்ளாக்கபடுவேன் என அவர்கள் என்னை எச்சரித்ததோடு கிரிக்கெட் மட்டையால் என்னை அடித்துத் துன்புறுத்தினார்கள்" என்றார் அவர்.

"இதன் காரணமாக இன்றும் நான் மூச்சு விடுவதற்குச் சிரமப்படுகிறேன். என்னைப் போன்ற பலர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர்" என ஜெயா தொடர்ந்தார்.

விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் இதுபோன்ற தகவல்கள் அரசாங்கத்தின் கருத்துக்களுடன் முற்றிலும் முரண்படுகிறது.

"தாங்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களே என்பதை ஏற்றுக்கொண்டவர்கள் மாத்திரம்தான் கைதுசெய்யப்பட்டனர்" என அப்போது மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த ரிசாத் பதியுதின் குறப்பிட்டதாக 15 யூன் 2009 அன்று பி.பி.சியின் சிங்கள சேவையான சந்தேசிய செய்தி வெளியிட்டிருந்தது.

"இவ்வாறு கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் உறவினர்களுக்கு இவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன" என அவர் தொடர்ந்தார்.

எவ்வாறிருப்பினும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த 'வலயம்-4' முகாமில் கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் அடிக்கடி சுற்றிவளைப்புக்கள் இடம்பெற்றதாகவும் 17 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் சந்தேகத்தின் பெயரில் அழைத்துச்செல்லப்பட்டதாகவும் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் இன்னொருவர் தகவல் தருகிறார்.

"முதலில் ஆண்களை மாத்திரம்தான் அழைத்துச் சென்ற படையினர் பின்னர் சந்தேகத்திற்குரிய முன்னாள் பெண் போராளிகளையும் கூட்டிச்சென்றனர்" என 21 வயதுடைய ராணி கூறுகிறாள்.

"குறித்த சில குடும்பங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளையும் படையினர் கைதுசெய்தபோது பெற்றோர் கதறி அழுதார்கள்" என அவர் தொடர்ந்தார்.

"கடந்த ஏப்பிரலில் நான் விடுவிக்கப்படும் வரைக்கும் அவர்கள் என்னை விசாரித்துக்கொண்டே இருந்தார்கள. 11 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்த விசாரணைகளின் போது வேறுபட்ட விசாரணையாளர்கள் என்னிடம் ஒரே கேள்வியைக் கேட்டுத் துன்புறுத்தினார்கள். நான் கூறிய பதிலை அவர்கள் நம்பவில்லை" என புலிகள் அமைப்பின் முன்னாள் களமுனைப் போராளியான 36 வயதுடைய சுகந்தி தன்கதையினைக் கூறுகிறாள்.

ஆனால் தடுப்பிலிருந்து வெளியே வந்திருக்கும் ஜெயா கூறும் சம்பவங்களை விட சுகந்தியினது அனுபவங்கள் வித்தியாசமானதாக உள்ளன. தனக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவு விசாரணையே இடடம்பெற்றதாகக் கூறிய ஜெயா தான் அதிக வேலை வாங்கப்பட்டதாகக் கூறியிருந்தார்.

1990ம் ஆண்டு இடம்பெற்ற மோதலொன்றில் தனது காலொன்றை இழந்த சுகந்தி புலிகளமைப்பின் பொதுமக்களுக்கான நிர்வாகக் கட்டமைப்பில் பணியாற்றியிருக்கிறார்.

ஆனால் கிளிநொச்சி அரச படைகளிடம் விழுந்திருந்த நிலையில் போரின் இறுதி நாட்களில் தங்களது உறுப்புகளை இழந்து நின்ற உறுப்பினர்களும் களமுனைக்குச் செல்லவேண்டும் எனப் பணிக்கப்பட்டதாக அவள் எங்களிடம் தெரிவித்தாள்.

"கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் உடல் உறுப்பிழந்த போராளிகளுக்கான கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த புலிகளின் குரல் நிறுவனத்தின் பொறுப்பாளர் அங்கங்களை இழந்த போராளிகளான நாங்களும் களமுனைக்குச் செல்லவேண்டும் எனப் பணிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்" என்றாள் சுகந்தி.

இரண்டாவது முன்னணிக் காப்பரண் ஒன்றில் ஏனைய உடல் உறுப்பிழந்த போராளிகளுடன் சுகந்தியும் நிலைப்படுத்தப்பட்டிருக்கிறாள். மே 13ம் நாளன்று மோதல்கள் உக்கிரமடைய படையினர் முன்னணிக் காப்பரணை உடைத்து உள்நுழைய சுகந்தி காயமடைந்த தனது சகாவுடன் பின்வாங்கியிருக்கிறாள்.

"உயிரற்ற உடல்களும் காயமடைந்தவர்களுமே எங்கும் நிறைந்திருந்தனர். போராளிகள் பொதுமக்கள் என எந்த வேறுபாட்டையும் அங்கு காண முடியவில்லை.

நாம் என்ன செய்யவேண்டும் எனக் கட்டளையிடுவதற்குத் தளபதிகள் கூட அங்கில்லை. இந்த நிலையில் நாங்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்வதுதான் பொருத்தமானது என எனக்குப் பொறுப்பாக இருந்த போராளி கூறினார்" என சுகந்தி தன்கதையினை எங்களிடம் விபரித்தாள்.

மே 19ம் நாளன்று ஓமந்தைச் சோதனைச சாவடியில் வைத்து இவள் அரசாங்கத்தினால் நிர்வாகிக்கப்படும் 'புனர்வாழ்வு' முகாமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறாள்.
சுகந்தி விடுவிக்கப்பட்டபோதும் அவள் அரசாங்கத்தினது புலனாய்வாளர்களால் அடிக்கடி அச்சுறுத்தப்பட்டிருக்கிறாள்.

இவளது வீட்டுக்கு அடிக்கடி செல்லும் புலனாய்வாளர்கள் இவள் வீட்டில் இல்லாதிருந்தால் எங்கே எனக் கேட்டு துருவித் துருவி விசாரிக்கிறார்களாம்.

"நிர்வாக வேலைகளில் எனக்கிருந்த அனுபவம் மற்றும் கணனி அறிவு ஆகியவற்றினால் எனக்கொரு வேலை கிடைத்திருக்கிறது. நான் உண்மையில் வேலை செய்கிறேனா என நான் உறுதிப்படுத்தவேண்டுமாம் என புலனாய்வாளர்கள் கூறுகிறார்கள். உண்மையைக் கூறப்போனால் நான் விடுவிக்கப்பட்டதாகவே உணரவில்லை" என்கிறாள் சுகந்தி.

"உலகிலுள்ள தடுப்பு முகாம்களில் சிறிலங்காவிலுள்ள தடும்புமுகாம்களே அளவில் பெரியது" என யூரிகளின் அனைத்துலகக் குழு என்ற அமைப்பு கடந்த செப்ரெம்பரில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

"விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்ட 565 சிறார்களுக்கான தனியான புனர்வாழ்வு முகம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இங்கு யுனிசெப் நிறுவனத்தினர் தங்கு தடையின்றிச் சென்று வரக்கூடியதாக இருந்தது. இங்கு புனர்வாழ்வு பெற்றவர்கள் அனைவருமே தற்போது விடுவிக்கப்பட்டுவிட்டனர். இது ஆக்கபூர்வமானதொரு அம்சம்" என அந்தக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

எது எவ்வாறிருப்பினும், தடுப்பிலுள்ளவர்கள் தொடர்பில் முறையான நீதி விசாரணையினை மேற்கொள்ளாதிருக்கும் அரசாங்கமானது இது தொடர்பான அனைத்துலகச் சட்ட விதிகளை மீறுதாகவும் தடுப்பிலுள்ளவர்களின் அடிப்படை உரிமைகளை மதித்துச் செயற்படத் தவறிவிட்டதாகவும் யூரிகளின் அனைத்துலகக் குழு என்ற இந்த அமைப்பு குற்றம் சுமத்துகிறது.
ஆனால் ரணசிங்க குறிப்பிட்ட இந்தக் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுக்கிறார்.

"காத்திரமான ஆதாரங்கள் எதுவுமின்றி அனைத்துலக ஊடகங்களும் அனைத்துலக சமூகமும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. ஆனால் உண்மை இங்கு வேறு விதமாக உள்ளது" என்கிறார் அவர்.

சுரி, அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற தடுப்பு முகாம்களுக்கு அனைத்துலக செஞ்சிலுவைக்குழு சென்று பார்வையிடுவதற்கு அனுமதிக்கலாமே எனக் கோரியபோது, "நான் அடிமட்டத்தில் வேலை செய்பவன். நீங்கள் இந்தக் கேள்வியினை உயர் பதவிகளில் இருக்கும் தொடர்புடைய அதிகாரிகளிடம்தான் கேட்கவேண்டும்" என புனர்வாழ்வு ஆணையாளரான பிரிகேடியர் ரணசிங்க.

முன்னாள் போராளிகள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் முகாம்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களுக்குச் சென்றுவருவதற்கான அனுமதி கடந்த யூலை 2009 முதல் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவினருக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.

"பூசா தடுப்பு முகாம் உள்ளிட்ட நீண்ட காலமாக இருக்கும் குறித்த சில தடுப்பு மையங்களுக்குச் சென்று வருவதற்கான அனுமதி தங்களுக்கு நீண்டகாலமாகவே இருக்கும் அதேநேரம் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பு முகாம்களுக்கு நாங்கள் அனுமதிக்கப்படுவதில்லை" என அனைத்துலக செஞ்சிலுவைக்குழுவின் கொழும்பு பணியகப் பேச்சாளர் சரசி விஜயரத்தின கூறுகிறார்.

இவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எவ்வாறு நடாத்தப்படுகிறார்கள் என்பதைக் கண்காணிப்பது முடியாத காரியமே.

அரச படையினர் போர்க்குற்றங்களில் ஈடுட்ட விடயத்தினைப் போலவே முன்னாள் போராளிகளின் தடுப்பு விடயமும் கேட்கப்படமுடியாத விடயமாகச் சிறிலங்காவில் மாறிவிட்டது.

எவ்வாறிருப்பினும் போருக்குப் பின்னான இந்தச் சூழமைவில், இனநல்லிணக்கம் பற்றியே அனைவரும் பேசிவரும் நிலையில் வெளித்தொடர்புகள் எதுவும் அற்ற நிலையில் புலிச் சந்தேக நபர்கள் பெருமளவில் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் விடயம் முதன்மையான அம்சமாக மாறிவிட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர் அது நாட்டினது தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் காத்திரமான செல்வாக்கினைக் கொண்டிருந்தது.

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் தடுப்பில் வைக்கப்பட்டிருப்பதை தமிழ்ச் சமூகத்தினர் தொடர்ந்தும் சகித்துக்கொள்ளமாட்டார்கள்.

தங்களின் அன்புக்குரியவர்கள் இராணுவத்தின் தடுப்பில் இருப்பதாக நம்பும் ஆயிரக்கணக்கானவர்கள் அரசாங்கம் அமைத்திருக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் இனநல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் தோன்றிச் சாட்சியமளித்திருக்கிறார்கள்.

கணவன் தடுப்பில் இருக்கும் பாத்திமாவிடம் போருக்குப் பின்னான நிலைமையில் முதன்மையான விடயமாக நீங்கள் கோருவது எது எனக் கேட்டேன். "எனது கணவர் வீடு திரும்பவேண்டும்" என்றார் அவர்.

[அனைத்துலக செஞ்சிலுவைக்குழுவின் பேச்சாளர் மற்றும் புனர்வாழ்வு ஆணையாளரான பிரிகேடியர் ஆகியவர்களைத் தவிர இந்தப் பத்திக்குக் கருத்துத் தெரிவித்த ஏனையவர்களது பெயர்கள் பாதுகாப்புக் கருதி மாற்றப்பட்டிருக்கிறது என்றும் அந்த இணைத்தளம் குறிப்பிட்டுள்ளது]

Copyright © 2009-10 Puthinappalakai.com, All Rights Reserved.

No comments: