சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதை!
Bas baskaran....CHICAGO,USA
இது தந்தையினதும் மகளினதும் கதை!
முள்ளிவாய்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து
வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை ‘சமூக சிற்பிகள்’ அமைப்பினர் [The Social
Architects -TSA]* சாட்சியமான மக்களிடம் கேட்டு தங்கள் வலைப்பதிவில்
ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
[தனது அறுபதாவது வயதில் உள்ள ஆனந்தராஜா, 25 வயதுடைய சிந்துவின்
தந்தையாவார். தமிழீழ விடுதலைப் புலிகளின் நீதிமன்றில் எழுதுவினைஞராகப்
பணியாற்றிய ஆனந்தராஜாவும், அவரது மகளும், முன்னாள் புலி உறுப்பினருமான
சிந்துவும் தமது போர்கால அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர்.]
ஆனந்தராஜா: போர்நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னரான, டிசம்பர்
26, 2005 அன்று பாதுகாப்பு படையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும்
மீண்டும் தமது போர் நடவடிக்கைகளை ஆரம்பித்த பின்னர், நாங்கள் எமது
இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தோம்.
இடப்பெயர்வின் விளைவாக நான் எனது வியாபாரத்தை தொடரமுடியா நிலை ஏற்பட்ட
போது நான் புலிகள் அமைப்பின் அரசியற் பிரிவில் இணைந்து கொண்டேன். ஆகஸ்ட்
2006 ல், சிறிலங்கா இராணுவத்தினர் பளை மீது தாக்குதல்களை மேற்கொண்ட போது,
நாங்கள் பரந்தனுக்கு இடம்பெயர்ந்தோம்.
இங்கே நான் புலிகளின் தலைமை நீதிமன்றில் எழுதுவினைஞராக பணியாற்றினேன்.
நான் எழுதுவினைஞராகப் பணியாற்றிய நீதிமன்றின் தலைமைப் பணியகத்தில்,
காணித் தகராறுகள், பொது வழக்குகள், திருமண விலக்கு வழக்குகள், பராமரிப்பு
வழக்குகள், நிதி வழக்குகள் போன்றன விசாரிக்கப்பட்டு தீர்வு வழங்கப்பட்டன.
சிறிலங்கா அரசாங்கத்தின் நீதிமன்ற நடைமுறைகள் போன்றே தமிழீழ விடுதலைப்
புலிகளின் நீதிமன்ற நடைமுறைகளும் ஒத்துக்காணப்பட்டன.
அதாவது குடும்ப ஆலோசனைகள், சட்டவாளர்களுக்கான பணியகங்கள் போன்ற பல்வேறு
துறைகள் தனிப்பட இயக்கப்பட்டன. சிறிலங்காவின் வடக்கில் உள்ள மன்னார்,
பளை, முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற இடங்களில் புலிகளின் ஏழு
நீதிமன்றங்கள் வரை செயற்படுத்தப்பட்டன.
இந்தக் காலப்பகுதியில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவர் அமைப்பில்
இணைந்து கொள்ளுமாறு விடுதலைப் புலிகளின் தலைமை கேட்டுக் கொண்டது.
இதற்கமைவாக செப்ரெம்பர் 02, 2006 அன்று நான் எனது மகளை விடுதலைப் புலிகள்
அமைப்பில் இணைத்துக் கொண்டேன். எனது மகளை புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பின்
மூலம் இணைத்துக் கொள்ளவில்லை.
2006 ல் கிளிநொச்சி நோக்கி சிறிலங்காப் படையினர் நகர்வை மேற்கொண்ட போது
அங்கு செயற்பட்ட நீதிமன்றங்களை நாம் மூடத் தொடங்கினோம். அந்த நேரத்தில்
கிளிநொச்சியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தனர். முதலில் அடம்பன் மற்றும்
மன்னார் ஆகிய இடங்களைத் தொடர்ந்து பளைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த
நீதிமன்ற செயற்பாடுகளை இடைநிறுத்தினோம்.
இங்கு வாழ்ந்த மக்கள் சிறிலங்கா இராணுவத்தின் எறிகணைகளுக்கும் கிபிர்
விமானத் தாக்குதல்களுக்கும் முகங்கொடுக்க முடியவில்லை. பல்வேறு வழிகளில்
சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் விளைவாக, பத்து
நாட்களுக்கு ஒரு தடவை நாங்கள் இடம்பெயரவேண்டியிருந்தது. நாங்கள் எமது
நீதிமன்றச் செயற்பாடுகளையும் பல்வேறு இடங்களுக்கு, அதாவது
கிளிநொச்சியிலிருந்து பரந்தனுக்கும், பின்னர் முரசுமோட்டை, கண்டாவளை,
புளியம்பொக்கணை, தர்மபுரம் ஆகிய இடங்கள் வரை நகர்த்த வேண்டியிருந்தது.
இறுதியில் நாம் நீதிமன்றங்களை முற்றாக மூடவேண்டிய நிலைக்குத்
தள்ளப்பட்டோம்.
பரந்தனிலிருந்து முல்லைத்தீவு வரை இடம்பெயர்ந்த மக்கள் ஒரு வீதியை
மட்டுமே பயன்படுத்த முடிந்தது. இதனால் குறிப்பிட்ட வீதி மக்களால்
நிறைந்து காணப்பட்டது. ஒரு கிலோமீற்றர் தூரத்தைக் கடப்பதற்கு ஐந்து
நாட்கள் எடுத்த சம்பவமும் உண்டு. வன்னியின் எல்லாப் பகுதிகளைச் சேர்ந்த
மக்களும் இந்த வீதியாலேயே பயணிக்க வேண்டிய நிலைக்குத்
தள்ளப்பட்டிருந்தனர்.
நாங்கள் விசுவமடு, உடையார்கட்டு, குரவயல், புதுக்குடியிருப்பு,
இரணைப்பாலை, புதுமாத்தளன், வலையர்மடம், இரட்டைவாய்க்கால்,
முள்ளிவாய்க்கால் [கரையான் முள்ளிவாய்க்கால், வெள்ள முள்ளிவாய்க்கால்]
ஆகிய இடங்கள் வரை இடம்பெயர்ந்து சென்றதுடன், இறுதியில் வட்டுவாகலைச்
சென்றடைந்தோம். மே 17 அன்று வட்டுவாகலின் கரையோரத்தை சிறிலங்கா
பாதுகாப்பு படையினர் வந்தடைந்திருந்தனர்.
சிந்து: முதலில் நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் நாடகக் குழுவில்
பணியாற்றினேன். அதன் பின்னர், புலிகளின் இராணுவப் பயிற்சியை நான்
பெற்றேன்.
வன்னியில் வாழ்ந்த சாதாரண மக்கள் தொடக்கம் வசதி படைத்த மக்கள் வரை
அனைவருமே உணவின்றித் தவித்தனர். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் குடிசை
ஒன்றை அமைத்து அதில் மக்களின் உணவுப் பசியைத் தீர்ப்பதற்காக கஞ்சி
வழங்கினர். கஞ்சி வழங்கல் நிலையங்களின் முன் மக்கள் நீண்ட வரிசையில்
காத்திருந்தனர். இவ்வாறு கஞ்சிக்காக காத்திருந்த மக்கள் பலர் வரிசையில்
நின்ற போது, சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணை மற்றும் வான் குண்டுத்
தாக்குதலின் போது கொல்லப்பட்ட சம்பவங்களும் உண்டு.
மே முதலாந் திகதி மட்டில் கஞ்சி வழங்கலும் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர்
மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொண்டனர். வட்டுவாகலுக்கும் சிறிலங்கா
இராணுவத்தினரின் நிலைகளுக்கும் இடையிலான பகுதியெங்கும் கொல்லப்பட்ட
மக்களின் உடலங்கள் பரவிக் காணப்பட்டன.
சிறிலங்கா இராணுவத்தினரின் கொத்துக் குண்டு [cluster bombs] ஒரு இடத்தில்
விழுந்து வெடித்து பல சிதறல்களாக பரவிய போது மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு வெடிக்கும் கொத்துக் குண்டொன்றின் சிதறல்கள் 300 மீற்றர் தூரம்
வரை வட்டமாக பரவி வெடித்தன. தொடர்ந்து வீசப்படும் பல்குழல் எறிகணைகள்
மிகப் பயங்கரமானவை. எறிகணைகள் மழை போல் தொடர்ந்தும் வீசப்பட்டுக்
கொண்டேயிருக்கும். ஜனவரி 15, 2009 இலிருந்து இது போன்ற செறிவான எறிகணைத்
தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த எறிகணைகள் முல்லைத்தீவு, பலாலி,
மாங்குளம் மற்றும் பளை போன்ற இடங்களிலிருந்து வீசப்பட்டன.
நான் சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக இரணைமடுவில் மேற்கொள்ளப்பட்ட
தாக்குதல் ஒன்றில் காயமடைந்தேன். எமது நிலைகளிலிருந்து 15 மீற்றர்
தொலைவில், ஆற்றுக்கு அடுத்த பக்கத்தில், சிறிலங்கா இராணுவத்தினர்
நெருங்கி வந்துவிட்டனர் என்பதை எமது சக உறுப்பினர்கள் தெரியப்படுத்தினர்.
பிளாஸ்ரிக் குழாய்களால் சிறிலங்கா இராணுவத்தினர் ஆற்றின் ஆழத்தைப்
பார்வையிட்டதை நாம் அவதானித்துக் கொண்டிருந்தோம். நாம் உடனடியாக எமது
பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டபோது, இராணுவம் எமது நிலைகளை இன்னமும்
நெருங்கி வரும்போது தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு அவர்கள் எமக்குப்
பணித்தனர். நாங்கள் மூன்று வெவ்வேறு பதுங்கு நிலைகளில் நின்று எம்மைத்
தயார்ப்படுத்திக் கொண்டு தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கினோம். அப்போது
இராணுவத்தினரால் வீசப்பட்ட RPG எறிகணை ஒன்று எமது நிலையில் விழுந்து
வெடித்தது. அதில் எம்முடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்ட எமது சக
உறுப்பினர்களில் ஒருவர் வயிற்றில் காயமடைந்து கொண்டார். உடனடியாக நாம்
அவரை அவசர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தோம்.
எம்மிடமிருந்த வெடிபொருட்கள் தீரும் வரை ஒரு மணித்தியாலம் வரை தொடர்ந்து
போராடினோம். அதன் பின்னர் எமக்கருகில் ‘ஐஞ்சிஞ்சி’ [five-inch-shell]
எறிகணை ஒன்று வீழ்ந்து வெடித்தது. இதில் நான் எனது இரு கால்களிலும் மிக
மோசமாக காயப்பட்டேன். எம்மை அந்த நிலைகளிலிருந்து பின்வாங்குமாறு எமக்கு
கட்டளை வழங்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த என் போன்றவர்களை ஜனவரி 04, 2009 அன்று
தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். என்னை அந்த வைத்தியசாலையில்
அனுமதித்த போது, தர்மபுரம் வைத்தியசாலை மிகச் சிறப்பாக செயற்பட்டது.
ஆனால் அதற்கு அடுத்த நாளிரவு, தர்மபுரம் வைத்தியசாலை மீது இராணுவத்தினர்
எறிகணைகள் வீசத் தொடங்கினர். இதனால் எமது பொறுப்பாளர்கள் எம்மை அந்த
வைத்தியசாலையிலிருந்து வேறிடத்துக்கு மாற்றினர். அந்த வைத்தியசாலையில்
சிகிச்சை அளிக்கப்பட்ட பொது மக்கள் அங்கேயே இருந்தார்கள். ஆனால் செறிவாக
எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. அதன் பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது
என்பதை நான் அறியவில்லை.
இதன் பின்னர், புலிகள் அமைப்பைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் எனக்கு
சிகிச்சை அளித்தார். புலிகள் அமைப்புக்குட்பட்ட ஒவ்வொரு துறையிலும்
ஒவ்வொரு வைத்தியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதேபோல் எமது பிரிவிலும்
எமக்கான வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். புலிகள் அமைப்பில்
புதிதாக இணைக்கப்பட்டிருந்த நூற்றி ஐம்பது வரையானவர்கள் மீது கிபிர்
விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்திருந்தனர்.
இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது நான் இரணைப்பாலையில்
அமைக்கப்பட்டிருந்த பதுங்குகுழி ஒன்றுக்குள் இருந்தேன். தாக்குதல்
முடிவடைந்த பின்னர் அங்கிருந்த மருத்துவப் போராளிகள் என்னை வெளியில்
காவிச் சென்றபோது, அங்கு கொல்லப்பட்ட போராளிகளின் உடலங்கள் எங்கும்
பரவுண்டு காணப்பட்டதைக் கண்டேன். அத்துடன் மரங்கள் முறிந்திருந்தன.
நான் மீண்டும் புதுக்குடியிருப்பில் உள்ள மந்துவில் என்னும் பிரதேசத்தில்
மீண்டும் காயமடைந்தேன். அங்கே புலிகளின் மருத்துவப் பிரிவுப் போராளிகள்
காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அங்கே என்னால் நடக்க
முடியாதிருந்ததால் திறந்த பதுங்குகுழி ஒன்றுக்குள் காயமடைந்த ஏனைய
போராளிகளுடன் என்னையும் விட்டிருந்தனர். எம்மிலிருந்து 25 மீற்றர்
தூரத்தில் எறிகணை ஒன்று வீழ்ந்து வெடித்த போது எனது மற்றைய காலில் காயம்
ஏற்பட்டது. எறிகணையின் சிதறல் துண்டு எனது காலைப் பதம் பார்த்த போது,
எனது கால் ஈரமாவது போல் நான் உணர்ந்தேன். உடனே “நான் காயப்பட்டுள்ளேன்.
என்னைத் தயவு செய்து காப்பாற்றுங்கள்” என நான் கத்தினேன். உடனே
அங்கிருந்த சக போராளிகள் என்னைக் காவிச் சென்றபோது எனது கால் தொங்கிக்
கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. அவர்கள் என்னை
புதுமாத்தளனிலிருந்த அராசாங்க வைத்தியசாலைக்கு கூட்டிச் சென்றனர்.
புதுமாத்தளன் வைத்தியசாலையில் ஏற்கனவே காயமடைந்த ஏராளமான மக்கள்
காத்திருந்தனர்.
நான் கயாமடைந்த அன்றைய நாள் நள்ளிரவு வரை என்னை அறுவைச்சிகிச்சைக்கு
கொண்டு செல்லவில்லை. அந்த வைத்தியசாலையில் ஒரு சில வைத்தியர்கள் மட்டுமே
பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் காயமடைந்த மக்கள் எண்ணுக்கணக்கற்று
குவிந்து காணப்பட்டனர். அவர்களது காயங்களிலிருந்து இரத்தம் வடிந்து
கொண்டிருந்தது. அதில் பொதுமக்களே அதிகம் காணப்பட்டனர். பின்னர்
இராணுவத்தினர் இந்த வைத்தியசாலையை கைப்பற்றிய போது, அங்கு
காயமடைந்தவர்கள் பலர் காணப்பட்டனர். ஆனால் நான் அங்கிருந்து
வெளியேறியிருந்தேன்.
பெப்ரவரி 2009 ல் பொன்னம்பலம் வைத்தியசாலை மீது கிபிர் விமானங்கள்
தாக்குதலை மேற்கொண்ட பின்னர், புலிகள் அமைப்பைச் சேர்ந்த வைத்தியர்கள்
அரசாங்க வைத்தியர்களுடன் இணைந்து சேவையாற்றினர். அங்கே கிட்டத்தட்ட
புலிகள் அமைப்பின் 25 வைத்தியர்கள் வரை காணப்பட்டனர். யுத்தம்
இறுதிக்கட்டத்தை அடைந்த போது புலிகள் அமைப்பின் வைத்தியர்கள் பெரும்பாலான
மக்களின் உயிரைக் காப்பாற்றியிருந்தனர்.
மாஞ்சோலை வைத்தியசாலைக்குப் பின்னர், இரட்டைவாய்க்காலில்
அமைக்கப்பட்டிருந்த வீடொன்றில் புலிகளின் மருத்துவப் பிரிவினர் காயமடைந்த
போராளிகள் அனைவரையும் மாற்றியிருந்தனர். அங்கே என்னுடன் 75 வரையான
காயமடைந்த போராளிகள் சிகிச்சை அளிக்கப்பட்டனர். அதன் பின்னர் நடக்க
முடியாதிருந்த எங்களில் 45 பேர் வரை முள்ளிவாய்க்காலிலிருந்த திறந்த
இடமொன்றுக்கு நகர்த்தப்பட்டோம். அந்த நாளை என்னால் சரியாக
கூறமுடியவில்லை. தொடர்ந்து ஐந்து நாட்களாக நாங்கள் வெவ்வேறு இடங்களுக்கு
நகர்த்தப்பட்டோம்.
பெரும்பாலான எங்களது பொழுதுகள் பதுங்குகுழிகளுக்குள் கழிந்தன. ஆனால்
எம்மைச் சூழவிருந்த பகுதிகளில் தங்கியிருந்த மக்களின் அழுகைச் சத்தங்கள்
மற்றும் அலறல் சத்தங்கள் என்பன எமது காதுகளில் விழுந்தன. ஒவ்வொரு
பதுங்குகுழிகளிலும் ஐந்து தொடக்கம் ஏழு வரையான காயமடைந்த போராளிகள்
காணப்பட்டனர். ஒரு நாளிரவு நாமிருந்த இடத்தில் விழுந்த எறிகணையில் 12
காயமடைந்த பெண் போராளிகள் கொல்லப்பட்டனர்.
மே 15, 2009, விடுதலைப் புலிகள் அறிவித்தல் ஒன்றை மேற்கொண்டனர்,
“பெற்றோர்கள் யாராவது உயிரிடனிருந்தால் தமது பிள்ளைகளுக்கு கூட்டிச்
செல்லலாம்” என அறிவிக்கப்பட்டது. நான் உட்பட காயமடைந்து அங்கிருந்த சில
போராளிகளை புலிகள் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மே 16 அன்று புலிகள்
தமது நிலைகளிலிருந்து பின்வாங்கினர். மே 17 அன்று சிறிலங்கா
இராணுவத்தினர் முழு இடத்தையும் கைப்பற்றிக் கொண்டனர்.
அறிவிப்பு மேற்கொள்ளப்பட்ட இரவு புலிகளின் மருத்துவ முகாமிலிருந்து என்னை
எனது அப்பா கூட்டிச் சென்றார். இவ்வாறு என்னைக் காவிச் சென்ற எனது அப்பா
களைப்படைந்ததால், கூடாரம் ஒன்றில் படுத்திருந்த மனிதர் ஒருவரைத் தட்டி
எழுப்பி அந்த இடத்தில் என்னை சிறிது நேரம் ஓய்வெடுக்க விடலாமா எனக்
கேட்டுக் கொண்டார். அந்த மனிதர் அதற்கு ஒப்புதலளித்தார்.
அந்த சிறிய இடத்தில் படுத்திருந்த அந்த மனிதர் எமக்கு அந்த இடத்தை
விட்டுத் தந்து விட்டு வேறிடம் செல்வதற்கு ஆயத்தமாகினார். அப்போது, நான்
அவரிடம் “பரவாயில்லை நாங்கள் இங்கு ஓரமாக உறங்குகிறோம். நீங்களும் இங்கே
உறங்கலாம்” எனக் கூறினேன். அதன் பின்னர் நாங்கள் அந்த மனிதருடன்
கதைத்துக் கொண்டிருந்த போது, துப்பாக்கிச் சன்னங்கள் எம்மை நோக்கி வந்து
கொண்டிருந்தன. அதில் ஒரு சன்னம் அங்கு எமக்கு இடம் தந்து ஒதுங்கிக் கொண்ட
அந்த மனிதனின் உயிரைப் பறித்தது.
அதன் பின்னர் எனது சகோதரர்களும் மாமாவும் தங்கியிருந்த பதுங்குகுழிக்கு
எனது அப்பா என்னைக் காவிச் சென்றார். நான் அங்கே மே 17 வரை இருந்தேன்.
நாங்கள் மரண ஓலத்தைக் கேட்க முடிந்தது. புலிகள் ஒருபோதும் தோற்றுப்
போகமாட்டார்கள் என்ற நம்பிக்கையுடடன் நாங்கள் பதுங்குகுழிக்குள்
காத்திருந்தோம்.
காயமடைந்த பெண்போராளிகள் சிலர் நடக்க முடியாதிருந்ததால், இராணுவக்
கட்டுப்பாடு வரை அதாவது மூன்று கிலோமீற்றர் வரை தவழ்ந்து சென்ற
சம்பவங்களும் உண்டு. இவ்வாறு சென்றவர்களை இராணுவத்தினர் தமது வாகனங்களில்
கொண்டு சென்றதை நான் பார்த்தேன்.
காயமடைந்த சில போராளிகளை இராணுவத்தினர் கொலை செய்துவிட்டதாக மக்கள்
கூறுகின்றனர். நாங்கள் இதனைப் பார்க்கவில்லை. எமது காதுகளில் இந்தச்
செய்தி விழுந்தது. மே 17, அப்பா என்னைக் காவிக் கொண்டு செல்ல மே 18 அன்று
நாம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை அடைந்தோம். அப்போது
இராணுவத்தினர் ஒலிபெருக்கி மூலம், “அனைத்து விடுதலைப் புலி
உறுப்பினர்களும் முன்னுக்கு வரவும்” என அறிவித்தனர். ஆனால் நாங்கள் அங்கே
செல்லவில்லை. ஓமந்தையில் வைத்தே எனது அப்பா என்னை இராணுவத்திடம்
ஒப்படைத்தார்.
அதன் பின்னர் என்னை சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி
வைத்தனர். ஒன்றரை மாதங்கள் வரை நான் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை
பெற்றேன். அதன் பின்னர் நான் ஓரளவு குணமாகிய பின்னர் என்னை
ஆனந்தக்குமாரசுவாமி முகாமுக்கு அனுப்பி வைத்தனர். இராணுவத்தினர் என்னைக்
கைது செய்யவில்லை. இராணுவத்தினர் எம் தொடர்பான முழுத் தகவலையும் அறிந்து
வைத்திருந்தனர். முகாமில் தங்கியிருந்த போது ஒரு மாத காலம் வரை நானும்
எனது அப்பாவும் இராணுவத்தினரிடம் சென்று கையெழுத்திட வேண்டியிருந்தது.
போரில் ஆண் போராளிகளை விட பெண் போராளிகள் மிகக் கடுமையாகப் போரிட்டனர்.
இவர்களில் பலர் கொல்லப்பட்டு விட்டனர். நாங்கள் எமது நண்பர்களை
இழந்துவிட்டோம். இராணுவத்திடம் சரணடைய விரும்பாத காயமடைந்த பெண்
போராளிகள் பலர் சயனைட் உட்கொண்டு தமது உயிரைத் தாமே மாய்த்துக் கொண்டனர்.
நான் தற்காப்புக் கலையான ‘கராத்தே’ யில் கறுப்பு நிறப் பட்டி
பெற்றிருந்தேன். நாங்கள் இவற்றையெல்லாம் கற்றிருந்தோம். பிரபாகரன் எம்மை
முன்னேற்றியிருந்தார். புலிகள் அமைப்பில் பெண்களுக்கும் ஆண்களுக்கும்
இடையில் பேதங்கள் காட்டப்படவில்லை. நாங்கள் சமமாக நடாத்தப்பட்டோம்.
காயமடைந்த பெண் போராளிகள் பலர் உளவியல் ரீதியாக தாக்கத்துக்கு
உள்ளாகியுள்ளனர். “வாழ்வதில் என்ன பயன்? நான் உயிர் வாழ்வதில் என்ன
பயன்?” எனப் பலர் வினவுகின்றனர்.
இவ்வாறு மனதளவில் பாதிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகள் பலர் வாழ்வில்
விரக்தி நிலையை அடைந்துள்ளனர். அவர்கள் தொடர்ந்தும் வாழ்வதில் விருப்பம்
கொண்டிருக்கவில்லை. அவர்கள் வாழ்வின் மீதான தமது நம்பிக்கையை
இழந்துள்ளனர்.
நான் தற்போது தாய் தந்தையரை இழந்து வாழ்வோர், உடல் வலுக்குன்றியோர்,
கணவனை இழந்தோர் போன்றவர்களின் விபரங்களை சிறிலங்கா அரசாங்கத்துக்காக
சேகரித்து வருகின்றேன். நான் எனது இரு கால்களிலும் காயமடைந்த போதிலும்,
நான் பெற்றுக் கொண்ட பயிற்சியால் என்னால் ஈருருளியை [bicycle] ஓட்ட
முடிகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment