Tuesday, July 10, 2012
தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் படுகொலையானது இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன்னுமொரு தமிழ் இனப்படு கொலையே !
தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் படுகொலையானது இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன்னுமொரு தமிழ் இனப்படு கொலையே ! – த சோதிலிங்கம்.
Posted by tbcuk on July 8th, 2012
நான்கு சுவருக்குள் முழுமையான இராணுவத்தின் சிறைக்காவலர்களின் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருக்கும் சிறைக்கைதிகள் மீதான தாக்குதல்கள் கோழைத்தனமான அரசினதும்; அதன் இராணுவ சிறைக்காவலர்களினதும் பண்புகளையே காட்டி நிற்கிறது. சிறையிலிருந்து அடித்து நொருக்கப்பட்ட கைதிகளை தமது காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்த சிறைக்காவலர்களும் இவர்களின் கோழைத்தனங்களும் அடிப்படை பௌத்த சிந்தனைவாதத்திலிருந்தே எழுந்துள்ளது.
இந்த சிந்தனைத் தோற்றத்தின் வெளிப்பாடான வவுனியா சிறைக்கைதி நிமலரூபனின்; கொலைகளை கண்டிக்காத அரசியல்வாதிகள் குறிப்பாக பௌத்த மதபீடத்தினரும் இந்த கோழைத்தனங்களின் பிரதிநிதிகள் என்பதே இலங்கையர்களின் பொதுவான கருத்தாக எழுந்துள்ளது.
கடந்த எனது சிறை வாழ்வின் அனுபவங்களை மீள நினைவுக்கு கொண்டுவந்து, சிறையில் ஒரு கைதி அதுவும் துப்பாக்கிச் ச+ட்டினால் பாதிக்கப்பட்டால் எப்படியான நிலைமைகளில் அவனை பராமரித்திருக்க முடியும் அல்லது பராமரித்திருப்பார்கள் என்ற மீள்சிந்தனை என்னை வெட்கம் கெட்ட அரசின் மீது கோபம் கொள்ள வைத்தது. நாம் சிறையில் இருக்கும்போது அரசின் ஆதரவுடனேயே தமிழ் அரசியல் கைதிகள் மீதான தாக்குதல்களை தொடுத்திருந்தனர். இராணுவத்தினர் எம்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தும் இருந்தனர்.
சிறையில் அடைத்து வைத்திருக்கும் கைதிகளை கொலை செய்யும் வெட்கம் கெட்ட ஜனநாயக விரோத சோசலிசக் குடியரசு, தமிழர்கள் கைகட்டி வாய்பொத்தி காலில் விழுந்து வணங்கியே வாழ வேண்டும் என வற்புறுத்துகின்றது. சிறையில் அடைத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியின் கொலையானது சர்வதேச மனித உரிமைகளை மீறியது மட்டுமல்ல மீண்டும் ஒருமுறை தமிழர்கள் மீதான இனப்படுகொலை செய்த இனவாத அரசு என்பதனை நிரூபித்துள்ளது. இது இலங்கை மக்களை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.
பகுத்தறிவுச் சித்தாந்தத்தில் உலகில் உள்ள சமயங்களில் பௌத்தம் மிகவும் முக்கியமானது என்பது உலக பொதுகருத்து. ஆனால் இலங்கையின் பௌத்த அரசு சிறைக் கைதிகளையே கொலை செய்யும் பௌத்த அரசாக திகழ்கின்றது. அதுவும் பல தடவைகள் சிறைக் கைதிகளை கொலை செய்து வரலாறு படைத்துள்ள அரசாகவும் திகழ்கின்றது.
இலங்கையின் வரலாற்றில் சிறைக்கைதிகள் மீதான படுகொலைகள் என்பது பௌத்த அரசுக்கு ஒரு கைவந்த கலை அதிலும் தமிழ் அரசியல் கைதிகளை படுகொலை செய்வதன் மூலம் இலங்கை அரசு சர்வதேச மனித உரிமைகளை பல தடவைகள் மீறியுள்ளது.
இலங்கை அரசின் ஆதரவுடனேயே 1983ல் வெலிக்கடை போராளிகள் மீதான படுகொலைகள் நடைபெற்றன. இலங்கை அரசின் ஆதரவுடனேயே 1987ல் பதுளையில் சிறைக்ககைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கை அரசின் ஆதரவுடனேயே வவுனியா ஜோசப் முகாமில் அடைத்து வைக்கப்பட்ட ரெலோ போராளிகள் 1984ல் கொல்லப்பட்டனர்;. இலங்கை அரசின் ஆதரவுடனேயே திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் 1983, 1984ம் ஆண்டுகளில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மேற்கூறிய படுகொலைகளைப் போன்றே வவுனியா சிறைக்கைதியின் படுகொலையும் இலங்கையில் தமிழ் இனப்படுகொலைகளின் சாட்சியங்களாகும்.
நிரபராதிபதிகள் மீதும் கைதிகளாக உள்ளவர்கள் மீதும் இராணுவ நடவடிக்கை எடுப்பது என்பது சர்வதேச நடைமுறைகளை மனித உரிமைகளை மீறும் செயலாகும். இந்த நடைமுறைகள் இலங்கை அரசுக்கு, மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசுக்கு தெரியாமல் இல்லை, இவற்றிக்கும் மேலாக இன்னுமொரு தடவை வவுனியா சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது இராணுவ ஆயுததாரிகள் கொண்டு தாக்குதல் நடத்தும் மகிந்த அரசு, தமிழ் இன அழிப்பு செய்த அரசு என்பதை உலகிக்கு எடுத்துக்காட்டியதுடன் இலங்கை அரசின் பொலீஸ் இராணுவத்தினர் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு காட்டுமிராண்டிகளை விட மோசமானவர்கள் என்பதற்;கு இந்த உதாரணங்களே போதுமானதாகும்.
புத்திசுவாதீனமற்ற தமிழ் இளைஞன் மீதான தாக்குதல்கள், யுத்தக் கைதிகளை கைகளை பின்னால் கட்டிப்போட்டு கொலை செய்தல், சரணடைந்தவர்களை கத்தியால் வெட்டி கொலை செய்தல், தாமே கொலை செய்த பிணங்களின் மீது வற்புணர்வுகளை வெளிப்படுதததல், கொலை செய்த உடல்களை காட்சிப் பொருளாக்குதல், கொலை செய்யப்பட்ட பெண்களின் உள்ளாடைகளை அகற்றி உடல் அங்கங்களை பார்த்து ரசித்தல், இறந்த மனித உடல்களுக்கு மரியாதை செலுத்த தவறி சாதாரண மனிதர்கள் போன்று அடித்தல், உதைத்தல் போன்ற கேவலமான நடைமுறைகளுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.
கடந்தகால யுத்த நடைமுறைகளை மீறிய எந்தவொரு காவல் படையினர் மீதோ அன்றி கடந்த 60 வருடமாக தமிழர்கள் மீதான தாக்கலுக்கு காரணமான ஒரு குற்றவாளியைக் கூட நீதிமன்றத்துக்கு கொண்டு வரமுடியாத அரசும் நீதித்துறையும், புலிகளை வெற்றி பெற்ற அரசும் அதன் இயந்திரங்களும் என்ற பெயரை பெற தகுதியடையதா? அல்லது அரசு, மக்கள் அரசு, நீதியான அரசு, பௌத்த அகிம்சா, காருண்ய சிந்தனைவாத அரசு, இலங்கையில் சிறுபான்மையினர்க்கான நீதி வழங்கும் அரசு, மக்களால் தெரிவு செய்ப்பட்ட அரசு என்றெல்லாம் உலகம் நம்ப வேண்டுமா?
அப்பாவி தமிழர்களை பட்டினி போட்டும், குண்டுகளை பொழிந்தும் தமிழ் இனப்படுகொலை செய்த அரசு அதன் ஒரு படி மேலே போய் இன்று சிறைக்கைதிகளையும் கொலை செய்துள்ளது சிறையில் அடைத்து வைப்பட்டிருக்கும் கைதிகள் மீது மலம் வீசும் அரச நிர்வாகம், தமிழ் மக்கள், சாதாரண அப்பாவி குழந்தைகள், பெண்கள் என்று பாராமல் தமிழ் இனப்படுகொலையை செய்யத் தயங்காது என்பதற்;கு இதைவிட வேறு எந்த உதாரணங்களும் தேவையில்லை.
போரின் வெற்றியை, தமிழ் மக்களின் இனப்படுகொலையில் பிணக்குவியல்களின் மீது தனது வெற்றியை கொண்டாடும் பௌத்த தர்ம அரசு தமிழர்களை தமிழ் பேசும் மக்களை அடக்கி ஆள்வதையே தனது குறிக்கோளாக கொண்டு செயற்;படுகின்றது தனது தொடரும் இன அடக்குமுறையின் அடையாளமாகவே தமிழ் சிறைக்கைதிகள் மீதான துப்பாக்கிப் பிரயோகமும் படுகொலையும் சாட்சியமளித்து நிற்கின்றது.
தமிழர் தாயகப் பிரதேசங்களில் தமிழர்கள் தமது உரிமைக்காக தமது வாழ்வாதார அடிப்படை நிலைகளை உயர்த்துவதற்காக எந்த ஒரு குரலையும் உயர்த்திடக்கூடாது என்பதில் அக்கறையுடன் செயற்படும் இலங்கை அரசும் அதன் இராணுவமும், தமிழர்கள் மீதான அடக்கு முறையின் கேவலத்தை, கொலை வெறித்தனத்தை, சிறையில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மீது காட்டி தமிழ் இனத்தின் மீதான கொலை வெறித்தனத்தின் சாட்சியமாக தன்னை வெளிப்படுத்தியுள்ளது. தமிழ் மக்களை அடக்கி வைத்துள்ளது.
சிறையில் அடைத்து வைத்திருந்த தமிழ் அரசியல் கைதிகளின் மீதான கொலை வெறித்தனத்தை ஆதரிக்கும் சிங்கள பௌத்த இனவாதிகள் இலங்கையில் பௌத்த பயங்கரவாதத்தின் அடிப்படைகளுக்கு வித்திட்டுள்ளார்கள் என்றே சர்வதேசமும் சர்வதேச பௌத்த விரும்பிகளும் கருத ஆரம்பித்துள்ளது. இது கடந்த காலங்களில் புத்தரின் சிலைகளை பாவித்து தமிழ் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் பௌத்த மேலாதிக்கத்தின், பௌத்த பயங்கரவாத்தின் அடுத்த நிலையாகும்.
இஸ்லாமிய வணக்கத்தலங்கள் மீதான தாக்குதல்கள் இஸ்லாமிய நிலையங்களின் மீதான கண்காணிப்புக்களும், இஸ்லாமிய கலாச்சார நிலையங்களின் மீதான கண்காணிப்புக்களும் இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகளில் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தினையே வெளிப்படுத்தி இலங்கையில் புதியதொரு சிறுபான்மையினர் அழிப்புக்கு இன்று இலங்கை அரசு வித்திட்டுள்ளது என்பதே, இலங்கை சிறுபான்மையினரின் கருத்தாக உருவெடுத்துள்ளது. கடந்த இலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாத இன்னுமொரு புதிய பௌத்த சிங்கள பயங்கரவாதத்தை இன்றைய இலங்கை அரசு கட்டியெழுப்புகின்றது என்பதை இது பறை சாற்றுகின்றது. இவர்களின் கபடத்தனம் இலங்கையில் இன ஒற்றுமையை ஏற்படுத்த தடையாகவே இருக்கும்.
வவுனியா சிறைக் கைதிகளில் பலர் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களும் புலிகளின் இறுதிக்காலத்தில் கட்டாயமாக போரில் ஈடுபடுத்தப்பட்டவர்களுமாகும். இவர்களின் நியாயத்தை வெளிப்படுத்தி இவர்களின் விடுதலையில் அக்கறையற்று வெறுமனே அறிக்கைகள் விடும் போராட்டத்தை தவிர்த்து பேர்க் காலங்களில் காணாமல் போனோர்கள், கைது செய்யப்பட்டு விசாரணைக்கென்று எடுத்துச்செல்லப்பட்வர்கள் பின்னர் காணாமல் போனவர்கள், புனர்வாழ்வு என்று விடுவிக்கப்பட்டு காணாமல் போனவர்கள், என பல ஆயிரக்கணக்கான தமிழர்களின் நிலையையும் அவர்களின் குடும்பத்தினரின் நிலைமைகளையும் பற்றி சிந்திக்க வேண்டும் செயற்;படல் வேண்டும்,காணாமல் போனவர்களின் குடும்பங்களின் வாழ்வியல் அவஸ்த்தைகள் பற்றி தீவிர அக்கறை செலுத்த வேண்டிய அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தத் தமிழ் அரசியல் கைதியின் கொலையில் குளிர்காய்ந்து விடாமல் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அக்கறையுடன் தமிழ் அரசியல் தலைவர்கள் செயற்;படல் வேண்டும் சிறைக்கைதிகள் தமது விடுதலைக்காக தமது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும்போது அவர்களின் போராட்டங்களை வலுப்படுத்தி ஒத்தாசைகள் வழங்கிடல் வேண்டும் மீண்டும் ஒரு நிமலரூபனின் நிலை உருவாகிவிட அனுமதிக்க கூடாது.
வவுனியா சிறைக்கைதிகள் போன்று நாட்;டின் பல பாகங்களிலும் பல தமிழ் இளைஞர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் இன்று அரசின் முக்கிய உறுப்பினர்களாகவும் அரசுடன் உறவாடுபவர்களாகவும் தமிழ்த் தலைவர்கள் கடந்த 3 வருடங்களாக இவ்விளைஞர்களின் விடுதலையில் அக்கறை கொள்ளாது தமது சொந்த நலன்களில் அக்கறை கொண்டிருந்ததன் விளைவுகளே நிமலரூபனில் கொலையாகும்.
தமிழ் தலைவர்கள் யுத்தம் முடிவடைந்து 3 வருடங்களாகிய பின்னரும் புலிகளின் வரலாறுகள் என்ற சாட்டுக்களை சொல்லிக்கொண்டு முன்னாள் போராளிகளின் வாழ்வியலில் அவர்களது விடுதலையில் அக்கறையற்று இருந்துள்ளனர், தமிழ் மக்களின் தலைமைகள் என்று கூறிக்கொள்ளும் ரிஎன்ஏ, ஈபிடிபி யினரும் யுத்தம் முடிவடைந்த 3 வருடங்களாக நீதி விசாரணைகள் இன்றியிருக்கும் அரசியல் கைதிகளின் நியாயத்தில் அக்கறையற்று இருக்கிறார்கள் அடுத்த தேர்தல் காலத்தின் பிரச்சாரத்திற்காக காத்திருக்கிறார்கள் என்றே பலரும் கருதுகிறார்கள். தமது பாராளுமன்ற ஆசனம் பெறுவதற்கான சிந்தனையுடனேயே இருக்கிறார்கள் என்ற கருத்து தமிழ் மக்களிடையே எழுந்துள்ளது.
இலங்கையில் தமிழர்கள் நலன்சார்ந்த முன்னெடுப்புகளிற்கு அரசு முட்டுக்கட்டை போடுகின்றது, இலங்கை பாராளுமன்றத்திலிருந்து செயற்;பட முடியாது எனின் இவர்கள்; சர்வதேசத்தின் தலையீட்டை இலங்கையிலிருந்தே கோர வேண்டும் பாராளுமன்றத்தில் கோர வேண்டும். தமிழ் மக்களுக்கான சாத்வீக போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்.
அடுத்த தமிழ் அரசியல் கைதி கொல்லப்படும்வரை காத்திராமல் தமிழ் இளைஞர்களின் விடுதலைக்காக அடுத்த நடவடிக்கை என்ன என்பதை தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் இதற்கான பதிலை ரிஎன்ஏயும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், இன்று கைதிகளாக இருக்கும் முன்னாள் புலிப் போராளிகளின் கட்டளைத்தளபதியாக இருந்த அமைச்சர் கருணாவும் தமிழ் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.
இன்று கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதியின் கட்டளைத்தளபதியாக இருந்த அமைச்சர் கருணா அரச இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களை இன்றுவரையில் கண்டிக்காது அரசுடன் இணைந்து தமது முன்னாள் இயக்க போராளிகளின் கொலைகளை வேடிக்கை பார்த்திருப்பது வெட்கத்துக்குரியதாகும்.
இன்றும் சிறைகளில் வாடும் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சமூகத்தின் தாழ்ந்த பொருளாதார வசதிகளுடன் வாழ்ந்தவர்கள், போர்முடிவடைந்து மூன்று வருடங்களாகியும் தமது குடும்பங்கள் உறவுகளை கண்டிராதவர்களாகவும் தமது மறுவாழ்வு பற்றி நினைத்து பார்க்கக் கூட முடியாது உள்ளனர் இந்த அப்பாவி முன்னாள் போராளிகளின் மனிதாபிமானம் பற்றி முன்னாள் போராளிகள் இன்றைய அரசின் அமைச்சர்கள் சற்று நிதானமாக செயற்ப்பட வேண்டும் என்றே பலரும் விரும்புகிறார்கள்.
அகிம்சை, கொல்லாமை என எடுத்துக்கூறும் பௌத்தத்தின் துணையுடன் தமது கொலை வெறித்தனத்தை வெற்றிவிழா கொண்டாடியவர்களும், இன வெறியை, தமிழ் விரோதத்தை வளர்க்கும் மனிதாபிமானமற்ற தலைவர்களே இன்றும் இலங்கையின் தலைவர்களாக உள்ளார்கள் இவர்களில் எந்தவித மாற்றங்களும் ஏற்படவில்லை என்பதற்;கு வவுனியா தமிழ் சிறைக் கைதியின் கொலை மேலும் ஒரு உதாரணமாக உள்ளது.
வவுனியா சிறையில் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன் நிமலரூபன் அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறேன். அவரது உறவினர்கள் குடும்பத்தினர்க்கு எனது அனுதாபங்களையும் ஆறுதல்களையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
T Sothilingam
sothi@btinternet.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment