Saturday, July 16, 2011
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு தமது அன்றாடதேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும்சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.!!!
15 ஜுலை, 2011 - பிரசுர நேரம் 17:35 ஜிஎம்டி
அடிப்படை வசதிகளின்றி கிளி. மக்கள்
கிளிநொச்சியில் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட வில்லை என மக்கள் விசனம்- கோப்பு படம்
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பட்டுள்ள மக்களுக்கு தமது அன்றாட தேவைகளைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தினாலும், உதவி நிறுவனங்களினாலும் பல்வேறு உதவிகள் கிடைக்கின்ற போதிலும், அந்த மக்களில் பலருக்கு அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்துகொடுக்கப்பட வில்லை என்று விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர், சுகாதாரம், வாழ்வாதார உதவிகள், காணிகள், வீட்டுத்திட்டம் போன்ற பல்வேறு விடயங்களில் இந்த மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கின்றார்கள். உமையாள்புரம் பகுதியிலும் இவ்வாறான பிரச்சினைகள் இருப்பதாக அங்குள்ள பெண்கள் தெரிவித்துள்ளனர்.
வாழ்வாதார உதவியாக கோழி வளர்ப்புக்கான உதவிகள் வழங்கப்பட்ட போதிலும், அவை வெற்றியளிக்கவில்லை. பல குடும்பங்கள் அன்றாடம் கூலித்தொழிலை நம்பியே சீவியம் நடத்த வேண்டியுள்ளது.
இந்தப் பகுதியில் குடிநீர், காணி என்பன முக்கிய பிரச்சினைகளாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பல வருடங்களாகக் குடியிருந்த போதிலும் இங்குள்ளவர்களுக்கு காணிகள் இன்னும் சொந்தமாக்கப்படவில்லை. அத்துடன் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்குரிய காணிகளில் குடியிருக்கும் குடும்பங்கள் அந்தக் காணிகளைவிட்டு வெளியேற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீடமைப்பில் தாமதம்
இவ்வாறு வெளியேறும் குடும்பங்களுக்கு தர்மபுரம் பகுதியில் இந்திய உதவித்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும், அதற்குரிய உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கில் நடைபெறும் சில இந்திய வீடமைப்புகள்
பல வருடங்களாகக் குடியிருந்த போதிலும் சொந்தமாக்கப்படாத காணிகளில் எவ்வாறு கிணறு வெட்ட முடியும் என இந்த மக்கள் கேள்வி எழுப்புகின்ற அதேவேளை, அருகில் உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் குளிப்பதுடன், அயலில் உள்ள காணிகளில் கிணறுகளில் உரிமையாளர்களின் வேண்டா வெறுப்புக்கு மத்தியில் குடிநீரைப் பெற வேண்டியிருப்பதாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் காணிப்பிரச்சினைகள் மிக அதிகமாக இருப்பதாகவும், இவற்றிற்குத்தீர்வு காணும் வகையில் அரசாங்கம் ஒரு கொள்கையை வகுத்துள்ளதாகவும் அது பற்றிய சுற்றறிக்கை வெளியாகியதும் காணிப்பிரச்சினைகளுக்குத் தீர்வேற்படும் என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
BBCTAMIL.COM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment