Thursday, August 4, 2011
அமைச்சர்மட்ட செல்வாக்குநபரே கொலைக்குகாரணம் என குற்றம்சுமத்தப்பட்டநிலையில்,கூடியிருந்தவர்கள் அமைச்சர்:ரிசாத்பத்யூதினுக்கு எதிரானகோஷங்களை எழுப்பினர்.!!
'பட்டானி ராசிக் கொலை'- மக்கள் ஆர்ப்பாட்டம்
பட்டானி ராசீக்கின் கொலையைக் கண்டித்து புத்தளத்தில் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்துடன் கடையடைப்பும் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் காணாமல் போயிருந்த நிலையில், சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்ட பட்டானி ராசிக்கின் இறுதி மரியாதை நிகழ்வு, அவரது கிராமமான புத்தளம் சமீரகமவில் நடைபெற்ற போது பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ராசிக்கின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய மக்கள், அவரின் கொலைக்கான சூத்திரதாரிகளை நீதியின் முன்னால் நி்றுத்த வேண்டும் என அங்கு பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 5000 பேர்வரையில் கலந்துகொண்டிருந்த இந்த இறுதி மரியாதை நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், சில அரசியல் பிரமுகர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
குற்றச்சாட்டு
குற்றவாளிகள் எந்தளவு செல்வாக்கு மிக்க நபர்களாக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் பிபிசி சந்தேஷ செய்தியாளருக்கு தெரிவித்தார்.
இந்தவிடயம் தொடர்பில், பக்கச்சார்ப்பற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று ஜனாதிபதியும் உத்தரவிட்டிருக்கின்ற நிலையில் நீதி நிலைநாட்டப்படும் என்று தான் நம்புவதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்- நீதியமைச்சர்
அமைச்சர் மட்டத்தில் செல்வாக்கு மிக்க நபர் ஒருவரே பட்டானி ராசீக்கின் கொலைக்கு காரணம் என்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்ற நிலையில், அங்கு கூடியிருந்தவர்கள் அமைச்சர் ரிசாத் பத்யூதினுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும், இந்த சம்பவத்துக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் பிபிசி சிங்கள சேவையான சந்தேஷயவிடம் அமைச்சர் ரிஷாத் பத்யூதீன் தெரிவித்துள்ளார்.
கடையடைப்பு
புத்தளம், பாலாவி, மதுரங்குளி, வண்ணாத்திவில்லு உள்ளிட்ட மாவட்டத்தின் பல நகரங்களில், ராசிக்கின் கொலையை கண்டித்து கறுப்புக் கொடிகள் தொங்கவிடப்பட்டு கடையடைப்பும் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.
புத்தளம் சமூக நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர்களில் ஒருவராக சமூகநலச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்த பட்டானி ராசிக் மர்மமான முறையில் காணாமல்போனது முதல் அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதில் அதிகாரிகள் அசமந்த போக்கு காட்டுவதாகவும் அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும் மனித உரிமை அமைப்புகள் பலவும் குற்றஞ்சாட்டிவந்தன.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இருவர் கொடுத்த தகவலின் பேரில், கடந்த 28ம் திகதி கிழக்கில் வாழைச்சேனை காவத்தமுனைப் பகுதியில் பாதியளவில் கட்டப்பட்டிருந்த வீடொன்றினுள்ளே புதைக்கப்பட்டிருந்த நிலையில் ராசிக்கின் சடலம் மீட்கப்பட்டது.
உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட சடலத்தை ராசிக்கின் மகன் அடையாளம் காட்டியதை அடுத்து குடும்பத்தினரிடம் நேற்று செவ்வாய்க் கிழமை சடலம் ஒப்படைக்கப்பட்டது.
பிரேதம் தொடர்பான மரபணு பரிசோதனைக்கான நடவடிக்கைகளும் நீதவானின் உத்தரவின்பேரில் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
BBCTAMIL.COM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment