Thursday, June 7, 2012
நரக வாழ்விலிருந்து விடுபட்டு, சுதந்திரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் வாழ வேண்டு மென்பதே எமது நோக்கம். அதற்காகவே எங்கள் உடைமைகள் எல்லாவற்றையும் விற்றுத் தீர்த்த பணத்தைக் கொண்டு ஆஸி. செல்ல முற்பட்டோம்.!!!
நரக வேதனையில் இருந்து விடுபடவே ஆஸ்திரேலியா செல்ல முயற்சித்தோம்; கேரளாவில் சிக்கிய ஈழத்தமிழர்களின் கண்ணீர்க் கதை
Posted by suder on June 6th, 2012
“நரக வாழ்விலிருந்து விடுபட்டு, சுதந்திரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் வாழ வேண்டு மென்பதே எமது நோக்கம். அதற்காகவே எங்கள் உடைமைகள் எல்லாவற்றையும் விற்றுத் தீர்த்த பணத்தைக் கொண்டு ஆஸி. செல்ல முற்பட்டோம்.”
இவ்வாறு கேரளாவில் கைதான வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். கேரளா கடற்பிராந்தியத்துக்கூடாக ஆஸ்திரேலியாவை நோக்கி சட்ட விரோதமாகப் படகில் புறப்பட்ட 151 இலங்கை அகதிகள் ஞாயிற்றுக்கிழமை கொல்லத்தில் கைதுசெய்யப்பட்டார்கள். இவர்களில் ஒருவர் முகவருக்கு இரண்டு இலட்சம் ரூபாவைக் கொடுத்து விட்டே தன் பயணத்தை ஆரம்பித்தார் என துணைப் பொலிஸ் ஆணையாளர் தோம்ஸன் ஜோஸிடம் தெரிவித்துள்ளார்.
“ஜூன் மாதம் 2ஆம் திகதி எனது மனைவியுடனும், மூன்று பிள்ளைகளுடனும் வவுனியாவிலிருந்து புறப்பட்டேன். இதற்கு முன்னர் முகவருக்கு இரண்டு இலட்சம் ரூபா கொடுத்துள்ளேன். எங்கள் உடைமைகளை எல்லாம் விற்றுத் தீர்த்தே இத்தொகையைத் திரட்டியுள்ளேன்” என்றும் அவர் விசாரணையின் போது துணைப் பொலிஸ் ஆணையாளரிடம் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் விமானம் மூலம் சென்னையை வந்தடைந்தோம். பின்னர் மதுரை செங்கோட்டை மார்க்கமாக கொல்லத்தை நோக்கி வந்தோம் என்றும் துணைப் பொலிஸ் ஆணையாளர் தோம்ஸன் ஜோஸிடம் விவரித்துள்ளார். சென்னை அகதிகள் ஆணையாளருடன் தொடர்பு கொண்டுள்ளோம். இந்த அகதிகளை மீள முகாம்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் துணை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல பகுதிகளிலுள்ள அகதிகள் முகாம்களில் கடுமையான கெடுபிடிகள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளன. வாழ்க்கை சுமுகமாக இல்லை. அகதிகள் தப்பியோடுவதற்கு இதுவே காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது. கொல்லத்தில் கைதுசெய்யப்பட்ட அகதிகள் நகர பொலிஸ் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். அதேவேளை, தாங்கள் முன்னர் நரக வேதனைகளை அனுபவித்த முகாம்களுக்கு மீளத் தங்களை அனுப்பிவைக்க வேண்டாமென்றும் கேரள பொலிஸாரை மன்றாடியுள்ளார்கள்.
அந்த முகாம் ஒரு நரகம். நாங்கள் அவர்களுக்கு அகதிகள் மாத்திரமே. எங்களைப் பராமரிக்கும் கியூ பிரிவுக் கிளை எம்மை மனிதப் பிறவிகளாகவே நோக்குவதில்லை. இதற்கு முன்னர் தப்பிச்செல்ல முயன்ற அகதிகள் பிடிக்கப்பட்டு, குரூர தண்டனைகளுக்குப் பின்னர் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொருநாளும் காலை 6 மணிக்குப் பின்னர் நாங்கள் வெளியேசெல்ல அனுமதிக்கப்படுகிறோம். எனினும், இரவு 8 மணிக்கு முன்னரே திரும்பிவிட வேண்டும். எங்களுக்குப் போதிய பங்கீட்டுப் பொருட்கள் வழங்கப்படமாட்டா.
பிள்ளைகளுக்கான முறையான கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதர வசதிகளும் அளிக்கப்படுவதில்லை என ஓர் அகதி தனது அவல நிலையைக் குறிப்பிட்டுள்ளார்.
எங்களைச் சந்தித்த முகவர்கள் குடியேற்ற நடைமுறைகளை எங்களுக்கு விளக்கவில்லை. குடியேற்றத் திட்டத்தில் அடங்கியுள்ள அகதிகளின் எண்ணிக்கையையும் குறிப்பிடவில்லை. பின் விளைவுகளை நாம் எண்ணவில்லை. நரக வாழ்விலிருந்து விடுபட்டு, சுதந்திரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் வாழ வேண்டுமென்பதே எமது நோக்கமாகும் என்றும் அகதிகள் தெரிவித்துள்ளார்கள்.
“படகுக்குள் ஏறுவதற்கு முன்னர் பணம் வசூலித்த நபரை என்னால் அடையாளப்படுத்த முடியாது. படகில் ஏறிய ஒருவர் பதறிப்போய் இறங்கினார். ஆஸ்திரேலியாவுக்கருகிலுள்ள கிறிஸ்மஸ் தீவுகளை அடைய 18 நாட்கள்வரை ஆகும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவித்தலைக் கேட்டே அந்நபர் இறங்கிவிட்டார்” என ஓர் இளம் அகதி, துணை ஆணையாளரிடம் குறிப்பிட்டுள்ளார்.
எங்களை மீள அனுப்பாதீர்கள். அப்படி அனுப்பினால் சித்திரவதைகளுக்குள்ளாவோம். அவற்றுக்குத் துணை ஆணையாளரே பொறுப்பாவார். முகாமிலுள்ள அதிகாரிகள் சித்திரவதைகளுக்குள்ளாக்குவர் என்றும் அகதிகள் குறிப்பிட்டுள்ளார்கள். அகதிகளில் பெரும்பாலானோர் நன்கு படித்தவர்கள்.
பலருக்கு ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் உறவினர்கள் இருக்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment