Friday, August 12, 2011
முகாமில் ஒவ்வொரு முறையும் நாங்கள் காலையில் எழுகின்றபோது, நான்கு-ஐந்து பெண்கள் காணாமல் போயிருப்பர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று நாம் அறியவில்லை.!!!
கரும்புலி பெண் தளபதி வதை படுத்தி கொலையான.அதிர்ச்சி
http://www.ethirinews.com/?p=13584 PHOTO IN
கரும்புலி பெண் தளபதி வதை படுத்தி கொலையான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன .
போரின் இறுதிக்கட்டத்தின்போது தமிழ்ப் பொதுமக்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பெண்போராளிகள் மீது படைகள் பாலியல் தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்திருந்தார். அத்துடன் எந்தவொரு பாலியல் தாக்குதலும் அங்கு நடக்கவில்லை என்றும் இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் கூறியுள்ளார்.
இராணுவத்தின் போர்க்குற்றங்களின் பட்டியலில் முகாம்களில் இருந்த பெண்கள் மீதான துன்புறுத்தலும் அடங்கியுள்ளது. இதனை ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களுடன் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட ஒருவர் தான் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக தம்மிடம் தெரிவித்ததாக ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி கூறியுள்ளது.
“முகாமில் ஒவ்வொரு முறையும் நாங்கள் காலையில் எழுகின்றபோது, நான்கு-ஐந்து பெண்கள் காணாமல் போயிருப்பர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று நாம் அறியவில்லை“ என்று பாதிக்கப்பட்ட மற்றொருவர் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார்.
உணவுக்காகவும், சுகாதாரத் துண்டுகளுக்காகவும், உடைகளுக்காகவும் தான் ஒவ்வொரு முறையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக வேறொரு பெண்ணும் சாட்சியம் அளித்துள்ளார்.
குளிக்கும்போது ஆண் படையினர் தம்மை கையடக்கத் தொலைபேசிகளில் படம் எடுத்ததாகவும், அதற்காகவே தம்மை திறந்தவெளியில் குளிக்க நிர்ப்பந்தித்ததாகவும் ஹெட்லைன்ஸ் ருடேயிடம் மற்றொரு பெண் கூறியுள்ளார்.
அரசாங்கத்தினால் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டாத இரகசிய முகாம் ஒன்றில் ஒரு பெண் ஒரு ஆண்டைக் கழித்துள்ளார். “அது ஒரு சித்திரவதை முகாம். அடிப்படை வசதிகள் எமக்கு கிடைக்கவில்லை. அரசசார்பற்ற நிறுவனங்களும் அனுமதிக்கப்படவில்லை.“ என்கிறார் சுந்தரி.
“அது ஒரு இராணுவ முகாம். என்ன பிரச்சினையென்றாலும் இராணுவத்தினரையே அணுக வேண்டும். அவர்கள் சில பெண்களிடம் தவறாக நடந்து கொண்டனர்.“ என்றார் சுந்தரி.
“அங்கே பாலியல் வன்புணர்வுகள் நடந்தன. இளம்பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர். ஆனால் எப்படி அதை வெளியே சொல்ல முடியும்? அவர்கள் சங்கடப்படுவார்கள்.“ என்று சொல்கிறார் சுந்தரி.
பெண்கள் ஆடைகளின்றி அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததால், அவர்கள் எம்மை துன்புறுத்தினர். எம்மைத் தடுத்து வைத்துத் துன்புறுத்தினர் என்று சுந்தரி தெரிவித்துள்ளார்.
திவ்யா என்ற பாதிக்கப்பட்ட இன்னொரு இளம்பெண் சொல்கிறார், “இரண்டு அல்லது மூன்று பெண்கள் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்கள் குளிக்கும் போது அவர்கள் படம் எடுத்துள்ளனர்.“ என்று கூறியுள்ளார்.
“வன்னி நேரடி ரிப்போட்” – ஹெட்லைன்ஸ் ருடே நிருபர்!
உலகில் மிகவும் செறிவான இராணுவமயமாக்கப்பட்ட வலயங்களில் ஒன்றில் யுத்தத்திற்குப் பின்னர் தற்போது உயிர் தப்பி வாழ்பவர்கள் நீதியை எப்போதாவது பெற்றுக்கொள்ள முடியும் என்பது தொடர்பாக எந்தவொரு நம்பிக்கையுமின்றி இருக்கின்றனர். இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டங்கள் பொதுமக்களுக்கு மிகவும் கொடூரமான கதையைக் கொண்டதாக உள்ளன. பரந்தளவில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்ற போதிலும் நாட்டின் வடக்கு,கிழக்கில் உள்ள தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி கொழும்பு தொடர்ந்தும் நிராகரிப்பையே கடைப்பிடித்து வருகிறது. இவ்வாறு இந்தியா ருடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் ருடேயில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹெட்லைன்ஸ் ருடேயின் நிருபர் பிரியம்வதா வன்னிக்கு (இரகசியமாக) பயணம் மேற்கொண்டிருந்தார். இலங்கையின் வட பகுதியிலுள்ள இந்தப் பகுதியானது விடுதலைப் புலிகளின் முன்னாள் கோட்டையாக இருந்தது. உலகில் எங்குமில்லாத வகையில் பொதுமக்கள் மீது மோசமான போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படும் இடங்களில் ஒன்றாக இந்த மண் காணப்படுகிறது. கூறப்படுவதற்குப் பின்னால் பொதிந்துள்ள உண்மைகள், எதிராகக் கூறப்படுபவற்றுக்கு பின்னணியிலுள்ள விடயங்கள் என்பவற்றின் சாட்சியமாக இந்த மண் காணப்படுகிறது.
ஹெட்லைன்ஸ் ருடே வன்னிப் பிராந்தியத்தை சென்றடைந்தபோது அந்தப் பகுதியானது இலங்கை இராணுவத்தினரைக் கொண்டதாகக் காணப்பட்டது. அவர்களில் அநேகமானோர் பெரும்பான்மைச் சிங்களவர்களாவர். ஒவ்வொரு மீற்றர் இடைவெளி தூரத்திலும் ஒரு படைவீரர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். 100 மீற்றர் இடைவெளி தூரத்தில் சோதனைச் சாவடிகள் காணப்பட்டன. உள்ளூர் தமிழ் மக்களிடமிருந்து அநேகமாக பலவந்தமாகப் பெற்ற நிலத்தில் பாரிய இராணுவ நிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தாயகத்தின் மையப் பகுதிகளின் ஓர் அங்கமாக இந்த வன்னி இருந்தது.
அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் அச்ச உணர்வும் பாதுகாப்பற்ற தன்மையையும் பார்க்கக் கூடியதாக இருந்தது. ஒரு சிலரே கமராவின் முன்னால் பேசுவதற்கு இணங்கினர். இரகசியமான இடங்களிலேயே மக்கள் பேட்டி காணப்பட்டனர். பாதுகாப்பு அதிகாரிகளின் கரங்களுக்கு ஒளிநாடாக்கள் சென்றுவிடுமோ என்று அச்சத்தை அவர்கள் கொண்டிருந்தனர்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ரோஸி(45 வயது) என்ற பெண் கூறுகையில்; தான் உயிர்வாழ விரும்பவில்லையெனத் தெரிவித்தார். யுத்தம் முடிவடைந்த இரண்டு வருடங்கள் கழிந்த பின்னும் போர் என்ற வார்த்தை இந்தத் தமிழ்ப் பெண்ணின் முகத்தை சிவக்க வைத்து கண்ணீரை வரவழைக்கிறது. அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயம் என வரையறுக்கப்பட்டிருந்த பகுதிகளில் குண்டுவீச்சுகள் இடம்பெற்றதற்கு இந்த ரோஸி சாட்சியமாகவுள்ளார். 2009 மே 14 இல் கிளிநொச்சியிலிருந்து வட்டுவாகல் பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயத்துக்கு ரோஸி, தனது கணவன், மகன், 4 மகள்மார், மருமகன்,10 மாத பேரக்குழந்தை ஆகியோருடன் இடம்பெயர்ந்திருந்தார். அந்த வலயம் தாக்குதலுக்குள்ளானது.
நாங்கள் வசித்த இடத்தின் மீது குண்டு வீழ்ந்தது. இவை சத்தமின்றி வந்தன. அந்தப் பகுதி முழுக்க குண்டுவீசப்பட்டதை பின்னரே நாம் உணர்ந்து கொண்டோம். சூழவர புகைமூட்டமாக இருந்தது. நான் எதனையும் அறிந்திருக்கவில்லை. எனது கை துண்டாடப்பட்டது. என்னைத் தூக்கிய மகன் மறைத்து வைத்தார். எனது மகள்மார் எங்கே என்று அவரைக் கேட்டேன். எல்லாம் நன்றாக இருக்கின்றது என்று அவர் எனக்கு உறுதியளித்தார். ஆனால், யாவரும் இறந்துவிட்டதை அவர் அறிந்திருந்தார். எனது எல்லாப் பிள்ளைகளும் இறந்துவிட்டனர். ஒன்றுமே இல்லை என்று ரோஸி கூறினார். யுத்தத்தின் அன்றைய தினத்தில் மட்டும் மூவாயிரம் பேர் இறந்ததை என் கண்முன்னால் பார்த்தேன் என்று அவர் கூறியுள்ளார்.
ரதி என்ற பெண் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றொருவராவார். அவர் தனது கணவனையும் மகனையும் யுத்தத்தில் இழந்துவிட்டார். துன்பமான நிகழ்வுகளை இப்போதும் தனது மனதில் அவர் கொண்டிருக்கின்றார்.
நான் பதுங்குகுழியிலிருந்தேன். வெளியே எனது கணவனும் மகனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மேலிருந்து குண்டு வந்து வீழ்ந்தது. குண்டு வெடித்துச் சிதறியபோது சிதறல்களால் எனது மகனும் கணவனும் கொல்லப்பட்டனர். நாங்கள் சப்தத்தை மட்டும் கேட்டோம் என்று கூறிய ரதி அழுதார். ரதியின் மகளான லாவண்யா கூறுகையில்; வல்லிபுரத்தில் எம்மீது குண்டு போடப்பட்டது. அவர்கள் இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தினர். மேலிருந்து விழுந்தவுடன் துண்டு துண்டாக குண்டு சிதறும். ஆனால், சத்தம் கேட்காது என்று லாவண்யா கூறினார்.
மதகுரு ஒருவர் ஊடாக நானும் எனது குடும்பமும் சரணடையச் சென்றோம். ஆனால், எனது இரண்டாவது பிள்ளை இரசாயனக் குண்டால் பாதிக்கப்பட்டிருந்தார். அது பொஸ்பரஸ் ஆகும். அவர் முழுமையாகப் பாதிக்கப்பட்டு விட்டார் என்று பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணான தேவி என்பவர் கூறினார்.
ஆஸ்பத்திரியில் சிறிய பிள்ளைகள், முதியவர்கள் உதவியின்றி இருந்தார்கள். இந்தத் தாக்குதலில் இரண்டு பிள்ளைகள், ஒரு முதிய பெண், எனது கணவன், மகன் இறந்துவிட்டனர் என்று ரதி தெரிவித்தார்.
தம்பி என்பவர் எட்டு வயதுச் சிறுவன். தாயைத் தவிர குடும்பத்தில் ஏனைய யாவரையும் அவர் இழந்துவிட்டார். சிறுவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்பதை அவர் விபரிக்கிறார். யுத்தத்தில் அவர் காயமடைந்திருந்தார். எப்போதும் ஷெல் வீச்சு இடம்பெற்றுக் கொண்டிருந்தது, எங்கும் குண்டுகள் போடப்பட்டன.இந்தக் காயத்தைப் பாருங்கள். இதனோடேயே நான் காலத்தை கழிக்க வேண்டும் என்று தம்பி கூறினார்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக பொதுமக்கள் ஒவ்வொரு இடத்திற்கும் ஓடிக்கொண்டிருந்தனர். ஆனால், ஆஸ்பத்திரிகள் பாதுகாப்பானதாக இருந்திருக்கவில்லை. யுத்தத்தில் காயமடைந்த காவ்யாவின் தந்தை பின்னர் இறந்துவிட்டார். நாங்கள் அப்பாவை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றோம். குண்டுவீச்சு இடம்பெற்றது. ஒரு பெண் இறந்துவிட்டார். இரண்டு பையன்களும் இறந்துவிட்டனர். அவர்களது தலைகளிலிருந்து மூளை வெளியே வந்திருந்தன என்று காவ்யா கூறியுள்ளார்.
முகாம்களில் பெண்கள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இரகசிய முகாம் எனக் கருதப்படும் இடத்தில் பெண்ணொருவர் ஒரு வருடத்தைக் கழித்துள்ளார்.இது சித்திரவதை முகாம் ஆகும். அங்கு அடிப்படை வசதிகள் இல்லை. அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்று சுந்தரி என்ற அந்தப் பெண் கூறியுள்ளார். அது இராணுவ முகாமாகும். எங்களுக்கு எந்தப் பிரச்சினையாயினும் நாங்கள் நேரடியாக இராணுவத்தினரையே அணுக வேண்டியுள்ளது. அதனை அவர்கள் பயன்படுத்தினர்.
இரவுகளில் நாங்கள் யாவரும் ஒன்றாக இருப்போம். தவறாக நடந்தமை தொடர்பாக எவ்வாறு பெண்களால் வெளியில் கூற முடியும்.இது கௌரவப் பிரச்சினை என்று சுந்தரி கூறியுள்ளார். அவர்கள் மிகவும் வன்மையாக இருந்தனர். அவர்கள் சிங்களவர்கள், நாங்கள் தமிழர்கள். எமக்கு மொழி தெரியாது என்று சுந்தரி மேலும் கூறியுள்ளார்.
முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் புலி உறுப்பினர்களின் நிலைமையும் வேறுபட்டதல்ல. இளைஞர்கள் படித்தவர்களாக இருந்தாலும் கூட இம்சையைத் தாங்க வேண்டும். முன்னாள் புலி உறுப்பினரான முருகன் முகாமில் ஒரு வருடம் வைக்கப்பட்டிருந்தார். அவர் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர். இப்போது அவர் சமூகத்தில் ஒருங்கிணைந்துள்ளார். ஆனால், மனதைக் குடையும் கதைகளை மறந்துவிடுவது கடினமாக இருப்பதாக அவர் காண்கிறார்.
என்னைப் போன்ற முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிப்பதற்காக முகாமில் வைக்கப்பட்டிருந்தோம். சீர்திருத்தப்படுவதிலும் பார்க்க நாங்கள் மிகவும் வன்முறையானதாக மாறியிருந்தோம்.இது சித்திரவதைக்கு அப்பாற்பட்டதாகும். கால்நடைகளைப் போன்று வைக்கப்பட்டோம். பிசாசுகள் போன்று நாங்கள் பார்க்கப்பட்டோம் என்று முருகன் கூறுகிறார்.
நாங்கள் சாக்கடைத் தண்ணீரைக் குடித்தோம். இறந்த சடலங்கள் வீசப்பட்ட கிணறுகளில் இருந்து தண்ணீர் குடித்தோம். பட்டினியால் தாய் ஒருவரும் பிள்ளையும் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்ததை நான் அறிவேன். எனது கண்களால் அதனைப் பார்த்தேன் என்று ரோஸி கூறியுள்ளார். இலங்கை இராணுவம் எமது நிலத்தை அபகரித்துக் கொண்டது. அவர்கள் எமக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தினர்.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது நான் புலிகள் அமைப்பில் இணைந்தேன். அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால், நான் எமது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க இணைந்தேன் என்று சிவா என்பவர் கூறியுள்ளார். 30 வருட கால உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. கூறுகிறது. நீதி விசாரணைக்குப் புறம்பான தன்மையை ஒத்த கொலைகள், வான் குண்டுவீச்சுகள், மருத்துவமனைகள் மற்றும் பாதுகாப்பு வலயங்கள் என வரையறுக்கப்பட்டவை மீது குண்டு வீச்சுகள், பொதுமக்கள் மீதான பாலியல் தாக்குதல்கள், இரசாயன ஆயுதங்களின் உபயோகம், கொத்துக் குண்டுகளின் உபயோகம், காயமடைந்த பொதுமக்களுக்கு மருத்துவ உதவி மறுக்கப்பட்டமை, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்தல் போன்ற போர்க் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன.
--
http://namvaergall.blogspot.com/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment